பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 17, 2020

குர்பானி சட்டங்கள் - 2

குர்பானி மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மாற்றப்பட்டச் சட்டம்

பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ

நூல் : புகாரி (5423)

 

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர் பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3643)

*************************

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை பங்கிடுதல் பற்றி 

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் (22 : 36)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

நூல் : புகாரி (1717)

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2137)

 

மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

***************************

குர்பான் பிராணிகள் எத்தனை கொடுக்க வேண்டும்?

சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்.

நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள்.

அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

நூல் : முஸ்லிம் (3637)

 

இதுமட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்.

நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

 அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்

நூல் : அஹ்மத் (19804).

 

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி).

நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

 

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).

நூல் : முஸ்லிம் (2137)

 

நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

**********************************

குர்பான் பிராணியை அறுக்கும்போது குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?

குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாக உள்ளது.

ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே!

இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : பைஹகீ (19161) (19162)

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள சிறப்புகளும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகாது.

ஆனால் அறுப்பதைப் பார்க்க குடும்பத்தினர்கள் விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்த குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள் என்ற தகவலை முன்பே பார்த்தோம்.

****************"""***"**********


No comments:

Post a Comment