கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்' (அல்குர்ஆன் 17:1)
விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். 'மிஃராஜ்' என்ற பயணம் வல்ல நாயன் அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாகும்.
அதில் என்ன மாதிரியான படிப்பினைகளெல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு இஸ்லாமிய சமுதாய அமைப்பு எப்படிப்பட்ட அடையாளங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அற்புத படிப்பினை மிஃராஜில் அடங்கியிருப்பதை நாம் காணலாம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.
ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத சில அரசின் உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிப்பதென்பது வியக்கத்தக்கதல்ல. இதற்குச் சான்றாக நபி இபுராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆகுவதற்காக வானம் மற்றும் பூமியின் சான்றுகளை அல்லாஹ் காட்டியதாக அல்குர்ஆனில் (6:75) இல் கூறப்படும் விஷயத்தையும், இறந்தபின் எவ்வாறு எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய்' என்று நபி இபுராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, பறவைகளை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வைத்து அதனை அவர்களிடம் அழைக்குமாறு கூறி உயிர்ப்பித்துக் காட்டியதாக கூறும் அல்குர்ஆனின் (2:260)வது வசனமும் இறைவனின் அற்புதங்களுக்கு சான்றாகக் கொள்ளலாம்.
மிகச்சிறந்த இறைத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களை இறைவன் தூர் மலைக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியதாக கூறப்படும் அல்குர்ஆனின் (28:29,30)வது வசனமும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு தனது விருப்பத்திற்கேற்ப இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு சில பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்பதை தனது அடியார்களில் ஒருவர் மூலம் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் அல்குர்ஆனின்(18: 65,66) வது வசனங்களும்கூட இவைகளுக்குச் சான்றுகளாகும்.
அண்ணலாரின் வாழ்விலும் இதே போன்று சில விந்தையான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை இறைவனுக்கு மிக நெருக்கமான வானவர் ஒருவரை அவரது உண்மையான வடிவத்தில் அடிவானத்தில் கண்டார்கள்.
இது மரியாதைக்குரிய தூதரின்(ஜிப்ரீலின்) சொல்லாகும். (அவர்) வலிமை மிக்கவர். அர்ஷ¬_க்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர், அங்கே நம்பிக்கைக்குரியவர். உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவரை(ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.(அல்குர்ஆன் 81:19-23)
மேலும் அதே வானவரை ஆன்மீக உலகின் துவக்கமான ஸிதரத்துல் முன்;தஹா எனும் இடத்திலும் அவரது இயல்பான வடிவத்தில் இன்னொரு முறை வெகு அருகில் கண்டார்கள். அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸிதரத்துல் முன்;தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவ்வானவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:12,13,14)
அண்ணலாரின் விண்ணேற்றப் பயணமும் அவர்களுக்கு நிகழ்ந்த இது போன்ற அதிசயிக்கத்தக்க அனுபவங்களில் ஒன்றுதான்! இந்த பயணம் அண்ணலாருக்குச் சில விந்தைகளையும், அற்புதங் களையும் காண்பிப்பதற்காக மாத்திரமில்லாமல், அவர்களிடம் சில முக்கியமான பணிகளை ஒப்படைக்கப் படுவதற்காகவும் சில வழிகாட்டுதல்களை அருளப் படுவதற்காகவும் நிகழ்ந்தது.
நபி மூஸா(அலை) அவர்களை 'தூர்'' மலைக்கு அழைக்கப்பட்டு 'பத்து கட்டளைகள்'' தரப்பட்டதுடன், ஃபிர்அவ்னிடம் 'இறைவனின் விருப்பத்திற்கேற்ப உனது ஆட்சியை சீர்படுத்திக்கொள்'' என்று கோரிக்கை விடவும் கட்டளையிடப்பட்டது.
இதேபோன்றுதான் அண்ணலாரின் இந்த பயணமும் அவர்களின் நபித்துவ வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் நிகழ்ந்திருந்தது. அண்ணலாரின் குரல் அரபு நாடுகளைக் கடந்து ஏனைய நாடுகளிலும் எதிரொலிக்கப் போகிறது. இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையகம் வேறொரு இடத்திற்கு மாறப் போகிறது. எனவேதான் இந்த மிக முக்கியமான கட்டத்தில் அண்ணலாரை தன்பால் அழைத்துச் சில வழிகாட்டுதல்களை வழங்கிட இறைவன் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்தான். இதைத்தான் நாம் 'மிஃராஜ் என்கிறோம் இந்தப் பயணம் அண்ணலாரின் மதீனத்து பயணமாகிய ஹிஜ்ரத்துக்குச் சற்றே குறைய ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்வுற்றது.
இந்த பயணத்தில் உள்ளடக்கமாக இருக்கும் சில குறிப்பிட்ட சம்பவங்களாவன: 1. அல்அக்ஸா ஆலயம் சென்று அங்கு தொழுகை நிறைவேற்றுதல்! 2. வானுலகின் பல்வேறு படித்தரங்களையும் கடந்து செல்லுதல்! 3.முந்தைய திருத்தூதர்களைச் சந்தித்தல்! 4. பயணத்தின் இறுதிக் கட்டத்தைச் சென்றடைதல்! போன்ற சம்பவங்கள் மாத்திரமே நபி மொழிகளில் குறிப்படப் பட்டுள்ளன. ஆனால் அல்குர்ஆனோ 'மிஃராஜ்'' எவ்வாறு நிகழ்ந்தது? என்பதைப்பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அண்ணலார் ஏன் அங்கு அழைக்கப் பட்டார்கள் என்பதை மாத்திரமே மிக விரிவாக விரித்துரைக்கிறது.
இதுபற்றி அல்குர்ஆனின் 17வது அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கின்றது. அந்த விரிவுரை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒரு பிரிவில், 12 ஆண்டுகளாக அண்ணலாருக்கும், அவர்களின் இயக்கப் பணிகளுக்கும் சொல்ல முடியாத இடையூறுகள் தந்த மக்கத்து வாசிகளுக்கும், அண்ணலார் வெகு விரைவில் சந்கிக்கவிருக்கும் மதீனா வாசிகளான இஸ்ரவேலர் களுக்கும் இறுதி எச்சரிக்கைகள் விடப்படுகின்றன.
(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்கு பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 17:76)
பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வீர்கள்! பெருமளவுக்கு ஆணவம் கொள்வீர்கள்! என்று இஸ்ராயீலின் மக்களுக்கு அவ்வேதத்தில் அறிவித்தோம். அவ்விரண்டில் முதல் வாக்கு நிறைவேறும் போது கடுமையான, பலமுடைய நமது அடியார்களை உங்களுக்கு எதிராக அனுப்பினோம். அவர்கள் வீடுகளுக்குள்ளேயும் ஊடுருவினார்கள். அது செய்து முடிக்கப்பட்ட வாக்குறுதியாக இருந்தது. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வாய்ப்பளித்தோம். செல்வங்களாலும், ஆண் மக்களாலும் உங்களுக்கு உதவினோம்.
உங்களை அதிக எண்ணிக்கையுடையோராக ஆக்கினோம். நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே. இரண்டாவது வாக்குறுதி நிறைவேறிய போது அவர்கள் உங்களுக்குக் கேடு செய்தார்கள். (பைத்துல் முகத்தஸ் எனும்) பள்ளியில் முன்பு நுழைந்தது போன்று நுழைந்தார்கள். அவர்கள் ஆதிக்கத்தில் வந்தவற்றை அழித்தொழிந் தார்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். நீங்கள் மீண்டும் (பழைய நிலைக்கு) திரும்பினால் நாமும் திரும்புவோம். (நம்மை) மறுப்போருக்கு நரகத்தை சிறைச் சாலையாக ஆக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 17:4,5,6,7,8)
மூஸா நபி, ஈசா நபி ஆகிய இரு தூதர்கள் அனுப்பப்பட்ட இரு வாய்ப்புகளையும் நீங்கள் முறையோடு பயன்படுத்திக் கொள்ளாமல் இறைவனின் சினத்திற்கு ஆளாகி இரண்டு முறை மாபெரும் தண்டனைகளுக்கு ஆளாவீர்கள். இப்போது மூன்றாவதும் கடைசியுமான வாய்ப்பு அண்ணலாரின் வடிவத்தில் நீங்கள் பெருவாரியாக வாழும் மதீனா நகர் நோக்கி வரவிருக்கிறது. இந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், உங்களுக்கு வேறொரு வாய்ப்போ, வழியோ பிறக்கப் பேவதில்லை என்றும், இறைவனின் மிகப் பெரும் தண்டனைக்கு ஆளாவீர்கள் என்றும் இஸ்ரவேலர்களுக்கு இந்த வசனங்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த விரிவுரையின் மற்றொரு பிரிவில் மனித இனத்தின்; பண்பாடுகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் புடம்போட்டு அவர்களைப் புனிதர்களாக மாற்றும் பதினான்கு அடிப்படைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இக்கருத்தினை அல்குர்ஆனின் 17ம் அத்தியாயத்தின் 23 முதல் 37 வரை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
1.பெற்றோர்களிடம் நன்றியாக நடந்து கொள்ளுதல்!
என்னைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!' என்று கேட்பீராக. (17:23,24)
2.கூட்டுவாழ்க்கையில் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாயிருத்தல்!
3.ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உதவியாயிருத்தல்!
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர் (17:26)
4.இறைவன் வழங்கிய செல்வத்தை வீண்விரயம் செய்யாதிருத்தல்!
விரயம் செய்வோர் ஷைத்தான்தளின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (17:27)
5.செல்வத்தை செலவிடுதலில் கஞ்சத்தனமோ, ஊதாரித்தனமோ இல்லாமல் நடுநிலைமையை கையாளுதல்!
உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்! (17:29)
6.இறைவன் செய்திருக்கும் இயற்கையான வழிமுறைகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்!
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
7.வாழ்க்கைச் சிரமங்களுக்கு அஞ்சி மக்கள் தம் குழந்தைகளைக் கொல்லாதிருத்தல்!
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (17:31)
8.விபச்சாரம் மற்றும் அதனைத் தூண்டும் காரியங்களுக்கு அருகிலும் செல்லாதிருத்தல்!
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.(17:32)
9.ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது. ஆதலால் நியாமின்றி அதனைக் கொல்லாதிருத்தல்!
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார். (17:33)
10.அனாதைக் குழந்தைகளின் பொருளை பாதுகாத்தல் அநாதைக் குழந்தைகள் பருவம் அடைந்து தம்மைத் தாமே சுயபரிபாலனம் செய்து கொள்ளும் வரை அவர்களின் பொருளுக்குப் பாதுகாவலாயிருத்தல்!
அநாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! (17:34)
11.வாக்குறுதிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் மிகக் கவனாமாயிருத்தல்!
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (17:34)
12.அளவை நிறுத்தல்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல்!
அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. (17:35)
13.தீர்க்கமாக தெரியாதவரையில் சந்தேகமான விஷயங்ளின் அடிப்படையில் செயல்படாதிருத்தல்!
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.(17:36)
14.ஆணவமோ, மமதையோ, கர்வமோ கொள்ளாதிருத்தல்!
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (17:37)
இந்தப் 14 அறிவுரைகளும் அண்ணலாரின் இயக்கம், பிரச்சாரக் கட்டத்தைக் கடந்து அரசியல்-ஆட்சி அதிகாரம் என்ற கட்டத்தை அடைவதற்காக அடியெடுத்து வைக்கப் போகும் தருணத்தில் அதற்கான அடிப்படைகளாகத் திகழ்கின்றன. எனவேதான் இப்போதனைகள் அண்ணலார் காணப் போகும் சமூக அமைப்புக்கான 'மினி அமைப்பு நிர்ணயச் சட்டம்'' போன்று அமைந்து விட்டிருக்கின்றன. இவைகளுடன் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது, முஸ்லிம்கள் அனைவருக்கும் ஐங்காலத் தொழுகைகளையும் இறைவன் கட்டாயக் கடமையாக்கினான்.
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப் படுவதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:78)
எவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை உருவாக்கப் புறப்பட்டு விட்டனரோ அவர்கள், தமது செயல், எண்ணங்களுக்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதை தினமும் ஐந்து தடவை (தொழுகையில்) மறந்து விடாமல் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட இறையச்சமுடைய மனிதர்களால் தான் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது அருளப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்கிட முடியும். வல்ல அல்லாஹ் அத்தகைய இறையச்சத்தையும், மனத்துணிவையும், உளத் தூய்மையையும் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
No comments:
Post a Comment