பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, March 26, 2026

மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்....


*மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்* 

*திருமணச் சட்டங்கள் மற்றும் விதிகள் - 2026*

*குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்,* மிகக் குறைந்த செலவில் நடைபெறும் திருமணமே அதிக பரக்கத் (அருள்) நிறைந்தது. தேவையற்ற சடங்குகள் மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து, சுன்னத்தான முறையில் திருமணங்களை நடத்த வேண்டும். ஜமாஅத்தின் நிர்வாகக் குழு 28 டிசம்பர் 2025 அன்று கூடி, ஏற்கனவே 2002-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளை சில மாற்றங்களுடன் 21.03.2026 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

விதிமுறைகள்:
*1.நிச்சயதார்த்தம்:* மார்க்க ரீதியாக இது ஒரு வாக்குறுதி மட்டுமே. எனவே, மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் நெருங்கிய 50 நபர்களுக்கு மிகாமல், பெண்ணின் வீட்டு மஹல்லா பள்ளியிலோ அல்லது பெண் வீட்டிலோ ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாகத் திருமணத் தேதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*2.ஷுக்ரானா விருந்து:* இதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

*3.திருமண மண்டபம்:* ஷுக்ரானா விருந்தை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது.

*4.பெண் வீட்டார் மீது சுமை:* ஷுக்ரானா விருந்து என்ற பெயரில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் திணிக்கக்கூடாது.

*5.நண்பர்களுக்கு விருந்து:* திருமணத்திற்குப் பிறகு மணமகன் தன் நண்பர்களுக்கோ அல்லது மணமகள் தன் தோழிகளுக்கோ விருந்து அளிக்கக்கூடாது.

*6.ஹல்தி (மஞ்சள்) சடங்கு:* நிகாஹ்விற்கு முன் ஹல்தி போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது. வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் உணவு வழங்கலாம்.

*7.தேவையற்ற சடங்குகள்:*  சோர் ஹல்தி, கட்டு-கல்தி, மரு (Maru), பெண்ணின் வீட்டிற்குப் பலகாரங்கள் கொண்டு செல்லுதல், ஸலாமி போன்ற சடங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*8.மஹர்:* மஹர் என்பது பெண்ணின் உரிமை. மணமகன் தன் வசதிக்கேற்ப எளிதாக வழங்கக்கூடிய தொகையை நிர்ணயிக்க வேண்டும். கௌரவத்திற்காக அளவுக்கு அதிகமாகவோ அல்லது பெண்ணின் அந்தஸ்துக்குக் குறைவாகவோ இருக்கக்கூடாது. குறைந்தபட்ச மஹர் 2 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பு.

*9.பூ மாலை:* நிகாஹ் சபையில் மணமகனுக்குப் பூ மாலை அணிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

*10.புகைப்படம் மற்றும் வீடியோ:* நிகாஹ் சபையில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

*11.எளிமை:* திருமணத்தை மிகக் குறைந்த நபர்களுடன் சுன்னத்தான முறையில் நடத்த வேண்டும்.

*12.விருந்தினர்கள்:* நிகாஹ் அன்று பெண் வீட்டார் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் விருந்து அளிக்கலாம்.

*13.உணவு வகை:* விருந்தில் ஒரு சாதம், ஒரு குழம்பு மற்றும் ஒரு இனிப்பு மட்டுமே இருக்க வேண்டும். இறைச்சியில் ஆடு, மாடு அல்லது கோழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*14.பரிசுப் பொருட்கள்:* விருந்தின் போது கிப்ட் பாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) போன்றவற்றை விநியோகிக்கக் கூடாது.

*15. காலை உணவு:* மணமகன் வீட்டார் வெளியூராக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் வீட்டில் காலை உணவு ஏற்பாடு செய்யலாம்.

*16.பெண் அழைப்பு (ருக்ஸதி):* பெண்ணை அனுப்பும்போது மணமகன் வீட்டாருக்குத் தேநீர் மற்றும் பிஸ்கட் மூலம் மட்டும் உபசரிக்கலாம்.

*17.அலங்காரங்கள்:* திருமண மண்டபத்தையோ அல்லது வீடுகளையோ தேவையின்றி அதிகப்படியான விளக்குகள், மேடை அலங்காரங்கள் மற்றும் ஆடம்பரமான பந்தல்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

18.(பட்டியலில் விடுபட்டுள்ளது)

*19.வெயில் பாதுகாப்பு:* வெயிலில் இருந்து தப்பிக்க சாதாரணப் பந்தல் அமைக்கலாம், ஆனால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கக் கூடாது.

*20.ஆடைகள்:* நிகாஹ்விற்காக மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் தலா இரண்டு ஜோடி ஆடைகளுக்கு மேல் எடுக்கக் கூடாது.

*21.இதர பொருட்கள்:* மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து குடை, காலணி (Shoe) போன்றவற்றை அனுப்பக்கூடாது.

*22.தங்கம்:*
 குறிப்பு :- 22வது எண்ணில் இருந்த பிழையான பதிவு சரி செய்யப்பட்டுள்ளது. 

22.தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பெண்களின் திருமணத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

"விலைவாசி ஏற்றத்தினால் திருமணங்கள் தடைபடுவது, பெற்றோர்களுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைத் தருகிறது. இதனால் இளம் பெண்கள் இல்லற வாழ்க்கையில் நுழையும் வாய்ப்பை இழந்து, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்."
எனவே, வசதியுள்ளவர்கள் கூட ஒரு நெக்லஸ், இரண்டு வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரத்திற்கு மேல் நகைகளை அணிவிக்க வேண்டாம். இருப்பினும், மணமகன் வீட்டார் தங்களின் வசதிக்கேற்ப மணப்பெண்ணுக்கு நகைகளை வழங்கலாம்.

*23.விருந்தினர் நகை:* திருமணத்திற்கு வரும் பெண்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். இது பெண் வீட்டாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

*24.ஆடை கட்டுப்பாடு:* மணமக்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மார்க்கத்திற்குப் புறம்பான ஆடைகளை அணியக்கூடாது.

*25.வலிமா விருந்து:* மணமகன் தன் வசதிக்கேற்ப வலிமா விருந்து அளிக்க வேண்டும். கௌரவத்திற்காகவும் புகழுக்காகவும் கடன் வாங்கிச் செய்யக்கூடாது.

*26.பெண் வீட்டார் பங்களிப்பு:* வலிமா விருந்திற்காகப் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

*27.வலிமா நேரம்:* நிகாஹ் மற்றும் தாம்பத்தியத்திற்குப் பிறகு வலிமா நடத்தப்பட வேண்டும். அதிகபட்சம் 200 கிலோ அரிசி வரை மட்டுமே சமைக்க அனுமதிக்கப்படுகிறது.

*28.பெண் வீட்டிற்குச் செல்லுதல்:* வலிமா அன்று மணமகன் பெண் வீட்டிற்குச் செல்லும்போது நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது.

*29.சீதனம் (Dowry):* தந்தை தன் மகளுக்குத் தன் வசதிக்கேற்ப வழங்கும் பொருட்கள் அன்பளிப்பாகக் கருதப்படும். ஆனால், மணமகன் வீட்டாரோ அல்லது மணமகனோ நகை, பணம், வாகனம் என எதையும் சீதனமாகக் கேட்பது மார்க்கப்படி ஹராம் (தடுக்கப்பட்டது).

*30.பெண்ணின் சொத்து:* மணமகள் கொண்டு வரும் சீதனப் பொருட்களுக்கு அவரே முழு உரிமையாளர்.

*31.இதர சடங்குகள்:* சில்லா, குல் போஷி, ஈதி விருந்து, கத்னா (சுன்னத்) விருந்து, பெயரிடும் விழா மற்றும் வளைகாப்பு போன்ற சடங்குகளைச் செய்வதும் அதற்கு அழைப்பு விடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

*குறிப்பு: மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபீன் ஜமாஅத் மூலம் திருமணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட அனைத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜமாஅத் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.*

*அமலுக்கு வரும் தேதி: 21.03.2026*

Wednesday, March 25, 2026

பொருந்தா வாதம் அறிதல்


பொருந்தா வாதம் அறிதல்

விவாதம், தர்க்கம் என்றவுடன் ஓர் அமைப்பு மற்றோர் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, நாள் குறித்து, மண்டபம் பிடித்து, பெல் அடிக்கும் நடுவர்களை நியமித்து, இருபிரிவாக அமர்ந்து பேசுதல் என்று புரிந்துவிட வேண்டாம். இங்கு அதைப் பற்றி பேசுவது நோக்கமுமல்ல. 

மாறாக நமது அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களில் வைக்கப்படும் கருத்துக்களில் உண்மைகளை கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பொருந்தா வாதங்கள் பற்றிய அறிவை பெற்றிருப்பது அவசியமாகும். 

உணவு விரும்பிகளின் முன்னிலையில் எந்த உணவு உடலுக்கு ஏற்றது என்ற விவாதம் நடைபெற்றால் ஒரு சிறந்த சமையல்காரர், உணவியல் நிபுணரை வென்றுவிட முடியும். 

சாதரண பெரியவர்கள் முன்னிலையில் நாட்டைக் காப்பது எப்படி என்ற விவாதம் ஒரு இராணுவ அதிகாரிக்கும், பேச்சுத் திறனும், மனப்பாடத் திறனும் கொண்ட ஒரு அரசியல் வாதிக்கும் இடையே நடைபெற்றால் அந்த அரசியல் வாதி இராணுவ வீரரை வென்றுவிடுவார். திறமைமிக்க அந்த அரசியல் வாதியே மக்களை வென்றெடுப்பார்.

ஏனெனில் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் ஆசைகளைத் தொடுவது அறிவை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை விட அதிக வலிமையானதாக பெரும்பான்மையினரிடம் கருதப்படுகிறது. 

“பீரங்கி வண்டிகள் எங்கள் உடல் மீது ஏறினாலும் பாபர் மசூதி இடத்தில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விடமாட்டோம்” என பாபர் மசூதி இடிப்பு கண்டண ஆர்ப்பாட்டங்களில் பல தலைவர்கள் பேசியதை நான் செவியுற்றுள்ளேன். அதைக் கேட்டதும் நானும் கூடியிருப்போருடன் சேர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று கூறியுள்ளேன்.. 

ஆனால் வீட்டிற்கு வந்து அந்த தலைவர்கள் பேசியதை மனக்கண் முன் கொண்டு வந்தால் அவை கூடியிருப்போரின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் என்பதைத்  தவிர நடைமுறையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்ற உண்மைதான் விளங்கும். 

உண்மைகள் ஒரு விசயத்தை முறையான ஆதாரங்களுடன் ஆழ்ந்து சிந்திப்பதில்தான் வெளிப்படும். 
இன்றைய உலகில் எங்கு நோக்கினும் முறையற்ற வாதங்கள்தான் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அறிவு ஜீவிகள் என்று தம்மை கருதிக் கொள்வோரும் அந்த முறையற்ற வாதங்களில் மூழ்கியிருப்பதுதான் உண்மைகள் உணரப்படாமல் போவதற்கும், தவறை உண்மை என பெரும்பான்மையினர் சரிகாண்பதற்கும் அடிப்படையாக விளங்குகிறது. 

“தமிழர்கள் அனைவரும் எனது நண்பர்கள், தமிழ்நாட்டில் எனக்கு யாரும் எதிரியல்ல” என ஒரு அரசியல் தலைவர் நல்லிணக்கம் கருதி பேசினார்.

 அதற்குப் பதிலளித்த மற்றொரு அரசியல் தலைவர் 
“அனைவரும் நண்பர்கள் என்றால் கரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாற்பது பேர் மரணித்ததற்கு காரணம் நான்தான் என என்மீது ஏன் பழிபோட்டீர்கள்?” எனக் கேட்டார். 

அந்த தலைவரின் ரசிகர்கள் ஆஹோ, ஓஹோ என்றனர். இதில் உள்ள முறையற்ற வாதத்தைக் கூட அவர்கள் அறிய முற்படவில்லை. 

இன்றொரு செய்தி படித்தேன். ஒரு மாணவன் தேர்வுத் தாளில் வினாக்களுக்கு உரிய விடை எழுதாமல் ஆசிரியரின் காலில் தான் விழுந்து கெஞ்சுவதைப் போன்று படம் வரைந்து “ஆசிரியரே! என்னை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. நான் ஒரு ஏழை. எப்படியாவது என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்!” கோரிக்கை வைத்துள்ளார். 

இதைக் கண்டு அந்த மாணவன் மீது பலரும் தமது பரிதாபங்களை வெளிப்படுத்தி அவரை பாஸ் ஆக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

ஒரு ஆசிரியரின் கடமை கல்வி வழங்குவதுதான். ஏழை மாணவனுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது அல்ல. சரியான பதில் எழுதாமல் மதிப் பெண் தருமாறு கேட்பதும், அதற்கு கருணையை நாடுவதும் முறையற்ற வாதமாகும். 

சரியான வாதங்கள் போல் தோன்றும். ஆனால் சிந்தித்தால் அவை தவறான வாதங்கள் என்பது வெளிப்படும். இதுதான் பொருந்தா  வாதம் ஆகும். 

இதன் காரணமாகத்தான் அதிகமான மதரஸாக்களில் “மன்த்திக்” என்ற தலைப்பில் ஒரு தர்க்கவியல் பாடமே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதைக் கற்போரில் 90 சதவிகிதம் பேருக்கு அது என்ன வென்றே தெரியாது. 

அதிகமான முஸ்லிம்கள் இணைவைப்புக் காரிங்களில் மூழ்கியிருப்பதற்கும் வழிகெட்ட  ஆலிம்களின் பொருந்தா வாதங்கள் பற்றிய அறியாமையே காரணமாக உள்ளது. 

 தவறான வாதங்களில் சிக்காமல் இருக்கவும், ஒரு கருத்தில் உள்ள தவறைக் கண்டறியவும், அறிவுப் பூர்வமாக உண்மையைக் கண்டறிவதற்கும் பொருந்தா வாதம் எனும் முறையற்ற வாதங்களைப் பற்றி அறிவது மிகவும் அவசியமானதாகும்.

Abdun Nasir M.I.Sc.,

சிந்திக்கத் தெரியாதவர்கள் ???!!!!


தான் மட்டுமே நன்கறிந்தவன்.மற்றவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்ற நம்பிக்கையிலும், மற்றவர்களை கேலி கிண்டல் செய்யும் எழுத்து நடையிலும் உங்கள் கருத்துக்களை பதிவிடாதீர்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் வாதங்களை கண்ணியமாகவும், ஆதாரப் பூர்வமாகவும், மார்க்க வரம்புகளுடன் ஒப்பிட்டும் பதிவிடுங்கள்.

சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல் நம் பார்வைக்கு அற்பமானவர்களிடமும் அறிவுசார் ஞானம் இருக்கலாம்.

மூஸாவுக்கு கிடைக்காத கல்வி ஹளிர் அவர்களுக்கு கிடைத்திருந்தது.

பேரீத்தம் மரம் காய்க்க மகரந்தச் சேர்க்கை முக்கியம் என அண்ணலாருக்குத் தெரியாத அறிவு அன்சாரிகளிடம் இருந்தது.

"இறைவா! எனக்கு கல்வியை அதிகமாக்கு!" என இறுதித் தூதரை இறுதி வேதம் பிரார்த்திக்கச் சொல்கிறது. 

ஓருடலின் இரு பாகங்கள் சண்டையிட்டால் பாதிப்பு உடலுக்கே.

ஒரு கட்டிடத்தின் இரு பகுதிகள் பிளவுற்றால் பாதிப்பு கட்டிடத்திற்கே.

சர்க்கரை வியாதி முற்றினால் சிலருக்கு கால்களையே வெட்டி எடுப்பார்கள்.

புற்றுநோய் எல்லை கடந்தாலும் சில நேரங்களில் உடலுறுப்புகள் நீக்கப்படும்.

கருத்தியல் ரீதியாக சகோதரத்துவத்தை பாதிக்கும் நோய்களை முற்றவிடாதீர்கள்.

அறிவுசார் கருத்துக்களில் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். உண்மையிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உண்மையில் பெருமை என்பது மக்களை மட்டமாகக் கருதுவதும், உண்மையை ஏற்க மறுப்பதும் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.

(அல்குர்ஆன் 51:55)


-- Abdun Nasir M.I.Sc.,

Friday, March 20, 2026

ஹதீஸ் கலைச் சிற்பிகள் - நிறைவுப் பகுதி


ஒரு மாபெரும் அறிவுப் பயணம் இனிதே நிறைவுற்றது! அல்ஹம்துலில்லாஹ்! ஹதீஸ் கலைச் சிற்பிகள் - நிறைவுப் பகுதி

இரண்டு மாதங்கள்... 60 ஆளுமைகள்... எண்ணற்ற தூக்கமில்லா இரவுகள்... ஆயிரக்கணக்கான தேடல்கள்... இன்று, 'ஹதீஸ் கலைச் சிற்பிகள்' என்ற இந்த நீண்ட, நெடிய வரலாற்றுப் பயணம் அதன் இலக்கை அடைந்து, நிறைவுப் பகுதியில் வந்து நிற்கிறது. என் நாவில் முதலில் வரும் வார்த்தை, 'அல்ஹம்துலில்லாஹ்'! எல்லாப் புகழும் அந்த அல்லாஹ்வுக்கே!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தத் தொடரை நான் ஆரம்பிக்கும்போது, இதற்கு இவ்வளவு அதீத வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஹதீஸ் கலை என்பது சற்று கடினமான, நுணுக்கமான துறை. அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால், முதல் பதிவிலிருந்தே நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை பிரமிக்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல மதிப்பிற்குரிய ஆலிம் பெருந்தகைகள் இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து, பாராட்டியது மட்டுமல்லாமல், பல மேலதிகக் குறிப்புகளையும், நுணுக்கமான தகவல்களையும் தந்து உதவினார்கள். சில இடங்களில் இது பிழை என்று அவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதைத் திருத்திக்கொள்ள நான் ஒருபோதும் தயங்கியதில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால், அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் பெரும்பாலும் 'எழுத்துப் பிழைகளே' தவிர, 'கருத்துப் பிழைகள்' அல்ல என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. அவர்களின் அந்த அன்பான வழிகாட்டுதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தத் தொடரை எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்த ஒரு சுவாரஸ்யமான கதையை இன்று உங்களுடன் பகிர்கிறேன். 2023-ல், ஹதீஸ் கலையின் மாமேதை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) பற்றி மிக விரிவாக இந்த முகநூலில் எழுதியிருந்தேன். அதே பதிவை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பகிர்ந்தபோது, என் அன்பு நண்பர்கள் சிலர், "இவரைப் போலவே மற்ற ஹதீஸ் அறிஞர்களின் வரலாற்றையும் தொடராக எழுதுங்களேன்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த ஒரு சிறு பொறிதான், இன்று 60 அறிஞர்களின் வரலாறாகப் பூத்துக் குலுங்குகிறது!

"60 பேரைப் பற்றி எழுதியது, சந்தோஷம்" என்று சொல்வது எளிது. ஆனால், இதற்கான ஆதாரங்களைத் திரட்ட நான் பட்ட கஷ்டங்கள்... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது! சில அறிஞர்களைப் பற்றிய தகவல்கள் அரபு மூல நூல்களில் மட்டுமே இருக்கும். அவற்றைத் தேடி, படித்து, மொழிபெயர்த்து, சரிபார்த்து, மீண்டும் என் பாணியில் மாற்றுவதற்குள்... சில நேரங்களில், ஒரு சிறு தகவலுக்காக மணிக்கணக்கில் மொபைலில் தேட வேண்டியிருக்கும். அந்த உழைப்பு, அந்தத் தேடல்... அது ஒரு தனி அனுபவம். இன்று தொடர் முடிந்துவிட்டாலும், அந்தத் தேடலின் நினைவுகள் என் மனதில் பசுமையாக இருக்கும்.

"இதில் ஹதீஸ் கலை ஜாம்பவான்கள் அனைவரையும் எழுதிவிட்டீர்களா?" என்று கேட்டால், "இல்லை" என்பதுதான் என் கறாரான பதில். இன்னும் எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமான, தவிர்க்க முடியாத ஜாம்பவான்கள் எவரையும் நான் விட்டுவிடவில்லை. இந்தத் தொடரில் ஒரு ஒழுங்குமுறை (Chronological Order) இருக்கவில்லை என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். ஒருநாள் மத்திய கால அறிஞரின் வரலாறு வரும், திடீரென்று அடுத்த நாள் ஆரம்ப கால அறிஞரின் வரலாறு வரும், பிறகு மீண்டும் மத்திய காலம், பிறகு ஒரேயடியாகப் பெரிய ஜம்ப் செய்து நவீன கால அறிஞரின் வரலாறு வரும்! ஒரு ஒழுங்கும் இல்லாமல், அன்றைய தினத்திற்கு யாரைப் பற்றி எழுதலாம் என்று யோசனை வரும்போது எழுதினேன், அவ்வளவுதான்!

உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம்... "இமாம் ஷாபி, இமாம் முஜாஹித் போன்ற மாபெரும் இமாம்கள் இந்தத் தொடரில் வரவில்லையே, ஏன்?" என்று.
இன்ஷா அல்லாஹ், என் அடுத்த தொடர் 'முபஸ்ஸிரீன்கள்' (குர்ஆன் விரிவுரையாளர்கள்) மற்றும் 'புகாஹாக்கள்' (சட்டமேதைகள்) பற்றித்தான் இருக்கப் போகிறது. ஆகையால், இந்த ஹதீஸ் அறிஞர்கள் தொடரில் வராதவர்கள் அந்தத் தொடரில் வருவார்கள். கூடவே, இந்தத் தொடரில் வந்த பல இமாம்களும் (உதாரணமாக, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்) அந்தத் தொடரிலும் வருவார்கள், இன்ஷா அல்லாஹ்!

இந்த புனித நோன்பு மாதத்தை பயன்மிக்கதாக ஆக்க வேண்டும், நம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து, அவர்களைப் போல நாமும் இந்த மார்க்கத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத்தான் இந்தத் தொடர் எழுதப்பட்டது. அதற்குரிய கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால், இந்த 60 பதிவுகளையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட நிய்யத் வைத்திருக்கிறேன். அது நிறைவேற அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக, உங்களின் துஆக்களை வேண்டியவனாக, இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் வரலாறு தொடர் நிறைவுற்றது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HadithScholars #Conclusion #SeriesComplete #Alhamdulillah #IslamicHistory #Legacy #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்)


ஹதீஸ் கலையையும் அரபு இலக்கணத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்த பஸ்ரா நகரத்தின் மாபெரும் அறிஞரைத்தான் இன்று (இறுதி தொடராக) நாம் சந்திக்கப் போகிறோம். 

ஹதீஸ்களை அறிவிக்கும்போது அதில் சிறு இலக்கணப் பிழைகூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கறாராக இருந்தவர். அரபு மொழியின் தந்தை என்று போற்றப்படும் 'ஸீபவைஹி' வர்களின் வாழ்வில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்கள்.

முழுப் பெயர்: அபூ ஸலமா ஹம்மாத் இப்னு ஸலமா இப்னு தீனார் அல்-பஸ்ரி.
சிறப்பு: பஸ்ராவின் முஃப்தி, மாபெரும் ஹதீஸ் மற்றும் அரபு இலக்கண மேதை.
காலம்: ஹிஜ்ரி 91-ல் பிறந்து, ஹிஜ்ரி 167-ல் மரணமடைந்தார்.

உலகமே வியக்கும் அரபு இலக்கண மேதையான ஸீபவைஹி, ஆரம்பத்தில் இமாம் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ் படிக்கவே வந்தார். ஒருமுறை ஹதீஸை வாசிக்கும்போது ஸீபவைஹி ஒரு வார்த்தையைத் தவறாக (இலக்கணப் பிழையுடன்) உச்சரித்துவிட்டார். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் உடனடியாக அவரைத் திருத்தினார்கள். இதனால் வெட்கமடைந்த ஸீபவைஹி, "இனிமேல் என் மொழிநடையை யாரும் திருத்த முடியாத அளவுக்கு நான் அரபு இலக்கணத்தைக் கற்றுத் தேறுவேன்" என்று சபதம் செய்து, இலக்கணத் துறையில் இறங்கி, அரபு மொழியின் முடிசூடா மன்னனாக மாறினார். இப்படி ஒரு மாபெரும் இலக்கண மேதையை உலகிற்கு உருவாக்கிய பெருமை இமாம் ஹம்மாத் அவர்களையே சாரும்!

பஸ்ரா நகரில் முதன்முதலில் ஹதீஸ்களை ஒரு முழுமையான நூலாக (ஜாமீஉ / முஸன்னஃப்) தொகுத்த முன்னோடிகளில் இவரும் ஒருவர். அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் முதன்மை மாணவரான ஸாபித் அல்-புனானி (ரஹ்) அவர்களிடம் இவர் கற்ற ஹதீஸ்கள், ஹதீஸ் கலையின் மிகச் சிறந்த பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. "ஸாபித் அல்-புனானி அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் ஹம்மாத் இப்னு ஸலமாவை விடச் சிறந்தவர் யாருமில்லை" என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பஸ்ராவில் 'முஃதஸிலாக்கள்' மற்றும் 'ஜஹ்மியாக்கள்' போன்ற வழிகெட்ட பிரிவினர் மார்க்கத்தில் பல புதிய குழப்பங்களை (பித்அத்களை) உருவாக்கினர். அவர்களுக்கு எதிராக ஒரு இரும்புத் தூண்போல நின்று, நபிகளார் (ஸல்) அவர்களின் தூய்மையான சுன்னாவைப் பாதுகாத்தவர் இமாம் ஹம்மாத். இதனால் வழிகெட்டவர்கள் இவரை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள், ஆனால் இவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை.

இவருடைய மாணவரான அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ இவரைப் பற்றிக் கூறும்போது: "இமாம் ஹம்மாத் இப்னு ஸலமாவிடம் சென்று, 'நாளை நீங்கள் இறந்துவிடுவீர்கள்' என்று யாராவது கூறினால், அதற்காக அவர் தன் வழக்கமான அமல்களை (வணக்கங்களை) விட அதிகமாக எதையும் செய்ய முடியாது. ஏனென்றால், அவருடைய ஒவ்வொரு நொடியும் ஏற்கனவே தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் கற்பித்தல் என்று முழுமையாக நிரம்பியிருந்தது!" இப்படித் தன் வாழ்நாள் முழுவதையும் தொழுகையிலேயே கழித்த அந்த மாமேதைக்கு, அல்லாஹ் மிகச் சிறந்த ஒரு மரணத்தைக் கொடுத்தான். ஆம், ஹிஜ்ரி 167-ல் அவர் பள்ளியில் தொழுதுகொண்டிருக்கும்போதே, தொழுகையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது!

ஒரு மனிதன் எந்த காரியத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறானோ, அதே நிலையில்தான் அவனுக்கு மரணமும் வரும் என்பதற்கு இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களின் மரணமே மிகச் சிறந்த சான்று. அறிவைத் தேடுவது ஒருபுறம் இருந்தாலும், அந்த அறிவைச் செயல்படுத்தும் தக்வாவும் (இறையச்சமும்) இபாதத்தும் (வணக்கமும்) இல்லையென்றால் அந்த அறிவால் எந்தப் பயனும் இல்லை. இன்று நாம் தேடும் அறிவும், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளும் நமக்கு எப்படிப்பட்ட மரணத்தைத் தேடித்தரும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

- Abdullah Ibnu Naseer 

#History #HammadIbnSalamah #HadithScholar #Basra #IslamicHistory #KnowledgeAndPiety

இஸ்லாத்தில் வாழ்த்து சொல்வது!



🎯 இஸ்லாத்தில் வாழ்த்து சொல்வது!

நாம் ஒருவரை ஒருவர் சந்தித்கும் போது முகமன் (ஸலாம்) சொல்கின்றோம் இது அனைவரும் அறிந்தது.  இஸ்லாத்தில் "ஸலாம்" சொல்வது மட்டும் வாழ்த்து இல்லை. இஸ்லாத்தில் வாழ்த்துகள் பன்மையானது.

நபி வழியில் உள்ள வாழ்த்துக்களின் சிறு தொகுப்பை ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

👉 நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லப்பட்ட "இனிய வாழ்த்துகள்"!

குர்ஆனில் “நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) என்ற வசனம் இறங்கியதற்காக நபி (ஸல்) அவர்களிடம் “தங்களுக்கு இனிய வாழ்த்துகள் (‏ قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا)" என்று கூறி நபி தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர். (புகாரி 4172) 

👉 உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட போது இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் "உங்கள் வரவு நல்வரவாகட்டும்  (مَرْحَبًا بِكَ مِنِ ابْنٍ وَنَبِيٍّ )  என்று வாழ்த்தினார்கள்.  (பார்க்க புகாரி 3207)

👉 "வாழ்த்துகள்!"

பசியின் காரணமாக நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் ஒரு அன்சாரி தோழரின் வீட்டில் உணவு அருந்த சென்றார்கள். அங்கே அவர்களை "வாழ்த்துகள்! வருக" என்று கூறி அந்த அன்சாரி தோழரின் துணைவியார் வரவேற்றார்கள் (பார்க்க முஸ்லீம் 4143)

👉 "வருக! வருக!”

அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்கள், அவர்களை நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீயே! வருக! வருக! (مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ ‏ )" என்று கூறி வரவேற்றார்கள். (புகாரி 3171)

👉 ஒருவரின் கல்வி அறிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துவது!

அபுல்முன்திர் என்று அழைக்கப்படும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் 2:255 வசனத்தை ஓதி காட்டினார்கள், அதை கேட்டு நபி (ஸல்) அவர்கள் “உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள். (பார்க்க முஸ்லீம் 1476)

 திருமண வாழ்த்து உட்பட இன்னும் சில வாழ்த்துக்களும் நபி மொழிகளில் உள்ளது. பதிவின் நீளம் கருதி சுருக்கியுள்ளேன்.

🎯 மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்களை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூறலாம். இது தவிர நல்ல அர்தங்களை தரும் வாசகங்களை பயன்படுத்தியும் வாழ்த்து கூறலாம். ஆனால் அதை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூற முடியாது, அப்படி கூறினால் அது பித்அத் ஆகும்.

👉 உதாரணத்திற்கு பெருநாள் தினத்தில் ஒருவர் "ஈத் முபாரக்" என்று சொல்கிறார், மகிழ்ச்சியை வெளிப்படுத்த தாமாக விரும்பி அதை சொன்னால் அது பித்அத் இல்லை. 

பெருநாளில் "ஈத் முபாரக்" சொல்ல வேண்டும் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் அது பித்அத். 

இஸ்லாத்தில் இருப்பதாக சொல்லாமல் தாமாக விரும்பி செய்யும் மார்க்க விஷயங்களும், உலக விஷயங்களும் பித்அத் இல்லை என்பதை "இஸ்லாத்தின் பார்வையில் பித்அத்!" என்ற தொடரில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன் பார்க்கவும். https://www.facebook.com/siddique.mtech/posts/2116192505248685

✍️ ஆக்கம் : S. சித்தீக் M.Tech

Thursday, March 19, 2026

முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி).


இஸ்லாமிய வரலாற்றில் மாவீரர்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால், போர்க்களத்தில் எதிரிகளை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு அசாத்திய வீரமும், அதேசமயம் பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு நேர்மையும் ஒருங்கே அமைந்த ஒரு மாமனிதர் இருந்தார் என்றால், அவர்தான் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி).

கம்பீரமான உயரம், கோதுமை நிறம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரை மதீனாவாசிகள் 'நபிகளாரின் மாவீரன்' என்று பெருமையோடு அழைப்பார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்பக் காலகட்டத்தில், மதீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அண்ணலார் (ஸல்) அவர்களைக் கொலை செய்யத் தூண்டிக்கொண்டிருந்தவன் யூதத் தலைவன் கஅப் இப்னு அஷ்ரஃப். அவனுடைய கோட்டையை நெருங்குவது என்பது மரணத்தோடு விளையாடுவதற்குச் சமம். அப்போது நபிகளார், "இந்தத் துரோகியை வீழ்த்த யார் தயார்?" என்று கேட்டபோது, கூட்டத்திலிருந்து முதல் ஆளாக எழுந்து நின்றார் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி). எதற்கும் அஞ்சாத தன்னுடைய அபாரமான வீரத்தாலும், ராஜதந்திரத்தாலும் அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக முறியடித்து, மதீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தவர் இவர்தான். தபூக் போரைத் தவிர்த்து, நபிகளார் கலந்துகொண்ட அத்தனை போர்களிலும் தன் வாளை சுழற்றிய மாவீரர் இவர்! மாவீரர் அலி (ரலி) அவர்களுடன் மதீனாவை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்ததால் தபூக் போரில் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை. 

இஸ்லாமிய வரலாற்றில் கலீஃபா உமரின் நம்பிக்கைக்குரிய 'விசாரணை அதிகாரியாக (Inspector General) இவர் இருந்தார். நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்களின் பொற்கால ஆட்சியில் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. அதுதான் மாகாண ஆளுநர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு! ஆளுநர்கள் மீது சிறு புகார் வந்தாலும், உமர் (ரலி) அவர்கள் உடனடியாக முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களைத்தான் அனுப்பி வைப்பார்கள். எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி), கூஃபாவின் ஆளுநராக இருந்த மாவீரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) போன்ற மாபெரும் சஹாபாக்களாகவே இருந்தாலும், உமரின் கட்டளையை ஏற்று அவர்களிடம் நேரில் சென்று துணிச்சலாக விசாரணை நடத்தும் அளவுக்குத் தூய்மையான கரங்களுக்குச் சொந்தக்காரராக அவர் இருந்தார். எந்த ஆளுநரும் இவருடைய வருகையைக் கண்டால் ஒருகணம் நடுங்குவார்கள்; அந்த அளவுக்கு இவருடைய நேர்மை பிரசித்தமானது!

இவருடைய வாழ்வின் உச்சகட்ட தியாகம் என்பது உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு அரங்கேறியது. முஸ்லிம்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, உள்நாட்டுப் போர் வெடித்தது. அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) இருவருக்கும் இடையே போர் மூண்டபோது, பலரும் ஏதாவது ஒரு பக்கம் அணிவகுத்தார்கள்.
ஆனால், முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் தன் வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒரு பெரிய பாறையின் மீது அந்த இரும்பு வாளை ஓங்கி அடித்துச் சுக்குநூறாக உடைத்தார். சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

அப்போது அவர் கூறினார்: "என் அன்புக்குரிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு வஸிய்யத் (உபதேசம்) செய்திருந்தார்கள். 'முஹம்மத் இப்னு மஸ்லமாவே! முஸ்லிம்களுக்கு இடையே போர் மூளும் ஒரு காலம் வந்தால், உன்னுடைய வாளைப் பாறையில் அடித்து உடைத்துவிடு. அதற்குப் பதிலாக ஒரு மர வாளைச் செய்துகொண்டு உன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொள்' என்றார்கள். 

இதோ, என் நபியின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன்!" ஒரு உண்மையான வீரனுக்குப் போர்க்களத்தில் வாளைச் சுழற்றுவது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் தன் சொந்த சகோதரர்களின் ரத்தம் சிந்தப்படக் கூடாது என்பதற்காகக் கையில் மர வாளோடு வீட்டிற்குள் பொறுமையாக முடங்கிக் கிடப்பது. அந்த மாபெரும் ஈமானியப் பொறுமையை அவர் தழுவிக்கொண்டார்.

முஸ்லிம்களுக்கு இடையிலான எந்தக் குழப்பத்திலும் தலையிடாமல், ரத்தம் சிந்தாத ஒரு தூய ஆன்மாவாகத் தன் இறுதி நாட்களைக் கழித்த அந்த மாவீரர், முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஹிஜ்ரி 46-ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்.

வீரம் என்பது வாளை உயர்த்துவதாக இல்லாமல் ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக, அதை உடைத்து எறிவதிலும் இருக்கிறது என்ற மாபெரும் பாடத்தை உலகிற்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றது அந்த மர வாள் வீரர் தான். 

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #MuhammadIbnMaslamah #FarisRasulullah #WoodenSword #AbdullahIbnuNaseerWriteups

உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்)


மதீனாவின் மாபெரும் ஏழு சட்டமேதைகளில் (Seven Fuqaha of Medina) ஒருவர். சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட ஒரு மாவீரரின் மகன். முதல் கலீஃபாவின் பேரன். இதையெல்லாம் விட, உலக முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களை எந்தச் சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய மாபெரும் தூண் இவர்தான்! இமாம் புகாரியோ, முஸ்லிமோ, அல்லது எந்த ஒரு ஹதீஸ் நூலை நீங்கள் புரட்டினாலும் 'ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்...' என்று தொடங்கும் பெரும்பாலான ஹதீஸ்களுக்குக் கீழே ஒரு பெயர் ஆணிவேராக இருப்பதைக் காணலாம். நபிகளார் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்வின் சட்டங்களை உம்மாவுக்குக் கடத்திய அந்த மாபெரும் அறிவுப் பாலம் வேறு யாருமல்ல, இமாம் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள்தான்!

முழுப் பெயர்: உர்வா இப்னு ஸுபைர் இப்னுல் அவ்வாம்.
சிறப்புப் பெயர்: மதீனாவின் ஏழு மாபெரும் சட்டமேதைகளில் (Seven Fuqaha of Medina) ஒருவர்.
காலம்: உஸ்மான் (ரலி) அவர்களின் கிலாபத்தில் (ஹிஜ்ரி 23) பிறந்து, அறிஞர்களின் ஆண்டு என அழைக்கப்படும் ஹிஜ்ரி 94-ல் மரணமடைந்தார்.
அறிவுப் பின்னணி: அன்னை ஆயிஷா (ரலி) இவருடைய சொந்தச் சிறிய தாயார் (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்களின் சகோதரர்).

ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தச் சகோதரியின் (அஸ்மா) மகன் என்பதால், நபிகளாரின் இல்லத்திற்குள் தடையின்றிச் செல்லும் வாய்ப்பு உர்வாவுக்குக் கிடைத்தது. இதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆயிஷா (ரலி) அவர்களின் நிழல் போல உடனிருந்து, மார்க்கச் சட்டங்கள், குர்ஆன் விளக்கங்கள், அரபு இலக்கியம், மருத்துவம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். உர்வாவுக்கு முன்னால் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்க அன்றைய காலத்தில் பல ஸஹாபாக்களே தயங்குவார்கள் என்றால் அவருடைய அறிவின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஹதீஸ்கள் மற்றும் மார்க்கச் சட்டங்கள் அடங்கிய பல ஏடுகளை அவர் தன் சொந்தக் கைகளால் எழுதி வைத்திருந்தார். ஆனால், மதீனாவில் நடந்த 'ஹர்ரா' (Battle of al-Harrah) போரின் போது ஏற்பட்ட ஒரு கலவரத்தில் அவருடைய அந்தப் புத்தகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. அதைப் பற்றி உர்வா (ரஹ்) அவர்கள் பிற்காலத்தில் குறிப்பிடும்போது, "என்னுடைய அந்தப் புத்தகங்கள் எனக்குத் திரும்பக் கிடைக்குமானால், என் குடும்பமும், என் முழுச் செல்வமும் என்னை விட்டுப் பிரிந்தால்கூட நான் கவலைப்பட மாட்டேன்" என்று கண்ணீர் மல்கக் கூறுவார். இதுதான் அறிஞர்கள் கல்வியின் மீது வைத்திருந்த காதல்!

இவர் ஹதீஸ் அறிவிப்பாளராக மட்டும் இருக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றை (நபிகளாரின் போர்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை - சீரா மற்றும் மகாஸி) முதன்முதலில் ஆதாரப்பூர்வமாகத் தொகுக்கத் தொடங்கிய முதல் மனிதர் இவர்தான். அன்றைய உமைய்யா கலீஃபாக்களான அப்துல் மலிக் இப்னு மர்வான் போன்றவர்கள், பத்ருப் போர் குறித்தோ, வரலாற்று நிகழ்வுகள் குறித்தோ சந்தேகம் வந்தால், உடனடியாக உர்வா அவர்களுக்குக் கடிதம் எழுதி விளக்கங்களைக் கேட்டுப் பெறுவார்கள். அவர் எழுதிய அந்த வரலாற்றுப் பதில்கள்தான் இன்று நாம் படிக்கும் இஸ்லாமிய வரலாற்றின் ஆணிவேர்!

இவர் தன்னிடம் இருந்த அறிவைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளவில்லை. மஸ்ஜிதுந் நபவியில் இவர் நடத்திய அறிவுச் சபையிலிருந்துதான் இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்கள் உருவானார்கள். குறிப்பாக, ஹதீஸ் கலையின் இமயமாகத் திகழ்ந்த இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி அவர்கள் உர்வாவின் நேரடி மாணவர்தான்.

இன்று பிடிஎஃப் (PDF) வடிவிலும், மொபைல் ஆப்ஸ்களிலும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, அவற்றைப் படிக்க நேரம் இல்லாமல் சாக்குப்போக்குச் சொல்லும் சோம்பேறிச் சமூகம் நாம். ஆனால், எந்த நவீன வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், தன் புத்தகங்கள் எரிந்து போனதற்காக ஒரு சிறு குழந்தையைப் போலக் கண்ணீர் வடித்த இமாம் உர்வா அவர்களின் கல்வித் தாகம் எங்கே? அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் பாதுகாத்து வைத்திருக்காவிட்டால், இன்று இஸ்லாமியச் சட்டத்துறையின் சரிபாதி இருண்டு போயிருக்கும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #UrwahIbnZubayr #HadithScholar #Ayesha #Madina #IslamicHistory #Fiqh #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, March 18, 2026

இமாம் ஹம்மாம் இப்னு முனப்பிஹ் (ரஹ்)


"ஹதீஸ்கள் எல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து 200 வருடங்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டன; அதனால் அதில் பல இடைச்செருகல்கள் உள்ளன" என்று மேலைநாட்டு ஓரியண்டலிஸ்டுகளும் , மார்க்கத்தை விமர்சிக்கும் சில நவீன அறிவாளிகளும் கூறுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பொய்க்கு, தன் ஒரே ஒரு ஏட்டின் மூலம் மரண அடி கொடுத்த ஒரு மாபெரும் தாபியீ அறிஞரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில், நபிகளார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு மிக நெருக்கமாக, ஸஹாபாக்கள் வாழும் காலத்திலேயே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஆகப்பெரிய, வாழும் சான்று இமாம் ஹம்மாம் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் எழுதிவைத்த ஒரு ஏடு உள்ளது.

முழுப் பெயர்: ஹம்மாம் இப்னு முனப்பிஹ் இப்னு காமில்.
காலம்: தோராயமாக ஹிஜ்ரி 40-களில் பிறந்து, ஹிஜ்ரி 131 (அல்லது 132)-ல் மரணமடைந்தார்.
ஊர்: யமன் தேசத்தின் ஸன்ஆ நகரம்.
பின்னணி: இவர் பாரசீகப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை முனப்பிஹ், இஸ்லாத்தைத் தழுவிய ஒரு மாபெரும் அறிஞர். பிரபலமான வரலாற்று அறிஞர் வஹ்ப் இப்னு முனப்பிஹ் இவருடைய சொந்த சகோதரர் ஆவார்.

ஹம்மாம் அவர்கள் மதீனாவிற்குப் பயணம் செய்து, இஸ்லாத்தில் அதிக ஹதீஸ்களை அறிவித்த மாபெரும் ஸஹாபியான அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மாணவராக இணைந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லச் சொல்ல, ஹம்மாம் அவர்கள் தன் கைகளாலேயே ஒரு ஏட்டில் ஹதீஸ்களை எழுதினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏடுதான் 'ஸஹீஃபா அஸ்-ஸஹீஹா' (The Authentic Script) அல்லது 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 138 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

ஹதீஸ்கள் எல்லாம் வாய்மொழியாகவே பரவின, 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டபோது பல பொய்கள் கலந்துவிட்டன என்று 'கோல்ட்ஸிஹர்' (Ignác Goldziher) போன்ற மேற்கத்திய அறிஞர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் மாபெரும் இஸ்லாமிய அறிஞரான டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ் அவர்கள் ஜெர்மனியின் பெர்லின் மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் நூலகங்களில் பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்த 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' ஏட்டின் கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார்!

அதை எடுத்து, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் 'முஸ்னத் அஹ்மத்' நூலோடு ஒப்பிட்டுப் பார்த்தால்... ஆச்சரியம்! 'முஸ்னத் அஹ்மத்'தில் உள்ள அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ்களும், இந்த 1-ஆம் நூற்றாண்டு ஏட்டில் உள்ள ஹதீஸ்களும் ஒரு எழுத்து, ஒரு புள்ளி கூட மாறாமல் அப்படியே துல்லியமாகப் பொருந்தின! ஹதீஸ் கலையின் நம்பகத்தன்மையை உலகிற்கு நிரூபித்த மாபெரும் தருணம் அது.

இந்த 138 ஹதீஸ்களும் எப்படிப் பாதுகாக்கப்பட்டன தெரியுமா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல ஹம்மாம் இப்னு முனப்பிஹ் எழுதினார்.

ஹம்மாம் அவர்கள் அந்த ஏட்டைத் தன் மாணவரான மஃமர் பின் ராஷித் (இவரை பற்றி பார்த்துவிட்டோம்) அவர்களிடம் ஒப்படைத்தார்.

மஃமர் அவர்கள் அதைத் தன் மாணவரான அப்துர் ரஸ்ஸாக் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களிடம் கொடுத்தார்.

அப்துர் ரஸ்ஸாக் வழியாக அது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களைச் சென்றடைந்து அவருடைய 'முஸ்னத்' நூலில் அப்படியே பதியப்பட்டது. என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவுச் சங்கிலி இது!

ஹதீஸ்கள் ஏதோ நேற்றோ இன்றோ கற்பனையாக எழுதப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. அவை, ஸஹாபாக்களின் காலத்திலேயே, அவர்களின் நேரடிப் பார்வையில், வியர்வையும் உழைப்பும் சிந்தப்பட்டு காகிதங்களில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள். அறிவே இல்லாத சில நவீனக் கோமாளிகள் யூடியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் "ஹதீஸ்கள் எல்லாம் லேட்டா எழுதப்பட்டது" என்று உளறுவதைக் கேட்கும்போது, ஹம்மாம் இப்னு முனப்பிஹ் அவர்களின் இந்த 138 ஹதீஸ்கள் கொண்ட ஏட்டை எடுத்து அவர்கள் முகத்தில் வீச வேண்டும் போலத் தோன்றுகிறது! முஸ்லிம் உம்மாவுக்கு இத்தகைய தூய பொக்கிஷத்தை விட்டுச் சென்ற அந்த யமன் தேசத்து அறிஞருக்கு அல்லாஹ் மாபெரும் கூலியை வழங்குவானாக.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HammamIbnMunabbih #Sahifah #Yemen #HadithScholar #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

கைஸ் இப்னு ஸஅத் (ரலி)


மதீனாவின் தெருக்களில் ஒரு இளைஞர் நடந்து வருகிறார். அவருடைய உயரம் எவ்வளவு தெரியுமா? ஒரு பெரிய ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பவரின் உயரத்திற்குச் சமமாக அவர் தரையில் நடந்து செல்வார். அந்தப் பிரம்மாண்டமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர், மதீனாவின் 'கஸ்ரஜ்' கோத்திரத்தின் மாபெரும் தலைவர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் அருமை மகன் கைஸ் இப்னு ஸஅத் (ரலி) அவர்களே!

தந்தையைப் போலவே வீரத்திலும், கொடைத்திறனிலும் நிகரற்று விளங்கிய கைஸ் (ரலி), இஸ்லாமிய வரலாற்றில் அறிவுக்கூர்மைக்கும் (Intelligence) ஈமானிய உறுதிக்கும் ஒரு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறார்.

கைஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன், அவருடைய தந்தை ஸஅத் (ரலி) அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "இறைத்தூதரே! இதோ என் மகன், இவன் இன்று முதல் உங்கள் சேவகன்" என்று ஒப்படைத்தார். சுமார் பத்து ஆண்டுகள் அண்ணலார் (ஸல்) அவர்களின் நிழலாகவே கைஸ் (ரலி) வாழ்ந்தார்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறும்போது, "ஒரு தலைவருக்குப் பின்னால் ஒரு போலீஸ் - மெய்க்காவளர் - அதிகாரி பாதுகாப்பிற்கு நிற்பது போல, நபிகளாருக்குப் பின்னால் கைஸ் இப்னு ஸஅத் நிற்பார்" என்று அவருடைய அர்ப்பணிப்பை விவரிக்கிறார். நபிகளாரின் மஜ்லிஸில் இருந்து அவர் கற்ற அந்தப் பாடங்கள்தான் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் ராஜதந்திரியாக மாற்றியது.

அரபிகளிலேயே மிகச்சிறந்த தந்திரசாலியாகக் கருதப்பட்டவர் கைஸ் (ரலி). எந்த ஒரு சிக்கலான சூழலையும் தன் அறிவால் முறியடிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. ஆனால், அந்த அறிவை அவர் ஒருபோதும் தீமைக்காகப் பயன்படுத்தியதில்லை. அவர் அடிக்கடி சொல்வார்:

"இஸ்லாம் என்ற ஒன்று மட்டும் என் வாழ்க்கையில் இல்லையென்றால், அரபிகளிலேயே மிகச்சிறந்த சூழ்ச்சிக்காரனாக நான் இருந்திருப்பேன். ஆனால், இறைவனைக் குறித்த அச்சம் என் அறிவைக் கட்டுப்படுத்துகிறது!"

தனது புத்திக்கூர்மையைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல், சத்தியத்திற்காக மட்டுமே பயன்படுத்திய அந்தப் பண்பு, இன்றைய கால அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு மாபெரும் பாடம்.

கைஸ் (ரலி) அவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாகக் கொடைத்திறனுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை அவருடைய வீட்டில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது: "கைஸ் இப்னு ஸஅத்திடம் கடன் வாங்கியவர்கள் யாரும் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன!" இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஓடி வந்து நன்றி சொன்னபோது, கைஸ் (ரலி) சொன்ன பதில் நம்மை வியக்க வைக்கிறது: "மக்கள் என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது, அவர்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதற்குக் காரணமாகிவிடும். மக்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதை நான் விரும்பவில்லை!" தன்மானத்தையும், சமூக உறவுகளையும் காப்பதற்காகத் தன் செல்வத்தை இப்படித் துச்சமாக மதித்த தியாகி அவர்.

கலீஃபா அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தேசத்தின் ஆளுநராக கைஸ் (ரலி) நியமிக்கப்பட்டார். அங்கே நிலவிய குழப்பங்களை அவர் மிகத் திறமையாகக் கையாண்டார். பின்னர் நடந்த 'ஸிப்பீன்' போரில் அலி (ரலி) அவர்களின் படையின் மிக முக்கியத் தளபதியாக இருந்தார். அலி (ரலி) அவர்களின் மறைவுக்குப் பிறகு, ஹஸன் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் 40,000 வீரர்கள் கொண்ட ஒரு பெரும் படைக்குத் தலைவராக இருந்தார். முஆவியா (ரலி) அவர்களின் படையை எதிர்த்துப் போரிட அவர் முழுத் தகுதியோடு இருந்தார். ஆனால், முஸ்லிம்களுக்கு இடையே ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக ஹஸன் (ரலி) அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தபோது, தன் கையில் இருந்த மாபெரும் அதிகாரத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி அவர் விட்டுக்கொடுத்தார். அதிகாரம் என்பது தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் அல்ல, அது பொறுப்பு என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி இருந்தது.

தன் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் கொள்கைக்காகவும், முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமைக்காகவும் உழைத்த அந்த அறிவுச் சிங்கம், ஹிஜ்ரி 60-ஆம் ஆண்டு மதீனாவில் வபாத்தானார். அவர் இறக்கும்போது அவரிடம் அதிகச் சொத்துக்கள் இல்லை; ஆனால், ஆயிரக்கணக்கான ஏழைகளின் துஆக்களும், ஒரு மாபெரும் வரலாறும் அவரிடம் இருந்தது. புத்திக்கூர்மை என்பதை பிறரை ஏய்ப்பதற்காக பயன்படுத்தாமல் அதை இறைவழியில் பிறருக்கு உதவுவதற்கே பயன்படுத்த வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையால் நிரூபித்தவர் கைஸ் இப்னு ஸஅத் (ரலி)!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #QaysIbnSad #AnsarLeader #Generosity #IntelligenceWithTaqwa #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, March 17, 2026

ஸயீத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்).


எத்தனையோ மாபெரும் சக்கரவர்த்திகள் உலகத்தை ஆண்டிருக்கலாம், ஆனால் அந்தச் சக்கரவர்த்திகளே இவருடைய சபைக்குச் செல்லும்போது ஒரு சாதாரண மாணவனைப் போலத்தான் தலைகுனிந்து செல்வார்கள். மாபெரும் தாபியீன்களின் தலைவர் (ஸய்யிதுத் தாபியீன்), மதீனாவின் ஏழு மாபெரும் சட்டமேதைகளில் முதன்மையானவர் என்று போற்றப்பட்ட ஒரு இரும்பு மனிதரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

உலகத்தின் மிகப்பெரிய வல்லரசான உமைய்யா கிலாபத்தின் ஜனாதிபதி, தன் மகனுக்குப் பெண் கேட்டு மதீனாவுக்கு ஒரு தூதரை அனுப்புகிறார். ஆனால், பெண் வீட்டார் அந்தச் சம்பந்தத்தை நிராகரித்துவிட்டு, தன்னிடம் படிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கு இரண்டு திர்ஹம் மஹரில் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வரலாற்று அதிசயத்தைச் செய்தவர்தான் இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்).

முழுப் பெயர்: ஸயீத் இப்னுல் முஸய்யிப் இப்னு ஹஸ்ன் அல்-மக்ஜூமீ.
பிறப்பு: உமர் (ரலி) அவர்களின் கிலாபத் காலத்தில் (சுமார் ஹிஜ்ரி 15-ல்) பிறந்தார்.
இறப்பு: ஹிஜ்ரி 94-ல் (அறிஞர்களின் ஆண்டு என அழைக்கப்படும் வருடத்தில்) மதீனாவில் மரணமடைந்தார்.
சிறப்புப் பெயர்: தாபியீன்களின் தலைவர், மதீனாவின் சட்டமேதை.

இவருடைய ஹதீஸ் கலைச் சேவை வியக்கத்தக்கது. இஸ்லாத்தில் அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்களின் மகளைத்தான் இவர் திருமணம் செய்திருந்தார். இதன் மூலம், தன் மாமனாரிடமிருந்து நேரடியாக எண்ணற்ற ஹதீஸ்களை நெஞ்சில் சுமந்தார். உமர் (ரலி) அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தவர் இவர் மட்டுமே. உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களே, தன் தந்தையின் தீர்ப்புகள் குறித்து சந்தேகம் வந்தால் ஸயீத் இப்னுல் முஸய்யிப் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்!

ஹதீஸ் கலையில், ஒரு தாபியீ நேரடியாக நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறினால் அது 'முர்ஸல்' (விடுபட்ட சங்கிலி) எனப்படும். ஆனால், மாபெரும் சட்டமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், "ஸயீத் இப்னுல் முஸய்யிப் அறிவிக்கும் முர்ஸலான ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை. ஏனென்றால், அவர் மிகக் கடுமையான ஆய்வுக்குப் பிறகே எதையும் அறிவிப்பார்" என்று இவருடைய ஹதீஸ் அறிவுக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான், தன் மகனும் வருங்கால கலீஃபாவுமான வலீதிற்கு இமாம் ஸயீத் அவர்களின் மகளைப் பெண் கேட்டார். ஆனால், அரண்மனையின் ஆடம்பரமும் அதிகாரப் போதை கலந்த அரசியலும் தன் மகளின் மார்க்கத்தைப் பாழாக்கிவிடும் என அஞ்சிய இமாம், அந்த மாபெரும் பதவியை நிராகரித்தார். மாறாக, தன் சபையில் ஹதீஸ் பயிலும் 'அபூ வதாஆ' என்ற ஏழை மாணவன், வறுமையின் காரணமாகத் தன் மனைவியை இழந்து தனிமையில் வாடுவதை அறிந்தார். உடனே அந்த ஏழை மாணவனுக்கு வெறும் 2 அல்லது 3 திர்ஹம்களை மஹராக நிர்ணயித்துத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். அன்றிரவே தன் மகளை அந்த ஏழை மாணவனின் சிறிய குடிசைக்குத் தானே நேரில் சென்று விட்டுவிட்டு வந்தார்.

கலீஃபாக்களின் தவறான முடிவுகளுக்கு இவர் ஒருபோதும் துணைபோனதில்லை. இருவருக்கு ஒரே நேரத்தில் பைஅத் (பிரமாணம்) செய்யும் தவறான வழக்கத்தை ஆட்சியாளர்கள் கொண்டுவந்தபோது, அதை கடுமையாக எதிர்த்தார். அதற்காக மதீனாவின் ஆளுநரால் கடுமையாகச் சவுக்கால் அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சத்தியத்திலிருந்து அவர் ஒரு அணு அளவும் பின்வாங்கவில்லை.

பணத்துக்காகவும், அந்தஸ்துக்காகவும் மார்க்கம் இல்லாதவர்களுக்கெல்லாம் தங்கள் பெண் பிள்ளைகளைத் தாரைவார்க்கும் இன்றைய சமூகம் எங்கே? அகில உலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மகனே வந்தாலும், என் மகளின் மார்க்கம்தான் எனக்கு முக்கியம் என்று ஒரு ஏழை ஹதீஸ் மாணவனுக்குத் தன் மகளைக் கட்டிக்கொடுத்த ஸயீத் இப்னுல் முஸய்யிப் எங்கே? உண்மையான ஹதீஸ் கல்வி ஒரு மனிதனை எந்த அதிகாரத்தின் முன்னும் மண்டியிடாத சிங்கமாக மாற்றும் என்பதற்கு இவரே ஆகச்சிறந்த உதாரணம்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #SaidIbnAlMusayyib #Tabiin #Madina #HadithScholar #IslamicHistory #SocialJustice #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஃபுழைல் இப்னு இயாள் (ரஹ்)


எத்தனையோ அறிஞர்கள் சிறுவயதிலிருந்தே மார்க்கக் கல்வியில் திளைத்திருப்பார்கள். ஆனால், வாலிபப் பருவத்தில் ஒரு பயங்கரமான வழிப்பறிக் கொள்ளையனாக இருந்து, பின்னர் ஒரு குர்ஆன் வசனத்தைக் கேட்டு மனம் திருந்தி, ஹதீஸ் கலையின் மாபெரும் சிகரமாக மாறிய ஒரு அதிசய மனிதரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். 

நேற்றைய பதிவில் நாம் பார்த்த இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களே இவருக்காகத் தன் செல்வத்தைச் செலவழித்தார் என்றால், இவருடைய அந்தஸ்தைப் புரிந்து கொள்ளலாம்!

இருள் சூழ்ந்த ஒரு பாதை எப்படிப் பேரொளியாக மாற முடியும் என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த உதாரணம்தான் இமாம் ஃபுழைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை. அறிஞர்களால் 'ஆபிதுல் ஹரமைன்' (மக்கா, மதீனா ஆகிய இரு புனிதத் தலங்களின் மாபெரும் வணக்கசாலி) என்று போற்றப்பட்டவர் இவர்.

முழுப் பெயர்: ஃபுழைல் இப்னு இயாள் இப்னு மஸ்ஊத் அத்-தமீமீ.
சிறப்புப் பெயர்: அபூ அலி.
காலம்: ஹிஜ்ரி 107-ல் (சமர்கந்த் நகரில்) பிறந்து, ஹிஜ்ரி 187-ல் மக்காவில் மரணமடைந்தார்.
ஆரம்ப வாழ்க்கை: குராசான் பகுதியில் அபீவர்த் மற்றும் ஸரக்ஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே செல்லும் பயணிகளை அச்சுறுத்தும் ஒரு வழிப்பறிக் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனாக இருந்தார்!

வாலிப வயதில் ஒரு பெண்ணின் மீது கொண்ட மையலால், ஓர் இரவில் அவளைச் சந்திப்பதற்காக ஒரு வீட்டின் சுவரேறிக் குதித்துக் கொண்டிருந்தார் ஃபுழைல். அப்போது, இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஓர் இறை விசுவாசி ஓதிய குர்ஆன் வசனம் ஃபுழைலின் செவிகளில் விழுந்தது:
"நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவைக் கொண்டு அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?" (அல்குர்ஆன் 57:16).
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஃபுழைலின் இதயம் அந்த நொடியே உலுக்கப்பட்டது. "என் இறைவா, அந்த நேரம் வந்துவிட்டது! இதோ வந்துவிட்டது!" என்று கதறியவாறே அங்கிருந்து ஓடினார். தன்னிடம் இருந்த ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தான் திருடிய பொருட்களை உரியவர்களிடமே தேடிக் கண்டுபிடித்துத் திருப்பிக் கொடுத்தார்.

திருந்திய மறுகணமே அவர் தன் வாழ்நாளை இல்மை தேடுவதற்காக அர்ப்பணித்தார். கூஃபா நகருக்குப் புறப்பட்டுச் சென்று அல்-அஃமஷ், மன்சூர் இப்னுல் முஃதமிர், ஹிஷாம் இப்னு ஹஸ்ஸான் போன்ற அன்றைய ஹதீஸ் கலை ஜாம்பவான்களிடம் மண்டியிட்டுப் படித்தார். ஹதீஸ் கலையில் இவர் மிகமிக நம்பகமானவர் (ஸிக்காஹ்) என்று இமாம் இப்னு முயீன் போன்ற விமர்சகர்களால் சான்றளிக்கப்பட்டார். இவருடைய அறிவிப்புகள் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் ஸஹீஹ் நூல்களில் கம்பீரமாக இடம்பெற்றுள்ளன. இவருடைய ஹதீஸ் ஞானம் எத்தகையது என்றால், மாபெரும் அறிஞர்களான இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல்-கத்தான், மற்றும் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ஆகியோர் இவருடைய சபையில் மாணவர்களாக அமர்ந்து ஹதீஸ்களைக் கற்றனர்.

ஹதீஸ்களை அறிவிக்கும்போது ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், மிகவும் அவசியப்பட்டால் தவிர ஹதீஸ்களை வாய்மொழியாக அறிவிக்க மாட்டார். எழுத்துப்பூர்வமான ஏடுகளிலிருந்து அறிவிப்பதையே அவர் தனது கொள்கையாக வைத்திருந்தார்.

அன்றைய உலகின் மிகப்பெரிய வல்லரசுத் தலைவரான கலீஃபா ஹாருன் அர்-ரஷீத், மக்காவிற்கு வந்தபோது தனக்கு நற்போதனை செய்வதற்காக இமாம் ஃபுழைல் அவர்களை நாடினார். கலீஃபாவிடம் எந்தப் பயமுமின்றி, "மறுமையில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இந்த முழு சமுதாயத்தின் பாவங்களுக்காகவும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல நேர்மையாக இருங்கள்!" என்று மிகக் கடுமையாக எச்சரித்தார். உலகையே ஆண்ட அந்த சக்கரவர்த்தி, ஃபுழைல் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு மூர்ச்சையாகி விழும் அளவுக்குக் குலுங்கி அழுதார்.

பாவங்களின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதன், உண்மையாக மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால், உலகமே கொண்டாடும் ஒரு மாபெரும் ஹதீஸ் அறிஞராகவும், கலீஃபாக்களுக்கே பாடம் புகட்டும் ஆன்மீக குருவாகவும் மாற முடியும் என்பதற்கு இமாம் ஃபுழைல் இப்னு இயாள் அவர்களின் வாழ்க்கை ஒரு சான்று! கல்வி என்பதை வெறும் மூளையில் சேமிக்கப்படும் தகவல் அல்லாமல் அது இதயத்தைத் தூய்மைப்படுத்தி, கண்களைக் குளமாக்கும் பேரொளி என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #FudaylIbnIyad #HadithScholar #Repentance #Tawbah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Monday, March 16, 2026

இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்

வரலாற்றின் பக்கங்களில் எத்தனையோ மாபெரும் அறிஞர்களை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் ஹதீஸ் கலையில் உச்சம் தொட்டிருப்பார்கள்; சிலர் போர்க்களத்தில் வீரத்தின் மறுஉருவமாக இருந்திருப்பார்கள்; சிலர் கோடீஸ்வரர்களாக மாபெரும் கொடையாளிகளாகத் திகழ்ந்திருப்பார்கள்; இன்னும் சிலர் இரவெல்லாம் விழித்து வணங்கும் மாபெரும் வணக்கசாலிகளாக இருந்திருப்பார்கள். ஆனால், இந்த எல்லாப் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மனிதரை வரலாறு கண்டிருக்கிறது என்றால், அது அவர் மட்டும்தான்! 

அன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்கள் ஒன்று கூடி அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு சுவாரஸ்யமான போட்டியை வைத்துக்கொண்டார்கள். அதாவது, "இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளைப் பட்டியலிடுவோம்" என்பதே அந்தப் போட்டி. அவர்கள் பட்டியலிடத் தொடங்கினார்கள்: "அறிவு, ஹதீஸ், ஃபிக்ஹ், அரபு இலக்கணம், கவிதை, மொழித்திறன், வீரம், குதிரையேற்றம், தைரியம், இரவுத் தொழுகை, தொடர் நோன்பு, தாராள குணம், வியாபார நேர்மை..." என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்று, கடைசியில் "அவரிடம் இல்லாத நற்பண்புகளே இல்லை" என்று வியந்து முடித்தார்கள்.

முழுப் பெயர்: அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அல்-ஹன்ழலீ அல்-மர்வாஸீ.
சிறப்புப் பெயர்: அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையின் தலைவர்).
காலம்: ஹிஜ்ரி 118-ல் (துர்க்மெனிஸ்தானின் 'மர்வ்' நகரில்) பிறந்து, ஹிஜ்ரி 181-ல் (ஈராக்கின் 'ஹீத்' நகரில்) மரணமடைந்தார்.
பின்னணி: இவருடைய தந்தை முபாரக் ஒரு அடிமையாக இருந்து தன் நேர்மையால் உயர்ந்தவர்.

இப்னுல் முபாரக் ஒரு மாபெரும் வியாபாரி. பல நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார். ஒருமுறை அவரிடம், "நீங்கள் ஒரு மாபெரும் மார்க்க அறிஞர், எதற்காக இப்படிப் பொருள் தேடி உலகத்தின் பின்னால் ஓடுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில் வரலாற்றுப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது: "நான் எனக்காகச் சம்பாதிக்கவில்லை. சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ, ஃபுளைல் இப்னு இயாழ் போன்ற மாபெரும் ஹதீஸ் அறிஞர்கள், வறுமையின் காரணமாக அரசர்களிடமோ அதிகாரிகளிடமோ கையேந்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் சம்பாதிக்கிறேன். என் செல்வத்தைக் கொண்டு அவர்களின் குடும்ப வறுமையைப் போக்கிவிட்டால், அவர்கள் முழுநேரமும் இந்த உம்மாவுக்காக ஹதீஸ்களைத் தொகுப்பார்கள் அல்லவா!" என்றார்.

பொதுவாக மார்க்க அறிஞர்கள் என்றால் பள்ளியிலோ, நூலகத்திலோ முடங்கிக் கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தவர் இவர். இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாத் குறித்து முதன்முதலில் ஒரு முழுமையான நூலை (கிதாபுல் ஜிஹாத்) எழுதியவர் இவர்தான். அதை அவர் வெறும் மையால் எழுதவில்லை, தன் ரத்தத்தால் எழுதினார். ரோமானியப் படையினருக்கு எதிரான ஒரு போரில், எதிரிப் படையின் மாவீரன் ஒருவன் சண்டைக்கு அழைத்தான். முஸ்லிம் படையிலிருந்து முகமூடி அணிந்த ஒரு வீரர் சென்று, அவனை வீழ்த்தினார். அடுத்தடுத்து வந்த எதிரிப் படை வீரர்களையும் அந்த முகமூடி வீரர் சாய்த்தார். போர் முடிந்த பின் அந்த முகமூடியை விலக்கிப் பார்த்தால்... அது தியானக் கூடத்தில் கண்ணீர் வடிக்கும் மாபெரும் ஹதீஸ் அறிஞர் இப்னுல் முபாரக்! தன் புகழ் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துப் போரிட்டிருக்கிறார் அந்த மாவீரர்.

ஹதீஸ்களுக்கான அறிவிப்பாளர் தொடர் என்பதும் மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்; அது மட்டும் இல்லையென்றால், எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மார்க்கத்தின் பெயரால் பேசியிருப்பார்கள்" - இன்று நாம் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தும் இந்த இரும்பு போன்ற விதியை உலகிற்கு உரக்கச் சொன்னவர் இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்).

ஹதீஸ்களைச் சேகரிப்பதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் மலைக்கத்தக்கவை. குராசான், ஈராக், ஹிஜாஸ் (மக்கா, மதீனா), ஷாம் (சிரியா), எகிப்து என அன்றைய இஸ்லாமிய உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அவர் பயணித்தார். வெறுமனே தகவல்களைச் சேகரிக்கவில்லை; அந்தந்த ஊர்களில் வாழ்ந்த மாபெரும் அறிஞர்களின் 'இல்மை' அப்படியே உள்வாங்கினார். இதனால்தான் இவரை "அறிஞர்களின் சங்கமம்" என்று அழைப்பார்கள்.

ஹதீஸ் துறையில் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகச்சிறந்த பட்டம் இது. இமாம் புகாரி, முஸ்லிம் போன்றவர்களுக்கு முன்பே இந்தப் பட்டத்திற்கு முழுத்தகுதியுடையவராக இவர் திகழ்ந்தார். அது தான் அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ்.  ஹதீஸ்களை அறிவிப்பதில் அவர் காட்டிய நம்பகத்தன்மை எவ்வளவு என்றால், ஒரு ஹதீஸில் 'இப்னுல் முபாரக்' பெயர் வந்துவிட்டால், ஹதீஸ் விமர்சகர்கள் அந்த ஹதீஸை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.

யார் அறிவிக்கும் ஹதீஸை ஏற்கலாம், யாரை நிராகரிக்கலாம் என்று அறிவிப்பாளர்களைத் தரம் பிரிக்கும் நுணுக்கமான கலையில் இவர் ஒரு தேர்ந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். தன் நண்பர்களாக இருந்தாலும், மார்க்க விஷயத்தில் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. "இஸ்லாம் என்பது தூய்மையானது, அதில் மனிதக் கற்பனைகளுக்கு இடமில்லை" என்பதில் அவர் மிகவும் கறாராக இருந்தார்.

அவருடைய நூற்கள்.

கிதாபுல் ஸுஹ்த்: ஹதீஸ்களின் அடிப்படையில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது மற்றும் உலகப்பற்றற்ற நிலை குறித்து எழுதப்பட்ட மிகத் தொன்மையான நூல்.
முஸ்னத் இப்னுல் முபாரக்: அவர் சேகரித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு. இவை தவிர தப்ஸீர் மற்றும் வரலாறு குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: "நான் இப்னுல் முபாரக் மற்றும் வக்கீஃ இப்னுல் ஜர்ராஹ் ஆகியோரின் நூல்களை முழுமையாக மனனம் செய்திருந்தேன்." ஹதீஸ் உலகையே கட்டி ஆண்ட இமாம் புகாரிக்கே இப்னுல் முபாரக் அவர்களின் எழுத்துக்கள்தான் ஆரம்பகால உத்வேகமாக இருந்தது என்றால், அவருடைய சேவையின் ஆழத்தை நாம் உணரலாம்.

அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்கள் ஒரு மாபெரும் வியாபாரியாக இருந்தும், "அறிவிப்பாளர் தொடர்  இல்லாத ஹதீஸ்கள் வெறும் வெறும் கூச்சல்கள்" என்று நிரூபித்தார். இன்று நாம் மிகத் தெளிவான, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் படிக்கிறோம் என்றால், அதற்கு அன்று அவர் போட்ட அறிவிப்பாளர் ஆய்வு என்ற அடித்தளமே மிக முக்கிய காரணம்.

அவருடைய மரணச் செய்தி மாபெரும் அறிஞரான ஃபுளைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களுக்கு எட்டியபோது, அவர் சிறு குழந்தையைப் போலக் குலுங்கி அழுது, "கிழக்கும் மேற்கும் இவரோடு இறந்துவிட்டது!" என்று கண்ணீர் வடித்தார். கலீஃபா ஹாருன் அர்-ரஷீத் இந்தச் செய்தியைக் கேட்டவுடன், "அறிஞர்களின் தலைவர் மரணித்துவிட்டார்" என்று சோகத்தில் மூழ்கினார்.

மார்க்கப் பற்று என்றால் ஏழ்மையாக இருப்பதுதான், உலகத்தைத் துறப்பதுதான் என்ற தவறான புரிதல் நம்மிடம் இருக்கிறது. ஆனால், மாபெரும் கோடீஸ்வரராக இருந்து கொண்டும், போர்க்களத்தில் வாளேந்தும் மாவீரராக இருந்து கொண்டும், ஹதீஸ் கலையின் முடிசூடா மன்னராகத் திகழ முடியும் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் வாழ்வு ஒரு மாபெரும் உதாரணம். செல்வம் நல்லவர்களின் கைகளில் இருக்கும்போது அது சமுதாயத்தின் இருளைப் போக்கும் பேரொளியாக மாறும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbdullahIbnAlMubarak #HadithScholar #WarriorScholar #Generosity #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Sunday, March 15, 2026

இமாம் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்).


நபிகளாரின் இல்லத்துச் செய்திகளையும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களையும் உலகிற்கு மிகத் துல்லியமாகச் சுமந்து வந்த ஒரு மாபெரும் குடும்பம் மதீனாவில் இருந்தது. அந்த 'அபூபக்ர் (ரலி)' அவர்களின் வழித்தோன்றலில் வந்து, ஹதீஸ் கலைக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகத்தைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் சில அறிவிப்பாளர் தொடர்களைப் பார்த்தவுடனேயே முஹத்திஸீன்கள் கண்ணை மூடிக்கொண்டு இது ஸஹீஹான ஹதீஸ்தான் என்று சான்றளித்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் நம்பகத்தன்மை வாய்ந்த, மதீனாவின் அறிவுப் பாரம்பரியத்தின் வாரிசுதான் இமாம் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்).

முழுப் பெயர்: ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்-ஸுபைர் பின் அல்-அவ்வாம்.
சிறப்புப் பெயர்: அபுல் முன்திர் (அல்லது) அபூ அப்தில்லாஹ்.
காலம்: ஹிஜ்ரி 61-ல் மதீனாவில் பிறந்து, ஹிஜ்ரி 146-ல் பகுதாதில் மரணமடைந்தார்.
மாபெரும் பரம்பரை: இவர் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் பேரானாவார்.

ஹிஷாம் அவர்களின் தந்தை உர்வா (ரஹ்), அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) மகன். அதாவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உர்வா சொந்த மருமகன். இதனால் நபிகளாரின் வீட்டுக்குள் நடந்த மிக நுணுக்கமான மார்க்கச் சட்டங்கள், குடும்பவியல் செய்திகள் அனைத்தும் ஆயிஷா (ரலி) வழியாக உர்வாவுக்கும், உர்வா வழியாக அவருடைய மகன் ஹிஷாமுக்கும் நேரடியாக வந்து சேர்ந்தன. புகாரி மற்றும் முஸ்லிமில் நீங்கள் காணும் பல நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் 'ஹிஷாம் — உர்வா — ஆயிஷா (ரலி)' என்ற இந்த அசைக்க முடியாத சங்கிலி வழியாகவே நமக்குக் கிடைத்தன.

மதீனாவின் மாபெரும் இமாமான மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களுக்கு ஹதீஸ் கலையில் மிக முக்கியமான ஆசான் இந்த ஹிஷாம் அவர்கள்தான். இமாம் மாலிக் மட்டுமின்றி, இமாம்களான சுஃப்யான் அஸ்-ஸவ்ரி, சுஃப்யான் இப்னு உயைனா, ஷுஃபா போன்ற ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் கலையின் மாபெரும் ஜாம்பவான்கள் அனைவரும் இவருடைய சபையில் அமர்ந்து ஹதீஸ்களைக் கற்ற மாணவர்களே!

ஹிஷாம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் மதீனாவிலிருந்து ஈராக்கின் கூஃபா மற்றும் பக்தாத் நகரங்களுக்குப் பயணம் செய்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் அவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்தினார்கள். அங்கு ஆயிரக்கணக்கான ஈராக் மாணவர்கள் அவரிடம் ஹதீஸ்களைக் கற்றனர். ஆனால், இங்குதான் ஹதீஸ் கலையின் பயங்கரமான நேர்மையை நாம் பார்க்க முடியும். ஹிஷாம் அவர்கள் ஈராக்கிற்குச் சென்றபோது அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. இதனால் அவருடைய நினைவாற்றலில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டதாக அவருடைய சொந்த மாணவரான இமாம் மாலிக் (ரஹ்) போன்றவர்கள் மிக நேர்மையாகப் பதிவு செய்தார்கள். 

ஒருவருடைய பரம்பரையோ, அந்தஸ்தோ ஹதீஸ் கலையின் கடுமையான விதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு மாபெரும் சான்று. ஆயினும், ஆறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களின் (ஸிஹாஹ் ஸித்தா) ஆசிரியர்கள் அனைவரும் ஹிஷாம் அவர்களின் ஹதீஸ்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது அவருடைய நம்பகத்தன்மைக்கு மகுடம் ஆகும்.

இவ்வளவு பெரிய பரம்பரையில் பிறந்தும், செல்வச் செழிப்பான வாய்ப்புகள் இருந்தும், ஹிஷாம் அவர்கள் மிக எளிமையான வாழ்வையே தேர்ந்தெடுத்தார். அதிகமாக நோன்பு நோற்பவராகவும், இரவுத் தொழுகைகளில் ஈடுபடுபவராகவும் திகழ்ந்தார்.

குடும்பப் பாரம்பரியம் என்பதை பெருமை பேசுவதற்குரியதாக ஆக்காமல் அதை பொறுப்புகளைச் சுமப்பதற்கானது என்பதை ஹிஷாம் பின் உர்வா அவர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அபூபக்கர் (ரலி) அவர்களின் குடும்பம் என்ற கர்வம் இல்லாமல், தன் பாட்டியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்மை தன் நெஞ்சில் சுமந்து அதை அடுத்த தலைமுறைக்கு எந்தக் கலப்படமும் இல்லாமல் கொண்டு சேர்த்த அந்தப் பொறுப்புணர்வுதான் அவரை இன்றுவரை வரலாற்றில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. நாமும் நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டிய உண்மையான சொத்து கல்வி மட்டுமே!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HishamIbnUrwah #Madina #HadithScholar #Ayesha #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

முஹம்மத் பின் யஹ்யா அத்துஹலி.


நிஷாபூர் நகரத்தின் வீதிகளில் அவர் நடந்து சென்றால், ஒரு சுல்தான் செல்வதைப் போல மக்கள் அவருக்குப் பின்னால் அணிவகுப்பார்கள். ஆறாம் நூற்றாண்டின் அந்த மாபெரும் கல்வி நகரத்தில், ஹதீஸ் கலைக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த 'அமீருல் முஃமினீன்'. இமாம் புகாரி முதல் இமாம் இப்னு மாஜா வரை நாம் போற்றும் 'ஸிஹாஹ் ஸித்தாவின்' (ஆறு ஹதீஸ் நூல்கள்) ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசானாகத் திகழ்ந்தவர்.

ஹதீஸ் கலை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் இமாம் முஹம்மத் பின் யஹ்யா அத்துஹலி. இவருடைய அறிவுத் திறனும், ஹதீஸ்களைத் திரட்டுவதில் இவர் காட்டிய தீவிரமும் அன்றைய இஸ்லாமிய உலகையே நிஷாபூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.

முழுப் பெயர்: முஹம்மத் பின் யஹ்யா பின் அப்தில்லாஹ் அத்துஹலி.
சிறப்புப் பெயர்: அபூ அப்தில்லாஹ்.
காலம்: ஹிஜ்ரி 170-களில் பிறந்து, ஹிஜ்ரி 258-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈரானின் புகழ்பெற்ற கல்வி நகரமான நிஷாபூர்.
ஹதீஸ் கலையில் இது ஒரு மிக அரிதான சாதனை. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ மற்றும் இமாம் இப்னு மாஜா ஆகிய ஆறு ஹதீஸ் கலைச் சக்கரவர்த்திகளும் இவரிடம் மாணவர்களாக இருந்து ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். இவருடைய ஹதீஸ் ஞானம் இல்லாமல் அந்த ஆறு நூல்களும் முழுமை பெற்றிருக்காது என்று சொல்லுமளவுக்கு இவருடைய பங்களிப்பு மகத்தானது.

இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரீ அறிவித்த ஹதீஸ்களைத் தேடித் தேடித் தொகுப்பதில் இவர் ஒரு பெரும் சாதனை புரிந்தார். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் ஹதீஸ்களை மட்டும் ஒரு தனி நூலாக 'அல்-ஸுஹ்ரிய்யாத்' என்ற பெயரில் தொகுத்தார். ஒரு குறிப்பிட்ட அறிஞரின் ஹதீஸ்களை இவ்வளவு நுணுக்கமாக ஆய்ந்து தொகுத்தது ஹதீஸ் கலையில் ஒரு புதிய மைல்கல்.

இமாம் துஹலி அவர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் கசப்பான ஒரு பகுதி, இமாம் புகாரி (ரஹ்) அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு. இமாம் புகாரி நிஷாபூர் வந்தபோது, துஹலி அவர்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

ஆனால், குர்ஆனை ஓதும்போது வெளிப்படும் 'சத்தம்' (Lafz) பற்றிய ஒரு நுட்பமான விவாதத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது ஒரு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து, புகாரி அவர்கள் நிஷாபூரை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இருப்பினும், இமாம் முஸ்லிம் போன்ற அறிஞர்கள் இமாம் துஹலி அவர்களின் ஹதீஸ் ஞானத்தை இறுதிவரை மதித்துப் போற்றினார்கள். அறிஞர்களுக்கு இடையிலான இந்த 'இஜ்திஹாத்' (ஆய்வு) ரீதியான மோதல்கள் அவர்களின் மார்க்கப் பற்றுக்குச் சான்றாகவே பார்க்கப்பட்டன.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றிச் சொல்லும்போது, "இவருக்கு நிகராக ஹதீஸ்களை அறிந்த எவரையும் நான் பார்த்ததில்லை" என்று புகழ்ந்துள்ளார். நிஷாபூர் நகரமே இவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றது.

இமாம் முஹம்மத் பின் யஹ்யா அத்துஹலி அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றே ஒன்றுதான், கல்வி என்பதை வெறும் தகவல்களைச் சேமிப்பதாக வைத்துக்கொள்ளாமல், மாறாகத் தன் காலத்தின் மிகப்பெரிய அறிஞர்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகத் திகழ்வதாகும். இமாம் புகாரியுடனான கருத்து வேறுபாடு ஒரு வரலாற்றுச் சம்பவமாக இருந்தாலும், அந்த ஆறு இமாம்களும் இவரிடம் கற்ற கல்விதான் இன்று நம் கைகளில் இருக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AlDhuhali #Nishapur #HadithScholar #TeacherOfImams #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

ஸல்மான் பாரிஸி (ரலி)


இஸ்லாமிய வரலாற்றில் தியாகம் என்ற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால், அது ஸல்மான் பாரிஸி (ரலி) அவர்களின் முகமாகத்தான் இருக்கும். பாரசீகத்தின் பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, உண்மையைத் தேடி பல நாடுகளைக் கடந்து, இறுதியில் ஒரு அடிமையாக மதீனாவிற்குள் நுழைந்தவர். ஆனால், இஸ்லாத்தை ஏற்ற பிறகு அவர் செய்த தியாகங்கள், உலக வரலாற்றிலேயே எந்த ஒரு மனிதனாலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதவை!

ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு அது. இஸ்லாமிய வரலாற்றின் மிகக் கொடூரமான காலகட்டம். மக்கத்துக் குறைஷிகள், யூதர்கள் மற்றும் பல அரபுக் கோத்திரங்கள் என சுமார் 10,000 பேர் கொண்ட பிரம்மாண்டமான படை மதீனாவை அழிக்கத் திரண்டு வந்தது. முஸ்லிம்களின் படையோ வெறும் 3,000 பேர்தான். அண்ணலார் (ஸல்) அவர்கள் என்ன செய்வது என்று ஆலோசித்தபோது, ஒரு குரல் ஒலித்தது.

"இறைத்தூதரே! எங்கள் பாரசீக தேசத்தில் எதிரிகளின் படை பலமாக இருந்தால், நகரத்தைச் சுற்றி நாங்கள் பெரிய அகழ் (பள்ளம்) தோண்டி எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம்" என்றார் ஸல்மான் பாரிஸி (ரலி). அரபு உலகிற்கு அது முற்றிலும் புதிய யுக்தி. அந்தத் திட்டம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடும் குளிர்... பசியால் வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் கொடிய வறுமை. அந்த நேரத்தில் ஸல்மான் (ரலி) அவர்கள் ஒரு ஆளாக நின்று 10 பேரின் வேலையைச் செய்தார்! அவருடைய அந்த அசுர உழைப்பைப் பார்த்து வியந்த ஸஹாபாக்கள் மத்தியில் ஒரு சிறிய போட்டி உருவானது. முஹாஜிர்கள், "ஸல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றார்கள்; அன்சாரிகளோ, "இல்லை, ஸல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றார்கள்.
அப்போது அங்கு வந்த அகிலத்தின் அருட்கொடை அண்ணலார் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை, வரலாற்றின் மாபெரும் பொன்னெழுத்துக்கள்: "ஸல்மான் உங்களைச் சேர்ந்தவரல்ல; அவர் என் குடும்பத்தைச் (அஹ்லுல் பைத்) சேர்ந்தவர்!" பாரசீகத்தில் பிறந்த ஒரு மனிதருக்கு, அண்ணலாரின் குடும்பம் என்ற மாபெரும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது அவருடைய அந்த வியர்வையும் தியாகமும்தான்!

காலங்கள் உருண்டோடின. இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்தது. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஒருகாலத்தில் பாரசீகத்தின் தலைநகராகப் கோலோச்சிய 'மதாயின்' (Ctesiphon) நகருக்கே ஆளுநராக ஸல்மான் பாரிஸி (ரலி) நியமிக்கப்பட்டார். பிரம்மாண்டமான அரண்மனைகள் நிறைந்த அந்த நகரில், இந்த இஸ்லாமிய ஆளுநர் எங்கே வாழ்ந்தார் தெரியுமா? ஒரு சிறிய மரத்தடியில் அல்லது ஒரு சாதாரணக் குடிசையில்! ஆளுநராக அவருக்குக் கிடைக்கும் பலாயிரம் திர்ஹம்கள் சம்பளத்தை அப்படியே ஏழைகளுக்குத் தர்மம் செய்துவிடுவார். சரி, அவருடைய சாப்பாட்டிற்கு என்ன செய்தார்? தன் கைகளால் பேரீச்ச ஓலைகளைக் கொண்டு கூடைகளை முடைவார். அதைச் சந்தையில் விற்று வரும் சில காசுகளில் ஒரு பகுதியைத் தர்மம் செய்துவிட்டு, மீதி இருப்பதில்தான் தன் உணவை வாங்குவார். "என் கைகளால் உழைத்து உண்பதையே நான் விரும்புகிறேன்" என்று அந்த மாபெரும் தேசத்தின் ஆளுநர் நெஞ்சை நிமிர்த்திக் கூறினார்.

ஹிஜ்ரி 35-ஆம் ஆண்டு. ஸல்மான் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வந்த ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், ஸல்மான் அழுவதைப் பார்த்து பதறிப்போனார். "நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நற்செய்தி சொல்லப்பட்ட நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் கண்ணீரோடு சொன்னார்: "மரணம் நெருங்கிவிட்டதால் நான் அழவில்லை. நபிகளார் எங்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். 'ஒரு பயணி வைத்திருக்கும் மூட்டை அளவுதான் உங்களின் உலகச் சொத்து இருக்க வேண்டும்' என்றார்கள். ஆனால், என்னைச் சுற்றி இவ்வளவு பொருட்கள் இருக்கின்றனவே! நபிகளாரின் வாக்கை நான் மீறிவிட்டேனே என்று பயந்து அழுகிறேன்" என்றார்.

அப்போது அந்த அறையைச் சுற்றிப் பார்த்த ஸஅத் (ரலி) அவர்களின் கண்கள் கலங்கின. ஏனென்றால், அந்த மாபெரும் ஆளுநரின் அறையில் இருந்த மொத்தச் சொத்துக்கள்: ஒரு தண்ணீர் குடிக்கும் பாத்திரம், ஒரு பழைய பாய், மற்றும் மாவு பிசையும் ஒரு பாத்திரம்! இதைத்தான் அவர் 'பிரம்மாண்டமான சொத்து' என்று எண்ணிக் கண்ணீர் வடித்தார்.
உலகத்தின் சுகபோகங்கள் அனைத்தையும் ஒருபுறம் தள்ளிவிட்டு, ஈமானின் சுவையை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ருசித்த அந்த தியாகச் செம்மலின் வாழ்க்கையை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #SalmanAlFarsi #BattleOfTrench #SimplicityInIslam #AbdullahIbnuNaseerWriteups

Saturday, March 14, 2026

அபூ நுஐம்


ஹதீஸ் கலை அறிஞர்கள் தொடர் அதற் இறுதிப்பகுதியில் உள்ளது. இந்த இறுதிப் கட்டப் பயணத்தில், நாம் பார்க்கவிருக்கும் அறிஞர் மிக முக்கியமானவர். ஹதீஸ் கலையை வெறும் சட்டக் கலையாக மட்டும் பார்க்காமல், அதை மனிதர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு மாபெரும் கருவியாகப் பயன்படுத்திய பாரசீக தேசத்து மாமேதை அவர்.

"அபூ நுஐம் அவர்களின் காலத்தில், அவரைப் போல அதிக ஹதீஸ்களை மனனம் செய்தவரும், அறிவிப்பாளர் தொடர்களை (ஸனதுகளை) விரல் நுனியில் வைத்திருந்தவரும் உலகில் வேறெவரும் இருந்ததில்லை" என்று மாபெரும் வரலாற்று ஆசிரியர் இமாம் தஹபீ (ரஹ்) அவர்களால் புகழப்பட்டவர்தான் இமாம் அபூ நுஐம் அல்-இஸ்பஹானி.

முழுப் பெயர்: அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு
அஹ்மத் இப்னு இஸ்ஹாக்.
சிறப்புப் பெயர்: அபூ நுஐம் அல்-இஸ்பஹானி.
காலம்: ஹிஜ்ரி 336-ல் பிறந்து, ஹிஜ்ரி 430-ல் மரணமடைந்தார்.
ஊர்: பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) மாபெரும் கல்வி நகரமான 'இஸ்பஹான்'.

இஸ்லாமிய வரலாற்றில் நல்லடியார்களின் (ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்) இறையச்சம் நிறைந்த வாழ்க்கையையும், அவர்களின் ஆழமான தத்துவங்களையும், அவர்கள் அறிவித்த ஹதீஸ்களையும் தொகுத்து அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான நூல்தான் 'ஹில்யத்துல் அவ்லியா வ தபகாத்துல் அஸ்ஃபியா'. சுமார் 10 பாகங்களைக் கொண்ட இந்த மாபெரும் கலைக்களஞ்சியம், அன்றைய நிஷாபூர் நகரத்துச் சந்தைகளில் ஆயிரக்கணக்கான தங்கக் காசுகளுக்கு விலைபோனது என்றால், அதன் மதிப்பைப் புரிந்துகொள்ளலாம். இன்றுவரை, இஸ்லாமிய ஆன்மீக வரலாற்றை அறிய விரும்பும் எந்தவொரு மாணவனும் இந்த நூலைத் தாண்டிச் செல்ல முடியாது.

அன்றைய வழக்கம் என்னவென்றால், ஹதீஸ்களைத் தேடி அறிஞர்கள் ஊர் ஊராகப் பயணிப்பார்கள். ஆனால் அபூ நுஐம் அவர்களின் ஹதீஸ் ஞானம் உலகம் முழுவதும் பரவியதால், அவர் இஸ்பஹான் நகரை விட்டு எங்கும் செல்ல வேண்டியிருக்கவில்லை. மாறாக, உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மார்க்க மாணவர்கள் இஸ்பஹானை நோக்கிப் படையெடுத்தார்கள். அவருடைய சபை எப்பொழுதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளையும், அற்புதங்களையும் (முஃஜிஸாத்) தொகுத்து இவர் எழுதிய 'தலாயிலுந் நுபுவ்வா' என்ற நூல் சீரா (நபி வரலாறு) துறையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். அதேபோல, தான் பிறந்த ஊரான இஸ்பஹானின் வரலாற்றையும், அங்கு வாழ்ந்த அறிஞர்களையும் ஆவணப்படுத்தி 'தரீக் இஸ்பஹான்' என்ற வரலாற்று நூலையும் உம்மாவுக்கு அர்ப்பணித்தார்.

அபூ நுஐம் அவர்கள், ஹதீஸ்களை அறிவிக்கும் ஒரு முஹத்திஸாக மட்டுமில்லாமல், மிகச்சிறந்த சட்ட அறிஞராக (ஃபகீஹ்) இருந்தார்.

அறிவியலும் தொழில்நுட்பமும் உச்சத்தில் இருக்கும் இந்த நவீன யுகத்தில், மனிதர்களின் மனங்கள் இயந்திரங்களைப் போல வறண்டு போயிருக்கின்றன. இந்த நேரத்தில், வெறும் வரட்டுச் சட்டங்களை மட்டும் பேசாமல், அபூ நுஐம் அவர்களின் 'ஹில்யத்துல் அவ்லியா' காட்டும் அந்த நல்லடியார்களின் கண்ணீரையும், தியாகத்தையும், இரவுத் தொழுகைகளையும், எளிமையான வாழ்க்கையையும் நம்முடைய வாசிப்பிற்கும் பேச்சிற்கும் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbuNuaym #Isfahani #HilyatAlAwliya #HadithScholar #Tazkiyah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)


இஸ்லாமிய வரலாற்றில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு. அதில் மிகவும் ஆச்சரியமான ஒரு கூட்டணிதான், எகிப்தை வென்ற மாபெரும் தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) மற்றும் அவருடைய மகன் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆகியோராவர். தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெறும் 12 வயதுதான் வித்தியாசம்! அதுமட்டுமல்ல, தந்தைக்கு முன்பாகவே இஸ்லாத்தை ஏற்று, தன் வாலிபப் பருவம் முழுவதையும் இறைவழிபாட்டிற்கும், கல்வியைத் தேடுவதற்கும் அர்ப்பணித்த மாபெரும் அறிஞர்தான் அப்துல்லாஹ் (ரலி).

இன்று நாம் பல ஹதீஸ் நூல்களைப் படிக்கிறோம். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே எழுத்துபூர்வமாகப் பதிவு செய்த ஒரு மாபெரும் வரலாற்று ஆவணம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அதன் பெயர் 'அஸ்-ஸஹீஃபா அஸ்-ஸாதிகா' (உண்மையான ஏடு).
ஒருமுறை குறைஷிகள் அவரிடம், "நபிகளார் சில நேரங்களில் கோபத்திலும் பேசுவார்கள், சில நேரங்களில் மகிழ்ச்சியிலும் பேசுவார்கள். நீ எல்லாவற்றையும் அப்படியே எழுதுகிறாயே?" என்று தடுத்தார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி), அண்ணலார் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டார். அப்போது நபிகளார் தன் வாயைக் கைகாட்டி, "அப்துல்லாஹ்வே! நீர் எழுதுங்கள். என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீதாணையாக, இதிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வெளிவரப் போவதில்லை!" என்று கட்டளையிட்டார்கள். அதன் பிறகு ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர் பதிவு செய்தார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் இறைவழிபாடு எப்படிப்பட்டது தெரியுமா? தினமும் நோன்பு வைப்பார்; இரவு முழுவதும் தூங்காமல் தொழுதுகொண்டே இருப்பார். இதைக் கேள்வியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, மாபெரும் வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்.

"அப்துல்லாஹ்வே! நீர் தினமும் நோன்பு வைப்பதாகவும், இரவெல்லாம் விழித்திருந்து தொழுவதாகவும் நான் கேள்விப்பட்டேனே, அது உண்மையா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அண்ணலார் கூறினார்கள்: "அப்படிச் செய்யாதீர். சில நாட்கள் நோன்பு வையுங்கள், சில நாட்கள் விட்டுவிடுங்கள். இரவில் சிறிது நேரம் தொழுங்கள், பின்பு உறங்குங்கள். ஏனெனில், உமது உடலுக்கு நீர் செய்ய வேண்டிய கடமை உள்ளது; உமது கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை உள்ளது; உமது மனைவிக்கும் நீர் செய்ய வேண்டிய கடமை உள்ளது!" பின்னர், தாவூத் (அலை) அவர்கள் வைத்தது போல ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு வைக்குமாறும், மாதம் ஒருமுறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்குமாறும் நபிகளார் அவருக்கு அறிவுறுத்தினார்கள். அவர் அதையே தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். ஆனால் முதுமை அடைந்தபோது, "அன்று நபிகளார் அளித்த சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருக்கலாமே" என்று அவருடைய தளர்ந்த உடல் அதற்காக ஏங்கியது.

அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு மிகச் சோகமான கட்டம் 'ஸிப்பீன் போர்'. முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த அந்தப் போரில் கலந்துகொள்ள அவருக்குத் துளியும் விருப்பமில்லை. முஸ்லிம்களின் ரத்தத்தைச் சிந்த அவர் விரும்பவில்லை. ஆனால், அவருடைய தந்தை அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களின் படையில் இருந்தார். தந்தை தன் மகனைத் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தினார். ஒருமுறை நபிகளார் அவரிடம், "உம் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவருக்குக் கட்டுப்படு" என்று கூறியிருந்த வார்த்தை அப்துல்லாஹ்வுக்கு நினைவுக்கு வந்தது. நபிகளாரின் கட்டளையை மீறக் கூடாது என்பதற்காக, கண்ணீருடன் அந்தப் போர்க்களத்திற்குச் சென்றார். ஆனால், அவர் ஒருபோதும் வாள் ஏந்திப் போரிடவில்லை; மாறாகப் படையின் கொடியை மட்டுமே தாங்கி நின்றார். தன் வாழ்நாளின் இறுதிவரை அந்தப் போர்க்களத்திற்குச் சென்றதற்காக அவர் வருத்தப்பட்டு அழுதுகொண்டே இருந்தார்.

குர்ஆனையும், தவ்ராத்தையும் ஆழமாகக் கற்றறிந்த அறிஞராக, பல மொழிகளைத் தெரிந்தவராக, இறுதிவரை மார்க்கச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், ஹிஜ்ரி 65-ஆம் ஆண்டு எகிப்தில் (அல்லது தாயிஃபில்) வபாத்தானார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன? இஸ்லாம் என்பது உலகத்தைத் துறந்து சந்நியாசியாக வாழும் மார்க்கம் இல்லை என்றும் வணக்க வழிபாடுகளோடு, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் சமநிலையாகச் செய்வதே உண்மையான இஸ்லாம் என்று உணர்த்தியவர். அந்தச் சமநிலையான ஈமானை அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnAmr #HadithScholar #Siffin #AbdullahIbnuNaseerWriteups

Friday, March 13, 2026

'அபூ பக்ரா


இஸ்லாமிய வரலாற்றில் பெயர்கள் சில நேரம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். 'அபூபக்ர்' என்ற உடனே நமக்கு முதலாம் கலீஃபாவின் நினைவுதான் வரும். ஆனால், நாம் இன்று பார்க்கப்போகும் 'அபூ பக்ரா' முற்றிலும் வேறொருவர். இவர் ஒரு கோட்டையின் சுவரிலிருந்து கயிற்றின் மூலமாகக் கீழே இறங்கி, அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஓடி வந்த ஒரு தீரர்!
யார் இந்த அபூ பக்ரா?

இவருடைய இயற்பெயர் நுஃபைஃ இப்னுல் ஹாரிஸ். தாஇஃப் நகரத்தைச் சேர்ந்த 'ஸகீஃப்' கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர் அடிமையாக இருந்தார். ஆனால், இவருடைய உள்ளம் மதீனாவிலிருந்து வீசிய ஏகத்துவக் காற்றால் ஈர்க்கப்பட்டிருந்தது.

ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாஇஃப் கோட்டையை முற்றுகையிட்டார்கள். அந்தக் கோட்டை மிக வலிமையானது. அப்போது ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது: "தாஇஃப் கோட்டைக்குள் இருக்கும் அடிமைகளில் யார் வெளியேறி எங்களிடம் வருகிறார்களோ, அவர்கள் சுதந்திரமானவர்கள்!"
இந்த அறிவிப்பைக் கேட்ட நுஃபைஃ, ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை. கோட்டையின் மதில் சுவரிலிருந்து கீழே இறங்குவதற்காக அங்கே இருந்த ஒரு பழைய 'பக்ரா' (பக்ரா - அதாவது கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் 'கப்பி') கயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்து நபிகளாரிடம் தஞ்சம் புகுந்தார். இந்தச் செயலைப் பாராட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்கு 'அபூ பக்ரா' (கப்பியின் தந்தை/உடையவர்) என்று செல்லப் பெயரிட்டார்கள். அன்றிலிருந்து அந்த அடிமை வீரர், இஸ்லாமிய வரலாற்றில் 'அபூ பக்ரா' என்றே நிலைத்துப்போனார்.

அபூ பக்ரா (ரலி) அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். யாராவது அவரிடம், "உங்களுடைய தந்தை யார்? உங்கள் கோத்திரம் எது?" என்று கேட்டால், அவர் பெருமையோடு சொல்வார்: "நான் நபிகளாரின் மௌலா (விடுதலை பெற்றவர்); என்னுடைய தந்தை இஸ்லாம்!" தன் பழைய அடையாளங்களை விட, நபிகளாரோடு தனக்கு ஏற்பட்ட அந்தப் பிணைப்பையே அவர் பெரிதாகக் கருதினார்.

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு ஸஹாபாக்களுக்கு இடையே சில குழப்பங்கள் (உள்நாட்டுப் போர்கள்) ஏற்பட்டபோது, அபூ பக்ரா (ரலி) அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். "முஸ்லிம்களுக்கு இடையே போர் நடந்தால், அதில் வாள் ஏந்துவதை விட வீட்டிற்குள் அமர்ந்திருப்பதே சிறந்தது" என்ற நபிகளாரின் ஹதீஸை அவர் மிக உறுதியாகப் பின்பற்றினார். அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) ஆகியோருக்கு இடையே நடந்த போர்களில் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். தன் நாவையும், கைகளையும் பாதுகாத்துக்கொண்டு இறைவழிபாட்டிலேயே தன் காலத்தைக் கழித்தார்.

அபூ பக்ரா (ரலி) அவர்கள் நபிகளாரிடம் மிக நெருக்கமாக இருந்த காரணத்தால், சுமார் 143 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, ஈதுல் அழ்ஹா பெருநாளின் போது நபிகளார் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் பல பகுதிகள் அபூ பக்ரா (ரலி) வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.

பஸ்ரா நகரில் குடியேறிய அவர், அங்கே ஒரு மாபெரும் கல்விமானாகத் திகழ்ந்தார். ஹிஜ்ரி 51 அல்லது 52-ஆம் ஆண்டில் அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

அபூ பக்ரா (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் என்ன தெரியுமா சுதந்திரம் என்பது வெறும் உடல் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் அது ஆன்மா சார்ந்தது என்பதை உணர்த்துகிறது. ஒரு பழைய கப்பியின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அவர் கீழே இறங்கிய அந்த ஒரு நிமிடம், அவரை உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, மறுமையின் மாபெரும் வெற்றியாளராக மாற்றியது!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbuBakra #SiegeOfTaif #FreedomInIslam #AbdullahIbnuNaseerWriteups

இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி


ஹதீஸ் கலை வரலாற்றில் 8-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த ஒரு மாபெரும் மேதையை இன்று நாம் சந்திக்கப் போகிறோம். ஹதீஸ்களின் நுட்பமான விளக்கங்களையும், அதே சமயம் ஆன்மீகத்தின் உச்சங்களையும் ஒருங்கே தன் எழுத்துக்களில் கொண்டு வந்தவர் அவர். இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்களின் மாணவர் தலைமுறையில் வந்த, ஹன்பலி மத்ஹபின் வரலாற்றைத் தொகுத்த அந்தப் பேராசானைப் பற்றி பார்ப்போம்.

ஹதீஸ் கலை என்பது வெறும் சட்டப் புத்தகமாக பார்க்காமல் அது வாழ்க்கையைச் செதுக்கும் ஞானம் என்பதைத் தன் ஒவ்வொரு வரியிலும் உணர்த்தியவர் இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி. இவருடைய எழுத்துக்களில் ஒரு விசித்திரமான சக்தி உண்டு; அவை அறிவுக்கு வேலை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வாசிப்பவரின் இதயத்தையும் ஈரமாக்க வல்லவை.

முழுப் பெயர்: ஸைனுத்தீன் அப்துர் ரஹ்மான் இப்னு அஹ்மத்.
சிறப்புப் பெயர்: இப்னு ரஜப் (இவருடைய பாட்டனார் 'ரஜப்' மாதத்தில் பிறந்ததால் இந்தப் பெயர் இவர்களது குடும்பப் பெயராக மாறியது).
காலம்: ஹிஜ்ரி 736-ல் பகுதாதில் பிறந்து, ஹிஜ்ரி 795-ல் டமாஸ்கஸில் மரணமடைந்தார்.
கல்வி: பக்தாத், டமாஸ்கஸ், எகிப்து மற்றும் ஹிஜாஸ் (மக்கா, மதீனா) என அன்றைய இஸ்லாமிய உலகின் அனைத்து அறிவுத் தளங்களிலும் பயணித்து ஹதீஸ்களைச் சேகரித்தவர்.

இமாம் நவவீ அவர்கள் தொகுத்த புகழ்பெற்ற 40 ஹதீஸ்களை நாம் அறிவோம். அந்த 40 ஹதீஸ்களுக்கு உலகில் எழுதப்பட்ட விரிவுரைகளிலேயே ஆகச்சிறந்தது இப்னு ரஜப் எழுதிய 'ஜாமிஉல் உலூமி வல் ஹிகம்' என்ற நூல்தான். நபிகளாரின் சுருக்கமான ஆனால் ஆழமான வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் சட்ட நுணுக்கங்களையும், ஒழுக்கப் பாடங்களையும் ஒரு சுரங்கத்தைப் போலத் தோண்டி எடுத்து இதில் வழங்கியிருப்பார். ஹதீஸ் மாணவர்களுக்கு இது இன்றியமையாத நூல்.

நாம் இப்போது ரமழானில் பல தொடர்களை எழுதிக்கொண்டிருக்கிறோம் அல்லவா? அதற்கு மிகவும் பொருத்தமான ஒரு நூல் இவருடைய 'லதாஇஃபுல் மஆரிஃப்'. வருடம் முழுவதும் வரும் இஸ்லாமிய மாதங்கள், அவற்றின் சிறப்புகள், அந்தந்த காலங்களில் செய்ய வேண்டிய வணக்கங்கள் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் என அனைத்தையும் மிக அழகாகத் தொகுத்திருப்பார். குறிப்பாக ரமழான் மற்றும் பெருநாட்கள் பற்றிய இவருடைய விளக்கங்கள் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஹதீஸ் கலையில் 'இல்லத்' (மறைமுகக் குறைகள்) என்பது மிகக் கடினமான துறை. இமாம் திர்மிதீ அவர்கள் தன் 'சுனன்' நூலின் இறுதியில் ஹதீஸ்களின் குறைகள் பற்றி எழுதியிருந்த குறிப்புகளுக்கு, இப்னு ரஜப் எழுதிய விரிவுரை இவரை ஒரு மாபெரும் ஹதீஸ் விமர்சகராக உலகிற்கு அடையாளம் காட்டியது.

இவர் ஒரு மாபெரும் அறிஞராக இருந்தபோதும், புகழ் மற்றும் பதவிகளிலிருந்து விலகியே இருந்தார். மக்களிடையே உரையாற்றுவதை விட, தனிமையில் இறைவனை வணங்குவதையும், புத்தகங்களை எழுதுவதையுமே அதிகம் நேசித்தார். "உண்மையான அறிவு என்பது அதிகப்படியான தகவல்களைச் சேமிப்பதல்ல, மாறாக அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதே" என்பது இவருடைய தாரக மந்திரம்.

ஹதீஸ்களை வெறும் சட்டங்களாகப் பார்க்காமல், அவற்றை இதயத்தைத் தூய்மைப்படுத்தும் 'தஸ்கியா'வோடு இணைத்ததுதான் இப்னு ரஜப் அவர்களின் தனிச்சிறப்பு. ஒரு ஹதீஸைப் படிக்கும்போது அது நம் வாழ்வை எப்படி மாற்ற வேண்டும் என்பதற்கு இவருடைய நூல்கள் மிகச்சிறந்த வழிகாட்டி. குறிப்பாக ரமழான் போன்ற காலங்களில் இவருடைய 'லதாஇஃபுல் மஆரிஃப்' நூலைப் புரட்டுவது, நம் வணக்க வழிபாடுகளுக்கு ஒரு புதிய உயிரோட்டத்தைத் தரும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #IbnRajab #Hanbali #HadithScholar #RamadanSeries #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Thursday, March 12, 2026

இஃதிகாஃப்


💞 இஸ்லாத்தில் இஃதிகாப் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• ‘ இஃதிகாஃப் ’ என்ற பொதுவான அரபி சொல்லுக்கு ‘ தங்குவது ’ என்று பொருள் ஆகும் !

• அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக அமல்கள் செய்வதை ‘ இஃதிகாஃப் ’  என்கிறோம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் "இஃதிகாஃப்" இருந்தனர்!

(நூல் : முஸ்லிம் : 2182)

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இஃதிகாஃப் பள்ளியில் இருந்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மற்றும் ஸஹாபாக்களும் இஃதிகாஃப் இருந்து வந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

💟 இஃதிகாப் இருப்பதன் நோக்கம் : 

1) 1000 மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எந்த உலக சிந்தனையும் ஏற்பட்டு வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 813)

2) உலக விசியங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்ய முடியும்!

3) உலக காரியங்களை விட்டு ஒதுக்கி பள்ளியில் இருப்பதால் உள்ளத்தை சீர் செய்ய முடியும்!

4) முழுவதும் அல்லாஹ்வை மட்டும் சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்பட முடியும்!

5) மன இச்சைகளின் தூண்டும் காரியங்களை விட்டு தூரமாகி இருக்க முடியும்!

💟 இஃதிகாப் இருப்பதற்கான முறைகள் :

❤️ நிய்யத் வைத்தல் :

• எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன!

(நூல் : ஸஹீஹ் புஹாரி  :1)

• இஃதிகாப் இருப்பதாக உள்ளத்தில் நிய்யத் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! இதற்க்கு துஆ என்று எதுவும் கிடையாது!

❤️  பள்ளிவாசலில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் : 

• இஃதிகாப் கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்! அல்லாஹ் இஃதிகாஃப் பற்றி அல் குர்ஆனில் கூறும் பொழுது பொதுவாக பள்ளி என்றே குறிப்பிட்டு கூறியுள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• அதனால் நாம் எந்த பள்ளியில் வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ஆனால் கட்டாயம் பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும்!

• பள்ளிவாசல் அல்லாத இடங்களில் இஃதிகாஃப் இருக்க கூடாது! ஏன் என்றால் இதற்கு எந்த வித ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!

❤️ நோன்பும் & இஃதிகாஃப்பும் :

• நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம்! நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது ஆகும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2042)

• இஃதிகாஃப் இருக்க நோன்பு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை நோன்பு வைக்க வில்லை என்றாலும் இஃதிகாஃப் இருக்கலாம் நோன்பு வைத்து கொண்டு இஃதிகாஃப் இருப்பது சிறந்தது!

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தி கூறி உள்ளார்கள்! நாம் நோன்பு வைத்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது ஆகும்!

💟 இஃதிகாப் ஆரம்பமும் & முடிவும் : 

• இஃதிகாப் இருக்க குறிப்பிட்ட நாள் என்று எதுவும் கிடையாது எப்போது வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• ஆனால் இஃதிகாப்பை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்!

❤️ இஃதிகாஃப் ஆரம்பம் :

• இஃதிகாஃப் ஆரம்பம் நேரம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன!

ஷேக் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

ரமலான் பிறை 20 அன்று மாலையில் இருந்து ரமலானின் ஒற்றைப்படை நாட்கள் ஆரம்பித்து விடும்!

நாம் மாலையிலயே இஃதிகாப் இருக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு அந்த ஒற்றைப்படை நாட்களில் இஃதிகாப் இருந்து லைலத்துல் கத்ர் இரவை அடையும் பாக்கியம் கிடைக்கும்!

(ஃபதாவா அல்-சியாம் : 501)

• இஸ்லாத்தில் நாளின் ஆரம்பம் மஹ்ரிப் ஆகும்! நாம் இஃதிகாஃப் இருப்பதாக இருந்தால் மஹ்ரிப்க்கு பள்ளிக்கு சென்று விட வேண்டும்!

• ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருக்க கூடியவர்! மஃரிப் நேரத்துடன் பள்ளியினுள் சென்று இஃதிகாப் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை பள்ளியில் இருக்க வேண்டும்!

💜 இஃதிகாஃப் முடிவு :

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருக்க கூடியவர்கள்! பிறை பார்த்து விட்டால் மஹ்ரிப் முடிந்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்!

• ஒரு நாள் இஃதிகாஃப் இருக்க கூடியவர்  இஃதிகாஃப் ஆரம்பம் ஆன மஹ்ரிப்யில் இருந்து மறுநாள் மஹ்ரிப் வரை பள்ளியில் இருக்க வேண்டும்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2018)

💟 இஃதிகாஃப்பின் வகைகள் :

• இஃதிகாப் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன!

1) வாஜிபானா இஃதிகாஃப் 

2) சுன்னத்தான இஃதிகாஃப் 

❤️ வாஜிபானா இஃதிகாஃப் :

• நேர்ச்சையானா இஃதிகாஃப் : யாரேனும் எனக்கு இந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் நான் இத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நேர்ச்சை செய்வது!

• அந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் அவர் மீது இஃதிகாப் வாஜிப் ஆகி விடும் அவர் கட்டாயம் இஃதிகாப் இருக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!

• அந்த நேர்ச்சை நிறைவேற வில்லை என்றால் அவர் இஃதிகாப் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! ஆனால் விருப்பம் பட்டால் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3406)

❤️ சுன்னத்தான இஃதிகாஃப் :

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்! அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2026)

• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பள்ளியில் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• இது சுன்னாஹ் தானே என்று அலட்சியமாக விட்டு விடாமல் நபி (ஸல்) அவர்கள் செய்த மற்றும் பிறருக்கு செய்ய சொல்லி கூறிய வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் என்பதை மறந்து விட கூடாது!

💟 எவ்வளவு நாட்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும் :

• இஃதிகாஃப் கடைசி 10 நாட்கள் இருப்பது சுன்னாஹ் ஆகும்! நாம் 10 நாட்களும் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2044)

• வேலை அல்லது வேறு ஏதேனும் காரணம் 10 நாட்கள் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை என்றால் நாம் சில நாட்களாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்! அல்லது குறைந்தது ஒரு நாளாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2043)

💟 பெண்களும் இஃதிகாஃப்பும் :

• இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியே!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2182)

• இன்றும் பெரும்பாலான இடங்களில் பெண்கள் இஃதிகாஃப் வீட்டில் உள்ளார்கள் ஆனால் இது தவறு ஆகும்!

• இஃதிகாஃப் பொறுத்த வரை ஆணும் சரி பெண்ணும் சரி பள்ளியில் மட்டுமே இருக்க முடியும்! அல்லாஹ் அல்குர்ஆனில் இஃதிகாஃப் பற்றி கூறும் பொழுது பள்ளி வாசலை குறிப்பிட்டு கூறி உள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு ஒரு ஸஹீஹான ஆதாரம் அல்குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ கிடையாது!

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்! 

(நூல் : பைஹகீ : 8573)

• பள்ளி வாசல் தவிர்த்து பெண்கள் வேறு எந்த இடத்திலும் வீட்டிலோ அல்லது மதரஸாவிலோ இஃதிகாஃப் இருந்தால் அது செல்லுபடி ஆகாது!

• நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் கூட பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! நபி (ஸல்) அவர்கள் இதற்கு அனுமதி கொடுத்து உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் இஃதிகாஃப் இருக்க ஒரு மனைவிக்கு அனுமதி கொடுத்தார்கள் இதை அறிந்த மற்ற மனைவிகளும் பள்ளியில் கூடாரம் அமைத்து பள்ளியில் இஃதிகாஃப் இருக்க வந்து விட்டார்கள்!

• இதை நபி (ஸல்) கண்டித்து அந்த ரமலான் மாதத்தில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வாலில் இஃதிகாஃப் இருந்தார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2033)

• இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களை கண்டித்தார்களை தவிர! வீட்டில் இஃதிகாஃப் இருந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு இது சிறந்தது என்று எதுவும் கூறவில்லை!

• இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் பொழுது பெண்கள் எப்படி வீட்டில்  இஃதிகாஃப் இருக்க முடியும்???

💟 இஃதிகாஃப்பில் செய்ய வேண்டிய அமல்கள் :

• குறிப்பிட்ட அமல் எதுவும் கிடையாது நாம் பொதுவாக அமல் செய்து கொள்ளலாம் இஃதிகாஃப் இருக்கும் பொழுது!

• 5 நேர தொழுகை பேணுதல்! 5 நேர தொழுகையின் முன் சுன்னத் பேணுதல்! சுன்னத் - நபில் தொழுதல்! இரவு தொழுகை (தராவிஹ் - தஹஜ்ஜத்) தொழுதல்!

• அல்குர்ஆன் ஓதுதல் அல்குர்ஆன் மனனம் செய்தல்! துஆ அதிகம் கேட்பது துஆக்கள் மனனம் செய்வது!

• திக்ர் செய்வது! ஹதீஸ்கள் படிப்பது ஹதீஸ்கள் மனனம் செய்வது! இவ்வாறு நாம் நம்மால் இயன்ற அமல்களை செய்ய வேண்டும்!

💟 இஃதிகாஃப் மூலம் கிடைக்கும் நன்மைகள் : 

• இஃதிகாஃப் இருந்தால் இவ்வளவு நன்மை இன்ன இன்ன சிறப்பு உள்ளது என்று வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் தான் உள்ளது!

(இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) : மஸாயில் அபுதாவூத் : 96)

1) நூல் : தபரானி - ஹாகிம் - பைஹகி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்ட செய்தி யார் ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பாரோ அவரை அல்லாஹ் கிழக்கு மற்றும் மேற்கு இடைப்பட்ட இடைவெளியை விட மூன்று மடங்கு தூரம் ஆக்குவான் என்று உள்ளது ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்! 

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 5345)

2) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்தால் இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்! நூல் : பைஹகி இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸ் ஆகும்!

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 518)

3) இப்னுமாஜாவில் : 1781 : பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் இஃதிகாஃப் இருந்தால் அவர் எல்லா பாவங்களையும் விட்டு பாதுகாப்பு பெற்றவர் மற்றும் எல்லா வித நற்செயல்கள் செய்தவர் போன்றவர் ஆவர் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் என்று இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

💟 இஃதிகாஃப் இருக்கும் போது அனுமதிக்கப்பட்டவைகள் & தடுக்கப்பட்டவைகள் :

❤️ அனுமதிக்கப்பட்டவைகள் :

1) உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் பள்ளிக்கு வந்தால் அவர்களிடம் தேவையான பேச்சு பேசி விட்டு நாம் அவர்களை பள்ளியின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைக்கலாம்!

(நூல் : புஹாரி : 2035)

2) இஃதிகாஃப் இருக்கும் நிலையில் முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்!  இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்!

3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக  மட்டும் பள்ளியை விட்டும் வெளியேறலாம்!

4) சாப்பிடுதல் , பருகுதல், தூங்குதல் போன்ற செயல்களில் இடுப்படலாம்!

5) மிகுந்த அவசிய தேவை என்றால் பள்ளியை விட்டு வெளியே வரலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2029)

💜 தடுக்கப்பட்டவைகள் :

1) வீணான காரியங்களில் ஈடுப்படுதல்!

2) அரட்டை அடித்தல், புறம் பேசுதல்! 

3) இஃதிகாஃப் முழுவதும் துக்கத்திலேயே கழித்தல்!

4) இச்சைகளை தூண்டும் காரியங்களில் ஈடுப்படுதல்!

5) நோயாளிகளை சந்திக்க செல்ல கூடாது!

6) ஜனாஸாவை பார்க்க செல்ல கூடாது!

(நூல் : அபூதாவுத் : 2473)

💟 இஃதிகாஃப்பை முறிக்கும் செயல்கள் : 

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்! 

2) ஹைலு (மாதவிடாய்) , நிபாஸ் ஏற்படுதல்!

(பஃத்வா : இமாம் மாலிக் (ரஹ்) : அல்-முவத்தா : 1 / 316)

• இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) ஏற்பட்டால் இஃதிகாப் முறியாது அவர்கள் தொடர்ந்து இஃதிகாப் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 309)

3) உடலுறவு கொள்ளுதல்!

(அல் குர்ஆன் : 2 : 187)
💞 இஸ்லாத்தில் இஃதிகாப் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• ‘ இஃதிகாஃப் ’ என்ற பொதுவான அரபி சொல்லுக்கு ‘ தங்குவது ’ என்று பொருள் ஆகும் !

• அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக அமல்கள் செய்வதை ‘ இஃதிகாஃப் ’  என்கிறோம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் "இஃதிகாஃப்" இருந்தனர்!

(நூல் : முஸ்லிம் : 2182)

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இஃதிகாஃப் பள்ளியில் இருந்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மற்றும் ஸஹாபாக்களும் இஃதிகாஃப் இருந்து வந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

💟 இஃதிகாப் இருப்பதன் நோக்கம் : 

1) 1000 மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எந்த உலக சிந்தனையும் ஏற்பட்டு வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 813)

2) உலக விசியங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்ய முடியும்!

3) உலக காரியங்களை விட்டு ஒதுக்கி பள்ளியில் இருப்பதால் உள்ளத்தை சீர் செய்ய முடியும்!

4) முழுவதும் அல்லாஹ்வை மட்டும் சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்பட முடியும்!

5) மன இச்சைகளின் தூண்டும் காரியங்களை விட்டு தூரமாகி இருக்க முடியும்!

💟 இஃதிகாப் இருப்பதற்கான முறைகள் :

❤️ நிய்யத் வைத்தல் :

• எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன!

(நூல் : ஸஹீஹ் புஹாரி  :1)

• இஃதிகாப் இருப்பதாக உள்ளத்தில் நிய்யத் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! இதற்க்கு துஆ என்று எதுவும் கிடையாது!

❤️  பள்ளிவாசலில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் : 

• இஃதிகாப் கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்! அல்லாஹ் இஃதிகாஃப் பற்றி அல் குர்ஆனில் கூறும் பொழுது பொதுவாக பள்ளி என்றே குறிப்பிட்டு கூறியுள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• அதனால் நாம் எந்த பள்ளியில் வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ஆனால் கட்டாயம் பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும்!

• பள்ளிவாசல் அல்லாத இடங்களில் இஃதிகாஃப் இருக்க கூடாது! ஏன் என்றால் இதற்கு எந்த வித ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!

❤️ நோன்பும் & இஃதிகாஃப்பும் :

• நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம்! நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது ஆகும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2042)

• இஃதிகாஃப் இருக்க நோன்பு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை நோன்பு வைக்க வில்லை என்றாலும் இஃதிகாஃப் இருக்கலாம் நோன்பு வைத்து கொண்டு இஃதிகாஃப் இருப்பது சிறந்தது!

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தி கூறி உள்ளார்கள்! நாம் நோன்பு வைத்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது ஆகும்!

💟 இஃதிகாப் ஆரம்பமும் & முடிவும் : 

• இஃதிகாப் இருக்க குறிப்பிட்ட நாள் என்று எதுவும் கிடையாது எப்போது வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• ஆனால் இஃதிகாப்பை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்!

❤️ இஃதிகாஃப் ஆரம்பம் :

• இஃதிகாஃப் ஆரம்பம் நேரம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன!

ஷேக் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

ரமலான் பிறை 20 அன்று மாலையில் இருந்து ரமலானின் ஒற்றைப்படை நாட்கள் ஆரம்பித்து விடும்!

நாம் மாலையிலயே இஃதிகாப் இருக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு அந்த ஒற்றைப்படை நாட்களில் இஃதிகாப் இருந்து லைலத்துல் கத்ர் இரவை அடையும் பாக்கியம் கிடைக்கும்!

(ஃபதாவா அல்-சியாம் : 501)

• இஸ்லாத்தில் நாளின் ஆரம்பம் மஹ்ரிப் ஆகும்! நாம் இஃதிகாஃப் இருப்பதாக இருந்தால் மஹ்ரிப்க்கு பள்ளிக்கு சென்று விட வேண்டும்!

• ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருக்க கூடியவர்! மஃரிப் நேரத்துடன் பள்ளியினுள் சென்று இஃதிகாப் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை பள்ளியில் இருக்க வேண்டும்!

💜 இஃதிகாஃப் முடிவு :

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருக்க கூடியவர்கள்! பிறை பார்த்து விட்டால் மஹ்ரிப் முடிந்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்!

• ஒரு நாள் இஃதிகாஃப் இருக்க கூடியவர்  இஃதிகாஃப் ஆரம்பம் ஆன மஹ்ரிப்யில் இருந்து மறுநாள் மஹ்ரிப் வரை பள்ளியில் இருக்க வேண்டும்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2018)

💟 இஃதிகாஃப்பின் வகைகள் :

• இஃதிகாப் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன!

1) வாஜிபானா இஃதிகாஃப் 

2) சுன்னத்தான இஃதிகாஃப் 

❤️ வாஜிபானா இஃதிகாஃப் :

• நேர்ச்சையானா இஃதிகாஃப் : யாரேனும் எனக்கு இந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் நான் இத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நேர்ச்சை செய்வது!

• அந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் அவர் மீது இஃதிகாப் வாஜிப் ஆகி விடும் அவர் கட்டாயம் இஃதிகாப் இருக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!

• அந்த நேர்ச்சை நிறைவேற வில்லை என்றால் அவர் இஃதிகாப் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! ஆனால் விருப்பம் பட்டால் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3406)

❤️ சுன்னத்தான இஃதிகாஃப் :

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்! அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2026)

• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பள்ளியில் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• இது சுன்னாஹ் தானே என்று அலட்சியமாக விட்டு விடாமல் நபி (ஸல்) அவர்கள் செய்த மற்றும் பிறருக்கு செய்ய சொல்லி கூறிய வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் என்பதை மறந்து விட கூடாது!

💟 எவ்வளவு நாட்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும் :

• இஃதிகாஃப் கடைசி 10 நாட்கள் இருப்பது சுன்னாஹ் ஆகும்! நாம் 10 நாட்களும் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2044)

• வேலை அல்லது வேறு ஏதேனும் காரணம் 10 நாட்கள் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை என்றால் நாம் சில நாட்களாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்! அல்லது குறைந்தது ஒரு நாளாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2043)

💟 பெண்களும் இஃதிகாஃப்பும் :

• இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியே!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2182)

• இன்றும் பெரும்பாலான இடங்களில் பெண்கள் இஃதிகாஃப் வீட்டில் உள்ளார்கள் ஆனால் இது தவறு ஆகும்!

• இஃதிகாஃப் பொறுத்த வரை ஆணும் சரி பெண்ணும் சரி பள்ளியில் மட்டுமே இருக்க முடியும்! அல்லாஹ் அல்குர்ஆனில் இஃதிகாஃப் பற்றி கூறும் பொழுது பள்ளி வாசலை குறிப்பிட்டு கூறி உள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு ஒரு ஸஹீஹான ஆதாரம் அல்குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ கிடையாது!

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்! 

(நூல் : பைஹகீ : 8573)

• பள்ளி வாசல் தவிர்த்து பெண்கள் வேறு எந்த இடத்திலும் வீட்டிலோ அல்லது மதரஸாவிலோ இஃதிகாஃப் இருந்தால் அது செல்லுபடி ஆகாது!

• நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் கூட பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! நபி (ஸல்) அவர்கள் இதற்கு அனுமதி கொடுத்து உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் இஃதிகாஃப் இருக்க ஒரு மனைவிக்கு அனுமதி கொடுத்தார்கள் இதை அறிந்த மற்ற மனைவிகளும் பள்ளியில் கூடாரம் அமைத்து பள்ளியில் இஃதிகாஃப் இருக்க வந்து விட்டார்கள்!

• இதை நபி (ஸல்) கண்டித்து அந்த ரமலான் மாதத்தில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வாலில் இஃதிகாஃப் இருந்தார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2033)

• இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களை கண்டித்தார்களை தவிர! வீட்டில் இஃதிகாஃப் இருந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு இது சிறந்தது என்று எதுவும் கூறவில்லை!

• இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் பொழுது பெண்கள் எப்படி வீட்டில்  இஃதிகாஃப் இருக்க முடியும்???

💟 இஃதிகாஃப்பில் செய்ய வேண்டிய அமல்கள் :

• குறிப்பிட்ட அமல் எதுவும் கிடையாது நாம் பொதுவாக அமல் செய்து கொள்ளலாம் இஃதிகாஃப் இருக்கும் பொழுது!

• 5 நேர தொழுகை பேணுதல்! 5 நேர தொழுகையின் முன் சுன்னத் பேணுதல்! சுன்னத் - நபில் தொழுதல்! இரவு தொழுகை (தராவிஹ் - தஹஜ்ஜத்) தொழுதல்!

• அல்குர்ஆன் ஓதுதல் அல்குர்ஆன் மனனம் செய்தல்! துஆ அதிகம் கேட்பது துஆக்கள் மனனம் செய்வது!

• திக்ர் செய்வது! ஹதீஸ்கள் படிப்பது ஹதீஸ்கள் மனனம் செய்வது! இவ்வாறு நாம் நம்மால் இயன்ற அமல்களை செய்ய வேண்டும்!

💟 இஃதிகாஃப் மூலம் கிடைக்கும் நன்மைகள் : 

• இஃதிகாஃப் இருந்தால் இவ்வளவு நன்மை இன்ன இன்ன சிறப்பு உள்ளது என்று வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் தான் உள்ளது!

(இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) : மஸாயில் அபுதாவூத் : 96)

1) நூல் : தபரானி - ஹாகிம் - பைஹகி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்ட செய்தி யார் ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பாரோ அவரை அல்லாஹ் கிழக்கு மற்றும் மேற்கு இடைப்பட்ட இடைவெளியை விட மூன்று மடங்கு தூரம் ஆக்குவான் என்று உள்ளது ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்! 

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 5345)

2) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்தால் இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்! நூல் : பைஹகி இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸ் ஆகும்!

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 518)

3) இப்னுமாஜாவில் : 1781 : பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் இஃதிகாஃப் இருந்தால் அவர் எல்லா பாவங்களையும் விட்டு பாதுகாப்பு பெற்றவர் மற்றும் எல்லா வித நற்செயல்கள் செய்தவர் போன்றவர் ஆவர் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் என்று இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

💟 இஃதிகாஃப் இருக்கும் போது அனுமதிக்கப்பட்டவைகள் & தடுக்கப்பட்டவைகள் :

❤️ அனுமதிக்கப்பட்டவைகள் :

1) உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் பள்ளிக்கு வந்தால் அவர்களிடம் தேவையான பேச்சு பேசி விட்டு நாம் அவர்களை பள்ளியின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைக்கலாம்!

(நூல் : புஹாரி : 2035)

2) இஃதிகாஃப் இருக்கும் நிலையில் முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்!  இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்!

3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக  மட்டும் பள்ளியை விட்டும் வெளியேறலாம்!

4) சாப்பிடுதல் , பருகுதல், தூங்குதல் போன்ற செயல்களில் இடுப்படலாம்!

5) மிகுந்த அவசிய தேவை என்றால் பள்ளியை விட்டு வெளியே வரலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2029)

💜 தடுக்கப்பட்டவைகள் :

1) வீணான காரியங்களில் ஈடுப்படுதல்!

2) அரட்டை அடித்தல், புறம் பேசுதல்! 

3) இஃதிகாஃப் முழுவதும் துக்கத்திலேயே கழித்தல்!

4) இச்சைகளை தூண்டும் காரியங்களில் ஈடுப்படுதல்!

5) நோயாளிகளை சந்திக்க செல்ல கூடாது!

6) ஜனாஸாவை பார்க்க செல்ல கூடாது!

(நூல் : அபூதாவுத் : 2473)

💟 இஃதிகாஃப்பை முறிக்கும் செயல்கள் : 

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்! 

2) ஹைலு (மாதவிடாய்) , நிபாஸ் ஏற்படுதல்!

(பஃத்வா : இமாம் மாலிக் (ரஹ்) : அல்-முவத்தா : 1 / 316)

• இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) ஏற்பட்டால் இஃதிகாப் முறியாது அவர்கள் தொடர்ந்து இஃதிகாப் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 309)

3) உடலுறவு கொள்ளுதல்!

(அல் குர்ஆன் : 2 : 187)