🎯 இஸ்லாத்தில் வாழ்த்து சொல்வது!
நாம் ஒருவரை ஒருவர் சந்தித்கும் போது முகமன் (ஸலாம்) சொல்கின்றோம் இது அனைவரும் அறிந்தது. இஸ்லாத்தில் "ஸலாம்" சொல்வது மட்டும் வாழ்த்து இல்லை. இஸ்லாத்தில் வாழ்த்துகள் பன்மையானது.
நபி வழியில் உள்ள வாழ்த்துக்களின் சிறு தொகுப்பை ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்வோம்.
👉 நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லப்பட்ட "இனிய வாழ்த்துகள்"!
குர்ஆனில் “நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) என்ற வசனம் இறங்கியதற்காக நபி (ஸல்) அவர்களிடம் “தங்களுக்கு இனிய வாழ்த்துகள் ( قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا)" என்று கூறி நபி தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர். (புகாரி 4172)
👉 உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட போது இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் "உங்கள் வரவு நல்வரவாகட்டும் (مَرْحَبًا بِكَ مِنِ ابْنٍ وَنَبِيٍّ ) என்று வாழ்த்தினார்கள். (பார்க்க புகாரி 3207)
👉 "வாழ்த்துகள்!"
பசியின் காரணமாக நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் ஒரு அன்சாரி தோழரின் வீட்டில் உணவு அருந்த சென்றார்கள். அங்கே அவர்களை "வாழ்த்துகள்! வருக" என்று கூறி அந்த அன்சாரி தோழரின் துணைவியார் வரவேற்றார்கள் (பார்க்க முஸ்லீம் 4143)
👉 "வருக! வருக!”
அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்கள், அவர்களை நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீயே! வருக! வருக! (مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ )" என்று கூறி வரவேற்றார்கள். (புகாரி 3171)
👉 ஒருவரின் கல்வி அறிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துவது!
அபுல்முன்திர் என்று அழைக்கப்படும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் 2:255 வசனத்தை ஓதி காட்டினார்கள், அதை கேட்டு நபி (ஸல்) அவர்கள் “உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள். (பார்க்க முஸ்லீம் 1476)
திருமண வாழ்த்து உட்பட இன்னும் சில வாழ்த்துக்களும் நபி மொழிகளில் உள்ளது. பதிவின் நீளம் கருதி சுருக்கியுள்ளேன்.
🎯 மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்களை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூறலாம். இது தவிர நல்ல அர்தங்களை தரும் வாசகங்களை பயன்படுத்தியும் வாழ்த்து கூறலாம். ஆனால் அதை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூற முடியாது, அப்படி கூறினால் அது பித்அத் ஆகும்.
👉 உதாரணத்திற்கு பெருநாள் தினத்தில் ஒருவர் "ஈத் முபாரக்" என்று சொல்கிறார், மகிழ்ச்சியை வெளிப்படுத்த தாமாக விரும்பி அதை சொன்னால் அது பித்அத் இல்லை.
பெருநாளில் "ஈத் முபாரக்" சொல்ல வேண்டும் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் அது பித்அத்.
இஸ்லாத்தில் இருப்பதாக சொல்லாமல் தாமாக விரும்பி செய்யும் மார்க்க விஷயங்களும், உலக விஷயங்களும் பித்அத் இல்லை என்பதை "இஸ்லாத்தின் பார்வையில் பித்அத்!" என்ற தொடரில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன் பார்க்கவும். https://www.facebook.com/siddique.mtech/posts/2116192505248685
✍️ ஆக்கம் : S. சித்தீக் M.Tech
No comments:
Post a Comment