இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா
இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இல்லை என்று கூறப்படுகின்றதே. இது சரியா?
rujahim
பதில் :
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து விட்டு இந்தக் கருத்துக்கு அவர்கள் வந்திருக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று யோசித்தால் இக்கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ளலாம்.
ஒரு நாட்டில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இருந்தால் அதுவே நல்லாட்சி. மேலும் மக்களுக்குக் கேடு தரும் எந்த அம்சத்தையும் நல்லாட்சி புரிபவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். இதற்காகத் தான் மக்கள் ஆட்சியாளர்களைச் சார்ந்திருக்கின்றார்கள். இந்த அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தான் குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் வழிகாட்டியிருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சி முறையால் இத்தகைய நன்மை ஏற்பட்டது.
மேலும் மக்களுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளில் நியாயமான தீர்ப்புகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். எனவே ஒருவன் அநியாயமாகப் பாதிக்கப்படும் சூழல் தடுக்கப்பட்டது. உரிமையுள்ளவர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட்டது. அக்கிரமங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த நன்மையும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஏற்பட்டது.
மேலும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஆள்பவர்கள் நீதி நேர்மையைக் கடைபிடித்து ஆட்சி செய்ததால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. செல்வந்தர்களிடமிருந்து முறையாக ஸகாத் வசூலிக்கப்பட்டது. அது உரியவர்களுக்கு அதாவது ஏழை எளியவர்களுக்கு முறையே வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் நாட்டில் அனைத்து மக்களும் சிறப்பான முறையில் வாழும் மிகப் பெரிய நன்மை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சியால் இந்த நன்மையும் ஏற்பட்டது.
இது போன்ற நன்மைகள் நபியவர்களின் ஆட்சியால் ஏற்பட்டது. நபியவர்களின் ஆட்சியில் இப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படுவதற்கு திருமறைக்குர்ஆனே முக்கிய காரணமாகும். இறைவனுடைய உத்தரவை சிறிதும் புறக்கணிக்காமல் அவனுடைய திருப்தியை மட்டும் நாடி செயல்பட்டதால் தான் இப்படிப்பட்ட ஆட்சியை நபி (ஸல்) அவர்களால் உருவாக்க முடிந்தது.
இப்படிப்பட்ட ஆட்சி உருவாக வேண்டுமென்றால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படும் மக்களை நபி (ஸல்) அவர்கள் உருவாக்கியது போல் நாமும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸ் வழியில் தலைவைர்களும் தொண்டர்களும் பயணிக்க வேண்டும். இவ்விரண்டை மக்களிடையே கொண்டு சென்று மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் தானாக இப்படிப்பட்ட நல்லாட்சி மலர்ந்துவிடும்.
எனவே உண்மையான இஸ்லாமிய ஆட்சி வர வேண்டும் என்றால் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் வாழ வேண்டும். இவ்வாறு பிறர் வாழ்வதற்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான செயல்களை மக்கள் செய்து கொண்டிருந்தால் தயவுதாட்சனையின்றி அச்செயல்களைக் கண்டிக்க வேண்டும். மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்கள் இஸ்லாத்தை ஏற்க பாடுபட வேண்டும்.
இதைச் செய்யாமல் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம் என்று வெறுமனே கோசம் மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தால் அதனால் ஒரு போதும் இஸ்லாமிய ஆட்சி உருவாகாது. அப்படியே உருவானாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்காது.
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரைத் தவிர்த்து ஆள்பவர்களிடமோ நாட்டு மக்களிடமோ இஸ்லாம் இருக்காது. உதாரணமான இன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பல நாடுகள் இருக்கின்றன. அந்நாட்டை ஆள்பவர்களிடமோ மக்களிடமோ உண்மையான இஸ்லாம் இல்லை. எனவே இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் கூட இவர்களால் நாட்டில் செயல்படுத்த முடியவில்லை.
இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என கொக்கரிப்பவர்கள் மக்களைச் சீர்திருத்தி உண்மையான இஸ்லாமியக் கொள்கையைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதில்லை. இஸ்லாத்துக்குப் புறம்பான இணைவைப்பு மூடநம்பிக்கை பித்அத்துகள் மத்ஹபுகள் ஆகியவற்றை கண்டு கொள்வதில்லை. வெறுமனே இவ்வாறு கோஷம் போட்டுத் திரிவதைத் தவிர்த்து இவர்களின் பணி வேறொன்றுமில்லை. இவர்களால் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்? ஒரு பேச்சுக்கு இவர்கள் உருவாக்கினாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்கவே இருக்காது. இஸ்லாமிய ஆட்சி என்ற பெயர் மட்டுமே இருக்கும். மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று அல்லது அதை விட மோசமான ஆட்சியைத் தான் இவர்களால் உருவாக்க முடியும்.
உண்மையான இஸ்லாமிய ஆட்சியை குர்ஆன் ஹதீஸை கொள்கையாகக் கொண்டு செயல்படுபவர்களாலேயே ஏற்படுத்த முடியும்.
29.06.2010. 22:33
---www.onlinepj.com
----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)
No comments:
Post a Comment