பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 11, 2026

இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!


🤲 இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!

ரமலானில் பலரும் இரவின் இறுதி பகுதியில் இரவு தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருகின்றோம், அந்த நேரங்களில் ஓதும் இரண்டு துஆக்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து தொகுத்துள்ளேன், வாய்ப்பு கிடைப்பவர்கள் உங்கள் பிரார்த்தனையில் ஆதாரப்பூர்வமான இந்த இரண்டு துஆக்களையும் சேர்த்து கொள்ளுங்கள். 

🎯 நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: (புஹாரி-1120)

 اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ، لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ـ أَوْ لاَ إِلَهَ غَيْرُكَ ـ 

🤲 பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஆட்சி யும் உனக்கே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது சந்திப்பு உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை. மறுமை உண்மை.

இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடு வேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.

அல்லாஹும்ம! ல(க்)கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீ ஹின்ன. வல(க்)கல் ஹம்து. ல(க்)க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த மலிக்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வல(க்)கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅது(க்)கல் ஹக்கு. வ லிகாஉக்க ஹக்குன். வ கவ்லு(க்)க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந்நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்) ஹக்குன். வஸ்ஸா அத்து ஹக்குன்.

அல்லாஹும்ம! ல(க்)க அஸ்லம்த்து, வ பி(க்)க ஆமன்த்து, வ அலை(க்)க தவக் கல்த்து, வ இலை(க்)க அனப்த்து, வ பி(க்)க காஸம்த்து, வ இலை(க்)க ஹாகம்த்து. ஃபக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த; அல்லது லா இலாஹ ஃகைருக்க.

🎯 ஸஹர் நேரத்தில் ஓதும் பாவ மன்னிப்பு துஆ (குர்ஆன் 3:16)

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ

🤲"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' 

குறிப்பு : சுவனத்திற்கு செல்பவர்களின் தன்மைகள் மற்றும் அவர்களின் அமல்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் 3-வது அத்தியாயம் 15, 16, 17 வசனங்களில் குறிப்பிடுகின்றான். அவர்கள் ஸஹர் (سْحَارِ) நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று 17-வது வசனத்திலும், அவர்கள் செய்த பாவ மன்னிப்பு பிராத்தனையை 16-வது வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 

தொகுப்பு : S. சித்தீக் M.Tech

ஸகாதுல் ஃபித்ர்

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1609

அல்குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமா?

அல்குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமா?

• நாம் பொதுவாக அனைத்து தொழுகையிலும் அல் குர்ஆனை மனனமாக ஒதுவதே சிறந்தது ஆகும் ஏன் என்றால் மனனமாக அல் குர்ஆனை ஓதுவதால் உள்ளச்சத்துடன், உடல் அமைதியுடன் தொழுவதற்கு ஏற்றதாக இருக்கும்!

• ஆனால் நம்மில் சிலருக்கு அல்-குர்ஆனிலிருந்து ஒரு சில சிறிய ஸூராக்கள் மட்டுமே மனனமாக இருக்கும் தனக்கு மனனமில்லாத சிறிய, பெரிய ஸூராக்களை ஓதி நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என்று நம்மில் பலரும் விரும்பவோம்!

• தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமாக என்றால் இதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் கிடையாது!

• பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் : இமாம் அஹ்மத் (ரஹ்) இமாம் ஸுஹ்ரி (ரஹ்) இமாம் நவவி (ரஹ்) இமாம் ஷாபிஈ (ரஹ்) போன்ற அறிஞர்கள் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாம் என்று கூறி உள்ளார்கள் : இதற்கு முக்கிய ஆதாரமாக கிழே உள்ள செய்தியை உள்ளது!

(நூல் : அல்-மஜ்மூஃ : 4 : 22)

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அவர்களது அடிமை தக்வான்  குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடாத்துபவராக இருந்தார்கள்!

(நூல் : பத்ஹ் அல்-பாரி : 2/185)

• மேலே உள்ள செய்தியை முக்கிய ஆதாரமாக கொண்டு பெரும்பாலான இமாம்கள் தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாம் என்று கூறி உள்ளார்கள்!

• நாம் நபில் அல்லது சுன்னத் தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்! மிகுந்த அவசிய தேவை ஏற்பட்டால் மட்டும் பர்ளு தொழுகையிலும் அல் குர்ஆனை பார்த்து  ஓதி தொழுது கொள்ளலாம்!

(நூல் : அல் முக்னீ : 1 / 335)

• அல்குர்ஆனை பார்த்து ஓதுவதற்கு முன்பு நமது அருகில் அல்குர்ஆனை வைக்க சற்று உயரமான நாற்காலி அல்லது வேறு ஏதேனும் வைத்து கொள்ள வேண்டும்.

• பின்பு, அல்குர்ஆனை கையில் வைத்து கொண்டு பார்த்து ஓதி தொழுகலாம் அல்லது அல்குர்ஆனை நமக்கு ஓதுவதற்கு ஏற்றால் போல் சற்று உயரமான நற்காலி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் மீது வைத்து அதை பார்த்து ஓதலாம்.

• நாம் ருக்உ மற்றும் ஸஜ்தாவிற்கு செல்லும் போது அல்குர்ஆனை அருகில் இருக்கும் நாற்காலியின் மீது வைத்து விட்டு ருக்உ - ஸஜ்தா செய்ய வேண்டும்!

• இவ்வாறு நாம் ஒவ்வொரு ரக்ஆத்திலும் பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்! அதே நேரம் நாம் அல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவுக்கு மனனம் செய்ய முயற்சி வேண்டும்!

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

(சூரத்துல் : அல் கமர் : 17)

@அல்லாஹ் போதுமானவன் 💞

லைலத்துல் கத்ர் இரவு


💞 இஸ்லாத்தில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும்! ரமலானின் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை நாட்களில் தான் மிகவும் சிறப்புமிக்க லைத்துல் கத்ர் இரவு உள்ளது! 

• லைத்துல் கத்ர் இரவு என்பது 1000 மாதங்களை விட சிறந்த இரவு ஆகும்!  இந்த இரவில் அமல் செய்வது 1000 மாதங்கள் அமல் செய்வதை விட சிறந்தது ஆகும்!

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்!

(சூரத்துல் : அல் கத்ரி : 03)

1) ஆயிரம் மாதங்கள் என்றால் சுமார் 83 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்! நாம் இந்த ஒரு இரவில் செய்யும் அமல் செய்வது சுமார் 83 ஆண்டுகள் அல்லது அதை விட அதிகம் ஆண்டுகள் அமல் செய்த நன்மைகள் நமக்கு கிடைக்கும்!

2) லைலத்துல் கத்ர் இரவில் தான் மலக்கு மார்கள் சிறப்பு வருகை தருகின்றார்கள்! மேலும் மலக்கு மார்களின் தலைவர் ஜிப்ரயில் (அலை) அவர்களும் இந்த இரவில் வருகின்றார்கள்!

3) லைத்துல் கத்ர் இரவு இன்னும் சிறந்து விளங்க மற்றொரு காரணம் அல்லாஹ் அல் குர்ஆனை முதன் முதலில் இந்த இரவில் தான் இறக்கி அருளினான்!

(சூரத்துல் : அல் பகரா : 185)

4) இந்த இரவில் அமைதி நிலவுகின்றன அதுவும் பஜ்ர் வரை!

• அல்லாஹ் இந்த இரவின் சிறப்பை பற்றி கூற சூரத்துல்  கத்ர் (97) என்று தனி சூராவே இறக்கி இதன் சிறப்பை பற்றி கூறி உள்ளான்!  இதில் இருந்து நாம் இதனுடைய மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்!

• லைத்துல் கத்ர் இரவு ரமலான் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகிய நாட்களில் ஏதோ ஒரு இரவில் அல்லாஹ் மறைத்து வைத்து உள்ளான்!

• நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் இந்த இரவு எது என்று கூறி விட்டு பின்பு மறக்கடித்து விட்டான்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2016)

• நாம் கடைசி ஒற்றைப்படை நாட்களில் உறுதியாக அமல் செய்தால் நாம் நிச்சயமாக இந்த கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள முடியும்!

💟 லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது :

• நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது என்று அறிவித்து கொடுத்தான் இதை நபி (ஸல்) ஸஹாபாக்களுக்கு கூற வந்த பொழுது!

• இரண்டு நபர்கள் சச்சரவு செய்து கொண்டு இருந்தார்கள் இதை பார்த்த நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் லைத்துல் கத்ர் இரவை பற்றி மறக்கடித்து விட்டான்! இதுவும் உங்களுக்கு நன்மையாக தான் இருக்கும் அதான் அல்லாஹ் எனக்கு மறக்கடித்து விட்டான் என்று கூறினார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 49)

• மறைக்கப்பட்ட காரணம் சில : இன்றும் நாம் பலரை பார்க்கலாம் ரமலான் மாதங்களில் கூட தொழுகை இல்லாமல் நோன்பு இல்லாமல் பலர் இருந்து கொண்டு உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் ஒரு வேலை இந்த இரவு தான் லைத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்டு கூறி இருந்தால் பெயர் அளவில் முஸ்லீம் என்று கூறி கொள்ள கூடியவர்கள் கூட அந்த ஒரு நாளில் மட்டும் நோன்பு வைத்து லைத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுவார்கள்!

• பின்பு தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் இந்த ரமலானில் அமல் செய்து வந்த முஹ்மின்களுக்கும்! பெயர் அளவில் முஸ்லீம் ஆக உள்ளவர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது???

• உறுதியான நன்மைகளை எதிர்பார்த்து ரமலானில் அதிகம் அமல்கள் செய்ய கூடியவர்களால் மட்டும் தான் இன்ஷாஅல்லாஹ் அந்த இரவை அடைந்து கொள்ள முடியும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
 
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2017)

• நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகி நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை தேட சொல்லி உள்ளார்கள்!

• நாம் நன்மையை எதிர் பார்த்து கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர்  இரவை தேடினால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக நாம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!

💟 லைலத்துல் கத்ர் 27வது இரவா : 

• அல்லாஹ் பாதுகாக்கணும் நம்முடைய முஸ்லீம் சமூகத்தின் அறியாமை பலர் ரமலானின் கடைசி ஒரு இரவு 27 யில் மட்டும் லைலதுல் கத்ர் இரவு உள்ளது என எண்ணி அன்று இரவை மட்டும் விஷேசமாக கொண்டாடி புது ஆடை அணிந்து அந்த இரவில் மட்டும் நின்று வணங்கி அமல் செய்து மற்ற நாட்களை விட்டு விடுகிறார்கள்! 

• நபி (ஸல்) அவர்களுக்கே தெளிவாக கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது என்று கூறி உள்ளார்கள்! 

• லைலத்துல் கத்ர் இரவு இந்த இரவு தான் என்று நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது போது நாம் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளை லைலத்துல் கத்ர் இரவு எண்னி அமல் செய்வது மடமையே!

• ஒரு வேலை 27 வது இரவு லைலத்துல் கத்ர் ஆக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் 27 வது இரவு லைலத்துல் கத்ர் இரவாக இல்லை என்றால் நம்மை விட பெரிய நஷ்டவாளி யாரும் இருக்க முடியாது!?

• இன்னும் சிலர் அல்லாஹ் பாதுகாக்கணும் : சூரத்துல் கத்ர் : 97 வது சூராவில் அல்லாஹ் மூன்று முறை லைலத்துல் கத்ரு என்று கூறி உள்ளான்!

• இதில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மொத்தம் 9 எழுத்து ஆகும் மூன்று முறை என்றால் 27 ஆகும் அதனால் 27 வது இரவு லைத்துல் கத்ரு இரவு இவர்களே ஒன்றை கணக்கு செய்து தீர்மானித்து கொண்டு உள்ளார்கள்
அல்லாஹ் பாதுகாக்கணும்!

• ஆனால் இவ்வாறு ஒரு கணக்கு முறை நபி (ஸல்) அவர்கள் யாருக்கும் சொல்லி கொடுக்க வில்லை! ஸஹாபாக்கள் யாரும் இவ்வாறு கூறவில்லை! தாபியின்கள் தபா தாபியின்கள் யாரும் இவ்வாறு ஒன்றை கூறவில்லை சில வழிகெட்ட கொள்கை உடையவர்கள் தான் இவ்வாறு ஒன்றை உருவாக்கி கொண்டார்கள் நவுதுபில்லாஹ்!

• நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் 21 வது இரவு 23 வது இரவு அல்லது 25 வது இரவு அல்லது 27 வது இரவு அல்லது 29 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என்று  கூறி உள்ளார்கள்!

(நூல் : அபூதாவூத் : 1178 | அஹ்மத் : 15466 | புகாரி : 2021 & 2022)

• அதனால் நாம் கடைசி ஒற்றைப்படை நாட்களில் அதை தேடினல் இன்ஷாஅல்லாஹ் அதை நாம் அடைந்து கொள்ளலாம்!

💟 லைலத்துல் கத்ர்  இரவின் ஆரம்பம் & முடிவு :

• லைலத்துல் கத்ர் இரவு ஆரம்பம் மஹ்ரிப் நேரத்தில் இருந்து பஜ்ர் நேரம் பாங்கு கூறும் முன் வரை இருக்கும்! 

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்!

(சூரத்துல் : அல் கத்ர் : 05)

💟 லைலத்துல் கத்ர்  இரவின் கூலி :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 35)

💟 லைலத்துல் கத்ர்  இரவில் செய்ய வேண்டிய அமல்கள் :

• நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்ட சிறப்பான அமல் எதுவும் செய்தது கிடையாது!

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் :

(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்! இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்! (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2024)

• நபி (ஸல்) அவர்கள் இந்த இரவில் நின்று அதிகம் தொழுது உள்ளார்கள் பிறரையும் தொழ சொல்லி உள்ளார்கள் !

• நாம் ஒற்றை படை இரவுகளில் நமது சக்திக்கு ஏற்றவாறு 2+2 ஆக அதிகம் தொழ வேண்டும்! அல்குர்ஆன் ஓதுதல் தஸ்பீக் செய்தல்! அதிகம் துஆ செய்தால்! அதிகம் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்! இது போன்ற அமல்களில் ஈடுப்பட வேண்டும்!

• நபி (ஸல்) அவர்கள் ரமலான் இறுதியில் அதிகம் பேணி செய்த அமல் இஃதிகாஃப் ஆகும்! நாம் குறைந்தது ஒரு நாளாவது பள்ளியில் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் சில ஊர்களில் அவர்களே புதியதாக லைலத்துல் கத்ர் இரவுக்கேன்று சிறப்பு தொழுகையை உருவாக்கி கொண்டு அதை தொழுகிறார்கள் ஆனால் இதற்கு எந்த கூலியும் கிடைக்காது!

• இன்னும் சில ஊர்களில் தஸ்பீக் தொழுகை தொழுகிறார்கள் இது சம்பந்தமாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கிடையாது இந்த தொழுகையும் நாம் தொழ கூடாது!

💟 மாதவிடாய் பெண்களும் லைத்துல் கத்ர் இரவும் :

• மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தொழவோ அல்லது நோன்பு வைக்கவோ அல்லது இயதிகாஃப் இருக்கவோ அனுமதி கிடையாது!

• இதனால் பெண்கள் இதை தவிர்த்து இந்த இரவில் அதிகம் அல்குர்ஆன் ஓதுதல், தஸ்பீக் செய்தல்! அதிகம் துஆ செய்தால்! அதிகம் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்! இது போன்ற அமல்களில் ஈடுப்பட வேண்டும்!

• அல்லாஹ் தான் பெண்களுக்கு மாதவிடாய் என்று ஏற்படுத்தி உள்ளான் அதனால் ஒற்றைப்படை நாட்களில் தொழ முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்! அல்லாஹ் உங்களுக்கு ஏற்ற கூலியை முழுமையாக இன்ஷாஅல்லாஹ் கொடுப்பான்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும் போது அல்லது பயணத்தில் இருக்கும் போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2996)

💟 லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ :

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

‘ அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி ’

பொருள் : அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன்! மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!

(நூல் : சுனன் திர்மிதி : 3580)

💟 லைலத்துல் கத்ர் இரவின் சில அடையாளங்கள் :

1) லைலத்துல் கத்ர் இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது! மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்!

(நூல் :  இப்னு குஸைமா : 2192)

2) லைலத்துல் கத்ர் இரவில் மழை பொழியும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2016)

3) அந்த இரவை அடுத்து வரும் காலை பொழுதில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் காணப்படும்!

(நூல் : முஸ்னது அஹ்மத் : 20249)

4) காலை சூரியன் உதிக்கும் போது வெப்பமே இல்லாமல்! (சந்திரனைப் போன்று) உதிக்கும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2175)

5) லைத்துல் கத்ர் இரவில் காற்று இல்லாமல் நிதானமாகவும் இருக்கும்!

6) அந்த இரவில் சந்திரன் (மேக மூட்டம் இல்லாத காரணமாக) பிரகாசித்துக் கொண்டிருக்கும்!

7) அந்த இரவில் குளிரும் இருக்காது வெப்பமும் இருக்காது!

8) வானத்தில் ஏறி கற்கள் விழாது!

(நூல் : அஹ்மத் : 5 / 324)

9) உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2177)

💟 லைலத்துல் கத்ர் இரவு பற்றி சில குறிப்புகள் :

1) இந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் அமல் செய்ய சொல்லி உள்ளார்கள் ஆனால் என்ன அமல் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று கூறவில்லை!

• இன்று பல ஊர்களில் விஷேஷ தொழுகை புதியதாக தொழுகையில் நிறைய சேர்த்து நபி (ஸல்) அவர்கள் காட்டிதராத அமல்களை எல்லாம் செய்கிறார்கள்! 

2) இந்த இரவை பற்றி வர கூடிய சூரா கத்ர் (97) இந்த சூராவிற்கு என்று எந்த சிறப்பும் நபி (ஸல்) அவர்கள் சொல்ல வில்லை ஆனால் இன்று பலர் இதற்கு நிறைய சிறப்புகள் கூறி இதை ஓதுகிறார்கள் இது ஒரு சூரா என்ற நோக்கில் ஓதலாம் ஆனால் இந்த சிறப்பு உள்ளது என்று ஓதினால் அது பிழையாகும்!

3) சில ஊர்களில் ஒற்றை படை நாட்களில் புது ஆடை அணிவது அல்லது 27 வது நாளில் புது ஆடை அணிவது விஷேச உணவு வீட்டை அழங்காரம் செய்வது போன்ற செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கிறார்கள் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ் போன்ற அவ்றாதுகளை சத்தமிட்ட வண்ணம் செய்தவர்களை வன்மையாகக் கண்டித்தார்கள். அத்தோடு அம்ரு இப்னு ஸலமா என்ற ஸஹாபி கூறுகின்றார்: அன்றைய தினம் சத்தமிட்ட வண்ணம் அவ்றாதுகளைக் கூறியவர்களை நகர்வான் என்ற இடத்தில் கவாரிஜ்களுடன் இருப்பதைக் கண்டேன்.

(அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹா என்ற புத்தகத்தில் பதிவாகியுள்ளது.)

@அல்லாஹ் போதுமானவன் 💞

இஃதிகாப்


💞 இஸ்லாத்தில் இஃதிகாப் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• ‘ இஃதிகாஃப் ’ என்ற பொதுவான அரபி சொல்லுக்கு ‘ தங்குவது ’ என்று பொருள் ஆகும் !

• அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக அமல்கள் செய்வதை ‘ இஃதிகாஃப் ’  என்கிறோம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் "இஃதிகாஃப்" இருந்தனர்!

(நூல் : முஸ்லிம் : 2182)

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இஃதிகாஃப் பள்ளியில் இருந்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மற்றும் ஸஹாபாக்களும் இஃதிகாஃப் இருந்து வந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

💟 இஃதிகாப் இருப்பதன் நோக்கம் : 

1) 1000 மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எந்த உலக சிந்தனையும் ஏற்பட்டு வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 813)

2) உலக விசியங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்ய முடியும்!

3) உலக காரியங்களை விட்டு ஒதுக்கி பள்ளியில் இருப்பதால் உள்ளத்தை சீர் செய்ய முடியும்!

4) முழுவதும் அல்லாஹ்வை மட்டும் சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்பட முடியும்!

5) மன இச்சைகளின் தூண்டும் காரியங்களை விட்டு தூரமாகி இருக்க முடியும்!

💟 இஃதிகாப் இருப்பதற்கான முறைகள் :

❤️ நிய்யத் வைத்தல் :

• எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன!

(நூல் : ஸஹீஹ் புஹாரி  :1)

• இஃதிகாப் இருப்பதாக உள்ளத்தில் நிய்யத் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! இதற்க்கு துஆ என்று எதுவும் கிடையாது!

❤️  பள்ளிவாசலில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் : 

• இஃதிகாப் கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்! அல்லாஹ் இஃதிகாஃப் பற்றி அல் குர்ஆனில் கூறும் பொழுது பொதுவாக பள்ளி என்றே குறிப்பிட்டு கூறியுள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• அதனால் நாம் எந்த பள்ளியில் வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ஆனால் கட்டாயம் பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும்!

• பள்ளிவாசல் அல்லாத இடங்களில் இஃதிகாஃப் இருக்க கூடாது! ஏன் என்றால் இதற்கு எந்த வித ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!

❤️ நோன்பும் & இஃதிகாஃப்பும் :

• நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம்! நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது ஆகும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2042)

• இஃதிகாஃப் இருக்க நோன்பு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை நோன்பு வைக்க வில்லை என்றாலும் இஃதிகாஃப் இருக்கலாம் நோன்பு வைத்து கொண்டு இஃதிகாஃப் இருப்பது சிறந்தது!

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தி கூறி உள்ளார்கள்! நாம் நோன்பு வைத்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது ஆகும்!

💟 இஃதிகாப் ஆரம்பமும் & முடிவும் : 

• இஃதிகாப் இருக்க குறிப்பிட்ட நாள் என்று எதுவும் கிடையாது எப்போது வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• ஆனால் இஃதிகாப்பை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்!

❤️ இஃதிகாஃப் ஆரம்பம் :

• இஃதிகாஃப் ஆரம்பம் நேரம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன!

ஷேக் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

ரமலான் பிறை 20 அன்று மாலையில் இருந்து ரமலானின் ஒற்றைப்படை நாட்கள் ஆரம்பித்து விடும்!

நாம் மாலையிலயே இஃதிகாப் இருக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு அந்த ஒற்றைப்படை நாட்களில் இஃதிகாப் இருந்து லைலத்துல் கத்ர் இரவை அடையும் பாக்கியம் கிடைக்கும்!

(ஃபதாவா அல்-சியாம் : 501)

• இஸ்லாத்தில் நாளின் ஆரம்பம் மஹ்ரிப் ஆகும்! நாம் இஃதிகாஃப் இருப்பதாக இருந்தால் மஹ்ரிப்க்கு பள்ளிக்கு சென்று விட வேண்டும்!

• ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருக்க கூடியவர்! மஃரிப் நேரத்துடன் பள்ளியினுள் சென்று இஃதிகாப் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை பள்ளியில் இருக்க வேண்டும்!

💜 இஃதிகாஃப் முடிவு :

• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருக்க கூடியவர்கள்! பிறை பார்த்து விட்டால் மஹ்ரிப் முடிந்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்!

• ஒரு நாள் இஃதிகாஃப் இருக்க கூடியவர்  இஃதிகாஃப் ஆரம்பம் ஆன மஹ்ரிப்யில் இருந்து மறுநாள் மஹ்ரிப் வரை பள்ளியில் இருக்க வேண்டும்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2018)

💟 இஃதிகாஃப்பின் வகைகள் :

• இஃதிகாப் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன!

1) வாஜிபானா இஃதிகாஃப் 

2) சுன்னத்தான இஃதிகாஃப் 

❤️ வாஜிபானா இஃதிகாஃப் :

• நேர்ச்சையானா இஃதிகாஃப் : யாரேனும் எனக்கு இந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் நான் இத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நேர்ச்சை செய்வது!

• அந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் அவர் மீது இஃதிகாப் வாஜிப் ஆகி விடும் அவர் கட்டாயம் இஃதிகாப் இருக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!

• அந்த நேர்ச்சை நிறைவேற வில்லை என்றால் அவர் இஃதிகாப் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! ஆனால் விருப்பம் பட்டால் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3406)

❤️ சுன்னத்தான இஃதிகாஃப் :

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்! அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2026)

• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பள்ளியில் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

• இது சுன்னாஹ் தானே என்று அலட்சியமாக விட்டு விடாமல் நபி (ஸல்) அவர்கள் செய்த மற்றும் பிறருக்கு செய்ய சொல்லி கூறிய வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் என்பதை மறந்து விட கூடாது!

💟 எவ்வளவு நாட்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும் :

• இஃதிகாஃப் கடைசி 10 நாட்கள் இருப்பது சுன்னாஹ் ஆகும்! நாம் 10 நாட்களும் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2044)

• வேலை அல்லது வேறு ஏதேனும் காரணம் 10 நாட்கள் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை என்றால் நாம் சில நாட்களாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்! அல்லது குறைந்தது ஒரு நாளாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2043)

💟 பெண்களும் இஃதிகாஃப்பும் :

• இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியே!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2182)

• இன்றும் பெரும்பாலான இடங்களில் பெண்கள் இஃதிகாஃப் வீட்டில் உள்ளார்கள் ஆனால் இது தவறு ஆகும்!

• இஃதிகாஃப் பொறுத்த வரை ஆணும் சரி பெண்ணும் சரி பள்ளியில் மட்டுமே இருக்க முடியும்! அல்லாஹ் அல்குர்ஆனில் இஃதிகாஃப் பற்றி கூறும் பொழுது பள்ளி வாசலை குறிப்பிட்டு கூறி உள்ளான்!

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு ஒரு ஸஹீஹான ஆதாரம் அல்குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ கிடையாது!

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்! 

(நூல் : பைஹகீ : 8573)

• பள்ளி வாசல் தவிர்த்து பெண்கள் வேறு எந்த இடத்திலும் வீட்டிலோ அல்லது மதரஸாவிலோ இஃதிகாஃப் இருந்தால் அது செல்லுபடி ஆகாது!

• நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் கூட பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! நபி (ஸல்) அவர்கள் இதற்கு அனுமதி கொடுத்து உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் இஃதிகாஃப் இருக்க ஒரு மனைவிக்கு அனுமதி கொடுத்தார்கள் இதை அறிந்த மற்ற மனைவிகளும் பள்ளியில் கூடாரம் அமைத்து பள்ளியில் இஃதிகாஃப் இருக்க வந்து விட்டார்கள்!

• இதை நபி (ஸல்) கண்டித்து அந்த ரமலான் மாதத்தில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வாலில் இஃதிகாஃப் இருந்தார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2033)

• இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களை கண்டித்தார்களை தவிர! வீட்டில் இஃதிகாஃப் இருந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு இது சிறந்தது என்று எதுவும் கூறவில்லை!

• இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் பொழுது பெண்கள் எப்படி வீட்டில்  இஃதிகாஃப் இருக்க முடியும்???

💟 இஃதிகாஃப்பில் செய்ய வேண்டிய அமல்கள் :

• குறிப்பிட்ட அமல் எதுவும் கிடையாது நாம் பொதுவாக அமல் செய்து கொள்ளலாம் இஃதிகாஃப் இருக்கும் பொழுது!

• 5 நேர தொழுகை பேணுதல்! 5 நேர தொழுகையின் முன் சுன்னத் பேணுதல்! சுன்னத் - நபில் தொழுதல்! இரவு தொழுகை (தராவிஹ் - தஹஜ்ஜத்) தொழுதல்!

• அல்குர்ஆன் ஓதுதல் அல்குர்ஆன் மனனம் செய்தல்! துஆ அதிகம் கேட்பது துஆக்கள் மனனம் செய்வது!

• திக்ர் செய்வது! ஹதீஸ்கள் படிப்பது ஹதீஸ்கள் மனனம் செய்வது! இவ்வாறு நாம் நம்மால் இயன்ற அமல்களை செய்ய வேண்டும்!

💟 இஃதிகாஃப் மூலம் கிடைக்கும் நன்மைகள் : 

• இஃதிகாஃப் இருந்தால் இவ்வளவு நன்மை இன்ன இன்ன சிறப்பு உள்ளது என்று வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் தான் உள்ளது!

(இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) : மஸாயில் அபுதாவூத் : 96)

1) நூல் : தபரானி - ஹாகிம் - பைஹகி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்ட செய்தி யார் ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பாரோ அவரை அல்லாஹ் கிழக்கு மற்றும் மேற்கு இடைப்பட்ட இடைவெளியை விட மூன்று மடங்கு தூரம் ஆக்குவான் என்று உள்ளது ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்! 

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 5345)

2) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்தால் இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்! நூல் : பைஹகி இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸ் ஆகும்!

(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 518)

3) இப்னுமாஜாவில் : 1781 : பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் இஃதிகாஃப் இருந்தால் அவர் எல்லா பாவங்களையும் விட்டு பாதுகாப்பு பெற்றவர் மற்றும் எல்லா வித நற்செயல்கள் செய்தவர் போன்றவர் ஆவர் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் என்று இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

💟 இஃதிகாஃப் இருக்கும் போது அனுமதிக்கப்பட்டவைகள் & தடுக்கப்பட்டவைகள் :

❤️ அனுமதிக்கப்பட்டவைகள் :

1) உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் பள்ளிக்கு வந்தால் அவர்களிடம் தேவையான பேச்சு பேசி விட்டு நாம் அவர்களை பள்ளியின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைக்கலாம்!

(நூல் : புஹாரி : 2035)

2) இஃதிகாஃப் இருக்கும் நிலையில் முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்!  இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்!

3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக  மட்டும் பள்ளியை விட்டும் வெளியேறலாம்!

4) சாப்பிடுதல் , பருகுதல், தூங்குதல் போன்ற செயல்களில் இடுப்படலாம்!

5) மிகுந்த அவசிய தேவை என்றால் பள்ளியை விட்டு வெளியே வரலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2029)

💜 தடுக்கப்பட்டவைகள் :

1) வீணான காரியங்களில் ஈடுப்படுதல்!

2) அரட்டை அடித்தல், புறம் பேசுதல்! 

3) இஃதிகாஃப் முழுவதும் துக்கத்திலேயே கழித்தல்!

4) இச்சைகளை தூண்டும் காரியங்களில் ஈடுப்படுதல்!

5) நோயாளிகளை சந்திக்க செல்ல கூடாது!

6) ஜனாஸாவை பார்க்க செல்ல கூடாது!

(நூல் : அபூதாவுத் : 2473)

💟 இஃதிகாஃப்பை முறிக்கும் செயல்கள் : 

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்! 

2) ஹைலு (மாதவிடாய்) , நிபாஸ் ஏற்படுதல்!

(பஃத்வா : இமாம் மாலிக் (ரஹ்) : அல்-முவத்தா : 1 / 316)

• இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) ஏற்பட்டால் இஃதிகாப் முறியாது அவர்கள் தொடர்ந்து இஃதிகாப் இருக்கலாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 309)

3) உடலுறவு கொள்ளுதல்!

(அல் குர்ஆன் : 2 : 187)

@அல்லாஹ் போதுமானவன் 💞

இமாம் அஃமஷ்


கூஃபாவின் வீதிகளில் ஒரு மனிதர் நடந்து சென்றால், அவரைப் பார்த்தவுடன் ஒரு பக்கம் மக்கள் பயப்படுவார்கள், மறுபக்கம் அவரிடமிருக்கும் அறிவிற்காக அவரைச் சூழ்ந்துகொள்வார்கள். "மங்கலான பார்வை கொண்டவர்" என்று பொருள்படும் 'அஃமஷ்' என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், ஹதீஸ் கலையில் மிகத்தெளிவான பார்வையும், அபாரமான நினைவாற்றலும் கொண்ட ஒரு மாமேதையைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் கூஃபா நகரம் ஹதீஸ் கலையின் ஒரு முக்கியக் கேந்திரமாகத் திகழ்ந்தது. அந்த நகரின் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்களில் மிக முக்கியமான ஒரு கண்ணியாகத் திகழ்ந்தவர் இமாம் அஃமஷ். இவர் ஒரு பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுப் பெயர்: ஸுலைமான் இப்னு மிஹ்ரான் அல்-அஸதீ.
சிறப்புப் பெயர்: அபு முஹம்மத் (ஆனால் 'அல்-அஃமஷ்' என்ற பெயராலேயே உலகம் இவரை அறியும்).
காலம்: ஹிஜ்ரி 61-ல் (கர்பலா யுத்தம் நடந்த அதே ஆண்டில்) பிறந்தார். ஹிஜ்ரி 148-ல் தனது 87-வது வயதில் மரணமடைந்தார்.
 வாழ்ந்த இடம்: ஈராக்கின் கூஃபா நகரம்.

ஹதீஸ் கலை வல்லுநர்களான இமாம் ஷுஃபா, ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரீ, ஸுஃப்யான் இப்னு உயைனா போன்ற ஜாம்பவான்கள் இவருடைய மாணவர்கள் என்றால், இவருடைய தரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இமாம் தஹபீ (ரஹ்) இவரைப் பற்றிச் சொல்லும்போது, "இவர் ஹதீஸ் கலையின் 'ஷைக்' (ஆசான்) மற்றும் இஸ்லாத்தின் அறிஞர்களில் ஒருவர்" என்று புகழ்கிறார். இமாம் அஃமஷ் அவர்கள் சுமார் 4,000 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். குறிப்பாக இப்ராஹீம் அந்-நகஈ (ரஹ்) போன்ற தாபியீன்களிடம் இவர் கற்ற ஹதீஸ்கள் ஹதீஸ் கலையில் மிகவும் வலுவானவையாகக் கருதப்படுகின்றன.

இவர் வெறும் ஹதீஸ் அறிஞர் மட்டுமல்ல, ஒரு மாபெரும் குர்ஆன் ஓதுபவரும் (காரீ) கூட. 14 வகையான ஓதல் முறைகளில் இவருடைய ஓதல் முறையும் ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. குர்ஆன் வசனங்களின் நுணுக்கங்களையும், அரபு மொழியின் இலக்கணங்களையும் ஹதீஸ்களோடு ஒப்பிட்டு விளக்குவதில் இவர் கில்லாடி.

இமாம் அஃமஷ் அவர்கள் மிகவும் வறுமையான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அதே சமயம் அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வும், சில நேரங்களில் மிகவும் கண்டிப்பான சுபாவமும் கொண்டவர். தகுதியற்றவர்கள் ஹதீஸ் கேட்க வந்தால் அவர்களைத் துரத்திவிடுவார்!
ஒருமுறை ஒரு மாணவர் அவரிடம் வந்து ஹதீஸ் கேட்க, இமாம் அஃமஷ் அமைதியாக இருந்தார். அந்த மாணவர் பிடிவாதமாகக் கேட்கவே, அஃமஷ் அங்கிருந்த ஒரு கழுதையைப் பார்த்து, "இதோ பார், இவர் என்னிடம் ஹதீஸ் கேட்கிறார், நான் இவருக்குச் சொல்ல வேண்டுமா?" என்று நகைச்சுவையாகக் கேட்டாராம்.

அவர் தன் மனைவியோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு குருடரைச் சந்தித்தார். அந்த குருடரிடம், "என்னைப் பிடித்துக்கொள், நாம் மஸ்ஜிதுக்குச் செல்வோம். நான் உனக்கு வழிகாட்டியாக இருக்கிறேன், நீ எனக்குக் கைத்தடியாக இரு" என்றார். வழியில் மக்கள் பார்த்தால், "பார், ஒரு குருடர் மங்கலான பார்வை கொண்டவனுக்கு வழிகாட்டுகிறார்" என்று கிண்டல் செய்வார்கள், அது நமக்கு நன்மையாக அமையும் என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

அன்றைய கலிஃபாக்கள் இவருக்குப் பரிசுகள் கொடுத்தால் அதை ஏற்க மறுத்துவிடுவார். ஒருமுறை கலிஃபா ஒரு கடிதம் எழுதி, அதில் உஸ்மான் (ரலி) அவர்களின் சிறப்புகளைப் பற்றிய ஹதீஸ்களை எழுதித் தருமாறு கேட்டார். இமாம் அஃமஷ் அந்தக் கடிதத்தை வாங்கித் தன் ஆடு தின்னும்படி போட்டுவிட்டு, "உஸ்மான் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு, அவருக்கு என் சான்றிதழ் தேவையில்லை" என்று துணிச்சலாகப் பதில் சொன்னார்.

உடல்ரீதியான பலவீனங்கள் (மங்கலான பார்வை) ஒருவரின் அறிவுத் தேடலுக்குத் தடையாக இருக்க முடியாது என்பதற்கு இமாம் அஃமஷ் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவருடைய கண்கள் மங்கலாக இருந்திருக்கலாம், ஆனால் அவருடைய நினைவாற்றலும், ஹதீஸ்களைப் பாதுகாத்த நேர்மையும் இன்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டும் ஒளியாகத் திகழ்கின்றன. "அறிவு என்பது ஒரு ஒளியாகும், அதை அல்லாஹ் நேர்மையானவர்களின் இதயங்களில் போடுகிறான்" என்ற கூற்றுக்கு இவரே சாட்சி.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AlAmash #Kufa #HadithScholar #TabiAlTabiin #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, March 10, 2026

உஸாமா இப்னு ஸைத் (ரலி).


இஸ்லாமிய வரலாறு முதியவர்களால் ஆனது என்று நினைத்துவிடக்கூடாது. அது இளைஞர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும் செதுக்கப்பட்டது. ஒரு 18 வயது இளைஞனைப் பார்த்து, "இவர் என் உம்மத்தின் ஆகப்பெரும் தளபதி" என்று அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் சான்றளித்தார்கள் என்றால், அந்த இளைஞனின் ஈமானும் திறமையும் எந்த அளவுக்கு இருந்திருக்கும்? அவர்தான் 'ஹிப்பு ரசூலுல்லாஹ்' (நபிகளாரின் நேசர்) என்று ஸஹாபாக்களால் அன்போடு அழைக்கப்பட்ட உஸாமா இப்னு ஸைத் (ரலி).

உஸாமா (ரலி) அவர்களின் பெற்றோர் யார் தெரியுமா? அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான மாவீரர் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) மற்றும் நபிகளாரைத் தன் சொந்தத் தாயைப் போலக் கவனித்துக் கொண்ட செவிலித்தாய் உம்மு அய்மன் (ரலி) ஆகியோரின் செல்வப் புதல்வன்தான் உஸாமா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஸாமாவைத் தம் சொந்தப் பேரனைப் போலவே நேசித்தார்கள். ஒருமுறை அண்ணலார், தன் ஒரு தொடையில் ஹஸன் (ரலி) அவர்களையும், மறுகாலில் சிறுவன் உஸாமாவையும் உட்கார வைத்துக்கொண்டு, "யா அல்லாஹ்! நான் இவர்கள் இருவரையும் நேசிக்கிறேன்; நீயும் இவர்களை நேசிப்பாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள். அந்த அளவிற்கு நபிகளாரின் இல்லத்தில் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் உஸாமா.

உஸாமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கும் ஒரு மாபெரும் பாடமாக அமைந்துள்ளது. ஜுஹைனா கோத்திரத்தாருக்கு எதிரான ஒரு போர்க்களத்தில், ஒரு எதிரியை உஸாமா (ரலி) வீழ்த்த முற்பட்டபோது, அந்த எதிரி மரண பயத்தில் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறினார். ஆனால் உஸாமா (ரலி), 'இவன் உயிருக்குப் பயந்துதான் கலிமா சொல்கிறான்' என்று நினைத்து அவனைக் கொன்றுவிட்டார்.
இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளுக்குச் சென்றதும், அண்ணலாரின் முகம் கோபத்தால் சிவந்தது. உஸாமாவை அழைத்துக் கேட்டார்கள்: "கலிமா சொன்ன ஒருவனையா நீர் கொன்றீர்? நாளை மறுமையில் அந்தக் கலிமா உமக்கு எதிராக வந்தால் நீர் என்ன செய்வீர்?" உஸாமா (ரலி) தயக்கத்துடன், "இறைத்தூதரே! அவன் வாளுக்குப் பயந்துதான் அப்படிச் சொன்னான்" என்றார். உடனே அண்ணலார், "உஸாமாவே! அவன் உள்ளத்தில்தான் கலிமா இருந்ததா இல்லையா என்பதை அறிய, அவனது உள்ளத்தை நீர் பிளந்து பார்த்தீரா?" என்று மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள். "இன்றுதான் நான் இஸ்லாத்தையே ஏற்றிருக்கக் கூடாதா" என்று உஸாமா (ரலி) கதறி அழும் அளவுக்கு நபிகளாரின் அந்த வார்த்தைகள் அவரைத் தாக்கின. மனிதர்களின் உள்ளங்களை எடைபோட யாருக்கும் உரிமையில்லை என்ற மாபெரும் சட்டத்தை இஸ்லாமிய உலகிற்கு அந்தச் சம்பவம் உணர்த்தியது.

ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் தறுவாய். ரோமப் பேரரசை (பைஸாந்தியர்களை) எதிர்கொள்ள ஒரு மாபெரும் படையை அண்ணலார் தயார் செய்தார்கள். அந்தப் படைக்குத் தளபதியாக யாரை நியமித்தார்கள் தெரியுமா? மூத்த ஸஹாபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரைக் கொண்ட அந்தப் பிரம்மாண்டப் படைக்கு, வெறும் 18 வயது நிரம்பிய உஸாமா (ரலி) அவர்களைத் தலைமைத் தளபதியாக நியமித்தார்கள்! இதைப் பார்த்த சிலருக்கு ஆச்சரியம், 'இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பா?' என்று பேசத் தொடங்கினார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அண்ணலார் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி முழங்கினார்கள்: "இன்று உஸாமாவின் தலைமையை நீங்கள் விமர்சித்தால், இதற்கு முன் இவருடைய தந்தை (ஸைத்)யின் தலைமையையும் நீங்கள் விமர்சித்தவர்களாவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய தந்தை தலைமைக்கு எப்படித் தகுதியானவரோ, அதேபோல என் உஸாமாவும் தகுதியானவர்தான்!"

உஸாமா (ரலி) படையுடன் புறப்படுவதற்குள் அண்ணலார் (ஸல்) அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். மதீனாவெங்கும் பெரும் சோகம், பல இடங்களில் குழப்பங்கள் (ரித்தாப் போர்கள்) முளைத்தன. இந்த நேரத்தில் படையை அனுப்ப வேண்டாம் என்று பலர் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். ஆனால் முதல் கலீஃபாவான அபூபக்கர் (ரலி), "அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகளார் கட்டிய கொடியை நான் ஒருபோதும் அவிழ்க்க மாட்டேன்!" என்று உறுதியாகக் கூறி உஸாமாவின் படையை அனுப்பி வைத்தார்கள்.
படை புறப்படும்போது ஒரு சிலிர்ப்பான காட்சி அரங்கேறியது. 18 வயது தளபதியான உஸாமா (ரலி) குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்க, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவான முதியவர் அபூபக்கர் (ரலி) அந்தச் சிறுவனின் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி, தரையில் நடந்தவாறு வழியனுப்பி வைத்தார்கள்! உஸாமா கூச்சத்துடன், "கலீஃபா அவர்களே! நீங்கள் ஏறுங்கள், நான் இறங்கி நடக்கிறேன்" என்றார். ஆனால் அபூபக்கர் (ரலி), "இல்லை! என் கால்கள் அல்லாஹ்வின் பாதையில் சிறிது தூரம் புழுதிபடட்டும்" என்று கூறி, அந்தச் சிறு வயது தளபதிக்கு மாபெரும் மரியாதையைச் செய்தார்கள்.
நபிகளாரின் நம்பிக்கையை நூறு சதவீதம் காப்பாற்றி, 40 நாட்களில் ரோமானியர்களுக்கு ஒரு மாபெரும் சிம்மசொப்பனமாக விளங்கி, வெற்றி வாகை சூடித் திரும்பினார் உஸாமா (ரலி).

இன்று நம் 18 வயது இளைஞர்களின் லட்சியங்கள் எதை நோக்கிப் பயணிக்கின்றன? வீடியோ கேம்ஸ்களிலும், வீணான கேளிக்கைகளிலும் நம் சமூகத்தின் இளைய தலைமுறை மூழ்கிக் கிடக்கும்போது, 18 வயதில் ஒரு மாபெரும் தேசத்தை எதிர்கொண்ட அந்த ஈமானியச் சிங்கத்தின் வரலாறு, என்றென்றும் நம் இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் முன்மாதிரியாகும்!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #UsamaIbnZayd #YoungCommander #YouthInIslam #AbdullahIbnuNaseerWriteups

Monday, March 9, 2026

இப்னுல் கைய்யிம்


இஸ்லாமிய வரலாற்றில் ஃபிக்ஹ், ஹதீஸ், தஃப்ஸீர் என பல துறைகளில் ஜாம்பவான்கள் உண்டு. ஆனால், "மனித மனம் ஏன் பாவம் செய்கிறது? மனக்கவலைகளை எப்படிப் போக்குவது? உள்ளத்தை எப்படித் தூய்மைப்படுத்துவது?" என்று மனித இதயத்தை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைப் போலக் கையாண்டவர் இப்னுல் கைய்யிம் அவர்கள். அதனால்தான் அவரை "தபீபுல் குலூப்" (இதயங்களின் மருத்துவர்) என்று அழைப்பார்கள்.

முழுப்பெயர்: முஹம்மது பின் அபீ பக்ர் பின் அய்யூப் அஸ்-ஸுரயீ
பிறப்பு: ஹிஜ்ரி 691 (கி.பி. 1292) - டமாஸ்கஸ், சிரியா.
இறப்பு: ஹிஜ்ரி 751 (தனது 60-வது வயதில் காலமானார்).

இவருடைய உண்மையான பெயர் முஹம்மது. தமாஸ்கஸ் நகரில் 'அல்-ஜவ்ஸிய்யா' என்றொரு புகழ்பெற்ற மார்க்கப் பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியின் நிர்வாகியாக இருந்தவர் இவருடைய தந்தை. அரபியில் நிர்வாகிக்கு 'கைய்யிம்' என்று பெயர். எனவே, "ஜவ்ஸிய்யா பள்ளியின் நிர்வாகியின் மகன்" என்பதைத் தான் உலகம் 'இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யா' என்று அழைக்கிறது.

ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றாலே நாம் பல புத்தகங்களைப் புரட்டுகிறோம். ஆனால், இப்னுல் கைய்யிம் தனது மாபெரும் படைப்பான 'ஸாத் அல்-மஆத்' என்ற நூலை எப்படி எழுதினார் தெரியுமா? அவர் ஹஜ்ஜுக்காகப் பயணம் சென்றுகொண்டிருந்தபோது, ஒட்டகத்தின் மீது அமர்ந்தபடியே, கையில் எந்த ஒரு குறிப்புப் புத்தகமும் இல்லாமல், முற்றுமுழுதாகத் தனது நினைவாற்றலிலிருந்தே அந்தப் பிரம்மாண்டமான நூலை எழுதினார்! நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, மருத்துவம், சட்டக்கலை என அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நூல் இன்று 5 முதல் 6 பெரிய பாகங்களாக அச்சிடப்படுகிறது.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (ஸனது) வெளிப்படைக்குப் பார்ப்பதற்கு மிகச் சரியாக இருக்கும். ஆனால், அதில் மிக நுட்பமான, மறைமுகமான ஒரு குறை (இல்லத்) ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடிப்பது சாதாரண அறிஞர்களால் முடியாது. ஹதீஸ் கலையில் இதுதான் மிகக் கடினமான துறை. இமாம் இப்னு கைய்யிம் இந்தத் துறையில் ஒரு 'மாஸ்டராக' திகழ்ந்தார். அறிவிப்பாளர்களின் வரலாற்றையும், அவர்களின் நம்பகத்தன்மையையும் மிகத் துல்லியமாக அறிந்திருந்ததால், இட்டுக்கட்டப்பட்ட பல ஹதீஸ்களை அவர் ஆணித்தரமாகத் தோலுரித்துக் காட்டினார்.

ஹதீஸ் கலையில் அவர் எழுதிய மிக முக்கியமான, ஆச்சரியமூட்டும் நூல் 'அல்-மனார் அல்-முனீஃப் ஃபிஸ் ஸஹீஹ் வத் லயீஃப்'. பொதுவாக ஒரு ஹதீஸ் பொய்யானதா என்று பார்க்க அதன் அறிவிப்பாளர் தொடரைத்தான் ஆராய்வார்கள். ஆனால், இந்த நூலில் இப்னு கைய்யிம் அவர்கள், "அறிவிப்பாளர் தொடரைப் பார்க்காமலேயே, அந்த ஹதீஸின் வாசகத்தை வைத்தே இது ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னதில்லை என்று எப்படிப் பகுத்தறிவது?" என்பதற்கான விதிகளை வகுத்துக் கொடுத்தார். இது ஹதீஸ் விமர்சனக் கலையில் ஒரு மாபெரும் மைல்கல்!

ஹதீஸ் தொகுப்புகளில் மிக முக்கியமானதான இமாம் அபூதாவூதின் 'சுனன் அபூதாவூத்' நூலுக்கு, முந்தைய அறிஞர்கள் எழுதிய சுருக்கங்களை எல்லாம் விரிவுபடுத்தி, அதில் உள்ள ஒவ்வொரு ஹதீஸின் தரத்தையும், அறிவிப்பாளர்களின் நிலையையும், அதிலிருந்து பெறப்படும் சட்டங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து அவர் எழுதிய நூல்தான் 'தஹ்தீப் சுனன் அபீதாவூத்'. ஹதீஸ் கலையில் அவருடைய ஆளுமைக்கு இது ஒரு மிகப்பெரிய சான்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. அவற்றில் எவை ஆதாரப்பூர்வமானவை, எவை பலவீனமானவை என்பதைத் தரம் பிரித்து, ஸலவாத் சொல்வதற்கான சட்டங்களை விளக்கி அவர் எழுதிய பிரத்தியேக ஹதீஸ் நூல்தான் 'ஜலாஉல் அஃப்ஹாம்'.

ஒரு முறை அவரிடம் ஒரு மனிதர் வந்து, "நான் ஒரு கொடிய பாவத்தில் சிக்கிக்கொண்டேன், என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை, எனக்கு என்ன தீர்வு?" என்று ஒரு கடிதம் எழுதினார். அந்த ஒற்றைக் கேள்விக்கு இப்னுல் கைய்யிம் எழுதிய பதில்தான், இன்று உலகப் புகழ்பெற்ற 'அத்-தாஉ வத்-தவாஉ' அல்லது 'அல்-ஜவாப் அல்-காஃபி' என்ற புத்தகம்.
காதல், இச்சை, மனச்சோர்வு, பாவத்தின் உளவியல் ஆகியவற்றை அவர் அதில் அலசியிருக்கும் விதத்தைப் படித்தால், நவீன கால மனநல மருத்துவர்களே மிரண்டு போவார்கள்.

வரலாற்றாசிரியரான இப்னு கஸீர் (ரஹ்) இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவர் புத்தகங்களைச் சேகரிப்பதில் பேரார்வம் கொண்டவர். அவரிடம் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை" என்கிறார். அவர் மரணித்த பிறகு, அவருடைய நூலகத்தில் இருந்த புத்தகங்களை அவரின் பிள்ளைகள் பல வருடங்களாக விற்பனை செய்தார்கள் என்றால், அந்த நூலகத்தின் பிரம்மாண்டத்தை எண்ணிப் பாருங்கள்!

ஹதீஸ் கலை என்பது வெறும் அறிவிப்பாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்வதாக மட்டுமே வைக்காமல் அந்த ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை உரசிப் பார்த்து, அதிலிருந்து சட்டங்களையும், இதயத்தைத் தூய்மைப்படுத்தும் வழிகளையும் பிரித்தெடுப்பதுதான் உண்மையான ஞானம். இவருடைய ஆசான் இப்னு தைமிய்யா அவர்கள் விதைத்த விதையை, தன்னுடைய கூர்மையான ஹதீஸ் கலை அறிவின் மூலமும், தன் ஈடு இணையற்ற எழுத்துக்களின் மூலமும் ஒரு மாபெரும் விருட்சமாக வளர்த்தெடுத்த பெருமை இமாம் இப்னு கைய்யிம் அவர்களையே சாரும்!
சட்டங்களை மட்டும் சொல்லித் தருபவர்கள் மத்தியில், அந்தச் சட்டங்களை எப்படி நேசித்துச் செயல்படுத்துவது என்று இதயங்களுக்குப் பயிற்சி அளித்தவர் இப்னுல் கைய்யிம். இன்று பல இளைஞர்கள் மனச்சோர்விலிருந்து விடுபட இவருடைய மேற்கோள்களையே நாடிச் செல்கின்றனர்.

- Abdullah Ibnu Naseer 

#History #IbnAlQayyim #IslamicPsychology #ZadAlMaad #Damascus #ScholarOfHearts #Facts

Sunday, March 8, 2026

பரா இப்னு ஆஸிப் (ரலி).


இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. போர்க்களத்தில் பெரியோர்கள் வாளேந்தி நின்றபோது, "நானும் போர்க்களம் செல்வேன், என் உயிரையும் இஸ்லாத்திற்காகக் கொடுப்பேன்" என்று அடம் பிடித்த சிறுவர்கள் பலர். அப்படி நபிகளாரால் சிறுவயது என்று திருப்பி அனுப்பப்பட்டபோதும், சளைக்காமல் அடுத்தடுத்த போர்களில் மாவீரனாகவும், மாபெரும் மார்க்க அறிஞராகவும் உருவெடுத்தவர்தான் பரா இப்னு ஆஸிப் (ரலி).

பரா இப்னு ஆஸிப் (ரலி) மதீனாவைச் சேர்ந்த ஒரு அன்சாரித் தோழர். இஸ்லாமிய வரலாற்றின் முதல் மாபெரும் போரான பத்ருப் போர் அறிவிக்கப்பட்டபோது, அவருக்கும் அவருடைய நண்பர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் வெறும் 14 வயதுதான் ஆகியிருந்தது. எப்படியாவது நபிகளாரோடு சேர்ந்து போர்க்களத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில், தங்களைப் பெரியவர்கள் போலக் காட்டிக்கொண்டு நபிகளாரின் முன்னே வந்து நின்றார்கள். ஆனால் அவர்கள் சிறுவர்கள் என்பதைக் கண்டறிந்த நபிகளார், அவர்களைப் போர்க்களத்திற்குச் செல்ல அனுமதிக்காமல் மதீனாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

தங்களால் போர்க்களத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று அந்தச் சிறுவனின் கண்களில் வழிந்த கண்ணீர், இஸ்லாத்தின் மீதான அவருடைய அளப்பரிய காதலைக் காட்டியது. ஆனால் அந்த ஏக்கம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து நடந்த உஹத், அகழ்ப்போர் (கந்தக்), ஹுதைபிய்யா என அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களோடு சுமார் 15 போர்க்களங்களில் ஒரு மாவீரனாக வாளேந்தி நின்றார் பரா (ரலி).

பரா இப்னு ஆஸிப் (ரலி) என்ற பெயரைச் சொன்னவுடன், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உடனே நினைவுக்கு வருவது ஒரு மிக முக்கியமான ஹதீஸ்தான். ஒரு மனிதன் மரணிக்கும் தருவாயில் அவனுடைய உயிர் எப்படிப் பிரிகிறது, கப்ருடைய (மண்ணறை) வாழ்க்கை எப்படி இருக்கும், முஃமின்களுக்கும் காஃபிர்களுக்கும் மலக்குகள் எப்படி வருவார்கள், முன்கர் - நக்கீர் வானவர்களின் கேள்விகள் எப்படி இருக்கும் என்று மரணத்திற்குப் பிந்தைய 'பர்ஸக்' வாழ்க்கையை மிகத் துல்லியமாக நபிகளார் சொல்லச் சொல்ல உலகிற்கு அறிவித்தவர் இவர்தான்!

அந்த நீண்ட ஹதீஸை நாம் படிக்கும்போதெல்லாம் மரணத்தின் பயமும், மறுமையின் சிந்தனையும் நம் கண்களில் கண்ணீரைக் வரவழைக்கும். அந்த அளவிற்குப் பெரும் மார்க்க ஞானியாக அவர் திகழ்ந்தார். சுமார் 305 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளார். மேலும், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோற்றத்தை மிக அழகாக வர்ணித்த ஸஹாபாக்களில் இவரும் ஒருவர். "நபிகளாரை ஒரு சிவப்பு நிற அங்கியில் பார்த்தேன், அவர்களை விட அழகான ஒருவரை என் வாழ்வில் நான் கண்டதே இல்லை" என்று சிலிர்ப்போடு அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் ஹதீஸ் நூல்களில் மிளிர்கின்றன.

அவர் வெறும் மார்க்க அறிஞராகவும், ஹதீஸ் அறிவிப்பாளராகவும் மட்டும் சுருங்கிவிடவில்லை. கலீஃபா உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இவருடைய வீர வாள் பல தேசங்களை வீழ்த்தியது. ஈரானின் ரய்ய், கஸ்வீன், மற்றும் அப்ஹர் போன்ற மாபெரும் பாரசீக நகரங்களை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவந்த மாபெரும் படைத்தளபதி இவர்தான். எந்தச் சிறுவனைப் பத்ருப் போர்க்களத்தில் அண்ணலார் திருப்பி அனுப்பினாரோ, அதே சிறுவன் பிற்காலத்தில் மாபெரும் தேசங்களை வெல்லும் தளபதியாக உயர்ந்தான்!

தன்னுடைய முதுமைக் காலத்தில் பார்வையை இழந்த பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள், ஈராக்கின் கூஃபா நகரில் வசித்து வந்தார்கள். மார்க்க அறிவைப் போதிப்பதிலேயே தன் இறுதி காலத்தைக் கழித்து, ஹிஜ்ரி 71 அல்லது 72-ஆம் ஆண்டில் அங்கேயே தனது இறுதி மூச்சை நீத்தார்.
சிறுவயதில் மார்க்கத்திற்காகத் துடித்த துடிப்பு, வாலிபத்தில் போர்க்களப் பங்களிப்பு, முதுமையில் மார்க்கக் கல்வியைப் போதித்த அர்ப்பணிப்பு என ஒரு முழுமையான இஸ்லாமிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் பரா இப்னு ஆஸிப் (ரலி).

இன்று நமது இளைஞர்களின் இளமைப் பருவம் எதை நோக்கிப் பயணிக்கிறது? வீணான கேளிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நம் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறோமா? இளமையின் முழு சக்தியையும் மார்க்கத்திற்காக அர்ப்பணித்த அந்த மாவீரரின் ஈமானிய உணர்வை அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #BaraIbnAzib #HadithOfBarzakh #YouthInIslam #AbdullahIbnuNaseerWriteups

இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).


ஹதீஸ் கலையில், எது உண்மையான ஹதீஸ்? என்று தேடிக் கண்டுபிடித்த இமாம்களைப் பற்றிப் பார்த்து வருகிறோம். ஆனால், எதெல்லாம் பொய்யான ஹதீஸ்? என்று சல்லடை போட்டுச் சலித்தெடுத்து, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளை இஸ்லாத்திலிருந்து கூட்டிப் பெருக்கி வெளியேற்றிய ஒரு மாபெரும் துப்புரவுப் பணியைச் செய்தவர்தான் இமாம் அபுல்-ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).

