பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்

படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்

பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டு தான் இருக்கிறான்.  இந்த வாழ்வு நெறி தேட­ல் சிலருக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகள் கிடைக்கப் பெற்று அதனைத் தன்னுடைய வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணங்களைப் பார்க்கும் போது, பரம்பரை முஸ்லிம்களாகிய நமக்கு அப்பொழுது தான் இஸ்லாத்தின் அருமையும் பெருமையும் புரிகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்கள் நமக்குப் பல படிப்பினைகளைத் தருகின்றன.


சொகுசாக வாழ பொருளாதாரத்தைத் தேடி வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகருக்கு வருகை தரும் பலர் தங்களுடைய மறுமை வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளும் விதமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர். 

அவர்களில் சிலரின் கருத்துக்களையும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ தூண்டுகோலாக இருந்தது எது? என்பதையும் துபை அரசாங்கத்தின் மூலமாக நடத்தப்படும் இஸ்லாமிய விவகார மற்றும் நற்செயல்கள் துறையின் www.dicd.ae என்ற வலைப்பக்கத்தில் வெளயிடப்பட்டுள்ளது. அவற்றில் கம்யூனிச நாடான சீனாவைச் சோந்த பெண்கள் இருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணம் மெய்சி­ர்க்க வைக்கிறது.

''நான் மத நம்பிக்கையில்லாமல் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது சீனாவில் ஒரு பகுதியில் பொழிந்து, மறு பகுதியில் பொழியாத இந்த வானத்தி­ருந்து பொழியும் மழையைப் படைத்தவன் யார்? என எப்பொழுதுமே நான் வியந்து கொண்டிருந்தேன்.  ஆச்சரியத்தக்க மற்றும் நம்ப முடியாத படைப்புகளைப் படைத்தவன் யார்?  இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது? மற்றும் பல கேள்விகள் (எனக்கு) பதிலளிக்கப்படாமல் இருந்தன. 

பிறகு நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் வணங்குவதற்காக ஒரு கடவுளின் அவசியத்தையும் தேவைகளுக்கு அந்தக் கடவுளை பிரார்த்திக்க வேண்டியதையும் யோசிக்க ஆரம்பித்தேன். படைத்தவனை அறியாமல் அவனை வழிபடாமல் மற்றும் அவனிடம் பிரார்த்திக்காமல் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது'' என்கிறார், மோனா என்கிற சகோதரி. ஈமான் என்கிற மற்றொரு சகோதரி இதே கருத்தை ஆமோதிக்கிறார்.

இதைத் தானே வல்ல ரஹ்மான் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.
''உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 67:30)

வானத்தை வலிமை மிக்கதாகப் படைத்தோம். நாம் பரவலான ஆற்றலுடையோராவோம். பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள். நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம். எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். (அல்குர்ஆன் 51:47 50)

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?) எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே! (அல்குர்ஆன் 88:17 21)

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா? (அல்குர்ஆன் 56:68 70)

''உங்களை வீணாகப் படைத்துள்ளோம்'' என்றும் ''நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள்'' என்றும் நினைத்து விட்டீர்களா? (அல்குர்ஆன் 23:115)

வல்ல ரஹ்மானின் படைப்புகளை பார்த்து அதைப் பற்றிச் சிந்தித்து ஈமான் கொள்ள வேண்டும் என வல்ல அல்லாஹ் திருமறையின் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.  அவனுடைய படைப்புகளைப் பற்றியும் சிந்திப்பதற்காகத் திருமறையில் பல இடங்களில் விளக்குகிறான்.  இவ்வாறு அவனுடைய படைப்புகளை உன்னிப்பாகக் கவனித்து ஈமான் கொண்ட இரு சகோதரிகளின் மன மாற்றத்தில் நமக்குப் பல படிப்பினைகள் உள்ளன.

அவற்றில் முக்கியமானது, ஏதோ வல்ல அல்லாஹ்வின் கருணையால் நமக்கு வம்சா வழியாக இஸ்லாம் எனும் அருட்கொடை கிடைத்து விட்டது என்று இருந்து விடாமல் நம்முடைய நம்பிக்கைகளில் இக்லாஸை (தூய்மையை) கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த நம்பிக்கை மறுமையில் பயன் தரும். 

''மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 99)

இரண்டாவதாக எப்படி இச்சகோதரிகள் இறைவனின் படைப்புகளைக் கொண்டு வல்ல ரஹ்மானின் ஆற்றலை உணர்ந்தார்களோ அதைப் போலவே நாமும் இறைவனின் படைப்புகளை ஈமான் கொள்ளாத மற்ற சகோதர சகோதரிகளுக்கு எடுத்துரைத்து அவர்களுக்கு சத்தியத்தைப் புரிய வைக்க வேண்டும்.

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவன் காட்டித் தந்த வழியில் வாழ அருள் செய்வானாக!

No comments:

Post a Comment