ஹதீஸ்களைத் தொகுப்பது ஒரு கலை என்றால், அதை அறிவிக்கும் மனிதர்களை இவர் நல்லவர், இவர் பொய்யர், இவர் பலவீனமானவர் என்று சல்லடை போட்டுச் சலித்தெடுப்பது இன்னொரு கலை. அந்தக் கலையை ஈராக்கில் முதன்முதலில் தொடங்கி வைத்த மாமேதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.
ஒரு தங்க நாணயம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய அதை நெருப்பில் உருக்கிக் கல்லில் உரசிப் பார்க்க ஒரு பொற்கொல்லர் தேவை. அதேபோல, ஹதீஸ் என்ற பொக்கிஷத்தில் போலிகள் கலந்துவிடாமல் தடுக்க, பஸ்ரா மண்ணில் உருவான மாபெரும் ஹதீஸ் கொல்லர் தான் இமாம் ஷுஅபா. அதனால்தான் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ அவர்கள் இவரை, அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையின் விசுவாசிகளின் தலைவர்) என்று நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார்.
பெயர்: ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ் அல்-அதிகி
சிறப்புப் பெயர்: அபு பிஸ்தாம்.
காலம்: ஹிஜ்ரி 82-ல் பிறந்து, ஹிஜ்ரி 160-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் பஸ்ரா நகரம். (இவர்கள் 'தபஉத் தாபியீன்கள்' - தாபியீன்களைப் பார்த்தவர்கள் என்ற தலைமுறையைச் சேர்ந்தவர்).
அன்றைய காலகட்டத்தில் பலர் ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த அறிவிப்பாளர்களின் பின்னணியை ஆராயும் பழக்கம் ஈராக்கில் பெரிய அளவில் இல்லை. அந்த நேரத்தில் தான் இமாம் ஷுஅபா வந்தார். எல்லோரிடமிருந்தும் ஹதீஸ்களை ஏற்க முடியாது. ஒரு நபர் உண்மையானவரா, அவரின் நினைவாற்றல் எப்படிப்பட்டது என்று முதலில் பரிசோதிக்க வேண்டும் என்று ஈராக்கில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார். இதற்குப் பெயர்தான் ஜர்ஹ் வத் தஃதீல் (அறிவிப்பாளர் விமர்சனக் கலை). ஈராக்கில் இந்தக் கலைக்கு ஆணிவேர் இவர்தான்.
ஹதீஸில் யாராவது பொய் சொல்கிறார்கள் அல்லது மனப்பாடத் திறனில் குறைபாடு உடையவர்கள் என்று தெரிந்தால், ஷுஅபா அவர்களைச் சும்மா விடமாட்டார். அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய ஆளாக இருந்தாலும் சரி, தயவுதாட்சண்யமின்றி மக்கள் மன்றத்தில் அவர்களைத் தோலுரித்துக் காட்டுவார். அவர் சொல்லும் ஒரு புகழ்பெற்ற வார்த்தை:
நான் வானத்திலிருந்து கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து போவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாக நான் அறிவிப்பதை விட எனக்கு மிகச் சிறந்ததாகும்!
இமாம் ஷுஅபாவிடம் இருந்த கடுமையைப் பார்த்து அன்றைய உலகமே பயந்தது. ஒரு அறிவிப்பாளரிடம் சென்று ஷுஅபா ஒரு ஹதீஸைக் கேட்கிறார் என்றால், அந்த அறிவிப்பாளருக்கு அது ஒரு மிகப்பெரிய நம்பகச் சான்றிதழ். ஹதீஸ் அறிஞர்கள் கூறுவார்கள்:
ஒரு ஹதீஸை ஷுஅபா அறிவிக்கிறார் என்று தெரிந்தால், அந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி நீங்கள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை. அவர் தனக்கு முன்னால் உள்ள அனைத்தையும் மிகத் துல்லியமாகச் சல்லடை போட்டுத் தேய்த்துப் பார்த்திருப்பார்!
அவர் ஹதீஸ் தேடி ஊர் ஊராகப் பயணம் செய்ததால், ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த சொந்தப் பொருட்கள் அனைத்தையும் விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய வீட்டின் கூரையில் இருந்த மரக் கட்டைகளைக் கூடப் பிய்த்து விற்று ஹதீஸ் தேடினார் என்றால் அவர் கல்வியின் மீது கொண்டிருந்த காதலை என்னவென்று சொல்வது!
அவர் வறுமையில் வாழ்ந்தாலும், தன்னிடம் யாராவது வந்து உதவி கேட்டால் தட்டாமல் கொடுப்பார். ஒருமுறை அவர் கழுதையின் மீது சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஏழை வந்து உதவி கேட்டார். தன்னிடம் கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதால், தான் ஏறி வந்த அந்தக் கழுதையை அப்படியே அந்த ஏழையிடம் கொடுத்துவிட்டு நடந்தே சென்றார் அந்த மாமனிதர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் கலையைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் பணியைச் செய்து முடித்த இமாம் ஷுஅபா (ரஹ்), ஹிஜ்ரி 160-ம் ஆண்டு பஸ்ரா நகரில் வறுமையிலேயே மரணமடைந்தார்.
இன்று நாம் ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பார்த்தவுடன் அதன் உண்மைத்தன்மையைச் சிறிதும் ஆராயாமல் அப்படியே மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறோம். ஆனால், இமாம் ஷுஅபா போன்றவர்கள், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு வார்த்தை சொல்லப்பட்டால், அதைக் கூறுபவன் யார், அவனுடைய குணம் என்ன, அவன் நினைவாற்றல் எப்படிப்பட்டது என்று அவனுடைய நாடி நரம்பையெல்லாம் அலசி ஆராய்ந்துள்ளார்கள். இஸ்லாம் என்ற மாளிகையின் அஸ்திவாரங்கள் இவ்வளவு வலிமையாகக் கட்டப்பட்டதால்தான், இன்றும் அது எந்தப் புயலுக்கும் அசையாமல் கம்பீரமாக நிற்கிறது!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamShuba #ShubaIbnAlHajjaj #Basra #JarhWaTadil #HadithCritic #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment