பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

உளுவுக்குப் பின் தொழுகை

உளுவுக்குப் பின் தொழுகை

சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று, எப்போது உளூச் செய்தாலும் இரண்டு ரக்அத்கள் தொழுவதாகும். இந்தப் பழக்கத்தை கடைப்பிடித்தால் சொர்க்கம் செல்லும் வழி நமக்கு இலகுவாகும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

''ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் (397)


இதே பழக்கத்தை இஸ்லாத்தை ஏற்றதி­ருந்து கடைப்பிடித்து வந்த பிலால் (ரலி) அவர்களை 'சொர்க்கத்திற்குரியவர்' என்று இவ்வுலகத்திலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.

ஒரு பஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி) இடம், ''பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி), ''இரவிலோ பக­லோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இது தான் எனது செயல்களில் சிறந்த செயல்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (1149)

மேலும் இறைவனை வணங்குவதற்காக ஒருவர் உளூச் செய்யும் போது அவர் உறுப்புகள் செய்த பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

''ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியார் உளூச் செய்யும் போது முகத்தைக் கழுவினால் கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்தி­ருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும் போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில் அவர் பாவங்களி­ருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்தி­ருந்து) செல்கிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (412)

ஒரு மனிதன் ஒவ்வொரு உளூவின் போதும் தொழுகையைக் கடைப்பிடித்து வந்தால் அவரிடம் நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவரை விட்டு அகன்று விடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

ஒவ்வொரு உளூவின் போதும் இரண்டு ரக்அத்கள் தொழுவது கடுமையான காரியம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் சாதாரணமாகச் செய்து விடலாம்.

இதை அற்பமான காரியமாக நினைத்து விட்டுவிடாமல் ஒவ்வொரு உளூவின் போதும் குறைந்த பட்சம் இரண்டு ரக்அத்களாவது தொழும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து, சொர்க்கத்திற்குச் செல்லும் வழிகளை இலகுவாக்குவோம்
 

No comments:

Post a Comment