பொருந்தா வாதம் அறிதல்
விவாதம், தர்க்கம் என்றவுடன் ஓர் அமைப்பு மற்றோர் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, நாள் குறித்து, மண்டபம் பிடித்து, பெல் அடிக்கும் நடுவர்களை நியமித்து, இருபிரிவாக அமர்ந்து பேசுதல் என்று புரிந்துவிட வேண்டாம். இங்கு அதைப் பற்றி பேசுவது நோக்கமுமல்ல.
மாறாக நமது அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களில் வைக்கப்படும் கருத்துக்களில் உண்மைகளை கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பொருந்தா வாதங்கள் பற்றிய அறிவை பெற்றிருப்பது அவசியமாகும்.
உணவு விரும்பிகளின் முன்னிலையில் எந்த உணவு உடலுக்கு ஏற்றது என்ற விவாதம் நடைபெற்றால் ஒரு சிறந்த சமையல்காரர், உணவியல் நிபுணரை வென்றுவிட முடியும்.
சாதரண பெரியவர்கள் முன்னிலையில் நாட்டைக் காப்பது எப்படி என்ற விவாதம் ஒரு இராணுவ அதிகாரிக்கும், பேச்சுத் திறனும், மனப்பாடத் திறனும் கொண்ட ஒரு அரசியல் வாதிக்கும் இடையே நடைபெற்றால் அந்த அரசியல் வாதி இராணுவ வீரரை வென்றுவிடுவார். திறமைமிக்க அந்த அரசியல் வாதியே மக்களை வென்றெடுப்பார்.
ஏனெனில் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் ஆசைகளைத் தொடுவது அறிவை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை விட அதிக வலிமையானதாக பெரும்பான்மையினரிடம் கருதப்படுகிறது.
“பீரங்கி வண்டிகள் எங்கள் உடல் மீது ஏறினாலும் பாபர் மசூதி இடத்தில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விடமாட்டோம்” என பாபர் மசூதி இடிப்பு கண்டண ஆர்ப்பாட்டங்களில் பல தலைவர்கள் பேசியதை நான் செவியுற்றுள்ளேன். அதைக் கேட்டதும் நானும் கூடியிருப்போருடன் சேர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று கூறியுள்ளேன்..
ஆனால் வீட்டிற்கு வந்து அந்த தலைவர்கள் பேசியதை மனக்கண் முன் கொண்டு வந்தால் அவை கூடியிருப்போரின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் என்பதைத் தவிர நடைமுறையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்ற உண்மைதான் விளங்கும்.
உண்மைகள் ஒரு விசயத்தை முறையான ஆதாரங்களுடன் ஆழ்ந்து சிந்திப்பதில்தான் வெளிப்படும்.
இன்றைய உலகில் எங்கு நோக்கினும் முறையற்ற வாதங்கள்தான் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அறிவு ஜீவிகள் என்று தம்மை கருதிக் கொள்வோரும் அந்த முறையற்ற வாதங்களில் மூழ்கியிருப்பதுதான் உண்மைகள் உணரப்படாமல் போவதற்கும், தவறை உண்மை என பெரும்பான்மையினர் சரிகாண்பதற்கும் அடிப்படையாக விளங்குகிறது.
“தமிழர்கள் அனைவரும் எனது நண்பர்கள், தமிழ்நாட்டில் எனக்கு யாரும் எதிரியல்ல” என ஒரு அரசியல் தலைவர் நல்லிணக்கம் கருதி பேசினார்.
அதற்குப் பதிலளித்த மற்றொரு அரசியல் தலைவர்
“அனைவரும் நண்பர்கள் என்றால் கரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாற்பது பேர் மரணித்ததற்கு காரணம் நான்தான் என என்மீது ஏன் பழிபோட்டீர்கள்?” எனக் கேட்டார்.
அந்த தலைவரின் ரசிகர்கள் ஆஹோ, ஓஹோ என்றனர். இதில் உள்ள முறையற்ற வாதத்தைக் கூட அவர்கள் அறிய முற்படவில்லை.
இன்றொரு செய்தி படித்தேன். ஒரு மாணவன் தேர்வுத் தாளில் வினாக்களுக்கு உரிய விடை எழுதாமல் ஆசிரியரின் காலில் தான் விழுந்து கெஞ்சுவதைப் போன்று படம் வரைந்து “ஆசிரியரே! என்னை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. நான் ஒரு ஏழை. எப்படியாவது என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்!” கோரிக்கை வைத்துள்ளார்.
இதைக் கண்டு அந்த மாணவன் மீது பலரும் தமது பரிதாபங்களை வெளிப்படுத்தி அவரை பாஸ் ஆக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
ஒரு ஆசிரியரின் கடமை கல்வி வழங்குவதுதான். ஏழை மாணவனுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது அல்ல. சரியான பதில் எழுதாமல் மதிப் பெண் தருமாறு கேட்பதும், அதற்கு கருணையை நாடுவதும் முறையற்ற வாதமாகும்.
சரியான வாதங்கள் போல் தோன்றும். ஆனால் சிந்தித்தால் அவை தவறான வாதங்கள் என்பது வெளிப்படும். இதுதான் பொருந்தா வாதம் ஆகும்.
இதன் காரணமாகத்தான் அதிகமான மதரஸாக்களில் “மன்த்திக்” என்ற தலைப்பில் ஒரு தர்க்கவியல் பாடமே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதைக் கற்போரில் 90 சதவிகிதம் பேருக்கு அது என்ன வென்றே தெரியாது.
அதிகமான முஸ்லிம்கள் இணைவைப்புக் காரிங்களில் மூழ்கியிருப்பதற்கும் வழிகெட்ட ஆலிம்களின் பொருந்தா வாதங்கள் பற்றிய அறியாமையே காரணமாக உள்ளது.
தவறான வாதங்களில் சிக்காமல் இருக்கவும், ஒரு கருத்தில் உள்ள தவறைக் கண்டறியவும், அறிவுப் பூர்வமாக உண்மையைக் கண்டறிவதற்கும் பொருந்தா வாதம் எனும் முறையற்ற வாதங்களைப் பற்றி அறிவது மிகவும் அவசியமானதாகும்.
Abdun Nasir M.I.Sc.,
No comments:
Post a Comment