பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு

ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு


ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி ஆண்டு' என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது.) இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

''நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ர­) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (நூல்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)
 
இந்தச் செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப் பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூ­ல் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபூபக்ர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்திலும்  நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரீ ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு,       3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.

இதில் நபிகளார் எப்போது பிறந்தார்கள்? எப்போது இறைத் தூதரானார்கள்? என்பதில் கருத்து வேறுபாடு இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)
 
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தி­ருந்தோ அவர்களுடைய மறைவி­ருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததி­ருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி­) நூல்: புகாரீ (3934)
 
உமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268)

அபூமூஸா (ரலி­) அவர்கள் உமர் (ர­லி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ர­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)

உமர் (ரலி­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளி­ருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி­) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி­) அவர்கள் செய்தார்கள்.  அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப்  நூல்: ஹாகிம் (4287)
 
நபிகளார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது; இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

முதல் மாதம் முஹர்ரம்
 
வருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தைக் கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைத் தேர்வு செய்தார்கள்.

எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி­) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள்.  ''ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)
 
இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

ஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம்
 
நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான்.  (அல்குர்ஆன் 9:108)
 
'இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை? என்ற கேள்விக்கு அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)
 
ஹிஜ்ரீ ஆண்டு பித்அத்தா?

நபி (ஸல்) அவர்களுக்கும் ஹிஜ்ரீ ஆண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; ஹிஜ்ரீ ஆண்டு உமர் (ரலி­) காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம்.

இதை அடிப்படையாக வைத்து மார்க்கத்தில் உமர் (ர­லி) அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி பித்அத்திற்கு ஆதாரமாக இதைக் காட்டுகிறார்கள். உமர் (ரலி­) அவர்கள் ஹிஜ்ரீ ஆண்டை ஏற்படுத்தியதன் மூலம் மார்க்கச் சட்டத்தில் எதையும் அதிகமாக்கி விடவில்லை. ஆண்டைக் கணக்கிடுவது என்பது மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல.

ஹிஜ்ரீ ஆண்டைப் பயன்படுத்து வோருக்கு அதிக நன்மை என்பதோ மற்ற ஆண்டைப் பயன்படுத்தினால் பாவம் என்பதோ மார்க்கத்தில் இல்லை. மேலும் உமர் (ர­லி) அவர்கள் வருடத்திற்கு 13 மாதங்கள் என்றோ மாதத்தில் 25 நாட்கள் என்றோ எதையும் புதிதாகச் செய்து விடவில்லை. எதி­ருந்து கணக்கிடுவது என்பதைத் தான் முடிவு செய்தார்கள். இதை ஆதாரமாக வைத்து பித்அத்தான காரியங்களைச் செய்யலாம் என்று கூறுவது தவறான வாதமாகும்.
 

No comments:

Post a Comment