பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 17, 2020

குர்பானி சட்டங்கள் - 1

குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா?

கூடாது.

கொம்பு உடைந்தால் தவறில்லை.

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள்

கூறினார்கள். அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
முஸ்லிம் (3637)

கொம்பு உடைந்த பிராணியை குர்பானி கொடுக்கக்கூடாது என்று வரும் ஹதீஸ் பலவீனமானது.

*****************

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

சரியில்லை

குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை.

இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது.

கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3498)

வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் இருக்கும்போது மேலும் கடன் பட்டு தன் மீது சுமையை அதிகப்படுத்திக் கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான்

*******************

கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்டுமா?

இல்லை

ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட வேண்டும் என்றோ அவரவர் வசதிக்கேற்ப பங்கெடுக்க வேண்டும் என்றோ நேரடியாக ஹதீஸில் கூறப்படவில்லை. நேரடியாக அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அதன் பொருள் அனைவரும் சமமாக பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.

ஏழாயிரம் மதிப்புடைய மாட்டில் ஒருவர் 500 ரூபாய் மட்டும் கொடுத்தால அவர் ஏழில் ஒரு பங்கு கொடுத்த்வராக மாட்டார். பதினான்கில் ஒரு பங்கு கொடுத்தவராகத் தான் ஆவார். ஒவ்வொருவரும் சமமாகக் கொடுத்தால் தான் ஒவ்வொருவரும் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக முடியும்.

அதே சமயம் ஆறு பேர் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி அதில் ஒரு பங்கை மனமுவந்து இன்னொருவருக்காக விட்டுக் கொடுத்தால் அப்போது பணம் கொடுக்காதவருக்கும் குர்பானி நன்மை கிடைத்து விடும். ஏனெனில் இவருக்காக மற்றவர்கள் அன்பளிப்புச் செய்ததால இவரே கொடுத்ததாகத் தான் பொருள்.

அது போல் ஏழாயிரம் மதிப்புடைய மாட்டை வாங்கும் போது 500 தந்தால் போதும் இன்னொரு 500 ரூபாயை உங்களுக்காக நாங்கள் போட்டுக் கொள்கிறோம் என்று மற்ற ஆறு பேரும் மனமுவந்து கூறினால் அப்போது அவர் நேரடியாகக் கொடுத்தது 500, அவருக்காக ஆறு பேரும் சேர்ந்து அன்பளிப்பாகக் கொடுத்தது 500 ஆக மொத்தம் அவர் 1000 ரூபாய் கொடுத்தவராகி விடுவார்.

**********************

அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானி கொடுக்கலாமா?

அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)

பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 162)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,

அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி).

நூல் : முஸ்லிம் (3659)

அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. 

அல்குர்ஆன் (5 : 3)

 

எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!

*****************************

இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை

1. நிரந்தர தர்மம்.

2 .பஸ்ன் தரும் கல்வி

3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் (3084)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

 

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)

நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138). 

 

மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.

**************#₹***************

குர்பானியின் மாமிசத்தை பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (5561)

அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.

நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

அறிவிப்பவர் : அதா பின் யசார்.

நூல் : திர்மிதி (1425)

 

குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.

(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி).

நூல் : முஸ்லிம் (3643)

 

எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரன்ப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.

****************************


No comments:

Post a Comment