மதீனாவின் தெருக்களில் ஒரு இளைஞர் நடந்து வருகிறார். அவருடைய உயரம் எவ்வளவு தெரியுமா? ஒரு பெரிய ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பவரின் உயரத்திற்குச் சமமாக அவர் தரையில் நடந்து செல்வார். அந்தப் பிரம்மாண்டமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர், மதீனாவின் 'கஸ்ரஜ்' கோத்திரத்தின் மாபெரும் தலைவர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் அருமை மகன் கைஸ் இப்னு ஸஅத் (ரலி) அவர்களே!
தந்தையைப் போலவே வீரத்திலும், கொடைத்திறனிலும் நிகரற்று விளங்கிய கைஸ் (ரலி), இஸ்லாமிய வரலாற்றில் அறிவுக்கூர்மைக்கும் (Intelligence) ஈமானிய உறுதிக்கும் ஒரு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறார்.
கைஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன், அவருடைய தந்தை ஸஅத் (ரலி) அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "இறைத்தூதரே! இதோ என் மகன், இவன் இன்று முதல் உங்கள் சேவகன்" என்று ஒப்படைத்தார். சுமார் பத்து ஆண்டுகள் அண்ணலார் (ஸல்) அவர்களின் நிழலாகவே கைஸ் (ரலி) வாழ்ந்தார்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறும்போது, "ஒரு தலைவருக்குப் பின்னால் ஒரு போலீஸ் - மெய்க்காவளர் - அதிகாரி பாதுகாப்பிற்கு நிற்பது போல, நபிகளாருக்குப் பின்னால் கைஸ் இப்னு ஸஅத் நிற்பார்" என்று அவருடைய அர்ப்பணிப்பை விவரிக்கிறார். நபிகளாரின் மஜ்லிஸில் இருந்து அவர் கற்ற அந்தப் பாடங்கள்தான் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் ராஜதந்திரியாக மாற்றியது.
அரபிகளிலேயே மிகச்சிறந்த தந்திரசாலியாகக் கருதப்பட்டவர் கைஸ் (ரலி). எந்த ஒரு சிக்கலான சூழலையும் தன் அறிவால் முறியடிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. ஆனால், அந்த அறிவை அவர் ஒருபோதும் தீமைக்காகப் பயன்படுத்தியதில்லை. அவர் அடிக்கடி சொல்வார்:
"இஸ்லாம் என்ற ஒன்று மட்டும் என் வாழ்க்கையில் இல்லையென்றால், அரபிகளிலேயே மிகச்சிறந்த சூழ்ச்சிக்காரனாக நான் இருந்திருப்பேன். ஆனால், இறைவனைக் குறித்த அச்சம் என் அறிவைக் கட்டுப்படுத்துகிறது!"
தனது புத்திக்கூர்மையைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல், சத்தியத்திற்காக மட்டுமே பயன்படுத்திய அந்தப் பண்பு, இன்றைய கால அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு மாபெரும் பாடம்.
கைஸ் (ரலி) அவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாகக் கொடைத்திறனுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை அவருடைய வீட்டில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது: "கைஸ் இப்னு ஸஅத்திடம் கடன் வாங்கியவர்கள் யாரும் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன!" இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஓடி வந்து நன்றி சொன்னபோது, கைஸ் (ரலி) சொன்ன பதில் நம்மை வியக்க வைக்கிறது: "மக்கள் என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது, அவர்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதற்குக் காரணமாகிவிடும். மக்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதை நான் விரும்பவில்லை!" தன்மானத்தையும், சமூக உறவுகளையும் காப்பதற்காகத் தன் செல்வத்தை இப்படித் துச்சமாக மதித்த தியாகி அவர்.
கலீஃபா அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தேசத்தின் ஆளுநராக கைஸ் (ரலி) நியமிக்கப்பட்டார். அங்கே நிலவிய குழப்பங்களை அவர் மிகத் திறமையாகக் கையாண்டார். பின்னர் நடந்த 'ஸிப்பீன்' போரில் அலி (ரலி) அவர்களின் படையின் மிக முக்கியத் தளபதியாக இருந்தார். அலி (ரலி) அவர்களின் மறைவுக்குப் பிறகு, ஹஸன் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் 40,000 வீரர்கள் கொண்ட ஒரு பெரும் படைக்குத் தலைவராக இருந்தார். முஆவியா (ரலி) அவர்களின் படையை எதிர்த்துப் போரிட அவர் முழுத் தகுதியோடு இருந்தார். ஆனால், முஸ்லிம்களுக்கு இடையே ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக ஹஸன் (ரலி) அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தபோது, தன் கையில் இருந்த மாபெரும் அதிகாரத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி அவர் விட்டுக்கொடுத்தார். அதிகாரம் என்பது தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் அல்ல, அது பொறுப்பு என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி இருந்தது.
தன் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் கொள்கைக்காகவும், முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமைக்காகவும் உழைத்த அந்த அறிவுச் சிங்கம், ஹிஜ்ரி 60-ஆம் ஆண்டு மதீனாவில் வபாத்தானார். அவர் இறக்கும்போது அவரிடம் அதிகச் சொத்துக்கள் இல்லை; ஆனால், ஆயிரக்கணக்கான ஏழைகளின் துஆக்களும், ஒரு மாபெரும் வரலாறும் அவரிடம் இருந்தது. புத்திக்கூர்மை என்பதை பிறரை ஏய்ப்பதற்காக பயன்படுத்தாமல் அதை இறைவழியில் பிறருக்கு உதவுவதற்கே பயன்படுத்த வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையால் நிரூபித்தவர் கைஸ் இப்னு ஸஅத் (ரலி)!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #QaysIbnSad #AnsarLeader #Generosity #IntelligenceWithTaqwa #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment