மண்ணறையிருந்து எழுப்பப்படுவர்களில் முதலாமவர்
''முதன் முதல் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவன் நானே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4575
மனிதர்களின் தலைவர்
''மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4575
சொர்க்கத்தின் கதவை முதன் முதல் தட்டுபவர்
''நானே மறுமை நாளில் இறைத் தூதர்களிலேயே அதிமானவர்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதல் தட்டுபவன் ஆவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 331
''நான் மறுமை நாளில் சொர்க்கத்தின் தலைவாயிலுக்குச் சென்று அதைத் திறக்கும்படி கோருவேன். அப்போது அதன் காவலர், நீங்கள் யார்? என்று கேட்பார். நான் முஹம்மத் என்பேன். அதற்கு அவர் 'உங்களுக்காவே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; உங்களுக்கு முன் வேறு யாருக்காவும் (சொர்க்க வாயிலை) நான் திறக்கலாகாது (எனப் பணிக்கப்பட்டுள்ளேன்)' என்று கூறுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 333
முதல் பரிந்துரை செய்பவர்
''நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 330
முதன் முதல் பரிந்துரை ஏற்கப்படுபவர்
''முதன் முதல் பரிந்துரை செய்பவனும் நானே! முதன் முதல் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4575
முதன் முதல் ஆடை அணிவிக்கப்படுபவர்
''நீங்கள் (மறுமை நாளில் கால்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, ''நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் வசனத்தை ஓதினார்கள்.
பிறகு ''மறுமை நாளில் முதன் முதலாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார்'' கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3349
முதல் விசாரிக்கப்படுபவர்கள்
''உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம். மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப்படுபவர்களாவும் இருப்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1552
''நாங்கள் இறுதி சமுதாயம். ஆனால் முதன் முதல் விசாரிக்கப்படுபவர்கள். 'எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயமும் அவர்களின் நபியும் எங்கே?' என்று கேட்கப்படும். நாங்கள் கடைசியானவர்கள்; ஆனால் (தகுதியில்) முந்தியவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: இப்னுமாஜா 4280
முதல் சொர்க்கம் செல்லும் சமுதாயம்
''நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும், மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதல் நுழைவோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1550
மனித உரிமையில் முதல் தீர்ப்பு
''(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி 6864
இறைக் கடமையில் முதல் கேள்வி
''(இறைகடமைகளில்) முதலாவதாக அடியானிடம் விசாரிக்கப்படுவது அவனது தொழுகை பற்றியதாகும். அதை அவன் முழுமைப்படுத்தியிருந்தால் (சரி!). இல்லையெனில், 'என் அடியானிடம் உபரியான வணக்கம் இருக்கிறதா? என்று பாருங்கள்' என்று அல்லாஹ் கூறுவான். 'உபரியான வணக்கம் அவனிடம் பெற்றுக் கொள்ளப்பட்டால் அதைக் கொண்டு கடமையானதை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ் கூறுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: நஸயீ 463
முதல் ஜுமுஆத் தொழுகை
நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் நடத்தப்பட்ட ஜுமுஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில் தான் முதன் முதலாக ஜுமுஆ நடந்தது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 892
முதன் முதல் சிலைகளுக்கு ஒட்டகத்தை நேர்ந்து விட்டவர்
குஸாஆ குலத்தைச் சார்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவரை நரகத்தில், தன் குடலை இழுத்துக் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதல் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து விட்டவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3521
இறைப் பாதையில் அம்பெய்த முதல் மனிதர்
''அல்லாஹ்வின் பாதையில் (இஸ்லாமியப் படையில்) அம்பெய்த அரபியரில் நானே முதலாமவன்'' என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம் 5674
நபிகளாரை மகிவிழ்த்த முதல் தர்மம்
நான் (ஒரு முறை) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்ற போது அவர்கள் என்னிடம் ''நபி (ஸல்) அவர்களின் முகத்தையும் அவர்களுடைய தோழர்களின் முகங்களையும் (மகிழ்ச்சியால்) வெண்மையாக்கிய முதலாவது தர்மப் பொருட்கள், தய்யீ குலத்தார் அளித்ததாகும். அதை நீங்கள் தான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: முஸ்லிம் 4942
முஹாஜிர்களில் முதலாமானவர்கள்
எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதன் முதல் வருகை தந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் தாம். பிறகு எங்களிடம் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் வந்தனர். அறிவிப்பவர்: பரா (ரலி) நூல்: புகாரி 3924
சொர்க்கம் செல்லும் முதல் அணியினரின் தோற்றம்
''சொர்க்கத்தில் முதலாவதாக நுழைக்கின்ற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரன் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தந்கத்தாலானவையாக இருக்கும். அவர்களுடைய (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களுடைய தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களுடைய வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு துணைவியர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் மஜ்ஜை (கான் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3245
சொர்க்கத்தின் முதல் உணவு
''சொர்க்கவாசிகளில் முதல் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 3329
இஸ்லாத்தை முதன் முதல் வெளிப்படுத்தியவர்கள்
முதன் முதல் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவர்கள் ஏழு நபர்களாவர். 1. நபி (ஸல்) அவர்கள், 2.அபூபக்ர் (ரலி), 3.அம்மார் (ரலி) 4. சுமைய்யா (ரலி), 5. ஸுஹைப் (ரலி), 6. பிலால் (ரலி), 7. மிக்தாம் (ரலி) அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: இப்னு மாஜா 147
(அன்னை கதீஜா (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதற்கு வேறு செய்திகளில் ஆதாரம் இருக்கிறது.)
முதல் வஹீ
நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பாக வந்த(வஹீயான)து உண்மைக் கனவுகளே ஆகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4956
மறுமையில் மயக்கம் தெளிந்து எழுபவர்களில் முதலாமவர்
(மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா (அலை) அவர்கள், இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா? அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா? என்று எனக்குத் தெரியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3408
உலகின் முதல் இறையில்லம்
நான், ''அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?'' என்று கேட்டேன். அவர்கள். ''அல்மஸ்ஜிதுல் ஹராம் இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 3366
ஹிஜ்ரத்திற்குப் பிறகு மதீனாவில் பிறந்த முதல் குழந்தை
நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனை பெற்றெடுத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன்.
பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்து தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து இறைவனிடம் அருள் வளம் வேண்டினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். அறிவிப்பவர்: அஸ்மா (ரலி) நூல்: புகாரி 3909
பனூ இஸ்ராயில்களின் முதல் குழப்பம்
''இவ்வுலகத்தின் சோதனையிருந்தும் பெண்களின் சோதனையிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5292
No comments:
Post a Comment