முழுப் பெயர்: அப்துர் ரஹ்மான் இப்னு அபில் ஹஸன் அலி இப்னு முஹம்மத்.
சிறப்புப் பெயர்: அபுல்-ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸீ (அவருடைய மூதாதையர் வீட்டில் ஒரு பெரிய 'ஜவ்ஸியா' மரம் இருந்ததால் இப்பெயர் வந்தது).
காலம்: ஹிஜ்ரி 510-ல் ஈராக்கின் பகுதாத் நகரில் பிறந்து, ஹிஜ்ரி 597-ல் அங்கேயே மரணமடைந்தார். முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களின் வழித்தோன்றல் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 

ஹதீஸ் பெயரால் பல பொய்யான செய்திகள் உலவ ஆரம்பித்த காலத்தில், இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்தான் அல்-மவ்ழூஆத்துல் குப்ரா என்ற மாபெரும் பிரம்மாண்டமான நூல்.
எந்தெந்த ஹதீஸ்கள் எல்லாம் பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு இதில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தார். ஹதீஸ் கலையில் அவர் எந்த அளவுக்குக் கடுமையானவர் என்றால், சில பலவீனமான (ழயீஃப்) ஹதீஸ்களைக் கூட இட்டுக்கட்டப்பட்டவை என்ற பட்டியலில் சேர்த்துவிட்டார் என்று பிற்கால அறிஞர்கள் விமர்சிக்கும் அளவுக்கு, சுன்னாவைப் பாதுகாப்பதில் கறாராக இருந்தார்.

அவர் எழுத்தாளராக மட்டுமிருக்கவில்லை. பக்தாத் நகரமே வியந்து பார்க்கும் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவாளர். இவருடைய மார்க்கச் சபைகளில் ஒரு லட்சம் பேர் வரை கூடக் கலந்துகொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்! அன்றைய கலீஃபாக்களும், அமைச்சர்களும் இவருடைய சபைக்கு வந்து சாதாரண மக்களைப் போலத் தரையில் அமர்ந்து அழுவார்கள். 

இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எழுதாத துறைகளே இஸ்லாத்தில் இல்லை எனலாம். ஹதீஸ், தஃப்ஸீர், வரலாறு, மருத்துவம், தத்துவம் என சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவர் வாழ்ந்த நாட்களையும், அவர் எழுதிய புத்தகங்களின் பக்கங்களையும் கணக்கிட்டுப் பார்த்த இமாம் இப்னு ரஜப் அவர்கள் வியந்துபோய்க் கூறுகிறார், இப்னுல் ஜவ்ஸீ தன் வாழ்நாளில் தினமும் குறைந்தது 4 நோட்டுப் புத்தகங்கள் (கையேடுகள்) அளவாவது எழுதியிருக்க வேண்டும்; இல்லையென்றால் இவ்வளவு நூல்களை எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை!" ஷைத்தான் மனிதனை எப்படித் தடம் புரளச் செய்கிறான் என்பதை விளக்கும் தல்பீஸ் இப்லீஸ் (ஷைத்தானின் சூழ்ச்சிகள்) மற்றும் நல்லடியார்களின் வரலாற்றைத் தொகுத்த ஸிஃபத்துஸ் ஸஃப்வா ஆகியவை அவருடைய மாஸ்டர் பீஸ் நூல்கள்.

நேரத்தைப் பாதுகாப்பதில் இவரைப் போல ஒருவரை வரலாற்றில் பார்ப்பது கடினம். ஹதீஸ்களை எழுதுவதற்காக, தன் வாழ்நாள் முழுவதும் மூங்கில் பேனாக்களைச் சீவுவார். அப்படிப் பேனாவைச் சீவும்போது விழும் மரத்துகள்களைக் கீழே கொட்டாமல் ஒரு பையில் சேகரித்து வைத்தார். தான் மரணிக்கும் தருவாயில் ஒரு உயில் எழுதினார்: "நான் மரணித்த பிறகு, எனக்குக் குளிப்பாட்டத் தண்ணீரைக் காய்ச்சும்போது, நான் ஹதீஸ் எழுதுவதற்காகப் பேனா சீவிய இந்தத் துகள்களை விறகாகப் பயன்படுத்தியே தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்!"
ஆச்சரியம் என்னவென்றால், அவர் மரணித்தபோது அந்தத் துகள்களை எரித்துத் தண்ணீர் காய்ச்சிய பிறகும், மீதம் கொஞ்சம் துகள்கள் இருந்தன! அந்த அளவுக்கு ஹதீஸுக்காகத் தன் வாழ்நாளையே தேய்த்தவர் அவர். 

நாம் இன்று சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடித்துவிட்டு, நேரமே இல்லை என்று புலம்புகிறோம். ஆனால் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தன்னிடம் வருபவர்களிடம் பேசும்போது கூட, தன் நேரத்தை வீணாக்காமல் இருக்க, கைகளில் பேனா சீவுவதையோ அல்லது புத்தகங்களை அடுக்கி வைப்பதையோ வேலையாகச் செய்துகொண்டே பேசுவார். ஹதீஸை நேசிப்பது என்பது அதன் வார்த்தைகளைப் பாதுகாப்பது என்று இருக்காமல் ஹதீஸை எழுதுவதற்காகச் சீவிய பேனாவின் துகள்களைக் கூட நேசிப்பதுதான் என்பதை இந்த பகுதாத் இமாமின் வரலாறு நமக்குக் கற்றுத்தருகிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #IbnAlJawzi #Baghdad #HadithScholar #AlMawduat #TalbisIblis #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Saturday, March 7, 2026

முஆத் இப்னு ஜபல் (ரலி).


இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கும்போது நமக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கும். இன்று நாம் நினைப்பது போல மார்க்க அறிஞர்கள் என்றால் பள்ளிவாசலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் அல்ல. குர்ஆனை நெஞ்சில் சுமந்த அதே அறிஞர்கள்தான், போர்க்களங்களில் வாளேந்திப் பகைவர்களை நடுங்கச் செய்த தளபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள்! அறிவும் வீரமும் ஒருங்கே அமைந்த அப்படிப்பட்ட ஒரு உன்னத ஆளுமைதான் முஆத் இப்னு ஜபல் (ரலி).

மதீனாவில் அன்சாரிகள் மத்தியில் இஸ்லாம் பரவிய ஆரம்பத்திலேயே, தனது 18-வது வயதில் இஸ்லாத்தை ஏற்றார் முஆத் (ரலி). மிகச் சிறந்த அழகும், அபாரமான நினைவாற்றலும், புத்திக்கூர்மையும் கொண்ட இளைஞர். குர்ஆன் வசனங்கள் அருளப்படும்போதெல்லாம் அதை உடனடியாக மனனமிட்டு, அதன் சட்டங்களை மிக ஆழமாகப் படிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் சமுதாயத்தில் ஹலால், ஹராமை (ஆகுமானவை, ஆகாதவை) மிகத் தெளிவாக அறிந்தவர் முஆத் இப்னு ஜபல் ஆவார்." மேலும், "நான்கு நபர்களிடம் குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று நபிகளார் பட்டியலிட்டதில் முஆத் (ரலி) அவர்களின் பெயரும் முன்னணியில் இருந்தது.

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் அறிவுத் திறனைக் கண்டு, அவரை யமன் தேசத்தின் ஆளுநராகவும் (கவர்னராகவும்), நீதிபதியாகவும், ஆசிரியராகவும் நியமித்து அனுப்பினார்கள். யமன் தேசத்திற்குப் புறப்படும் அந்த நெகிழ்ச்சியான தருணம்... முஆத் (ரலி) குதிரை மீது அமர்ந்திருக்க, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவருடன் நடந்து வந்தபடியே வழியனுப்பினார்கள்.

அப்போது நபிகளார், "முஆதே! அடுத்த ஆண்டு நீங்கள் மதீனா வரும்போது என்னைச் சந்திக்க மாட்டீர்கள்; என் பள்ளிவாசலையும், என் மண்ணறையையும்தான் கடந்து செல்வீர்கள்..." என்று கூறியபோது, முஆத் (ரலி) அவர்கள் தேம்பித் தேம்பி அழுத அந்தச் சம்பவம் கல்நெஞ்சத்தையும் கரையச் செய்யும். நபிகளார் கணித்தபடியே, யமனில் பல ஆண்டுகள் ஆளுநராக இருந்து அங்குள்ள மக்களுக்குச் சிறப்பாக இஸ்லாத்தைப் போதித்துவிட்டு அவர் மதீனா திரும்பியபோது, அண்ணலார் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருந்தார்கள்.

ஒரு மிகச்சிறந்த குர்ஆன் அறிஞராகவும், நீதிபதியாகவும், ஆளுநராகவும் இருந்த முஆத் (ரலி) அவர்களின் மறுபக்கம் என்ன தெரியுமா? எந்தக் கைகள் மார்க்கத் தீர்ப்புகளை (ஃபத்வா) எழுதினவோ, அதே கைகள்தான் போர்க்களங்களில் ஈட்டியையும் வாளையும் சுழற்றின!
நபிகளாரோடு பத்ரு, உஹத், அகழ்ப்போர் என அனைத்துக் களங்களிலும் ஒரு மாவீரனாக நின்றார். பின்னர், கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமியப் படைகள் ரோமப் பேரரசுக்கு எதிராக ஷாம் (சிரியா) தேசத்தில் போரிட்டபோது, முஆத் (ரலி) ஒரு சாதாரண படைவீரராகப் புறப்பட்டார். யர்மூக் என்ற அந்தப் பயங்கரமான போர்க்களத்தில், ரோமானியர்களின் மூர்க்கமான தாக்குதல்களை முறியடித்து, முஸ்லிம் படையின் வலதுசாரிப் பிரிவுக்குத் தளபதியாக நின்று போர் செய்தவர் இதே குர்ஆன் அறிஞர்தான்!

ஷாம் தேசத்தில் 'அம்வாஸ்' என்ற கொடிய பிளேக் நோய் பரவியது. ஒட்டுமொத்த இஸ்லாமியப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த அபூ உபைதா (ரலி) அவர்களை அந்த நோய் தாக்கியது. மரணத் தருவாயில் இருந்த அபூ உபைதா (ரலி), "எனக்குப் பிறகு இந்தப் படைக்கு முஆத் இப்னு ஜபல் தலைமை தாங்குவார்" என்று அறிவித்தார். ஒரு மாபெரும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்று, படைவீரர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய உன்னதத் தளபதியாக உயர்ந்தார் முஆத் (ரலி). ஆனால், அதே பிளேக் நோய் அவரையும் விட்டுவைக்கவில்லை. தனது 33 (அல்லது 38) வயதிலேயே, ஷாம் தேசத்தில் ஒரு ஷஹீதாகத் தனது இன்னுயிரை அர்ப்பணித்தார்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் என்ன? இஸ்லாம் என்பது உலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்வதல்ல. ஆழமான கல்வியைக் கற்க வேண்டும்; அதேநேரம் மார்க்கத்திற்கு ஒரு ஆபத்து என்றால் வாளேந்தி முன்நிற்கவும் தயங்கக் கூடாது. நிர்வாகத் திறமையும், ஆளுமைப் பண்பும், வீரமும், குர்ஆன் அறிவும் ஒரு சேர அமைந்த முஆத் (ரலி) அவர்களின் தியாகத்தை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #MuadhIbnJabal #ScholarAndWarrior #YemenGovernor #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்)


பஸ்ரா நகரத்தின் ஒட்டுமொத்த அறிவும் இவருடைய விரிந்த சட்டைப் பைக்குள் அடங்கிவிடும் என்று அன்றைய அறிஞர்களால் வியந்து பார்க்கப்பட்ட மாபெரும் ஹதீஸ் கடல் இமாம் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்). அவருடைய ஆன்மீகப் பேச்சுகளுக்கு உலகமே அடிமையானாலும், ஹதீஸ் கலையில் பஸ்ராவுக்கென்று ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கிக் கொடுத்தவர் இவர்தான்.

முழுப் பெயர்: அல்-ஹஸன் இப்னு அபில் ஹஸன் யஸார் அல்-பஸரீ.
சிறப்புப் பெயர்: அபூ ஸயீத்.
காலம்: உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில்
(ஹிஜ்ரி 21) மதீனாவில் பிறந்தார். ஹிஜ்ரி 110-ல் பஸ்ராவில் மரணமடைந்தார்.
ஹதீஸ் ஆசிரியர்கள்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஜுன்துப் (ரலி) உள்ளிட்ட பல மாபெரும் சஹாபாக்களிடம் நேரடியாக ஹதீஸ்களைப் பயின்றவர்.

மதீனாவில் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் மடியில் வளர்ந்த இவர், சஹாபாக்களின் நடமாட்டம் அதிகமிருந்த பொற்காலத்தில் வாழ்ந்தவர். இமாம் அலி இப்னுல் மதீனீ (ரஹ்) கூறுகிறார்: "ஹஸன் அல்-பஸரீ அவர்கள் சுமார் 300 சஹாபாக்களை நேரில் சந்தித்துள்ளார். அதில் 70 பேர் பத்ருப் போரில் கலந்துகொண்ட மாபெரும் ஸஹாபாக்கள்!" இவ்வளவு சஹாபாக்களின் அறிவும் ஒன்றுசேர்ந்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே அவர் பஸ்ராவில் வலம் வந்தார்.

ஹதீஸ் கலையில் ஹஸன் அல்-பஸரீ அவர்களின் பெயர் அடிபடும் மிக முக்கியமான இடம் இதுதான். அவர் பல ஹதீஸ்களை அறிவிக்கும்போது, தனக்கு அறிவித்த சஹாபியின் பெயரைச் சொல்லாமல் நேரடியாக, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..." என்று அறிவிப்பார். இதற்கு ஹதீஸ் கலையில் 'முர்ஸல்' (விடுபட்டது) என்று பெயர்.
அவர் ஏன் சஹாபியின் பெயரைச் சொல்லவில்லை என்று அவரிடமே கேட்கப்பட்டபோது அவர் சொன்ன வரலாற்றுப் பதில் இது:

"நான் நேரடியாக 'அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்' என்று ஒரு ஹதீஸைச் சொன்னால், அந்த ஹதீஸை நான் அலி இப்னு அபீ தாலிப் (ரலி) உள்பட பல பத்ரு சஹாபாக்களிடம் கேட்டிருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால், (கொடுங்கோலன் ஹஜ்ஜாஜின் ஆட்சிக் காலத்தில்) அலி (ரலி) அவர்களின் பெயரைச் சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லாததால், நேரடியாக நபியவர்களின் பெயரையே சொல்லிவிடுகிறேன்!"

நாம் ஏற்கனவே பார்த்த பஸ்ராவின் இரட்டை நட்சத்திரங்களான அய்யூப் அஸ்-ஸக்தியானி மற்றும் இப்னுல் அவ்ன், மேலும் புகழ்பெற்ற கத்தாதா, யூனுஸ் இப்னு உபைத் போன்ற பஸ்ராவின் அடுத்த தலைமுறை ஹதீஸ் மேதைகள் அனைவரும் இமாம் ஹஸன் அல்-பஸரீ அவர்களின் ஹதீஸ் சபையில் உருவாகி வந்த மாணவர்கள்தான். ஒரு முழு தலைமுறைக்கே ஹதீஸைக் கற்றுக்கொடுத்த ஆசான் இவர்.

அவருடைய நினைவாற்றலும், ஹதீஸ் அறிவிக்கும் நேர்மையும் அளப்பரியது. சில நேரங்களில் சஹாபாக்களின் வார்த்தைகளையும், குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் இணைத்து அவர் பேசும்போது, மக்கள் "இது அனைத்தும் நபியவர்களின் வார்த்தைகளா?" என்று வியப்பார்கள். அந்த அளவுக்கு அவருடைய மொழிநடை சுன்னாவோடு பின்னிப்பிணைந்திருந்தது.
அதே சமயம், "அவர் சில சஹாபாக்களைச் சந்திக்காமலேயே சந்தித்ததாக அறிவிக்கிறார் (தத்லீஸ் செய்கிறார்)" என்று சில விமர்சனங்கள் பிற்காலத்தில் வந்தபோது, இமாம் அஹ்மத் மற்றும் யஹ்யா இப்னு மயீன் போன்ற மாபெரும் விமர்சகர்கள், "ஹஸன் அல்-பஸரீ உண்மையானவர், நேர்மையானவர். அவர் 'எனக்கு இன்னார் கூறினார்' (சமிஃத்து) என்று தெளிவாகச் சொல்லும் ஹதீஸ்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆதாரப்பூர்வமானவையே" என்று அவருடைய தரத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.

வெறும் மனப்பாட சக்தி மட்டுமே ஒருவனை ஹதீஸ் அறிஞனாக மாற்றிவிடாது. மனனம் செய்த ஹதீஸ்களைத் தன் வாழ்வில் செயல்படுத்தி, அதன் வழியே இறைச்சத்தை வளர்த்துக்கொள்வதுதான் உண்மையான கல்வியின் அடையாளம். ஹஸன் அல்-பஸரீ தன் வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தார் என்றால், அதற்கு அவர் நெஞ்சில் சுமந்த நபியவர்களின் அந்தப் பிரம்மாண்டமான ஹதீஸ்களின் எச்சரிக்கைகளே காரணம். ஹதீஸ் கலைக்கும், ஆன்மீகப் பரிசுத்தத்திற்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு பாலத்தைக் கட்டிய மாபெரும் சிற்பி இவர்தான்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HasanAlBasri #Basra #HadithScholar #Mursal #Tabiin #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Friday, March 6, 2026

ஷுரஹ்பீல் இப்னு ஹசனா (ரலி).


மாபெரும் சாம்ராஜ்யங்களை வீழ்த்திய இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களில், சில தளபதிகளின் பெயர்கள் ரோமானியர்களின் தூக்கத்தைக் கெடுத்தன. அந்தப் பட்டியலில் மிக முக்கியமான ஒரு பெயர், கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களால் ரோமப் பேரரசுக்கு எதிராக அனுப்பப்பட்ட நான்கு பிரதான தளபதிகளில் ஒருவரான ஷுரஹ்பீல் இப்னு ஹசனா (ரலி).

தந்தையின் பெயரால் அழைக்கப்படுவதே அன்றைய அரபு மரபு. ஆனால், இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுத் தியாகங்கள் பல செய்த தன் தாயார் 'ஹசனா' அவர்களின் பெயரால் அறியப்படுவதையே பெருமையாகக் கருதியவர் இந்த மாவீரர்!

ஆரம்ப கால முஸ்லிம்களில் இவரும் ஒருவர். மக்காவின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் இஸ்லாத்திற்காக அபிசீனியாவிற்கும், பின்னர் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்த தியாகி. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீ எழுத்தாளர்களில் ஒருவராகவும் செயல்பட்ட சிறந்த அறிஞர் இவர். இறைவனின் வேதத்தை எழுதுவதற்காக எந்தக் கைகள் எழுத்தாணியைப் பிடித்தனவோ, அதே கைகள்தான் பிற்காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகளான ரோமானியர்களின் வாள்களைச் சுக்குநூறாக உடைத்தெறிந்தன!

அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம். பிரம்மாண்டமான ரோமப் பேரரசை (பைஸாந்திய சாம்ராஜ்யம்) வீழ்த்த, இஸ்லாமியப் படை நான்கு பிரிவுகளாக ஷாம் (சிரியா) தேசத்தை நோக்கிப் புறப்பட்டது. மாபெரும் வீரர்களான அபூ உபைதா, அம்ர் இப்னுல் ஆஸ், யஸீத் இப்னு அபூஸுஃப்யான் ஆகியோரோடு நான்காவது படையின் மாபெரும் தளபதியாகப் புறப்பட்டவர்தான் ஷுரஹ்பீல் (ரலி). ஷாம் தேசத்தின் ஒரு பகுதியான ஜோர்தான் (உர்துன்) முழுவதையும் வெற்றி கொள்ளும் இமாலயப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

யர்மூக் போர்க்களம்... இஸ்லாமிய வரலாற்றின் தலைவிதியை நிர்ணயித்த அந்தப் பயங்கரமான களம். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மூர்க்கமான ரோமப் படையினரை எதிர்த்து, வெறும் நாற்பதாயிரம் முஸ்லிம்கள் நின்றார்கள். போரின் ஒரு கொடூரமான கட்டத்தில் ரோமானியர்களின் தொடர் தாக்குதலால் முஸ்லிம் படையின் ஒரு பகுதி சற்று நிலைகுலைந்த போது, அசைக்க முடியாத ஒரு இரும்புச் சுவரைப் போலத் தன் படையோடு களத்தின் மையத்தில் நின்றார் தளபதி ஷுரஹ்பீல் (ரலி).

எதிரிகளின் வாள் வீச்சுகளுக்கும், அம்பு மழைகளுக்கும் மத்தியில், மரணத்தைப் பார்த்துச் சிரித்தவாறு அவர் நடத்திய அந்த மூர்க்கமான தாக்குதல்தான் ரோமானியப் படையை நிலைகுலையச் செய்தது. இவருடைய ஈமானிய வீரத்தாலும், வியூகத்தாலும்தான் தப்ரிய்யா (Tiberias) உட்பட ஜோர்தானின் பல நகரங்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் காலடியில் வந்து விழுந்தன.

போர்க்களங்களில் சல்லடையாகத் துளைக்கப்பட்டாலும், தன் உடலெங்கும் தழும்புகளைச் சுமந்த அந்தத் தளபதிக்கு ரோமானியர்களின் வாள்களால் வீரமரணம் கிடைக்கவில்லை. ஆனால், அல்லாஹ் அவருக்குப் பன்மடங்கு உயர்ந்த வேறொரு வழியில் 'ஷஹீத்' என்ற அந்தஸ்தைக் கொடுக்க நாடினான் போல. 
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஷாம் தேசத்தை உலுக்கிய 'அம்வாஸ்' என்ற கொடிய பிளேக் நோய் பரவியது. இஸ்லாத்தின் மாபெரும் தளபதிகளான அபூ உபைதா (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோரைத் தொடர்ந்து, போர்க்களங்களில் ரோமானியர்களை நடுங்கச் செய்த ஷுரஹ்பீல் இப்னு ஹசனா (ரலி) அவர்களையும் அந்த நோய் தாக்கியது. 

எந்தப் படைக்கும் அஞ்சாத அந்தச் சிங்கம், அல்லாஹ்வின் விதிக்கு முன்னே புன்னகையோடு தலைவணங்கி, ஹிஜ்ரி 18-ஆம் ஆண்டில் அதே ஷாம் தேசத்தில் ஒரு ஷஹீதாகத் தன் இன்னுயிரை நீத்தது.

இன்று பதவியும், புகழும் தேடிப் பலர் அலைகிறார்கள். ஆனால், மாபெரும் தேசங்களை வென்று இஸ்லாமியக் கொடியைப் பறக்கவிட்ட பின்பும், எந்தத் தற்பெருமையும் இன்றி, அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு எளிமையாக வாழ்ந்தவர் ஷுரஹ்பீல் (ரலி). அவருடைய வீரம் நம் நரம்புகளில் ஓட வேண்டும்; அதேநேரம் அவருடைய அந்தப் பணிவும், மார்க்கத்திற்கான அர்ப்பணிப்பும் நம் உள்ளங்களில் வேரூன்ற வேண்டும். ஜோர்தான் மண்ணை இஸ்லாத்தின் ஒளியால் நிரப்பிய அந்த மாபெரும் தளபதியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #ShurahbilIbnHasana #ConquestOfSham #BattleOfYarmouk #Jordan #AbdullahIbnuNaseerWriteups

இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்).


ஹதீஸ் கலை என்றவுடன் நமது கவனம் பெரும்பாலும் ஹிஜாஸ் (மக்கா, மதீனா) அல்லது ஈராக் (கூஃபா, பஸ்ரா), ஷாம், எகிப்து என்றுதான் பயணிக்கும். ஆனால், இஸ்லாமிய உலகின் மேற்கு எல்லையான ஐரோப்பாவில், அதாவது ஸ்பெயின் (அந்தலூஸியா) தேசத்தில் ஒரு மாபெரும் அறிவுச் சூரியன் உதித்தது. கிழக்கே 'அல்-கதீப் அல்-பஃதாதீ' எப்படிப்பட்ட மாமேதையோ, மேற்கே அந்தலூஸியாவில் அவருக்கு நிகரான, சொல்லப்போனால் பல வகைகளில் அவரை விஞ்சிய ஒரு மாமேதைதான் நாம் இன்று பார்க்கவிருக்கும் இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்).

ஐரோப்பியக் கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி கோலோச்சிய 'அந்தலூஸியா' பகுதி, அறிவியலிலும், தத்துவத்திலும் மட்டுமின்றி, ஹதீஸ் கலையிலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தச் சாதனையின் ஆணிவேராக நின்றவர் இமாம் இப்னு அப்தில் பர் ஆவார்கள். இவர் இஸ்லாமிய மேற்கு உலகின் மனப்பாடச் சிங்கம் (ஹாஃபிழுல் மஃக்ரிப்) என்று போற்றப்படுபவர்.

முழுப் பெயர்: யூஸுஃப் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்தில் பர் அல்-அந்தலூஸீ
சிறப்புப் பெயர்: அபூ உமர்.
காலம்: ஹிஜ்ரி 368-ல் ஸ்பெயினின் கார்டோபா (Cordoba - குர்துபா) நகரில் பிறந்து, ஹிஜ்ரி 463-ல் தனது 95-வது வயதில் ஜாதிவா (Jativa) நகரில் மரணமடைந்தார்.

பொதுவாக ஹதீஸ் அறிஞர்கள் பல நாடுகளுக்கும் பயணிப்பார்கள். ஆனால் இப்னு அப்தில் பர் அவர்களின் மிகப்பெரிய சிறப்பே, அவர் தன் நீண்ட நெடிய வாழ்நாளில் ஸ்பெயின் (அந்தலூஸியா) நாட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைத்ததே இல்லை! மக்காவிற்கோ, மதீனாவிற்கோ, ஈராக்கிற்கோ அவர் செல்லவில்லை.
ஆனாலும், கிழக்கு உலகத்தின் ஒட்டுமொத்த அறிவும் அவரைத் தேடி ஸ்பெயினுக்கு வந்தது. கிழக்குலக அறிஞர்களுடன் கடிதங்கள் மூலமாகவே தொடர்புகொண்டு, ஹதீஸ்களையும், நூல்களையும் வரவழைத்து, ஸ்பெயினிலேயே ஒரு மாபெரும் அறிவு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பினார்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் 'முஅத்தா' நூலுக்கு இவர் எழுதிய விரிவுரைக்கு இஸ்லாமிய வரலாற்றில் ஈடு இணையே இல்லை. அந்த நூலின் பெயர் 'அத்-தம்ஹீத்'. இதை எழுதி முடிக்க அவருக்கு சுமார் 30 ஆண்டுகள் தேவைப்பட்டன! இந்த நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஹதீஸ்களைப் வழக்கம்போலப் பாடவாரியாக (தொழுகை, நோன்பு) விளக்காமல், முஅத்தாவில் இடம்பெற்ற அறிவிப்பாளர்களின் (ஸனது) அடிப்படையில் அகரவரிசைப்படி பிரித்து, ஒவ்வொரு அறிவிப்பாளரைப் பற்றிய முழு வரலாற்றையும், சட்ட நுணுக்கங்களையும் உலகையே வியக்க வைக்கும் தரத்தில் எழுதினார். இப்னு ஹஸ்ம் கூறுகிறார், "அத்-தம்ஹீத் போன்ற ஒரு நூல் இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு முன் எழுதப்பட்டதே இல்லை!"
(பின்னர், சாதாரண மக்களும் படிக்கும் வகையில், இதைச் சட்ட அடிப்படையில் மாற்றி 'அல்-இஸ்தித்கார்' என்ற பெயரில் சுருக்கி எழுதினார்).

ஹதீஸ்களை அறிவித்த சஹாபாக்கள் யார் யார் என்பதைத் துல்லியமாக அறிய, அவர் எழுதிய மாபெரும் வாழ்க்கை வரலாற்றுப் பெட்டகம்தான் 'அல்-இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப்'.
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான தோழர்களின் வரலாற்றை அகரவரிசைப்படி தொகுத்த ஆரம்பகால பிரம்மாண்டமான நூல்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை சஹாபாக்களின் வரலாறு குறித்து எழுதப்படும் எந்த நூலுக்கும் இதுதான் அடிப்படை ஆதாரம்.

அந்தலூஸியாவின் மாபெரும் அறிஞரான இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) இவருடைய மிக நெருங்கிய நண்பர். இப்னு ஹஸ்ம் 'ழாஹிரி' (வெளிப்படையான) சிந்தனை கொண்டவர்; இப்னு அப்தில் பர் அவர்களோ மாலிக்கி சட்ட மேதை.
இருவருக்கும் இடையே அறிவார்ந்த ரீதியில் மாபெரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரைப் பார்த்து ஒருவர் மரியாதையையும், அன்பையும் பொழிவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. உண்மையான கல்வி என்பது கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் எப்படி நட்பைப் பேணும் என்பதற்கு இவர்கள் இருவருமே ஆகச்சிறந்த உதாரணங்கள்.

இன்று நாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணிப்பது கூட மிக எளிதாகிவிட்டது. ஒரு கிளிக் செய்தால் உலகம் முழுவதும் உள்ள தகவல்கள் நம் கைகளில் கிடைக்கின்றன. ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பிறந்த ஸ்பெயின் நாட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே செல்லாமல், பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள மதீனாவின் ஹதீஸ்களையும், சஹாபாக்களின் வரலாற்றையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றால், அந்த மனிதரின் அறிவுத் தாகம் எவ்வளவு பிரம்மாண்டமானது! "தேடல் உண்மையானால், அறிவின் கதவுகள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து திறக்கும்" என்பதற்கு இமாம் இப்னு அப்தில் பர் அவர்களின் வாழ்வே மாபெரும் சாட்சி.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #IbnAbdulBarr #AlAndalus #Spain #Cordoba #HadithScholar #MalikiFiqh #AlTamhid #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, March 4, 2026

திஹ்யா அல்-கல்பீ (ரலி)


ஒரு மனிதனின் வெளிப்புற அழகு என்பது இறைவனால் வழங்கப்படுவது. இன்று அந்த அழகைக் காட்டி உலகத்திடம் கைதட்டல் வாங்குவதற்கும், சமூக வலைத்தளங்களில் லைக்குகளைக் குவிப்பதற்கும் மனிதர்கள் எவ்வளவோ மெனக்கெடுகிறார்கள். ஆனால், தன்னிடம் இருந்த இணையற்ற அழகை எவ்விதத் தற்பெருமையுமின்றி இறைவனின் மார்க்கத்திற்காக அர்ப்பணித்த ஒருவரைப் பற்றி இஸ்லாமிய வரலாறு பெருமையோடு பேசுகிறது. 

அவர் எவ்வளவு அழகானவர் என்றால், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமியில் மனித உருவில் வரும்போதெல்லாம் பெரும்பாலும் இவருடைய உருவத்தில்தான் வருவார்கள்! அவர்தான் திஹ்யா இப்னு கலீஃபா அல்-கல்பீ (ரலி).

மதீனாவில் திஹ்யா (ரலி) அவர்களைப் போல ஒரு அழகான மனிதரைப் பார்ப்பது அரிது என்று ஸஹாபாக்கள் கூறுவார்கள். ஆனால், அந்த வெளிப்புற அழகை விட அவருடைய உள்ளத்தின் தூய்மை மிக உயர்ந்ததாக இருந்தது. அதனால்தான், பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இறைச்செய்தியைக் கொண்டு வர மனித உருவை எடுக்கும்போது, பல நேரங்களில் திஹ்யா (ரலி) அவர்களின் உருவத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஒரு மனிதனின் முக அமைப்பை வானவர்களின் தலைவரே விரும்பித் தேர்ந்தெடுக்கிறார் என்றால், இறைவனிடம் திஹ்யா (ரலி) அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது!

அழகு என்பது மென்மை என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். அது வீரத்தின் மறுபக்கமும்கூட என்பதை திஹ்யா (ரலி) நிரூபித்தார். ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு, உலகின் மாபெரும் வல்லரசுகளுக்கு இஸ்லாத்தின் அழைப்பைக் கடிதமாக எழுதி அனுப்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். அன்றைய உலகின் மிகப்பிரம்மாண்டமான சக்தி ரோமப் பேரரசு (பைஸாந்திய சாம்ராஜ்யம்). அதன் சக்கரவர்த்தியான ஹிராக்ளியஸுக்குக் கடிதத்தைக் கொண்டு செல்லும் அந்த மாபெரும் அபாயகரமான பொறுப்பை அண்ணலார் திஹ்யா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், நீண்ட பாலைவனங்களைக் கடந்து சிரியா (ஷாம்) தேசத்திற்குப் பயணம் செய்து, மாபெரும் படையைக் கொண்ட ரோம சக்கரவர்த்தியின் அரசவையில் போய் நிற்பது சாதாரண விஷயமல்ல. சிறு பிழை நடந்தாலும் தலை துண்டிக்கப்படலாம். ஆனால், ஈமான் என்ற கவசத்தை அணிந்திருந்த திஹ்யா (ரலி) அவர்களின் உள்ளத்தில் ரோமப் பேரரசனின் சிம்மாசனத்தைப் பற்றிய எந்தப் பயமும் இல்லை.

ஹிராக்ளியஸ் மன்னனின் அரசவைக்குச் சென்று, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதத்தை மிகக் கம்பீரமாக நீட்டினார் திஹ்யா (ரலி). அந்தக் கடிதம் "அஸ்லிம் தஸ்லம்" (இஸ்லாத்தை ஏற்றுக்கொள், நீ ஈடேற்றம் பெறுவாய்) என்று உலகின் மாபெரும் வல்லரசுக்கு எந்தத் தயக்கமுமின்றி நிபந்தனை விதித்தது! திஹ்யா (ரலி) அவர்களின் ஆளுமையையும், நபிகளாரின் கடிதத்தையும் கண்ட ரோம மன்னன் சிலிர்த்துப் போனான். இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்த ஹிராக்ளியஸ், திஹ்யா (ரலி) அவர்களுக்கு ஏராளமான பரிசுகளையும், செல்வங்களையும் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

ரோம மன்னன் கொடுத்த பெரும் செல்வங்களோடு மதீனா திரும்பிக்கொண்டிருந்த திஹ்யா (ரலி) அவர்களை, 'ஹிஸ்மா' என்ற பகுதியில் வைத்து ஒரு கொள்ளைக் கும்பல் வழிமறித்தது. அவரிடமிருந்த அத்தனை செல்வங்களும், பரிசுகளும் இரக்கமின்றிச் சூறையாடப்பட்டன. உடுத்தியிருந்த ஆடைகளைத் தவிர அனைத்தையும் இழந்த நிலையில் மதீனா வந்து சேர்ந்தார் திஹ்யா (ரலி).
ஆனாலும், அவருடைய முகத்தில் எந்தக் கவலையும் இல்லை! "மன்னன் கொடுத்த செல்வங்கள் பறிபோய்விட்டதே" என்று அவர் ஒருநாளும் கலங்கவில்லை. மாறாக, "என் இறைத்தூதர் கொடுத்த பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றிவிட்டேன். ரோம சாம்ராஜ்யத்தின் அரசவை வரை இஸ்லாத்தின் செய்தியைக் கொண்டு சேர்த்துவிட்டேன்" என்ற அந்த ஆத்ம திருப்தி மட்டுமே அவரிடம் எஞ்சியிருந்தது. செல்வத்தை விட, சத்தியத்தை எத்திவைப்பதே தன் வாழ்வின் ஆகப்பெரிய வெற்றி என்று அவர் நம்பினார்.

இன்றைய இளைஞர்களின் நிலை என்ன? கண்ணாடியின் முன் மணிக்கணக்கில் நின்று தங்களை அழகுபடுத்துவதில் காட்டும் கவனத்தில் ஒரு சிறு பகுதியையேனும், தங்கள் உள்ளத்தை அழகுபடுத்துவதில் காட்டுகிறார்களா? தங்களுக்குக் கிடைத்த அழகையும், இளமையையும், திறமையையும் இஸ்லாத்தின் செய்தியைப் பிறருக்குச் சொல்வதற்காக எப்போதாவது பயன்படுத்தியது உண்டா? உலகத்தின் கண்கள் நம் அழகைப் பார்த்து வியக்கலாம். ஆனால் இறைவனின் கண்கள் நம் உள்ளத்தையும், செயல்களையும் மட்டுமே பார்க்கின்றன. வெளிப்புற அழகோடு, ஈமானின் அழகையும் இணைத்து மாபெரும் வரலாற்றைப் படைத்த திஹ்யா அல்-கல்பீ (ரலி) அவர்களின் அந்த உன்னதமான அர்ப்பணிப்பு உணர்வை அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #DihyahAlKalbi #AngelJibril #Heraclius #Dawah #AbdullahIbnuNaseerWriteups

இமாம் அம்ர் இப்னு தீனார் (ரஹ்).


கஃபாவின் நிழலில் அமர்ந்து, சஹாபாக்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை உறிஞ்சிக் குடித்த ஒரு தலைமுறை மக்காவில் இருந்தது. சஹாபாக்களின் மரணத்திற்குப் பிறகு, இனி மக்காவாசிகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் யார்? ஹதீஸ்களை அறிவிப்பவர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது, ஒட்டுமொத்த மக்காவும் ஒருவரை நோக்கித் திரும்பியது. அவர்தான் இமாம் அம்ர் இப்னு தீனார் (ரஹ்).

பெயர்: அம்ர் இப்னு தீனார் அல்-மக்கி.
சிறப்புப் பெயர்: அபூ முஹம்மத்.
காலம்: ஹிஜ்ரி 46-ல் பிறந்து, ஹிஜ்ரி 126-ல் மக்காவில் மரணமடைந்தார்.
ஆசிரியர்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) போன்ற மாபெரும் சஹாபாக்களிடம் நேரடியாகப் பாடம் படித்த தாபியீ இவர்.

குர்ஆன் விரிவுரையிலும் (தஃப்ஸீர்), ஹதீஸிலும் மக்காவின் ஆணிவேராக இருந்தவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். இப்னு அப்பாஸ் அவர்களின் முதன்மை மாணவர்களான முஜாஹித், அதா இப்னு அபீ ரபாஹ், தாவூஸ் போன்றோரின் வரிசையில் முக்கியமானவர் அம்ர் இப்னு தீனார்.
இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் ஜாபிர் (ரலி) ஆகியோரின் ஏராளமான ஹதீஸ்கள் இன்று நம் கைக்குக் கிடைப்பதற்கு இவரே முக்கியக் காரணம்.

மக்காவின் மற்றொரு மாபெரும் அறிஞரான சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) இவரிடம் பாடம் படித்த மாணவர். தன் ஆசானைப் பற்றி அவர் சிலாகித்துக் கூறுகிறார்:

மக்காவாசிகளின் ஹதீஸ்களை அம்ர் இப்னு தீனாரை விட நன்கறிந்த ஒருவரை நான் என் வாழ்வில் பார்த்ததே இல்லை! மேலும் கூறும்போது, அம்ர் இப்னு தீனாரின் நினைவாற்றல் ஒரு பாறையைப் போல உறுதியானது. அதில் எந்த விரிசலும் விழாது என்று புகழ்ந்துள்ளார்.

இமாம் ஷுஅபா (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றி, "நான் அம்ர் இப்னு தீனாரை விட ஹதீஸில் உறுதியான ஒருவரைப் பார்த்ததில்லை" என்று சாட்சி பகர்கிறார்.

முந்தைய பதிவில் இப்னு சீரின் அவர்களைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அதேபோல அம்ர் இப்னு தீனார் அவர்களும் ஹதீஸ்களை அதன் கருத்தாக அறிவிப்பதைப் பெரும்பாலும் விரும்ப மாட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன வார்த்தையைப் பயன்படுத்தினார்களோ, அதை அப்படியே அறிவிக்க வேண்டும் என்ற மாபெரும் பேணுதல் கொண்டவர்.

அம்ர் இப்னு தீனார் அவர்களுக்கு வயதான காலத்தில் கடுமையான நோய் ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து வாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரால் சுயமாக எழுந்து நடக்க முடியாது.
ஆனால், அவருடைய அறிவுப் பசியும், ஹதீஸைப் போதிக்கும் தாகமும் குறையவில்லை. மாணவர்களும், மக்களும் அவரை ஒரு நாற்காலியில் (அல்லது பல்லக்கில்) சுமந்துகொண்டு வந்து கஃபாவின் முற்றத்தில் அமர வைப்பார்கள். அந்தச் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, தனது இறுதி மூச்சு வரை ஹதீஸ்களைப் போதித்துக் கொண்டே இருந்தார் அந்த மாமனிதர்!

ஹிஜ்ரி 126-ம் ஆண்டு, கஃபாவின் நிழலில் தனது வாழ்நாளெல்லாம் ஹதீஸ் சேவையாற்றிய அந்த மாமேதை மக்கா மண்ணிலேயே வஃபாத்தானார்.

நோய் வந்தாலே நாம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓய்வெடுக்கப் போய்விடுகிறோம். ஆனால், இமாம் அம்ர் இப்னு தீனார், தன்னுடைய உடல் முழுமையாக முடங்கிப்போன நிலையிலும், சஹாபாக்களிடம் தான் பெற்ற அறிவுச் செல்வத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்பதற்காகத் தன்னைச் சுமந்துகொண்டு செல்ல அனுமதித்தார். நாற்காலியில் முடங்கியது அவருடைய உடல்தானே தவிர, அவருடைய அறிவல்ல! மக்காவின் புனிதமான காற்றில் இன்றும் இவரைப் போன்ற தாபியீன்களின் மூச்சுக்காற்று ஹதீஸ்களாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AmrIbnDinar #Makkah #Tabiin #HadithScholar #IbnAbbas #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, March 3, 2026

இஸ்லாத்தின் பன்முகத்தன்மையே அதன் தனிச்சிறப்பு!


இஸ்லாத்தின் பன்முகத்தன்மையே அதன் தனிச்சிறப்பு! 

இஸ்லாம் மனித இனம் முழுமைக்குமான மார்க்கம், மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, சமூகத்தில் பலவீனமானவர்களும் இருப்பார்கள், வலிமை மிக்கவர்களும் இருப்பார்கள், பயந்த சுபாவம் உள்ளவர்களும்  இருப்பார்கள், தைரியமானவர்களும் இருப்பார்கள் இப்படி எல்லா வகையான மனிதர்களையும் உள்ளடக்கியது தான் மனித இனம். 
 
பலவகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் இருப்பதினால் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது சாத்தியம் இல்லை, அப்படி ஒரே சட்டமாக இருந்தால் சமூகத்தின் ஒரு வகையினரால் மட்டுமே அதை பின்பற்ற முடியும், எல்லோருக்குமான மார்க்கமாக அது இருக்காது. பல வகையினரையும் கருத்தில் கொண்டு பல வகையான சட்டங்களை கொடுத்தால் மட்டுமே அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் /  பின்பற்றும் மார்க்கமாக இருக்க முடியும்.

இஸ்லாம் ஒற்றை கலாச்சார முறையை போதிப்பதில்லை. ஒரே விஷயத்தில் பல வழிமுறைகளை போதிக்கின்றது. இந்த பன்முக தன்மைதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. (ஒரே ஒருவன் என்றால் அது இறைவன் மட்டுமே, இறைவனை தவிற மற்ற அனைத்தும் பன்மையானது தான்)

இஸ்லாத்தில் சொல்லப்பட்ட பன்மை கருத்துக்களில் சில வற்றை குர்ஆன்,  நபிவழி ஆதாரங்கள் மூலம் இந்த பதிவில் பார்ப்போம்.

👉 தீமையை எதிர்ப்பதில் பன்மை தன்மை!
 
தவறுகள் நடக்கும் போது அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும், ஆனால் அது எல்லாராலும் முடியாது, நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரரியாக இருந்தால் தவறுகளை கையால் தடுக்கலாம், சற்று வலிமை உள்ள மனிதராக இருந்தால் வாயால் அறிவுறை கூறி தவறுகளை தடுக்க முயற்சிக்கலாம். பலகீனமான மனிதராக இருந்தால்  தமது உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிவிடலாம். இந்த மூன்று வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் போதிக்கின்றது (பார்க்க ஸஹீஹ் முஸ்லீம் - 78). 

அவர் அவர் தன் நிலைமை, வலிமை, அதிகாரத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எல்லோரும் ஒன்றே ஒன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. 

