நாம் இதுவரை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட குதுபுஸ் சித்தா நூல்களையும், வேறு சில அரிய தொகுப்புகளையும் பற்றிப் பார்த்தோம். ஆனால், இந்த பிரம்மாண்டமான ஹதீஸ் நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக, காலத்தால் முந்தையதாக, இஸ்லாமிய வரலாற்றின் முதல் அதிகாரப்பூர்வ மார்க்கச் சட்ட மற்றும் ஹதீஸ் தொகுப்பாகக் கருதப்படும் ஒரு மாபெரும் படைப்பைத் தவிர்த்துவிட்டு நமது தேடலை முழுமையாக்க முடியாது. அதுதான் முஅத்தா இமாம் மாலிக்.
ஹதீஸ் கலையையும், சட்டவியலையும் எவ்வாறு இணைத்துப் பார்ப்பது என்பதற்கு உலகிற்கு முதலில் வழிகாட்டிய இந்த நூலின் சிறப்புகளை இன்று சற்று விரிவாகப் பார்ப்போம். வாருங்கள்!
இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்). ஹிஜ்ரி 93-ல் மதீனாவில் பிறந்தார். "தாருல் ஹிஜ்ரா" (ஹிஜ்ரத் செய்யப்பட்ட பூமி) என்று அழைக்கப்படும் மதீனா நகரின் மாபெரும் இமாம் இவர். அபூஹனீபா அவர்களின் சமகாலத்தவர். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ஆசான். தனது வாழ்நாள் முழுவதும் நபிகளார் வாழ்ந்த மதீனாவை விட்டு வெளியேற மனமில்லாமல், அங்கேயே தங்கி மார்க்கக் கல்வியைப் போதித்த மாமேதை.
'முஅத்தா' என்ற அரபுச் சொல்லுக்கு "பலரால் மிதிக்கப்பட்ட பாதை" அல்லது "எளிதாக்கப்பட்ட நூல்", "பல அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட நூல்" என்று பொருள். இமாம் மாலிக் அவர்கள் இந்த நூலைத் தொகுத்த பின்பு, மதீனாவில் வாழ்ந்த அன்றைய 70 மாபெரும் அறிஞர்களிடம் இதனைக் காண்பித்தார். அவர்கள் அனைவரும் இந்த நூலை ஒருமனதாக அங்கீகரித்ததாலேயே இதற்கு 'முஅத்தா' என்று பெயர் வந்தது!
முஅத்தா வெறும் ஹதீஸ் நூல் மட்டுமல்ல. அது ஒரு முழுமையான ஃபிக்ஹ் (சட்டவியல்) நூலும்கூட. நபிகளாரின் ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு, அதற்கு விளக்கமாக சஹாபாக்களின் (நபித்தோழர்கள்) மார்க்கத் தீர்ப்புகளையும், தாபியீன்களின் (சஹாபாக்களைக் கண்டவர்கள்) கருத்துக்களையும் மிக அழகாகத் தொகுத்துள்ளார்.
இமாம் மாலிக் அவர்களின் மிக முக்கியமான சட்ட அடிப்படை இதுதான். ஒரு ஹதீஸ் இருக்கிறது, ஆனால் மதீனாவில் உள்ள அறிஞர்களும், மக்களும் வேறு விதமாகச் செயல்படுகிறார்கள் என்றால், இமாம் மாலிக் அவர்கள் மதீனாவாசிகளின் நடைமுறைக்கே முன்னுரிமை அளிப்பார். காரணம்? "நபிகளார் வாழ்ந்து, மார்க்கத்தை நிலைநாட்டிய பூமி இது. இங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த நடைமுறை என்பது ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை விட வலுவான 'வாழும் சுன்னாவாகும்'" என்று அவர் ஆழமாக நம்பினார்.
ஹதீஸ் கலையில் மிக உயர்ந்த, தூய்மையான அறிவிப்பாளர் தொடர் எதுவென்றால், ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறும் ஒரு தொடர் உண்டு: "இமாம் மாலிக், தனது ஆசான் நாஃபிஉ வழியாக, அவர் இப்னு உமர் (ரழி) வழியாக நபிகளாரிடமிருந்து அறிவிப்பது." இந்தத் தங்கச் சங்கிலி முஅத்தாவில் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது!
வரலாற்று ஆய்வாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு முஅத்தாவின் பின்னணியில் உள்ளது. அன்றைய அப்பாஸிய கலீஃபா (ஆட்சியாளர்) அபூ ஜஅஃபர் அல்-மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக்கிடம், "முஅத்தாவை இஸ்லாமியப் பேரரசின் அதிகாரப்பூர்வ சட்ட நூலாக மாற்றுவோம். அனைவரும் இதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறேன்" என்றார்.
ஆனால் இமாம் மாலிக் அவர்கள் அதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்! "அப்படிச் செய்துவிடாதீர்கள். சஹாபாக்கள் பல்வேறு தேசங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் வேறு பல ஹதீஸ்களும், அறிவுப் பொக்கிஷங்களும் உள்ளன. மக்களை அவர்களின் சுதந்திரமான தேடலிலேயே விட்டுவிடுங்கள்" என்று கூறி, அதிகாரத்தை விட அறிவின் விசாலத்தன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்தார். இது இமாம் அவர்களின் மாசற்ற நேர்மையைக் காட்டுகிறது.
ஸஹீஹ் புகாரி தொகுக்கப்படுவதற்கு முன்பாக இந்த நூலைக் குறித்து இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறும்போது, "அல்லாஹ்வின் வேதத்திற்குப் பிறகு, பூமியில் இமாம் மாலிக்கின் முஅத்தாவை விட மிகச் சரியான, ஆதாரப்பூர்வமான ஒரு நூல் வேறு இல்லை" என்று புகழ்ந்துரைத்தார்.
நவீன காலத்தில் மார்க்கச் சட்டங்களை நாம் விவாதிக்கும்போது, அவற்றின் ஆணிவேர் எங்கிருந்து தொடங்கியது என்பதை அறிய முஅத்தா ஒரு மாபெரும் திறவுகோலாகும்.
- Abdullah Ibnu Naseer
No comments:
Post a Comment