பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

வறுமை / ஏழ்மை

வறுமை / ஏழ்மை


''ஏழ்மை'' ''வறுமை'' போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப் படுகிறது. நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழ வேண்டும், நமக்கு எந்தச் சோதனைகளும் ஏற்படவே கூடாது என்று தான் அனைவரும்  நினைக்கின்றனர்.இன்றைக்கு உலகில் நடைபெறும் கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை, அதிகமான செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயரில் வட்டி மூஸாக்கள் பிறர் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதற்குக் காரணமும் இந்த வறுமையைப் பற்றிய பயம் தான்.

பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அதிகமான பெற்றோர்களின் முகங்கள் வாடி விடுகின்றன. சில இடங்களில் வயிற்றில் பெண் குழந்தை கருவுற்றிருக்கிறது என்று தெரிந்து விட்டாலே கருவிலேயே சிசுவை அழிக்கக் கூடிய மாபாதகச் செய­ல் இறங்கி விடுகின்றனர்.

இன்னும் சிலர் பிறந்த உடனேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் உயிரோடு மாய்த்து விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? நாம் ஏழையாக இருக்கின்றோமே, இவள் வளர்ந்து ஆளாகி விட்டால் வரதட்சணை கொடுப்பதற்கு எங்கே செல்வது? என்ற பயம் தான்.

ஏழைப் பெண் என்றால் அவளுடைய கற்பிற்கே பாதுகாப்பில்லாத பயங்கரவாத நிலைமை இன்றைக்கு உலகை ஆட்டிப் படைக்கிறது. அன்று முதல் இன்று வரை வ­யவனுக்கு ஒரு நீதி, எளியவனுக்கு ஒரு நீதி என்ற வகையில் நீதி விலை பேசப்படுகிறது.

பெண்கள் தங்களுடைய வெட்கம், மானங்களையெல்லாம் இழந்து, கற்பை விலைபேசி விபச்சாரத் தொழி­ல் ஈடுபடுவதற்குக் காரணமும் இந்த வறுமையின் கோரத் தாண்டவம் தான்.
இப்படி வறுமை பல விதங்களில்  இந்த மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது. இப்படி வறுமையின் மூலம் அச்சுறுத்தி மனித சமுதாயத்தை வழிகெடுத்து, தவறான காரியங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடியவன் அல்லாஹ்வுடைய எதிரியாகிய ஷைத்தான் தான். இறைவன் இதனை தன் திருமறையில் தெளிவாகக் கூறுகின்றான்.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268)
 
இந்த வறுமையின் காரணமாக இந்த மனித சமுதாயம் தடம் புரண்டு விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உறுதியான நம்பிக்கை
 
செல்வம் வரும் போது தடம் புரண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், வறுமை வரும் போது சோர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் உறுதியான நம்பிக்கையை நம்முடைய மனதில் பதிய வைக்கிறது. அதாவது செல்வத்தைத் தருபவனும், வறுமையைத் தருபவனும் இறைவன் தான் என்பதை உறுதியாக நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சி யடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை  (6:26)
 
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
 
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:37)
 
எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்கு வோரில் சிறந்தவன் என்று கூறுவீராக! (34:39)
 
வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (42:12)
 
அதாவது செல்வத்தையும், வறுமையையும் தருபவன் இறைவன் தான் என்ற உண்மையை ஆணித் தரமாக மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

ஒவ்வொரு மனிதனும் இதனைத் தன்னுடைய மனதில் பதிய வைத்துக் கொண்டான் என்றால் செல்வம் வரும் போது வரம்பு மீறவும் மாட்டான். வறுமையின் காரணமாக தடம் புரளவும் மாட்டான்.

இறை நம்பிக்கையின் அடையாளம் வறுமை
 
அல்லாஹ் தனது அடியார்களை, அவர்கள் தன் மீது எந்த அளவிற்கு உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று பரீட்சிப்பதற்காக வறுமையின் மூலமும் சோதிப்பான்.

இப்படிப்பட்ட சோதனைகளில் பொறுமையைக் கையாண்டு, உறுதியோடு, நெறி தவறாமல் உண்மை வழியில் நடப்பது தான் நமக்கு மறுமையில் சுவன பாக்கியத்தைப் பெற்றுத் தரும். அல்லாஹ் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  (2:155)

வறுமையான காலகட்டங்களில் பொறுமையைக் கடைபிடிப்பது தான் உண்மையான இறை நம்பிக்கையாளர் களுக்குரிய பண்பாகும். இதையும் திருமறைக் குர்ஆன் தெளிவு படுத்துகிறது. ....வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (2:177)
 
அபூ ஸயீத் (ர­லி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அபூ ஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியி­ருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத்(ர­லி) நூல்: அஹ்மத் 10952
 
அல்லாஹ்வை நம்பியவர்கள் வறுமையால் சோதிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களும் நபி மொழியும் நமக்குத் தெளிவு படுத்துகின்றன. எத்தனையோ நபிமார்கள் இந்த வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

நபி யாகூப் (அலை) அவர்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையின் காரணமாக தன்னுடைய மகன்களை அருகிலுள்ள நாட்டின் மன்னரிடம் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பியதாக திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். ''அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்கு களையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக! எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ் கூ­ வழங்குவான்'' என்றனர். (12:86)
 
நபிமார்களே தங்களுடைய வறுமையை நீக்க முடியவில்லை எனும் போது எந்த அவ்­யாக்களுக்கும் இந்த ஆற்றல் இல்லை என்பதையும்  நாம் இதி­ருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் மக்கள் இதை விளங்காமல் சமாதிகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வறுமை நீங்குவதற்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். இது நிச்சயமாக நிரந்தர நரகத்தில் தள்ளக் கூடிய இணை வைப்புக் காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அருமை ஸஹாபாக்களும் கூட வறுமையின் மூலம் சோதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.

ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ரலி­) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன.  அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். நூல்: புகாரி 4913

ஒரு முஸ்லி­ம் மறுமை வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு தான் வாழ வேண்டும். இவ்வுலகத்தில் ஏற்படக் கூடிய கஷ்டங்களை மறுமையில் கிடைக்கவிருக்கும் சுவன வாழ்விற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் நபியவர்களின் வாழ்வு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நபியவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால் அவர்கள் எந்த அளவிற்கு வறுமை நிலையில் இருந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை. (பார்க்க: புகாரி 2567)

நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒரு தடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. (புகாரி 5373)
 
நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். (புகாரி 2069)
 
நபியவர்கள் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறே நபியவர்களோடு அபூபக்கர்(ரலி­), உமர் (ரலி­) அவர்களும் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள் என்ற சம்பவத்தை நாம் புகாரி (3799) யில் காணலாம்.
 
இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை நாம் கூறிக் கொண்டே போகலாம். இந்தச் சம்பவங்களெல்லாம் ஒரு இறை நம்பிக்கையாளன் வறுமை ஏற்பட்டாலும் சத்திய நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்கு அழகிய முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன.

ஏழைகளே இவ்வுலகில் சிறந்தவர்கள்
 
மக்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வதற்கும், பகைமை கொள்வதற்கும் செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசை தான் காரணமாக அமைகின்றது. அல்லாஹ்வுடைய பள்ளி வாசல்களைக் கூட, எங்களுடைய சொத்து என்று சொல்­க் கொண்டு இழுத்து மூடக்கூடிய கயவர்களும் இன்றைக்கு அதிகமாகி விட்டார்கள். இறைவன் அளித்ததைப் பொருந்திக் கொண்டு, போதுமென்ற மனதோடு வாழ்வது தான் மார்க்கத்திற்கு முரணில்லாத வாழ்க்கை வாழ்வதற்குத் துணை புரியக் கூடியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட்டு, அவர்களை அது அழித்து விட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்''  அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா(ரலி­) நூல்: புகாரி 3158
 
இதன் காரணமாகத் தான் நபியவர்கள் பணக்காரர்களை விட ஏழைகளைச் சிறப்பித்து பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

சஹ்ல் பின் ஸஅத் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ''இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்­லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி      நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள்.  நூல்: புகாரி 5091
 
ஏழ்மை நிலை தான் ஒருவன் பாவமான காரியங்கள் செய்யாமல் ஈமானோடு வாழ்வதற்குத் துணை புரிகிறது. செல்வ நிலையில் உள்ள அதிகமானவர்கள் மார்க்கத்தின் அடிப்படையில் கட்டுப்பாடோடு வாழ்தல் என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் பணக்காரர்கள் இந்த உலகம் நிரம்ப இருப்பதை விட ஈமானோடு வாழக்கூடிய ஒரு ஏழை சிறந்தவன் என சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்''  அறிவிப்பவர்: இம்ரான் பின்  ஹுஸைன் (ர­லி) நூல்: புகாரி 3241
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்'' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: திர்மிதி 2276  
 
ஏழைகள் மறுமையில் முத­ல் சுவனம் செல்லக் கூடியவர்கள். ஏழைகளைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் சிறப்புகள் இல்லை. இவ்வுலக வாழ்க்கை என்பது அழியக்கூடியது. நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து இவ்வுலகில் நமக்கு ஏற்படும் வறுமை, நோய் நொடிகள் போன்ற சோதனைகளை நாம் நேர்வழி தவறாமல் சகித்துக் கொள்வோம் என்றால் நிச்சயமாக மறுமையில் சுவனம் என்ற மிகப்பெரும் பேற்றை நாம் அடைந்து கொள்ளலாம். திண்ணை ஸஹாபாக்களின் வாழ்வும் இதற்கொரு சான்றாகும்.

ஃபழாலா பின் உபைத் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ''இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்'' என்று கூறுவார்கள். நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ''அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்'' என்று கூறுவார்கள்.  நூல்: திர்மிதி 2291 
 
எனவே வறுமை என்பது நமக்கொரு வரப்பிரசாதம் என்பதை உணர்ந்து சத்திய நெறி தவறாமல் வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
 

No comments:

Post a Comment