👉 பாதிப்பை எதிர்கொள்வதில் பல வழிமுறைகள்!

நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படும், ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள், மென்மையானவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள் மன்னிக்கவும் செய்வார்கள், மனிதர்களில் அதிக இரக்க குணம் உடைய நபி (ஸல்) அவர்கள் தன் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி)யை கொலை செய்த வஹ்ஷியை மன்னித்தார்கள், பழிக்கு பழி வாங்கவில்லை (புகாரி 4072). தன் மனைவி மீது அவதூறு சொன்ன அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிக்க வில்லை (புகாரி 2661), நபி (ஸல்) அவர்கள் மன்னித்த பட்டியல் மிக பெரியது, சொல்லிக்கொண்டே போகலாம்.

1. தண்டித்தே ஆக வேண்டும் என நினைப்பவர்கள், 2. மன்னிக்க நினைப்பவர்கள், 3. தண்டிக்கவும் வேண்டாம், மன்னிக்கவும் வேண்டாம் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வாங்கி கொடுங்கள் என நினைப்பவர்கள் என அனைத்து வகையினருக்கும் பொருந்தும் வகையில் தண்டனை, மன்னிப்பு, இழப்பீடு என மூன்றுவிதமான வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க குர்ஆன் 42:43, குர்ஆன் 2:178)

இப்படி பல வழிமுறைகளை போதிப்பதால் அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில் இஸ்லாம் இருக்கின்றது.  இந்த பன்மை தன்மை தான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு,

👉 பாவ பரிகாரங்களில் பல வழிமுறைகள்!

மனிதர்கள் இறைவனுக்குச் செய்யும் பெரும்பாலான பாவங்களை இறைவன் (விரும்பினால்) மன்னித்துவிடுகின்றான், சில பாவங்களுக்கு மட்டும் பரிகாரங்கள் செய்ய இஸ்லாம் கட்டளையிடுகின்றது. பரிகாரங்கள் என்பது சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை, மனிதர்களுக்கு செய்யும் உதவிகள் தான் இஸ்லாத்தில் பரிகாரங்களாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் பல வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது.

உதாரணத்திற்கு ஒருவர் "வேண்டும் என்றே நோன்பை முறித்தால்" அவர் ஒரு அடிமையை விடுதலை செய்யலாம் அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம் பொதுவாக இந்த பரிகாரங்களை பணக்காரர்கள் தான் செய்ய முடியும், ஏழைகள் என்ன செய்வது, இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கலாம், உடல் பலகீனமானவர்களால் இது முடியாது. இறுதியாக முடிந்த அளவு ஏதேனும் ஒரு தர்மத்தை செய்து பரிகாரம் தேடலாம். (புகாரி 1936)

இப்படி ஏழை, பணக்காரர், பலகீனமானவர் என அனைத்து தரப்பு மக்களுமே பரிகாரம் தேடிக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகளை இஸ்லாம் போதிக்கின்றது. ஒரே ஒரு சட்டம் சொன்னால் எப்படி எல்லோரும் பின்பற்ற முடியும், மனிதர்களின் பன்மை தன்மையை அங்கீகரிக்கும் போது தான் சமூகத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்பட்டு அது அனைவருக்குமானதாக இருக்கும்.

தர்மம், கடன், தொழுகை என இஸ்லாத்தின் பன்மை தன்மையை விளக்கும் இன்னும் பல விஷயங்களை  கடந்த ரமலானில் 2022 தொடரில் விளக்கி இருந்தேன், அந்த தொடரை முழுவதும் வாசிக்க 
https://www.facebook.com/siddique.mtech/posts/1855448571323081

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

இமாம் வகீஉ (ரஹ்)


இஸ்லாமிய அறிவுலகில் கல்வி என்பது செய்திகளைச் சுமப்பதாக மட்டுமிருக்கவில்லை. அது இறைவனால் வழங்கப்படும் ஒரு பிரகாசமான ஒளி என்பதை உலகுக்கு ஆழமாக உணர்த்தியவர் இமாம் வகீஉ (ரஹ்) அவர்கள். இவரைப் பற்றி இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறும்போது, "நான் வகீஉ அவர்களை விட ஒரு சிறந்த மனிதரை என் கண்களால் கண்டதில்லை" என்று நெஞ்சாரப் புகழ்கிறார் என்றால், அவரின் தரத்தை எண்ணிப் பாருங்கள்!

பெயர்: வகீஉ இப்னுல் ஜர்ராஹ் அல்-கூஃபி
சிறப்புப் பெயர்: அபூ சுஃப்யான்.
காலம்: ஹிஜ்ரி 129-ல் பிறந்து, ஹிஜ்ரி 197-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் அறிவு கேந்திரமான கூஃபா நகரம்.
மாணவர்கள்: இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் ஷாஃபியீ, யஹ்யா இப்னு மயீன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்கள் அனைவரும் இவரின் மண்டியிட்டுப் பாடம் படித்த மாணவர்கள்தான்.

இமாம் வகீஉ என்ற பெயரை உச்சரித்தாலே, இமாம் ஷாஃபியீ பாடிய அந்த உலகப் புகழ்பெற்ற கவிதைதான் ஒவ்வொரு மார்க்க மாணவனின் நினைவுக்கும் வரும். இமாம் ஷாஃபியீ தனது இளமைக் காலத்தில், தனது நினைவாற்றலில் ஒரு சிறிய தொய்வு ஏற்படுவதை உணர்ந்தார். உடனடியாகத் தனது ஆசான் வகீஉ அவர்களிடம் சென்று முறையிட்டார். அப்போது வகீஉ அவர்கள் வழங்கிய அறிவுரையை இமாம் ஷாஃபியீ கவிதையாகப் பதிவு செய்துள்ளார்:

நான் எனது ஆசான் வகீஉ அவர்களிடம் என் நினைவாற்றல் குறைபாட்டைப் பற்றி முறையிட்டேன். அவர் எனக்கு, 'பாவங்களை விட்டு விலகிவிடு' என்று வழிகாட்டினார். மேலும் அவர் சொன்னார்: 'அறிந்துகொள்! கல்வி என்பது இறைவனின் ஒளி (நூர்). இறைவனின் ஒளி ஒரு பாவிக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது!'"

(شكوت إلى وكيع سوء حفظي ... فأرشدني إلى ترك المعاصي)

நினைவாற்றல் என்பது வெறும் மூளையின் வேலை அல்ல. அது உள்ளத்தின் தூய்மையோடு தொடர்புடையது என்ற இந்த ஒற்றைத் தத்துவம் இன்றும் ஒவ்வொரு மாணவனின் செவிகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இமாம் வகீஉ அவர்கள் ஹதீஸ் வகுப்பிற்கு வரும்போது கையில் ஒரு சிறு காகிதத்தைக் கூடக் கொண்டு வர மாட்டார். அவரின் நெஞ்சமே ஒரு மாபெரும் நூலகமாக இருந்தது. அவரிடம் பல ஆண்டுகள் பாடம் படித்த இமாம் அஹ்மத் கூறுகிறார்: "வகீஉ அவர்கள் எந்தப் புத்தகத்தையும் பார்த்து ஹதீஸ் சொல்ல நான் கண்டதே இல்லை. பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களையும், அதில் உள்ள நுணுக்கங்களையும் அவர் தன் நெஞ்சிலிருந்தே மடைதிறந்த வெள்ளம் போல அறிவிப்பார்."

வகீஉ அவர்களின் தந்தை 'ஜர்ராஹ்' அன்றைய அப்பாஸிய அரசாங்கத்தின் கஜானாவைக் கவனிக்கும் மாபெரும் அதிகாரியாக இருந்தார். அவர் அரசனுக்கு நெருக்கமானவர். ஆனால் வகீஉ அவர்கள், அரசுப் பதவிகளிலிருந்தும், உலக சுகபோகங்களிலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொண்டார். அரசவை உணவு வகைகளைத் தொடமாட்டார். தனது தந்தையின் அதிகாரத்தையோ, செல்வத்தையோ அவர் ஒருபோதும் தனது மார்க்கக் கல்விக்குப் பயன்படுத்தியதில்லை. அவர் மிகவும் எளிமையான ஒரு மனிதராகவே வாழ்ந்தார்.

இமாம் வகீஉ அவர்கள் மக்காவிற்குப் புனிதப் பயணம் (ஹஜ்) சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், ஃபைத் என்ற இடத்தில் ஹிஜ்ரி 197-ம் ஆண்டு தனது 68-வது வயதில் மரணமடைந்தார். மாபெரும் அறிவுச் சுடரொன்று பாலைவனத்தில் அணைந்தது.

மெமரி பவர் எப்படி அதிகரிப்பது என்று இன்று நாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் தேடுகிறோம். பாதாம் பருப்புகளையும், மருந்துகளையும் நாடுகிறோம். ஆனால், இமாம் வகீஉ அவர்கள் காட்டிய வழிமுறை மிக எளிமையானது, ஆனால் ஆழமானது: "உன் கண்களையும், காதுகளையும், உள்ளத்தையும் பாவங்களை விட்டும் பாதுகாத்துக்கொள்; இறைவனின் அறிவுத் தானாக உன் நெஞ்சில் வந்து தங்கும்." இந்த ஒரு தத்துவத்தை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால், நம் உள்ளமும் ஒரு "பைத்துல் ஹிக்மா"வாக (அறிவு இல்லமாக) மாறும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamWaki #WakiIbnAlJarrah #Kufa #ImamShafii #HadithScholar #Memory #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

இப்னு ஹுனைப் (ரலி)


நட்பு என்பது அமைதியான காலங்களில் அளக்கப்படுவதில்லை. ஆபத்து சூழ்ந்து, மரணம் கண்முன் நிற்கும் போது யார் அருகில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அளக்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில், எத்தனையோ தோழர்கள் நபிகளாருக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், மரணம் மிக நெருங்கிய ஒரு சோதனைக் கட்டத்தில், அண்ணலாரைச் சுற்றி ஒரு மனிதக் கேடயமாக மாறி நின்ற அந்த ஈமானிய மலைகளில் ஒருவர்... மதீனாவின் அன்சாரித் தோழரான ஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரலி)

மதீனாவில் இஸ்லாம் நுழைந்த ஆரம்ப காலத்திலேயே, சத்தியத்தின் அழைப்பை ஏற்றுத் தன்னை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்தவர் ஸஹ்ல் (ரலி). அவரும் அவருடைய சகோதரர் உஸ்மான் இப்னு ஹுனைப் (ரலி) அவர்களும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த நேசம் அளப்பரியது. பத்ருக் களத்தில் ஒரு மாவீரனாகப் பங்கேற்றுச் சிறப்படைந்த ஸஹ்ல் (ரலி), தன் வாழ்வின் ஆகப்பெரிய தியாகத்தை உஹத் போர்க்களத்தில்தான் பதிவு செய்தார்.

உஹத் போர்க்களத்தின் அந்தப் பயங்கரமான கட்டத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எதிரிகளின் திடீர் தாக்குதலால் முஸ்லிம் படைகளின் வரிசை சிதறுகிறது. நாலாபுறமிருந்தும் அம்புகளும் வாள்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. அந்த இக்கட்டான நேரத்தில், நபிகளாரை விட்டுப் பிரிய மாட்டோம், உயிரே போனாலும் அவர்களைப் பாதுகாப்போம் என்று 'பையத்துல் மவ்த்' (மரண சாசனம்) செய்து நின்ற மிகச் சில தோழர்களில் ஸஹ்ல் (ரலி) முன்னணியில் நின்றார். ஸஹ்ல் (ரலி) ஒரு மிகச்சிறந்த வில்லாளி. நபிகளாரை நெருங்கும் எதிரிகளைத் தன் அம்புகளால் தடுத்து நிறுத்தினார். 

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த அம்புகளை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்து, "ஸஹ்லே! அம்பு எய்யுங்கள்!" என்று உற்சாகப்படுத்தினார்கள். எதிரிகளின் அம்புகள் தன் மீது பாய்ந்து உடலெங்கும் ரத்தம் வழிந்தபோதும், தன் உயிரினும் மேலான இறைத்தூதரின் மீது ஒரு சிறு கீறல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அசையாத மலையாக நின்று போரிட்ட அந்தத் தியாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!

நபிகளாரின் மரணத்திற்குப் பிறகும், நேர்வழி நின்ற கலீஃபாக்களுக்குப் பெரும் துணையாக இருந்தார். குறிப்பாக, அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ குழப்பங்கள் வந்தபோதும், சத்தியத்தின் பக்கம் உறுதியாக நின்றார். அலீ (ரலி) அவர்கள் இவரை மதீனாவிற்கும், பின்னர் சிரியாவிற்கும், பாரசீகத்திற்கும் ஆளுநராக (கவர்னராக) நியமித்து அழகு பார்த்தார்கள். ஹிஜ்ரி 38-ஆம் ஆண்டு... ஈராக்கின் கூஃபா நகரில் அந்த மாவீரரின் உயிர் பிரிந்தது. அவருடைய ஜனாஸா (உடல்) கொண்டு வரப்பட்டபோது, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீஃபாவான அலீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்கள். அந்தத் தொழுகையில் அலீ (ரலி) அவர்கள் ஐந்து அல்லது ஆறு 'தக்பீர்கள்' கூறினார்கள் (பொதுவாக நான்கு தக்பீர்கள் மட்டுமே கூறப்படும்).

தொழுகை முடிந்த பின் மக்கள் ஆச்சரியத்தோடு, அமீருல் முஃமினீன்! நீங்கள் ஏன் இத்தனை தக்பீர்கள் கூறினீர்கள்? என்று கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் கண்கலங்கியவாறு அளித்த அந்தப் பதில், ஸஹ்ல் (ரலி) அவர்களின் அந்தஸ்தை உலகிற்கு உணர்த்தியது. இவர் யார் தெரியுமா? இவர் பத்ருப் போர்க்களத்தில் பங்கேற்ற மாவீரர்! பத்ருத் தோழர்களுக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் தனிச் சிறப்பு இருக்கிறது!" என்று கூறித் தன் ஆருயிர் நண்பருக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். (முஸன்னப் இப்னு அபீ ஷைபா, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூல்களில் ஆதரப்பூர்வமான ஸனதில் பதிவு செய்யப்பட்டுள்ளது) 

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத போர்க்களத்தில், தன் தலைவனைப் பாதுகாக்கத் தன் நெஞ்சைக் கேடயமாகக் கொடுத்த ஸஹ்ல் (ரலி) அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? சோதனை காலங்களில் சத்தியத்தின் பக்கம் நாம் உறுதியாக நிற்கிறோமா? அல்லது சிறு லாபங்களுக்காகக் கொள்கைகளை விற்கிறோமா? பதவியும் அதிகாரமும் தேடி வந்தபோதும், இறுதி வரை ஈமானின் தூய்மையைக் காத்துக்கொண்ட ஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரலி) அவர்களின் தியாகத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #SahlIbnHunayf #BattleOfUhud #Sacrifice #AhlulBadr #AbdullahIbnuNaseerWriteups