இந்த உலகில் ஒரு சாதாரண அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரிய அதிகாரியோ நம் பெயரைச் சொன்னால் நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்? அவருக்கு என்னைத் தெரியும், என் பெயர் அவருக்குத் தெரியும் என்று ஊரெல்லாம் மார்தட்டிச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், ஏழு வானங்களுக்கும் அப்பால் இருக்கும் அகிலத்தின் அதிபதி, பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், ஒரு மனிதரின் பெயரை உச்சரித்து, அவருக்கு நீர் குர்ஆனை ஓதிக்காட்டுங்கள் என்று தன் தூதருக்குக் கட்டளையிட்டான் என்றால், அந்த மனிதரின் அந்தஸ்து எவ்வளவு பெரியதாக இருக்கும்? அவர்தான் 'ஸையிதுல் குர்ரா' (குர்ஆன் ஓதுபவர்களின் தலைவர்) என்று அழைக்கப்பட்ட உபை இப்னு கஅப் (ரலி).
மதீனாவாசிகள் (அன்சாரிகள்) இஸ்லாத்தை ஏற்ற ஆரம்ப காலத்திலேயே ஈமான் கொண்டவர் இவர். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் முக்கியமான வஹீ (இறைச்செய்தி) எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். குர்ஆனை அவர் ஓதும் அழகையும், அதன் உச்சரிப்புத் தூய்மையையும் பார்த்த நபிகளார், "என் சமுதாயத்தில் குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதுபவர் உபை இப்னு கஅப் ஆவார்" என்று நற்சான்றிதழ் அளித்தார்கள்.
அவருடைய வாழ்வின் மிகச் சிறந்த அந்தப் பொன்னான நாள் ஒன்று வந்தது. ஒருநாள் உபை (ரலி) அவர்களை அழைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உபையே! 'லம் யகுனில்லதீன கஃபரூ...' (சூரா அல்-பய்யினா) என்ற அத்தியாயத்தை உமக்கு நான் ஓதிக் காட்ட வேண்டும் என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். இதைக் கேட்ட உபை (ரலி) அவர்களின் இதயம் ஒருகணம் அதிர்ந்தது. கண்கள் கலங்க, தழுதழுத்த குரலில் கேட்டார்கள்: இறைத்தூதரே! என் இறைவன் என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறினானா? அண்ணலார் புன்னகையோடு, ஆம், அல்லாஹ் உமது பெயரைச் சொல்லித்தான் கட்டளையிட்டான்! என்றார்கள்.
அடுத்த விநாடி உபை (ரலி) அவர்கள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார்கள். சுபஹானல்லாஹ்! இறைவனால் தன் பெயர் உச்சரிக்கப்பட்ட அந்தப் பாக்கியத்தை நினைத்து ஒரு மனிதரால் எப்படி அழாமல் இருக்க முடியும்! அல்லாஹ்விற்கு ஒரு அடியான் மீது எவ்வளவு அளப்பரிய நேசம் இருந்தால், தன் வேதத்தின் ஒரு பகுதியை அவரிடம் ஓதிக்காட்டுமாறு தன் தூதருக்கே கட்டளையிடுவான்!
உபை (ரலி) அவர்களின் அந்தத் தேன் சிந்தும் குரலுக்கு இன்னொரு மாபெரும் அங்கீகாரமும் கிடைத்தது. உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில், ரமழான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்றபோது, மக்கள் சிறுசிறு குழுக்களாகத் தனித்தனியாக இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தார்கள். மக்கள் அனைவரையும் ஒரே இமாமின் கீழ் ஒருங்கிணைக்க நினைத்த உமர் (ரலி) அவர்கள், அந்தப் பொறுப்பை யாரிடம் கொடுத்தார்கள் தெரியுமா? இதே உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம்தான்! அந்த ரமழான் இரவுகளில், உபை (ரலி) அவர்களின் உள்ளத்தை உருக்கும் குரலில் குர்ஆன் ஒலித்தபோது, ஒட்டுமொத்த மதீனாவும் கண்ணீரில் மிதந்தது.
உபை (ரலி) அவர்கள் பெரிய கோடீஸ்வரரோ, மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசனோ அல்ல. ஆனால், அவர் குர்ஆனை உயிருக்கு நிகராக நேசித்தார்; குர்ஆனைத் தன் இரத்தத்தில் கலந்தார். அதனால் இறைவன் அவரை நேசித்தான்.
இன்று குர்ஆனுடனான நமது தொடர்பு எப்படி இருக்கிறது? நமது பட்டங்களையும், பதவிகளையும், உலகத்தின் செல்வாக்கையும் காட்டிப் பெருமையடிக்கும் நாம், குர்ஆனுக்காக எந்த நேரத்தை ஒதுக்கியிருக்கிறோம்? ரமழான் மாதத்தில் மட்டுமே தூசி தட்டப்படும் ஒரு புத்தகமாக அது சுருங்கிவிட்டதா? இறைவனின் வார்த்தைகளை நேசிப்பவனை, இறைவன் நேசிப்பான் என்பதற்கு உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் வாழ்க்கையே ஆகச்சிறந்த உதாரணம். அந்த மாபெரும் குர்ஆன் அறிஞரின் நேசத்தை அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக! குர்ஆனுடனான நமது தொடர்பையும் அவன் பலப்படுத்துவானாக!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #UbayyIbnKab #MasterOfQuran #SayyidAlQurra #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment