இஸ்லாத்தின் பன்முகத்தன்மையே அதன் தனிச்சிறப்பு!
இஸ்லாம் மனித இனம் முழுமைக்குமான மார்க்கம், மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, சமூகத்தில் பலவீனமானவர்களும் இருப்பார்கள், வலிமை மிக்கவர்களும் இருப்பார்கள், பயந்த சுபாவம் உள்ளவர்களும் இருப்பார்கள், தைரியமானவர்களும் இருப்பார்கள் இப்படி எல்லா வகையான மனிதர்களையும் உள்ளடக்கியது தான் மனித இனம்.
பலவகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் இருப்பதினால் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது சாத்தியம் இல்லை, அப்படி ஒரே சட்டமாக இருந்தால் சமூகத்தின் ஒரு வகையினரால் மட்டுமே அதை பின்பற்ற முடியும், எல்லோருக்குமான மார்க்கமாக அது இருக்காது. பல வகையினரையும் கருத்தில் கொண்டு பல வகையான சட்டங்களை கொடுத்தால் மட்டுமே அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் / பின்பற்றும் மார்க்கமாக இருக்க முடியும்.
இஸ்லாம் ஒற்றை கலாச்சார முறையை போதிப்பதில்லை. ஒரே விஷயத்தில் பல வழிமுறைகளை போதிக்கின்றது. இந்த பன்முக தன்மைதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. (ஒரே ஒருவன் என்றால் அது இறைவன் மட்டுமே, இறைவனை தவிற மற்ற அனைத்தும் பன்மையானது தான்)
இஸ்லாத்தில் சொல்லப்பட்ட பன்மை கருத்துக்களில் சில வற்றை குர்ஆன், நபிவழி ஆதாரங்கள் மூலம் இந்த பதிவில் பார்ப்போம்.
👉 தீமையை எதிர்ப்பதில் பன்மை தன்மை!
தவறுகள் நடக்கும் போது அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும், ஆனால் அது எல்லாராலும் முடியாது, நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரரியாக இருந்தால் தவறுகளை கையால் தடுக்கலாம், சற்று வலிமை உள்ள மனிதராக இருந்தால் வாயால் அறிவுறை கூறி தவறுகளை தடுக்க முயற்சிக்கலாம். பலகீனமான மனிதராக இருந்தால் தமது உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிவிடலாம். இந்த மூன்று வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் போதிக்கின்றது (பார்க்க ஸஹீஹ் முஸ்லீம் - 78).
அவர் அவர் தன் நிலைமை, வலிமை, அதிகாரத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எல்லோரும் ஒன்றே ஒன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை.
👉 பாதிப்பை எதிர்கொள்வதில் பல வழிமுறைகள்!
நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படும், ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள், மென்மையானவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள் மன்னிக்கவும் செய்வார்கள், மனிதர்களில் அதிக இரக்க குணம் உடைய நபி (ஸல்) அவர்கள் தன் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி)யை கொலை செய்த வஹ்ஷியை மன்னித்தார்கள், பழிக்கு பழி வாங்கவில்லை (புகாரி 4072). தன் மனைவி மீது அவதூறு சொன்ன அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிக்க வில்லை (புகாரி 2661), நபி (ஸல்) அவர்கள் மன்னித்த பட்டியல் மிக பெரியது, சொல்லிக்கொண்டே போகலாம்.
1. தண்டித்தே ஆக வேண்டும் என நினைப்பவர்கள், 2. மன்னிக்க நினைப்பவர்கள், 3. தண்டிக்கவும் வேண்டாம், மன்னிக்கவும் வேண்டாம் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வாங்கி கொடுங்கள் என நினைப்பவர்கள் என அனைத்து வகையினருக்கும் பொருந்தும் வகையில் தண்டனை, மன்னிப்பு, இழப்பீடு என மூன்றுவிதமான வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க குர்ஆன் 42:43, குர்ஆன் 2:178)
இப்படி பல வழிமுறைகளை போதிப்பதால் அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில் இஸ்லாம் இருக்கின்றது. இந்த பன்மை தன்மை தான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு,
👉 பாவ பரிகாரங்களில் பல வழிமுறைகள்!
மனிதர்கள் இறைவனுக்குச் செய்யும் பெரும்பாலான பாவங்களை இறைவன் (விரும்பினால்) மன்னித்துவிடுகின்றான், சில பாவங்களுக்கு மட்டும் பரிகாரங்கள் செய்ய இஸ்லாம் கட்டளையிடுகின்றது. பரிகாரங்கள் என்பது சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை, மனிதர்களுக்கு செய்யும் உதவிகள் தான் இஸ்லாத்தில் பரிகாரங்களாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் பல வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது.
உதாரணத்திற்கு ஒருவர் "வேண்டும் என்றே நோன்பை முறித்தால்" அவர் ஒரு அடிமையை விடுதலை செய்யலாம் அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம் பொதுவாக இந்த பரிகாரங்களை பணக்காரர்கள் தான் செய்ய முடியும், ஏழைகள் என்ன செய்வது, இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கலாம், உடல் பலகீனமானவர்களால் இது முடியாது. இறுதியாக முடிந்த அளவு ஏதேனும் ஒரு தர்மத்தை செய்து பரிகாரம் தேடலாம். (புகாரி 1936)
இப்படி ஏழை, பணக்காரர், பலகீனமானவர் என அனைத்து தரப்பு மக்களுமே பரிகாரம் தேடிக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது. ஒரே ஒரு சட்டம் சொன்னால் எப்படி எல்லோரும் பின்பற்ற முடியும், மனிதர்களின் பன்மை தன்மையை அங்கீகரிக்கும் போது தான் சமூகத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்பட்டு அது அனைவருக்குமானதாக இருக்கும்.
தர்மம், கடன், தொழுகை என இஸ்லாத்தின் பன்மை தன்மையை விளக்கும் இன்னும் பல விஷயங்களை கடந்த ரமலானில் 2022 தொடரில் விளக்கி இருந்தேன், அந்த தொடரை முழுவதும் வாசிக்க
https://www.facebook.com/siddique.mtech/posts/1855448571323081
ஆக்கம் : S. சித்தீக் M.Tech
No comments:
Post a Comment