பல விஷயங்களை இலக்காகக் கொண்டு வாழும் நாம் நமது விருப்பங்களை அடைவதற்காக அல்லும் பகலுமாகப் பாடுபட்டு வருகிறோம். இந்நேரத்தில் நமது குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாக ஏதாவது நடந்து விட்டால் தலை வெடிக்கின்ற அளவிற்கு நம்மைக் கவலை கவ்விக் கொள்கிறது. முட்டுக்கட்டையைக் களைவதில் முனைப்புடன் செயல்படுகிறோம்.
நேசித்த பொருள் கை நழுவிச் சென்றால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாலய சிரமத்திற்குப் பின் நாடியது கிடைத்தால் ஆனந்த வெள்ளம் கண்களில் வெளிப்படுகிறது. இது போன்ற கவலைகள் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வருகிறது.
ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் பிரத்யேகமாக இருக்க வேண்டிய கவலைகளும் உள்ளன. நாம் ஆன்மீக ரீதியில் பண்பட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றியைப் பெறுவதற்கு அவசியமான சில கண்ணீர் சொட்டுகளும் இருக்கின்றன.
அற்பமான விஷயங்களுக்குக் கண்ணீர்த் துளிகளை செலவழிக்கும் நம் சமுதாயம் நல்ல வழிகளில் அதைச் செலவழித்தால் பண்பட்ட சமுதாயமாக நிச்சயம் விளங்கும். எனவே பயனுள்ள கவலை எது? என்ற கேள்விக்கான விடையை இத்தொடரில் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்.
குர்ஆனைச் செவியேற்று அழுதல்
குர்ஆன் கூறும் கருத்துக்களை உணர்ந்து படிப்பவர்களால் நிச்சயமாக அழாமல் இருக்க முடியாது. படிப்பவரின் உள்ளத்தை நெகிழச் செய்யும் ஆற்றல் திருக்குர்ஆனுக்கு அதிகமாகவே உள்ளது. முரடர்கள் மற்றும் வீரர்கள் அழுவதை நம்மால் எளிதில் பார்க்க முடியாது.
ஆனால் திருக்குர்ஆனைப் படித்து ஒருவர் அழுவதற்கு வீரமோ, முரட்டுத்தனமோ ஒரு போதும் தடையாக இருக்காது. இறை நம்பிக்கை ஒன்று இருந்தால் அவர் எவ்வளவு பெரிய வீரராக, பலசாயாக இருந்தாலும் அவரை அழ வைக்கும் ஆற்றல் திருக்குர்ஆனுக்கு உள்ளது.
வாழ்க்கையில் நொந்தவர்கள் திருக்குர்ஆனைப் படித்தால் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்குக் களிம்பு தடவி ஆறுதல் கூறும் அற்புத வேதம் திருக்குர்ஆன்! அக்கிரமங்களில் ஈடுபடுபவர்கள் திருக்குர்ஆனைப் படித்தால் அவர்களை எச்சரிக்கும் எழில் மறை வேதமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. எனவே தான், இதன் பொருளை உணர்ந்து படிக்கும் போது நல்லடியார்களுக்குக் கண்ணீர் வந்து விடுகிறது.
அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள். அல்குர்ஆன் 19:58
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர். அல்குர்ஆன் 5:83
மாவீரர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களைக் கேட்டு அழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான், ''உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.
''(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?'' எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் ''நிறுத்துங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 4582
உலத்திற்குக் குர்ஆனை போதித்த நபி (ஸல்) அவர்கள் பிறர் ஓதுவதைத் தம்முடைய செவியால் கேட்டு மகிழ வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். தமது சமுதாயத்தின் நிலை என்னவாகுமோ என்ற கவலையில் அழுதுள்ளார்கள்.
நாம் என்றைக்காவது பிறருடைய ஓதுதலைக் கேட்டு அழுதுள்ளோமா? நமது நிலையை நினைத்தாவது கவலைப்பட்டுள்ளோமா? நம்மைச் சுற்றி வாழும் மக்களின் நிலை மறுமையில் என்னவாகும் என்ற கவலை நமக்கு எழுந்துள்ளதா? இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
தொழுகையில் நாம் எதை ஓதுகிறோம்? அதன் பொருளென்ன? என்று விளங்காமல் பலர் தொழுது கொண்டிருக்கிறோம். வசனங்களின் பொருள் தெரியாத காரணத்தினால் தான் நமது தொழுகை உள்ளச்சத்துடன் அமைவதில்லை. வசனங்களைக் கேட்கும் போது அழுகையும் வருவதில்லை.
பொருள் தெரியாவிட்டாலும் நாம் செய்த தீமைகளையும், அருளாளனின் அளவற்ற கருணையையும் மனக்கண் முன் கொண்டு வந்தால் கல் நெஞ்சம் கூட கரைந்து விடும். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறோம் என்ற பயம் ஒன்றே நமக்கு அழுகையை வரவழைத்து விடும். ஆனால் இந்த விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க விடாமல் ஷைத்தான் நம்மைத் தடுத்துக் கொண்டிருக்கிறான்.
நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சிருந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதாவது அழுது கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீர் (ரலி) நூல்: நஸயீ 1199
நபி (ஸல்) அவர்கள் இறந்த போது உமர் (ரலி) அவர்கள் உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்கள் இன்னும் இறக்கவில்லை என்றே நினைத்தார்கள். துக்கம் தலைக்கு ஏறும் போது சரியான முடிவைப் பெரும்பாலானவர்கள் எடுக்க மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மரண விஷயத்தில் மக்களெல்லாம் தடுமாறிய நேரத்தில் அபூபக்கர் (ர) அவர்கள் எந்த விதமான சலனத்திற்கும் ஆளாகாமல் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று மக்களுக்குப் புரிய வைத்தார்கள்.
இவ்வளவு உறுதியும் மன வமையும் கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆர் வசனங்களைக் கேட்கும் போது கடுமையாக அழுபவர்களாக இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) திருக்குர்ஆன் வசனத்தை ஓதி அழுவது தங்களுடைய மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளை இஸ்லாத்திற்கு மதம் மாறச் செய்து விடுமோ என்று இணை வைப்பாளர்கள் பயந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) க்கு இப்னு தஃகினா அடைக்கலம் தருவதாகக் கூறியதைக் கேட்ட குறைஷிகள், இப்னு தஃகினாவை நோக்கி, ''அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ தொழவோ தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் இவரது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதை அவரிடம் கூறிவிடுங்கள்'' என்று கூறினார்கள்.
அதன்படி அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியே ஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்று யோசனை தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.
அப்போது இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) யைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக்கூடியவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகிய மனம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணை வைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2297
ஒரு சமுதாயமே தவறான கருத்தில் இருக்கும் போது அவர்களைக் கட்டுப்படுத்திய அபூபக்கர் (ரலி) அவர்களால், குர்ஆனை ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இறைவனுடைய பயத்தால் அவரையும் மீறிக் கொண்டு கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. இந்தப் பாக்கியத்தை நம்மில் எத்தனை பேர் பெற்றிருக்கிறோம்?
பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, தினந்தோறும் பல வசனங்களை ஓதிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கும் நாம் குர்ஆனைப் படித்துக் கண் கலங்குவதில்லை.
நஜ்ஜாஷி என்ற அபீசீனிய நாட்டு மன்னர் கிறித்தவராக இருந்தார். அவருடைய அவையில் பல கிறித்தவப் பாதிரியார்களும் இருந்தார்கள். நபித்தோழர்கள் அவர்களிடத்தில் குர்ஆனைப் படித்துக் காட்டிய போது, தாடி நினைகின்ற அளவிற்கு அம்மன்னர் அழுததாக வரலாறு கூறுகிறது.
ஜஃபர் (ரலி) அவர்களிடத்தில் நஜ்ஜாஷி மன்னர், ''முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்திருந்து கொண்டு வந்த ஏதாவது செய்தி உம்மிடம் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு ஜஅஃபர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். அதை எனக்கு ஓதிக் காட்டுங்கள் என்று நஜ்ஜாஷி கூறினார்.
ஜஅஃபர் (ரலி) அவர்கள், 'காஃப், ஹா, யா, அய்ன், ஸாத்' என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தை ஓதிக் காட்டினார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நஜ்ஜாஷி தன்னுடைய தாடி நனைகின்ற அளவிற்கு அழுதார். ஜஅஃபர் (ரலி) அவர்கள் ஓதிக் காட்டியதைக் கேட்ட போது அவருடைய பாதிரிமார்களும் ஏடுகள் நனைகின்ற அளவிற்கு அழுதார்கள். பின்பு நஜ்ஜாஷி கூறினார்: இதுவும் (குர்ஆனும்) மூஸா கொண்டு வந்த வேதமும் ஒரே அடிப்படையைக் கொண்டதாக உள்ளது. அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: அஹ்மத் 21460
தீயவர்களுக்கு இறைவன் ஏற்பாடு செய்திருக்கும் நரகத்தை நினைவில் கொண்டு வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் விவரித்த நரகத் தண்டனைகளை சிந்தனைக்குக் கொண்டு வர வேண்டும். இதன் பின் நாம் செய்த பெரிய, சிறிய பாவங்களை எண்ணிப் பார்த்து இறைவனை பயப்பட வேண்டும். இந்தப் பயம் கண்டிப்பாக நம்மை மேலும் மேலும் தவறு செய்ய விடாது. ஈமானை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இறைவனின் பயம் சிறந்த ஒன்றாகும்.
நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். அல்குர்ஆன் 8:2
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள். அல்குர்ஆன் 57:16
மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்படும். இந்த உலகத்தில் வாழும் போது அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் வடித்திருந்தால் கொளுத்தும் அந்த வெயில் அல்லாஹ்வின் சிம்மாசனத்திற்குக் கீழே நிழல் பெற ஒதுங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அல்லாஹ்வை நினைத்து அழுததின் மதிப்பும் மகத்துவமும் அந்த இக்கட்டான நாளில் தான் புரியவரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலைநாட்டும் அரசன், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்புபடுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
இறைவனுடைய பயத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள், இடங்களைக் கண்டால் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இந்த இடங்களுக்குச் செல்ல நேர்ந்தாலும் பயந்து நடுங்கியவர்களாகவே செல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 433
மரண பயத்தை ஏற்படுத்துவதற்காக மண்ணறைகளுக்கு நாம் சென்று வர வேண்டும் என்று இஸ்லாம் நமக்குப் போதிக்கிறது. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் கப்ரில் வழங்கப்படும் தண்டனைகளை நினைத்து அழுவார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் தமது தாடி நனைகின்ற அளவிற்கு அழுவார்கள். ''சொர்க்கம், நரகத்தைப் பற்றிச் சொல்லப்படும் போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் இதற்காக (மண்ணறைக்கு வந்தால்) அழுகிறீர்களே!'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ''மண்ணறை என்பது மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் அடியான் தப்பித்து விட்டால் இதற்குப் பின்பு உள்ள (நிலை) இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றி பெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள (நிலை) இதை விடக் கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் (நடக்கும்) காட்சியை விட மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் பார்க்கவில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்) நூல்: திர்மிதி 2230
பிறர் சிரமப்படும் போது கவலைப்படுதல்
நமக்கருகில் வாழ்ந்து வந்த ஒரு முஸ்மிற்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் உடனே நாம் கவலைக்குள்ளாக வேண்டும். நம்மால் இயன்றால் அவருக்கு ஏற்பட்ட அந்தத் துன்பத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்நேரத்தில் சகோதரனின் நலனில் எந்தவிதமான அக்கரையும் காட்டாமல் உதாசீனப்படுத்துவது இறை நம்பிக்கையாளருக்கு அழகல்ல!
அழுகை வராவிட்டாலும் அழுவதைப் போன்று நடிக்க வேண்டும் என்று பின்வரும் செய்தி உணர்த்துகிறது. நீண்ட ஹதீஸின் ஒரு சிறு பகுதி தான் இந்த செய்தி!
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களுடைய தோழரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேன்'' என்று கூறினேன். நூல்: முஸ்லிம் 3621
நல்ல காரியம் தவறியதற்காக அழுதல்
ஏராளமான நன்மைகளை சம்பாதிப்பதற்குப் பல வழிகளை நம் மார்க்கம் நமக்கு சொல்த் தருகின்றது. சில விஷயங்களை கண்டிப்பாகச் செய்தாக வேண்டும் என்று கட்டளையும் இடுகிறது. ஆனால் நம்மீது விதியாக்கப்பட்ட காரியத்தை நாம் செய்யத் தவறியதற்காக என்றைக்காவது பலத்த கவலையில் யாராவது ஆழ்ந்திருப்போமா?
அற்ப விஷயங்களை இழந்ததற்காக அழுகின்ற நாம், சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நற்காரியத்தை செய்யத் தவறியதற்காக என்றைக்காவது அழுதிருக்கிறோமா? ஆனால் நற்காரியங்கள் புரிவது மறுமை வாழ்க்கைக்கு லாபகரமாக அமையும் என்று நபித்தோழர்கள் உறுதியாக நம்பிய காரணத்தினால் தம்மால் நற்செயலைச் செய்ய முடியாமல் போகும் போது கண்ணீர் விட்டு அழுபவர்களாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போரில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் வாகன வசதி இல்லாத காரணத்தினால் வாகனம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் அவர்களிடம் வந்த நபித்தோழர்கள் அழுது கொண்டு திரும்பிச் சென்றார்கள். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் ''உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை'' என்று நீர் கூறிய போது, (நல் வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை. அல்குர்ஆன் 9:92
நல்லவற்றைச் செய்ய வாய்ப்புகள் கிடைக்காத போது, செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களைத் தாக்கியது. இன்றைக்கு நன்மைகள் புரிவதற்குப் பல வழிகள் இருந்தும், வாய்ப்புகளை தாராளமாகப் பெற்றிருந்தும் நன்மைகளைக் கொள்ளையடிப்பதற்கு நாம் பேராசைப்படுவதில்லை. நபித்தோழர்களிடம் இருந்த கவலையும் பேராசையும் நம்மிடம் வந்து விட்டால் இஸ்லாத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் மக்களாக நாம் மாறிவிடுவோம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. தாம் ஹஜ் செய்வதற்கு மாதவிடாய் தடையாய் அமைந்து விட்டதோ என்று நினைத்து அழுதார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ''உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?'' என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன். ''இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாஹ்வை தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்து கொள்'' என்று சொல் விட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 294
குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தினமும் பத்திரிகைகளையும் தேவையற்ற புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறோம். இவ்விரு அற்புதத்தைப் படிக்காமல் காலத்தை வீணாக்கியதற்காக என்றைக்காவது நாம் கவலைப்பட்டிருப்போமா?
ஆனால் உம்மு அய்மன் என்ற நபித்தோழியர் கவலைப்பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அல்லாஹ்வின் புறத்திருந்து உபதேசங்கள் வஹீயின் மூலமாக வந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு வஹீ வரும் வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்பது தான் அவர்களின் கவலை!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பின்னால் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ''என்னை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றதைப் போல் நாமும் அவர்களை சந்திக்கச் செல்வோம்'' என்று கூறினார்கள். நாங்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் வந்த போது அவர்கள் அழுது விட்டார்கள்.
அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம், ''ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்விடம் உள்ளவை நபி (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாக இருக்கும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்விடம் உள்ளது தான் அல்லாஹ்வின் தூதருக்குச் சிறந்ததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் நான் அழவில்லை.
மாறாக இறைச் செய்தி வானத்திருந்து (வருவது) முடிவுற்று விட்டது என்பதால் தான் அழுகிறேன்'' என்று கூறினார்கள். உம்மு அய்மன் (ரலி) அவர்கள் அபூபக்ரையும் உமரையும் அழ வைத்து விட்டார்கள். உம்மு அய்மன் (ரலி) அவர்களுடன் சேர்ந்து அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4492
மார்க்கம் தடை செய்த விஷயங்கள் நமக்குத் தெளிவாகத் தெரிந்தும் கூட துணிச்சலாக எந்த விதமான இறைபயமும் இல்லாமல் அந்தக் காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். தடுக்கப்பட்ட காரியங்களை செய்வதற்குப் பிறர் அழைக்கும் போது அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறோம். நாம் இந்தக் குற்றத்தைச் செய்வது போதாதென்று நல்ல நண்பர்களையும் இந்தக் காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்கிறோம். பின்வரும் சம்பவம் நாம் படிப்பினை பெற்று திருந்திக் கொள்வதற்குச் சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப் பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
அப்போது அவர்களிடம், ''ஏன் விரைவாக அதைக் கழற்றி விட்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அதை அணிய வேண்டாம் என ஜிப்ரீல் என்னைத் தடுத்து விட்டார்'' என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் அழுது கொண்டே வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு இதை நான் தரவில்லை. இதை நீங்கள் விற்றுக் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன்'' என்று சொன்னார்கள். எனவே அதை உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்று விட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 4207
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை வெறுத்திருக்கும் போது அதை நாம் எப்படிச் செய்ய முடியும் என்று உமர் (ர) அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அழுகை கூட வந்து விடுகிறது. பல விஷயங்களில் நபிவழிக்கு மாற்றமாகச் செயல்படும் நம் மக்கள் உமர் (ரலி) அவர்களிடம் படிப்பினை பெற வேண்டும்.
உபதேசங்களைக் கேட்கும் போது நமது ஈமான் கூடுகிறது. வேறு வேலைகளில் ஈடுபடும் போது நமது கவனம் பெரும்பாலும் மார்க்க விஷயங்களைப் பற்றியதாக இருக்காது. இது போன்ற நிலை நபித்தோழர்களுக்கும் வந்தது. நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது மார்க்க சம்பந்தமான சிந்தனைகளில் திளைத்திருப்பார்கள். தங்கள் வீடுகளுக்குச் சென்றால் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது ஒரு விதமாகவும், வீட்டிற்குச் சென்றால் இன்னொரு விதமாகவும் நடந்து கொள்வது நயவஞ்சகத்தனம் என்று சிலர் கருதினார்கள். ஆகையால் தூய்மையான இறை நம்பிக்கையாளர்களாக அவர்கள் இருந்தும் கூட தங்களை நயவஞ்சகர்கள் என்று சொல்லிக் கொண்டு கவலையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தமது மார்க்கத்தின் மீது எல்லையில்லா அக்கறை இவர்களுக்கு இருந்த காரணத்தால் தான் இந்தக் கவலை ஏற்பட்டது.
ஹன்ளலா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ''ஹன்ளலாவே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நான், ''ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது அவர்கள் நமக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம்.
வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம்.
நான், ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடம் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டால் மனைவி மக்களுடன் விளையாட ஆரம்பித்து விடுகிறோம்.
வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறை தியானத்திலும் நீங்கள் எப்போதும் திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடம் கை கொடுப்பார்கள்.
எனவே ஹன்ளலாவே! சிறிது நேரம் (மார்க்க விஷயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்)'' என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: ஹன்ளலா (ரலி) நூல்: முஸ்லிம் 4937
அபூபக்ர் மற்றும் ஹன்ளலா (ரலி) அவர்களிடம் இருந்த மார்க்கக் கவலையைப் போன்று நமக்கும் இருந்தால் மார்க்கம் வழியுறுத்தும் சிறு சிறு நல்லறங்களைக் கூட விட்டுவிட மாட்டோம்.
நபித்தோழர்கள் இஸ்லாத்திற்காகத் தங்களது சொந்த ஊரான மக்காவை துறந்து விட்டு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். இறைவனுக்காக அவர்கள் இந்தத் தியாகத்தைச் செய்தார்கள். பின்பு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. என்றாலும் மறுபடியும் மக்காவை சொந்த ஊராக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் இவர்களுக்குப் போடப்பட்டது.
மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்த தியாகிகளில் சஃத் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் மக்காவில் கடுமையான நோய்க்குள்ளாகி மரணத் தறுவாயில் இருந்தார்கள். இந்த நிலையில் பயணம் செய்து சொந்த ஊராக ஆக்கிக் கொண்ட மதீனாவிற்கும் இவர்களால் செல்ல முடியவில்லை. மக்காவிலே தங்கி இறந்து விட்டால் நாம் செய்த ஹிஜ்ரத் என்ற தியாகத்தை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டானோ என்ற கவலை அவர்களுக்கு மேலோங்கியது.
பிறந்த மண்ணில் இறப்பதற்குத் தான் அதிகமானோர் ஆசைப்படுவார்கள். ஆனால் சஃத் (ரலி) அவர்கள் பிறந்த ஊர் மக்காவாக இருந்த போதிலும் மதீனாவில் மரணிக்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். மரண நேரத்தில் தான் செய்த நற்காரியம் அழிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் புழுவாய் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள்.
நாம் செய்கின்ற நல்லறங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறைவான நல்லறங்களை அழிக்கும் தீய காரியங்களை நிறைவாக செய்து கொண்டிருக்கிறோம். ஆவலுடன், சிரமத்துடன் சமைக்கப்பட்ட உணவு மண்ணில் கொட்டி விட்டால் எவ்வளவு கவலை ஏற்படுமோ அது போன்ற கவலை, சஃத் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதைப் போல் நமக்கும் ஏற்பட்டால் வெற்றி நிச்சயம்.
சஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (உடல் நவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், ''சஃத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற இந்த மண்ணிலேயே (மக்காவிலேயே) இறந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இறைவா! சஃதுக்குக் குணமளிப்பாயாக! சஃதுக்கு குணமளிப்பாயாக!'' என மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நூல்: முஸ்லிம் 3352
குர்ஆன் ஹதீஸை சரியாகப் புரிந்து, முறையாக வாழ்பவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படை கூடத் தெரியாமல் மூட நம்பிக்கைகளில் திளைத்த மக்கள் ஏராளம். அறீவீனத்தால் தவறான காரியங்களில் இவர்கள் ஈடுபடும் போது அதைப் பார்த்துக் கவலைப்பட வேண்டிய நாம் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சிரிப்பு வழிகெட்ட மக்களுக்கு வழிகாட்ட உதவாது. இந்த நேரங்களில் அவர்களின் பரிதாப நிலையை எண்ணி கவலைப்பட்டால் இக்கவலை நம்மை நல்ல காரியத்தில் முடக்கி விடும் தூண்டுகோலாக அமைவதுடன் வழிகெட்ட மக்களுக்கு நேர்வழி காட்டும் கலங்கரை விளக்காகவும் அமையும்.
நபிவழி அடிப்படையில் மக்களுடைய தொழுகை இல்லாதிருப்பதைக் கண்டு அனஸ் (ரலி) அவர்கள் அழுதார்கள். இன்றைக்கு எங்கு திரும்பினாலும் நபிவழிக்கு மாற்றமான காரியங்கள் தலைதூக்குவதை கண்கூடாகப் பார்க்கலாம். அனஸ் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட கவலை நமக்கு வந்தால் இஸ்லாம் மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கி அசத்தியம் கானல் நீராகி விடும்.
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரிருக்கும் போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். ஏன் அழுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். ''நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது'' என அனஸ் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரீ நூல்: புகாரி 530
குடும்பத்தாரின் நேர்வழிக்காகக் கவலைப்படுதல்
நமது குழந்தைகள் சகோதர, சகோதரிகள் பெற்றோர்கள் இந்த உலகத்தில் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துகிறோம். அவர்களுக்கு எவ்வழி முன்னேற்றத்தைத் தருமோ அந்த வழிகளைக் காட்டுகிறோம். உலக விஷயங்களில் நமக்கு இவ்வளவு அக்கறை உள்ளது. இதே போன்று இவர்கள் மறுஉலக வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கான வழிகளை இவர்களுக்கு நம்மில் எத்தனை பேர் கற்றுக் கொடுக்கிறோம்?
நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மறுமை வாழ்க்கையில் தங்களது குடும்பத்தாரின் நிலை குறித்து அதிகம் கவலைப்பட்டார்கள். மறுமை வாழ்க்கையின் பயங்கரமும், இனிமையான இன்பங்களும் நமது மனதில் ஆழமாகப் பதியாத காரணத்தினால் இக்கவலை நமக்கு வருவதில்லை. மறுமை வாழ்க்கையைப் பற்றிய நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஆழமாகவும் உறுதியாகவும் தெரிந்த காரணத்தினால் இறந்து விட்ட தன் தாயின் நிலை குறித்து அழுதார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் மண்ணறைக்குச் சென்றார்கள். தானும் அழுது தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் அழ வைத்து விட்டார்கள். அப்போது அவர்கள், ''என் தாய்க்காகப் பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி வேண்டினேன். அவன் எனக்கு அனுமதி தரவில்லை. என் தாயின் மண்ணறைக்குச் சென்று வர அவனிடம் அனுமதி கேட்ட போது எனக்கு அனுமதியளித்தான். மண்ணறைகளுக்குச் செல்லுங்கள். ஏனென்றால் அவைகள் மரணத்தை ஞாபகமூட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1777
நாம் எதை மாபெரும் பாக்கியமாக விரும்புகிறோமோ அது நடந்து விட்டால் நம்மை அறியாமல் நம் கண்ணில் ஆனந்த நீர் பொங்குகிறது. நாமும் நமது உறவினர்களும் நேர்வழி பெறுவதை விட சிறந்த பாக்கியம் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மேலோங்கியிருந்தது. எனவே இணை வைத்துக் கொண்டிருந்த தன் தாய் இஸ்லாத்தைத் தழுவிய போது ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது தாய் இணை வைப்பவராக இருக்கும் போது அவரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் அவர்களை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் வெறுக்கக் கூடிய (மோசமான வார்த்தையை) கூறி விட்டார். எனவே நான் அழுது கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! எனது தாயாரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். இன்று நான் அவரை (இஸ்லாத்திற்கு வருமாறு) அழைத்த போது நான் வெறுக்கக் கூடிய ஒன்றை உங்களைப் பற்றி அவர் கூறிவிட்டார். எனவே அபூஹுரைராவின் தாயாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறைவா! அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழி காட்டு!'' என்று பிரார்த்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையால் மகிழ்ச்சியடைந்தவனாக (வீட்டிற்கு) நான் வந்தேன். அப்போது வாசல் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். என் கால் சப்தத்தை என் தாய் கேட்டு விட்டார். ''அபூஹுரைராவே! நீ அங்கேயே நில்!'' என்று சொன்னார். தண்ணீர் சப்தத்தை நான் கேட்டேன். என் தாய் குளித்துவிட்டு ஆடையை அணிந்து விட்டு விரைவாக முக்காடு போட்டுக் கொண்டார். நான் கதவைத் திறந்தேன். அப்போது அவர், ''அபூஹுரைராவே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறினார்.
சந்தோஷத்தினால் அழுதவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். ''அல்லாஹ்வின் தூதரே! சந்தோஷப்படுங்கள்! திட்டமாக அல்லாஹ் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழி காட்டி விட்டான்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், ''அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து விட்டு, ''நல்லது'' என்று கூறினார்கள்.
நான், ''அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையாளர்களாக விளங்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நானும் எனது தாயும் விருப்பமானவர்களாக இருப்பதற்கும், எனக்கும் என் தாய்க்கும் அவர்கள் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்ததனை செய்யுங்கள்'' என்று கூறினேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறைவா! உனது இந்த அடிமையையும் அதாவது அபூஹுரைராவையும் அவரது தாயாரையும் இறை நம்பிக்கையுள்ள உனது அடியார்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக! இறை நம்பிக்கையாளர்களை இவர்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட, என்னைப் பார்த்த எந்த இறை நம்பிக்கையாளரும் என்னை விரும்பாமல் இருந்ததில்லை. நூல்: முஸ்லிம் 4546
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு உயிரை தியாகம் செய்யும் தியாகியாக தன் பிள்ளையை நபித்தோழியர்கள் உருவாக்கினார்கள். உயிர் நீத்த தன் மகனின் மறுமை வாழ்வு எப்படி அமையும் என்ற கேள்விக்கு மகிழ்ச்சிகரமான பதிலைக் கேட்காத வரை அவர்கள் நிம்மதியாக இருக்கவில்லை. பிள்ளைகளின் மறுமை வாழ்க்கைக்கு அழகான வழியைக் காட்டுவதை விட அக்கறையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது.
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த் பராஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்கு தாங்கள் செய்தி அறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது.
அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையை மேற்கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தைப் பெற்றுக்கொண்டார்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 2809
நம் உறவினர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்கள் விஷயத்தில் கவலைப்பட்டால் தான் அவர்களைத் திருத்த முடியும். ஆனால் ஷைத்தான் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட விடாமல் நம் கவனத்தைத் திருப்புவான். அவர்களுக்கு நாம் ஏகத்துவத்தைச் சொல்யிருக்கலாமே என்ற கவலை அவர்கள் இறந்த பிறகு தான் நமக்கு வரும். எல்லாம் முடிந்த பிறகு கவலைப்படுவது எள்ளளவிற்கும் உதவாது. இதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளது குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போது, ''இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1289
எனவே அவசியம் கவலைப்பட்டாக வேண்டிய மார்க்க விஷயங்களில் கவலைப்பட்டு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் உதவுவானாக!
No comments:
Post a Comment