எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.
இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத்
தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்து அதன் மூலம் அவர்களது சிரமத்தை நீக்க வேண்டும்.
அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த எத்தனையோ நற்காரியங்களுக்கு கணக்கின்றி எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான். அது போன்று தர்மத்திற்கும் எண்ணற்ற பலன்கள் உண்டு. இப்பலனை அறியாத மக்கள் தர்மம் செய்வதை விட்டும் தள்ளிச் சென்று நிற்கின்றனர்.
''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதல் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1426
தேவைக்கு மிஞ்சியதில் தர்மம் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ள இந்த ஹதீஸை இன்றைய மக்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக மோசமான நிலையே நமக்குக் கிடைக்கின்றது.
கோடீஸ்வரனாகவும் பல இலட்சங்களுக்குச் சொந்தக்காரனாகவும் இருப்பவர்கள் கூட தன் செல்வத்தை வறுமையில் வாடுபவர்களுக்குக் கொடுக்காமல் ஆடம்பரச் செலவு செய்கின்றனர். இப்படியா இஸ்லாம் கூறுகின்றது? பசியில் இருப்பவனைத் தேடிச் சென்று உதவி செய்யச் சொல்கின்றது.
''ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5352
இதில் அல்லாஹ் நமக்குச் சொல்லக் கூடிய வார்த்தையைப் பாருங்கள். உன்னிடம் இருப்பதை நீ மற்றவர்களுக்குக் கொடுத்தால் உன் பசியை நான் போக்குவேன் என்கிறான். இது எவ்வளவு பெரிய வாக்குறுதி! இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்? அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்.
இந்த உலகில் நாம் நன்றாக வாழ்வதற்குத் தர்மம் வழிவகுப்பது போன்றே மறுமை வாழ்க்கையும் நன்றாக அமைய வழிவகுக்கின்றது.
மறுமை என்பது, மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் அடங்கி ஒடுங்கி பரிதாபத்துடன் நிற்கும் வாழ்க்கை! அவ்வாழ்க்கையின் கடுமைகளில் ஒன்று தான் வெப்பம்; வியர்வை! மனிதன் இவ்வுலகில் செய்த பாவத்திற்கேற்ப அவன் வியர்வையில் மூழ்கும் நேரம். இந்த நேரத்தில் அவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை! இந்நிலையில் அந்தக் கொடிய வெப்பத்தை விட்டும், வியர்வையை விட்டும் காப்பதற்கு ஹீரோ போல வந்து நிற்கப் போவது இந்தத் தர்மம்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
இத்துடன் தர்மத்தின் பலன்கள் நின்று விடுவதில்லை. அல்லாஹ் அதன் பலன்களை அள்ளி வழங்குகின்றான்.
''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி 1413, 6539
இதுவும் அல்லாஹ் நமக்குச் செய்யும் மிகப் பெரும் உதவி தான். நாம் அனைவருமே நரகத்திருந்து விடுதலை பெறுவதற்காகத் தான் அமல்கள் செய்கிறோம். அத்தகைய நரகத்திருந்து காக்கும் கேடயமாக தர்மம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், ''அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1442
வெள்ளிக்குப் பதில் யாரேனும் பவளத்தைக் கொடுப்பார்களா? ஆனால் நாம் செய்யும் சாதாரண தர்மத்திற்கு அல்லாஹ் மிகப் பெரும் கூயாக சிறப்பான மறுமை வாழ்வைத் தருகின்றான். எனவே இதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்தைப் பற்றி மறுமை நாளில் விசாரிப்பான்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 102:8
இந்த வசனத்தில் கூறப்படும் அருட்கொடை என்பது பொருட் செல்வம், மக்கட் செல்வம் என மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துச் செல்வங்களையும் குறிக்கும். இந்தச் செல்வங்களைக் குறித்து மறுமையில் இறைவன் விசாரிப்பான்.
எனவே இந்த அற்ப உலகில் ஆடம்பரமாகச் செலவு செய்வதை விட்டு விட்டு, வறுமையிலும் பசியிலும் வாழக்கூடிய மக்களுக்கு நாம் அதிகமதிகம் தர்மம் செய்து மறுமையில் நாம் அனைவரும் அல்லாஹ்வின் நிழல் ஒன்று கூடுவோமாக!
No comments:
Post a Comment