இஸ்லாமிய அறிவுலகில் கல்வி என்பது செய்திகளைச் சுமப்பதாக மட்டுமிருக்கவில்லை. அது இறைவனால் வழங்கப்படும் ஒரு பிரகாசமான ஒளி என்பதை உலகுக்கு ஆழமாக உணர்த்தியவர் இமாம் வகீஉ (ரஹ்) அவர்கள். இவரைப் பற்றி இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறும்போது, "நான் வகீஉ அவர்களை விட ஒரு சிறந்த மனிதரை என் கண்களால் கண்டதில்லை" என்று நெஞ்சாரப் புகழ்கிறார் என்றால், அவரின் தரத்தை எண்ணிப் பாருங்கள்!
பெயர்: வகீஉ இப்னுல் ஜர்ராஹ் அல்-கூஃபி
சிறப்புப் பெயர்: அபூ சுஃப்யான்.
காலம்: ஹிஜ்ரி 129-ல் பிறந்து, ஹிஜ்ரி 197-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் அறிவு கேந்திரமான கூஃபா நகரம்.
மாணவர்கள்: இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் ஷாஃபியீ, யஹ்யா இப்னு மயீன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்கள் அனைவரும் இவரின் மண்டியிட்டுப் பாடம் படித்த மாணவர்கள்தான்.
இமாம் வகீஉ என்ற பெயரை உச்சரித்தாலே, இமாம் ஷாஃபியீ பாடிய அந்த உலகப் புகழ்பெற்ற கவிதைதான் ஒவ்வொரு மார்க்க மாணவனின் நினைவுக்கும் வரும். இமாம் ஷாஃபியீ தனது இளமைக் காலத்தில், தனது நினைவாற்றலில் ஒரு சிறிய தொய்வு ஏற்படுவதை உணர்ந்தார். உடனடியாகத் தனது ஆசான் வகீஉ அவர்களிடம் சென்று முறையிட்டார். அப்போது வகீஉ அவர்கள் வழங்கிய அறிவுரையை இமாம் ஷாஃபியீ கவிதையாகப் பதிவு செய்துள்ளார்:
நான் எனது ஆசான் வகீஉ அவர்களிடம் என் நினைவாற்றல் குறைபாட்டைப் பற்றி முறையிட்டேன். அவர் எனக்கு, 'பாவங்களை விட்டு விலகிவிடு' என்று வழிகாட்டினார். மேலும் அவர் சொன்னார்: 'அறிந்துகொள்! கல்வி என்பது இறைவனின் ஒளி (நூர்). இறைவனின் ஒளி ஒரு பாவிக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது!'"
(شكوت إلى وكيع سوء حفظي ... فأرشدني إلى ترك المعاصي)
நினைவாற்றல் என்பது வெறும் மூளையின் வேலை அல்ல. அது உள்ளத்தின் தூய்மையோடு தொடர்புடையது என்ற இந்த ஒற்றைத் தத்துவம் இன்றும் ஒவ்வொரு மாணவனின் செவிகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இமாம் வகீஉ அவர்கள் ஹதீஸ் வகுப்பிற்கு வரும்போது கையில் ஒரு சிறு காகிதத்தைக் கூடக் கொண்டு வர மாட்டார். அவரின் நெஞ்சமே ஒரு மாபெரும் நூலகமாக இருந்தது. அவரிடம் பல ஆண்டுகள் பாடம் படித்த இமாம் அஹ்மத் கூறுகிறார்: "வகீஉ அவர்கள் எந்தப் புத்தகத்தையும் பார்த்து ஹதீஸ் சொல்ல நான் கண்டதே இல்லை. பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களையும், அதில் உள்ள நுணுக்கங்களையும் அவர் தன் நெஞ்சிலிருந்தே மடைதிறந்த வெள்ளம் போல அறிவிப்பார்."
வகீஉ அவர்களின் தந்தை 'ஜர்ராஹ்' அன்றைய அப்பாஸிய அரசாங்கத்தின் கஜானாவைக் கவனிக்கும் மாபெரும் அதிகாரியாக இருந்தார். அவர் அரசனுக்கு நெருக்கமானவர். ஆனால் வகீஉ அவர்கள், அரசுப் பதவிகளிலிருந்தும், உலக சுகபோகங்களிலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொண்டார். அரசவை உணவு வகைகளைத் தொடமாட்டார். தனது தந்தையின் அதிகாரத்தையோ, செல்வத்தையோ அவர் ஒருபோதும் தனது மார்க்கக் கல்விக்குப் பயன்படுத்தியதில்லை. அவர் மிகவும் எளிமையான ஒரு மனிதராகவே வாழ்ந்தார்.
இமாம் வகீஉ அவர்கள் மக்காவிற்குப் புனிதப் பயணம் (ஹஜ்) சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், ஃபைத் என்ற இடத்தில் ஹிஜ்ரி 197-ம் ஆண்டு தனது 68-வது வயதில் மரணமடைந்தார். மாபெரும் அறிவுச் சுடரொன்று பாலைவனத்தில் அணைந்தது.
மெமரி பவர் எப்படி அதிகரிப்பது என்று இன்று நாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் தேடுகிறோம். பாதாம் பருப்புகளையும், மருந்துகளையும் நாடுகிறோம். ஆனால், இமாம் வகீஉ அவர்கள் காட்டிய வழிமுறை மிக எளிமையானது, ஆனால் ஆழமானது: "உன் கண்களையும், காதுகளையும், உள்ளத்தையும் பாவங்களை விட்டும் பாதுகாத்துக்கொள்; இறைவனின் அறிவுத் தானாக உன் நெஞ்சில் வந்து தங்கும்." இந்த ஒரு தத்துவத்தை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால், நம் உள்ளமும் ஒரு "பைத்துல் ஹிக்மா"வாக (அறிவு இல்லமாக) மாறும்!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamWaki #WakiIbnAlJarrah #Kufa #ImamShafii #HadithScholar #Memory #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment