மாபெரும் சாம்ராஜ்யங்களை வீழ்த்திய இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களில், சில தளபதிகளின் பெயர்கள் ரோமானியர்களின் தூக்கத்தைக் கெடுத்தன. அந்தப் பட்டியலில் மிக முக்கியமான ஒரு பெயர், கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களால் ரோமப் பேரரசுக்கு எதிராக அனுப்பப்பட்ட நான்கு பிரதான தளபதிகளில் ஒருவரான ஷுரஹ்பீல் இப்னு ஹசனா (ரலி).
தந்தையின் பெயரால் அழைக்கப்படுவதே அன்றைய அரபு மரபு. ஆனால், இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுத் தியாகங்கள் பல செய்த தன் தாயார் 'ஹசனா' அவர்களின் பெயரால் அறியப்படுவதையே பெருமையாகக் கருதியவர் இந்த மாவீரர்!
ஆரம்ப கால முஸ்லிம்களில் இவரும் ஒருவர். மக்காவின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் இஸ்லாத்திற்காக அபிசீனியாவிற்கும், பின்னர் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்த தியாகி. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீ எழுத்தாளர்களில் ஒருவராகவும் செயல்பட்ட சிறந்த அறிஞர் இவர். இறைவனின் வேதத்தை எழுதுவதற்காக எந்தக் கைகள் எழுத்தாணியைப் பிடித்தனவோ, அதே கைகள்தான் பிற்காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகளான ரோமானியர்களின் வாள்களைச் சுக்குநூறாக உடைத்தெறிந்தன!
அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம். பிரம்மாண்டமான ரோமப் பேரரசை (பைஸாந்திய சாம்ராஜ்யம்) வீழ்த்த, இஸ்லாமியப் படை நான்கு பிரிவுகளாக ஷாம் (சிரியா) தேசத்தை நோக்கிப் புறப்பட்டது. மாபெரும் வீரர்களான அபூ உபைதா, அம்ர் இப்னுல் ஆஸ், யஸீத் இப்னு அபூஸுஃப்யான் ஆகியோரோடு நான்காவது படையின் மாபெரும் தளபதியாகப் புறப்பட்டவர்தான் ஷுரஹ்பீல் (ரலி). ஷாம் தேசத்தின் ஒரு பகுதியான ஜோர்தான் (உர்துன்) முழுவதையும் வெற்றி கொள்ளும் இமாலயப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
யர்மூக் போர்க்களம்... இஸ்லாமிய வரலாற்றின் தலைவிதியை நிர்ணயித்த அந்தப் பயங்கரமான களம். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மூர்க்கமான ரோமப் படையினரை எதிர்த்து, வெறும் நாற்பதாயிரம் முஸ்லிம்கள் நின்றார்கள். போரின் ஒரு கொடூரமான கட்டத்தில் ரோமானியர்களின் தொடர் தாக்குதலால் முஸ்லிம் படையின் ஒரு பகுதி சற்று நிலைகுலைந்த போது, அசைக்க முடியாத ஒரு இரும்புச் சுவரைப் போலத் தன் படையோடு களத்தின் மையத்தில் நின்றார் தளபதி ஷுரஹ்பீல் (ரலி).
எதிரிகளின் வாள் வீச்சுகளுக்கும், அம்பு மழைகளுக்கும் மத்தியில், மரணத்தைப் பார்த்துச் சிரித்தவாறு அவர் நடத்திய அந்த மூர்க்கமான தாக்குதல்தான் ரோமானியப் படையை நிலைகுலையச் செய்தது. இவருடைய ஈமானிய வீரத்தாலும், வியூகத்தாலும்தான் தப்ரிய்யா (Tiberias) உட்பட ஜோர்தானின் பல நகரங்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் காலடியில் வந்து விழுந்தன.
போர்க்களங்களில் சல்லடையாகத் துளைக்கப்பட்டாலும், தன் உடலெங்கும் தழும்புகளைச் சுமந்த அந்தத் தளபதிக்கு ரோமானியர்களின் வாள்களால் வீரமரணம் கிடைக்கவில்லை. ஆனால், அல்லாஹ் அவருக்குப் பன்மடங்கு உயர்ந்த வேறொரு வழியில் 'ஷஹீத்' என்ற அந்தஸ்தைக் கொடுக்க நாடினான் போல.
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஷாம் தேசத்தை உலுக்கிய 'அம்வாஸ்' என்ற கொடிய பிளேக் நோய் பரவியது. இஸ்லாத்தின் மாபெரும் தளபதிகளான அபூ உபைதா (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோரைத் தொடர்ந்து, போர்க்களங்களில் ரோமானியர்களை நடுங்கச் செய்த ஷுரஹ்பீல் இப்னு ஹசனா (ரலி) அவர்களையும் அந்த நோய் தாக்கியது.
எந்தப் படைக்கும் அஞ்சாத அந்தச் சிங்கம், அல்லாஹ்வின் விதிக்கு முன்னே புன்னகையோடு தலைவணங்கி, ஹிஜ்ரி 18-ஆம் ஆண்டில் அதே ஷாம் தேசத்தில் ஒரு ஷஹீதாகத் தன் இன்னுயிரை நீத்தது.
இன்று பதவியும், புகழும் தேடிப் பலர் அலைகிறார்கள். ஆனால், மாபெரும் தேசங்களை வென்று இஸ்லாமியக் கொடியைப் பறக்கவிட்ட பின்பும், எந்தத் தற்பெருமையும் இன்றி, அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு எளிமையாக வாழ்ந்தவர் ஷுரஹ்பீல் (ரலி). அவருடைய வீரம் நம் நரம்புகளில் ஓட வேண்டும்; அதேநேரம் அவருடைய அந்தப் பணிவும், மார்க்கத்திற்கான அர்ப்பணிப்பும் நம் உள்ளங்களில் வேரூன்ற வேண்டும். ஜோர்தான் மண்ணை இஸ்லாத்தின் ஒளியால் நிரப்பிய அந்த மாபெரும் தளபதியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #ShurahbilIbnHasana #ConquestOfSham #BattleOfYarmouk #Jordan #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment