*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 21 👈👈👈*
*👉தலைப்பு👇*
*🔰🔰🔰முக்கிய ஆய்வுகள்🔰🔰🔰*
*🌐🌐. 13. முதஷாபிஹாத்🌐🌐 ஓர் ஆய்வு🌐🌐*
*முதஷாபிஹாத் ஓர் ஆய்வு*
*திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.*
தவறான கருத்துக்கு வளைக்க முடியாமல் அமைந்தவை முஹ்கம் ஆகும். நல்லவர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டாலும் வழிகேடர்கள் தவறாக வளைக்கும் வகையில் அமைந்தவை முதஷாபிஹ் என்பது ஒரு சாராரின் கருத்து. நம்முடைய கருத்தும் இது தான்.
முஹ்கம் என்றால் அனைவருக்கும் புரியக் கூடியவை; முதஷாபிஹ் என்றால் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் புரியாதவை என்பது இன்னொரு சாராரின் கருத்து. இது தான் அதிகமானவர்களின் கருத்து என்றாலும் ஆய்வு செய்து பார்க்கும் போது இக்கருத்து முற்றிலும் தவறானதும் அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும்.
முதஷாபிஹ் வசனம் பற்றி பேசும் *திருக்குர்ஆன் 3:7* வசனத்துக்குப் பொருள் செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு தான் இந்தக் கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.
*3:7 வசனத்துக்கு நாம் செய்யும் பொருள்*
(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் ”இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே” எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.
*அல்குர்ஆன் 3:7*
(நமது மொழி பெயர்ப்பு)
மேற்கண்ட வசனத்தில், “இரு கருத்தைத் தருகின்ற வசனங்கள்” என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில், “முதஷாபிஹாத்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள “முதஷாபிஹாத்” என்றால் எவை என வரையறுப்பதிலும், “முதஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியுமா? முடியாதா? என்பதிலும் அறிஞர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.
இந்தக் கருத்து வேறுபாடு இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல! தப்ஸீர் என்ற பெயரில் பலரும் பலவிதமாக எழுதி வைத்த பின்னர் தான் இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. மாறாக நபித்தோழர்கள் காலத்திலேயே இது பற்றி முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வந்துள்ளன.
ஒரு வசனத்திற்குப் பொருள் செய்வதில் ஏன் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்ற வேண்டும்? அதுவும் நேர் முரணான இரு கருத்துக்கள் எவ்வாறு தோன்றின? ஒரு சாரார் “முடியும்” என்று கூறுவதற்கும், மற்றொரு சாரார் “முடியாது” என்று கூறுவதற்கும் அந்த வசனத்தையே ஆதாரமாகக் கொள்ளக் காரணம் என்ன? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு சாராரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும், அவற்றில் உள்ள நிறை, குறைகளையும் அலசுவோம். இறுதியாக “முதஷாபிஹ்” என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்வோம்.
*காரணம் என்ன?*
அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட (முஹ்கம்) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.
இது திருக்குர்ஆனின் 3:7 வசனத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியைப் புரிந்து கொள்வதில், விளங்குவதில் மார்க்க அறிஞர்கள் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. ஆனால் இவ்வசனத்தில் அடுத்த பகுதியை விளங்குவதில் மொழி பெயர்ப்பதில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொள்கிறார்கள்.
*“லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா”*
இந்த சொற்றொடருக்குள் இரண்டு வாக்கியங்கள் அடங்கியுள்ளன. இல்லல்லாஹு என்பது வரை ஒரு வாக்கியமாகவும் அதன் பின்னர் உள்ளதை மற்றொரு வாக்கியமாகவும் கருதலாம். அரபு இலக்கணம் இடம் தருகிறது. இரண்டு வாக்கியங்களை இப்படி பிரிக்கும் போது
முதல் வாக்கியத்துக்கு – லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்- எனபதற்கு இதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள் என்பது பொருளாகும்.
இரண்டாவது வாக்கியத்துக்கு – வர்ராஸிகூன் ஃபில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின் இந்தி ரப்பினா என்பதற்கு கல்வியில் உறுதியுடையோர், “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்துமே எங்கள் இறைவனிடமிருந்து (வந்தவை) தான்” என்று கூறுவார்கள் எனப் பொருள் வரும்.
அதாவது இல்லல்லாஹு என்பதுடன் முதல் வாக்கியத்தைப் பிரிக்கும் போது முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்ற கருத்து கிடைக்கிறது.
அது போல் “லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா”
என்பதில் இல்லல்லாஹு என்பதில் முதல் வாக்கியத்தை முடிக்காமல் வர்ராஸிகூன ஃபில் இல்மி என்பதில் முதல் வாக்கியத்தை முடிக்கலாம். இதற்கும் அரபு இலக்கணம் இடம் தருகின்றது.
இவ்வாறு முதல் வாக்கியத்தைப் பிரிக்கும் போது அல்லாஹவையும் கல்வியில் உறுதி படைத்தவர்களையும் தவிர யாரும் முதஷாபிஹ் வசனங்களை அறிய முடியாது என்ற கருத்து வரும்.
அதாவது முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹுவும் அறிவான். அறிவுடைய மக்களும் அறிவார்கள் என்ற கருத்து இதில் கிடைக்கிறது.
வாக்கியத்தை இரண்டு இடங்களில் முடிக்க இடம் தருவதே இந்தக் கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.
இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாட்டை நாம் காண்கிறோம். இப்படி எதிரும் புதிருமான இரண்டு மொழி பெயர்ப்புகளுக்கு இடமிருக்கும் போது இரண்டுமே சரி என்றும் கூற முடியாது. இரண்டும் தவறு என்றும் கூற முடியாது. இரண்டில் ஏதோ ஒன்று சரியாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறாக இருக்க வேண்டும். இதை எவ்வாறு முடிவு செய்வது?
தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்கு யார் செய்த பொருள் சரி? என்று முடிவு செய்திட அரபு மொழி இலக்கணத்தை நாம் ஆராய்ந்தால், இந்த இரண்டு அர்த்தங்களும் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இலக்கணத்தில் எந்த விதியையும் இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளுமே மீறி விடவில்லை.
இன்னும் சொல்வதானால் அரபு இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதால் தான் இந்த சர்ச்சையே தோன்றியது. சரியான பொருளைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கண விதிகள் சில சமயங்களில் இப்படிக் காலை வாரி விடுவதுண்டு. அரபு மொழி உட்பட எந்த மொழியும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.
அரபியர்கள் பேசிக் கொண்ட மொழி வழக்குப்படி, இலக்கண விதிகளின் படி இரண்டு அர்த்தங்களில் எதையும் தவறெனத் தள்ளி விட முடியாது. அதே நேரத்தில் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுமே சரி என்றும் கூற முடியாது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் இது பற்றி என்ன கூறுகின்றன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார்கள்? என்பதை ஆராய்ந்தால் 3:7 வசனத்திற்கு எவ்வாறு மொழி பெயர்ப்பது சரியானது என அறிய முடியும்.
அல்லாஹ்வும் கல்விமான்களும் முதஷாபிஹ் வசனங்களை அறிவார்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் நாம் செய்த மொழி பெயர்ப்புத் தான் சரியானது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
*முதல் ஆதாரம்*
“உள்ளங்களில் கோளாறு இருப்போர் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுவார்கள்” என்ற வசனத்தில் இடம் பெற்ற “குழப்பத்தை நாடி” என்ற வார்த்தைப் பிரயோகம் நமது கருத்தை உறுதி செய்கின்றது. அதாவது குழப்பம் விளைவிக்கும் தீய நோக்குடன் முதஷாபிஹ் வசனங்களை அணுகுவதற்கே இந்த வசனம் தடை விதிக்கின்றது. குழப்பம் விளைவிக்கும் தீய நோக்கின்றி அதை அணுகலாம்; விளங்கலாம் என்று இதிலிருந்து தெளிவாகின்றது.
மாற்றுக் கருத்துடையோர் செய்த அர்த்தத்தின் படி முதஷாபிஹ் வசனங்களின் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்; கல்வியில் சிறந்தவர்கள் தங்களுக்கு விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள் என வருகின்றது. அதாவது முதஷாபிஹ் வசனங்களை இறைவன் அருளியதன் காரணம் அதை விளங்க வேண்டும் என்பதல்ல, விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து.
விளங்கினாலும் விளங்கா விட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது தான் முதஷாபிஹ் வசனங்கள் அருளப்பட்டதன் நோக்கம் என்றால், “கல்வியில் சிறந்தவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்” என்று இறைவன் கூற மாட்டான்.
ஏனெனில் நம்பிக்கை கொள்வது கல்வியில் சிறந்தவர்களுக்கும், கல்வியறிவு அற்றவர்களுக்கும் பொதுவான அம்சமாகும். “முஃமின்கள் நம்பிக்கை கொள்வார்கள்” என்று கூறியிருந்தால் அவர்களது கூற்றில் ஏதேனும் நியாயம் இருக்கும்.
ஆனால் “முஃமின்கள்’ என்று பொதுவாகக் கூறாமல் “கல்வியில் சிறந்தவர்கள்’ என்று இறைவன் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதையும், “கற்றவர்கள்’ என்று கூடக் கூறாமல், “கல்வியில் சிறந்தவர்கள்’ என்று கூறியிருப்பதையும் கவனிக்கும் போது கல்வியில் சிறந்தவர்கள் அதை விளங்கி நம்பிக்கை கொள்வார்கள் என்ற கருத்தையே தருகின்றது.
திருக்குர்ஆனின் மற்றொரு இடத்தில் இறைவன், “வர்ராஸிகூன பில் இல்மி” (கல்வியில் சிறந்தவர்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்த இடத்தைக் கவனிக்கும் போது நமது கருத்துக்கு மேலும் வலு ஏற்படுகின்றது.
அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர்.
*அல்குர்ஆன் 4:162*
ஈமான் கொள்வது பற்றிக் கூறப்படும் இந்த வசனத்தில், “கல்வியில் சிறந்தவர்கள்” என்று கூறியதுடன், “முஃமின்களும்” என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் நம்பிக்கை கொள்வது மட்டுமே இங்கு பிரதானமாகக் கூறப்படுகின்றது. ஆனால் 3:7 வசனத்தில் “கல்வியில் சிறந்தவர்கள்” என்று மட்டும் கூறப்படுவதால் அவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கி ஈமான் கொள்வார்கள் என்பதே பொருத்தமானது என்பதை உணரலாம்.
இந்த வசனத்தை முடிக்கும் போது, “வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்பாப்” என்று இறைவன் குறிப்பிடுகிறான். “அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை; பாடம் பெறுவதில்லை” என்பது இதன் பொருள். இன்னும் பல வசனங்களிலும் இதே கருத்துள்ள வார்த்தையை இறைவன் பயன்படுத்தி இருக்கிறான். அந்தந்த வசனங்களில் கூறப்பட்டவை எப்படி அறிவுடையோரால் விளங்கிக் கொள்ள முடியுமோ அது போல் இவையும் விளங்கத்தக்கவை தான் என்பதை இதிலிருந்து அறியலாம்.
*இரண்டாவது ஆதாரம்*
மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காகவும், படிப்பினை பெற வேண்டுமென்பதற்காகவும் திருக்குர்ஆனை அருளியதாக இறைவன் கூறுகின்றான். நேர்வழி பெற வேண்டுமானால், படிப்பினை பெற வேண்டுமானால் நிச்சயமாக அது புரியும்படி அமைந்திருக்க வேண்டும். எவருக்குமே புரியாத மந்திர உச்சாடனங்கள் நேர்வழி காட்ட இயலாது. இந்தப் பொதுவான விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற வேண்டுமானால் அதை இறைவன் தெளிவாகக் கூறியிருப்பான்.
அதிலிருந்து விலக்கு அளிக்கவே 3:7 வசனத்தை இறைவன் அருளியிருப்பான் என்று மாற்றுக் கருத்துடையோர் கூறுவது ஏற்புடையதல்ல. விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் அதைத் தெள்ளத் தெளிவாகக் கூறிவிடும். ஆனால் 3:7 வசனத்திற்கு இவர்கள் செய்த பொருளே சரியானதல்ல எனும் போது விதிவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.
முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றோ, குர்ஆன் விளங்கும் என்ற பொது விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற்றவை என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸிலும் இல்லை.
எனவே ஏனைய வசனங்களிலும், நபிமொழிகளிலும், “குர்ஆன் வசனங்கள் விளங்கத்தக்கவையே” என்று கூறப்படும் கருத்துக்கு ஒட்டியே 3:7 வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இலக்கணமும் அதற்கு இடம் தருகின்றது. அந்த வசனத்தில் இடம் பெறும் வாசகங்களும் அதை உறுதி செய்கின்றன.
மேலும், “குர்ஆன் முழுவதும் விளங்கிடத்தக்கவை” என்பதைக் கூறும் ஏராளமான வசனங்கள் உள்ளன. அவற்றை அப்படியே எழுதினால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் அந்த வசனங்களில் சிலவற்றின் எண்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.
*2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11*
இந்த வசனங்களும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற வசனங்களும், திருக்குர்ஆன் விளங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன. திருக்குர்ஆனில் விளங்காதவை எவையுமே இல்லை என்பதே தெளிவு. இன்னும் பல வலுவான ஆதாரங்களைப் பார்ப்போம்.
*மூன்றாவது ஆதாரம்*
அல்லாஹ் தன் திருமறையில் முதஷாபிஹ் வசனங்களைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். முதலாவது இடம் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் 3:7 வசனமாகும்.
முதஷாபிஹ் பற்றிக் கூறும் மற்றொரு வசனத்தை நாம் ஆய்வு செய்யும் போது முதஷாபிஹ் என்பது மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கதே என்ற கருத்து மேலும் உறுதியாகின்றது.
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், முதஷாபிஹானதாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.
*அல்குர்ஆன் 39:23*
முதஷாபிஹான வசனத்தைக் கேட்பதால் இறையச்சம் உடையவர்களின் மேனி சிலிர்த்துப் போகும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகின்றான். மேனி சிலிர்த்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் எல்லா மொழிகளிலும், ஒரு விஷயம் தெளிவாக விளங்கி உள்ளத்தில் ஊடுறுவுவதற்கே பயன்படுத்தப்படுகின்றது.
முதஷாபிஹ் வசனங்களைக் கேட்பதால் இறையச்சமுடையோரின் மேனி சிலிர்க்கின்றன என்றால் அந்த வசனங்கள் விளங்குவதுடன் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றவும் செய்யும் என்பது தெளிவாகின்றது.
மேனி சிலிர்க்கும் என்று கூறுவதுடன் இறைவன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மை அடைகின்றன என்றும் குறிப்பிடுகிறான். ஒன்றுமே புரியாவிட்டால் அதைக் கேட்டவுடன் இறை நினைவில் உள்ளங்கள் இளகி விடுமா? முதஷாபிஹ் வசனங்கள் விளங்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளது.
மேலும் இதே வசனத்தில், குர்ஆன் முதஷாபிஹான வசனங்களைக் கொண்டதால் அதை அழகான செய்தி என்றும் இறைவன் கூறுகின்றான். முதஷாபிஹாக இந்த வேதம் அமைந்திருப்பது அதன் சிறப்புத் தகுதி என்று சிலாகித்துக் கூறுகின்றான். எவருக்கும் விளங்காமல் அமைந்திருப்பதை இறைவன் ஒரு சிறப்புத் தகுதியாகக் குறிப்பிட்டிருப்பானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த வாசகமும், முதஷாபிஹ் விளங்கத்தக்கவையே என்பதை உறுதிப்படுத்துகின்றது.
மேற்கண்ட வசனத்தை மிகவும் கவனமாக ஆராயும் போது, 3:7 வசனத்திற்கும் நாம் செய்த பொருளை இது உண்மைப்படுத்துவதைக் காணலாம். இறையச்சமுடையவர்களின் மேனி சிலிர்த்து விடும் என்ற கூற்றின் மூலம் இறையச்சமுடையவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள் என்பதை இறைவன் தெரிவிக்கின்றான். அதே போல் 3:7 வசனத்தில், “கல்வியில் சிறந்தவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கிக் கொள்வார்கள்’ என்று கூறுகின்றான்.
இறையச்சமுடையோர் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதும், கல்வியில் சிறந்தோர் என்று 3:7 வசனத்தில் குறிப்பிடுவதும் ஒரே வகையினர் தான்.
ஏனெனில் மற்றொரு வசனத்தில், “அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்கள் தான்” (35:28) என்று கூறுகின்றான். இந்த வகையில் இரு வசனங்களும் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கின்றன.
3:7 வசனத்தில், “உள்ளத்தில் வழிகேடு இருப்பவர்கள் குழப்பத்தை நாடி முதஷாபிஹ் வசனங்களைத் தவறாகக் கையாள்வர்’ என்றும், கல்வியில் சிறந்தவர்கள் சரியான பொருளைப் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட இறைவன், மேற்கண்ட 39:23 வசனத்திலும் அதே கருத்தைத் தெரிவிக்கிறான்.
“இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை” என்று அந்த வசனத்தை அல்லாஹ் நிறைவு செய்கின்றான்.
அதாவது முதஷாபிஹ் வசனங்களின் மூலம் நேர்வழி பெறுவோரும் உள்ளனர். வழிகேட்டில் வீழ்ந்து கிடப்போரும் உள்ளனர் என்று தெரிவிக்கின்றான்.
திருக்குர்ஆனின் சில வசனங்கள் வேறு சில வசனங்களுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் 3:7 வசனத்தில் இருவேறு முரண்பட்ட அர்த்தங்கள் செய்ய இடமிருந்தாலும் 39:23 வசனம், முதஷாபிஹ் பற்றிய நிலையைத் தெளிவாக, இரண்டு கருத்துக்கு இடம் தராத வகையில் விளக்குகின்றது. இந்த வசனத்தையும் இணைத்து 3:7 வசனத்திற்குப் பொருள் செய்யும் போது இரண்டு வசனங்களும் முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரே முடிவை அறிவிப்பதை உணரலாம்.
(3:7 வசனத்திலும், 39:23 வசனத்திலும் முதஷாபிஹாத், முதஷாபிஹ் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி பெயர்ப்புகளில் இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட்டு, இரண்டு இடங்களிலும் அரபி மூலத்தைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
*நான்காவது ஆதாரம்*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து “இறைவா! இவருக்கு உன் வேத (ஞான)த்தைக் கற்றுத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
*நூல்: புகாரி 75*
“இறைவா இவரை மார்க்க விஷயத்தில் விளக்கமுடையவராக ஆக்குவாயாக! மேலும் இவருக்குத் தஃவீலை (உண்மையான விளக்கத்தை) கற்றுக் கொடுப்பாயாக!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது அஹ்மத், இப்னு ஹிப்பான், தப்ரானி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையில், “இந்த வேதத்தில் முஹ்கமானவைகளைக் கற்றுக் கொடு!” என்று கூறாமல், இந்த வேதத்தைக் கற்றுக் கொடு என்று பொதுவாகவே குறிப்பிடுகின்றார்கள். முஹ்கம், முதஷாபிஹ் உட்பட இரண்டு வகையான வசனங்களையுமே இது எடுத்துக் கொள்ளும் என்பதை எவரும் மறுக்க முடியாது.
முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்குவது தான் சிலரால் மட்டும் இயலக்கூடிய காரியம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விஷேசமாகப் பிரார்த்தனை செய்திருப்பதால் முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்திற்காகவே துஆச் செய்தார்கள் என்று உணரலாம்.
3:7 வசனத்திலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்கண்ட துஆவிலும் தஃவீலஹு, அத்தஃவீல் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது இதை மேலும் உறுதி செய்கின்றது.
இந்த ஆதாரமும் முதஷாபிஹ் வசனங்களை அனைவரும் விளங்க முடியாவிட்டாலும், சிலரால் விளங்க முடியும் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.
*ஐந்தாவது ஆதாரம்*
திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாது அதை பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களை இறைவன் மறுமையில் நிறுத்தி விசாரிப்பான். அப்போது அவர்களை நோக்கி, “எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று (இறைவன்) கேட்பான் (27:84) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
“நீங்கள் என் வசனங்களை அறியாமல்” என்று இறைவன் குறிப்பிடாது, “என் வசனங்களை முழுமையாக அறியாமல்” என்று கூறுகின்றான். இந்த வாசகம், எதையும் விட்டு விடாமல் முழுமையாக விளங்கிக் கொள்வதற்கே அரபி மொழியில் பயன்படுத்தப்படுகின்றது. சிலவற்றை விளங்கி, சிலவற்றை விளங்காமல் இருப்பதை, முழுமையாக அறிதல் என்று கூற முடியாது. திருக்குர்ஆனில் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிடுக!
*65:12, 72:28, 27:22, 18:91, 18:68, 2:255, 20:110*
என் வசனங்களை முழுமையாக அறியாமல் பொய்யென்று கருதிக் கொண்டிருந்தீர்களா? என்ற கேள்வியின் மூலம் இறை வசனங்களை முழுமையாக அறியாமல் இருப்பவர்களை அல்லாஹ் கண்டிக்கின்றான். இதன் மூலம் இறை வசனங்கள் அனைத்தையும் அறிய இயலும்; அறிய வேண்டும் என்பது தெளிவாகின்றது. வேதத்தை முழுமையாக அறிய முடியாது என்றிருந்தால் இறைவன் இவ்வாறு கேட்க மாட்டான். அதை ஒரு குற்றமாக விசாரிக்கவும் மாட்டான்.
இறை வேதத்தில் விளங்க முடியாத ஒரு வசனமும் இல்லை என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.
*ஆறாவது ஆதாரம்*
திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இறைவன் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். மக்கள் விளங்குவதற்காகவே அரபு மொழியில் அருளப்பட்டதாகவும், அரபு மொழியில் அமைந்த அதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டு விட்டதாகவும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.
*அல்குர்ஆன் 26:195*
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
*அல்குர்ஆன் 12:2*
இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்கவும் குர்ஆனை அரபு மொழியில் அருளினோம். அதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.
*அல்குர்ஆன் 20:113*
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
*அல்குர்ஆன் 39:28*
(இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.
*அல்குர்ஆன் 41:3*
(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.
*அல்குர்ஆன் 42:7*
நீங்கள் விளங்குவதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை நாம் ஆக்கினோம்.
*அல்குர்ஆன் 43:3*
இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே? என்று கூறுவார்கள்.
*அல்குர்ஆன் 41:44*
ஒரு மொழியில் அருளப்பட்டது என்றால், அந்த மொழி அறிந்தவர்களால் அதனை அறிய முடியும் என்பது தெளிவு. அதை வேறு மொழிகளில் மாற்றம் செய்யும் போது மற்றவர்களும் அதை அறிந்து கொள்ளலாம் என்பதும் தெளிவு.
அல்லாஹ், திருக்குர்ஆனை அரபு மொழியில் அருளியதாக மட்டும் கூறவில்லை; அதற்கும் மேலாக, தெளிவான அரபு மொழியில் அருளி இருப்பதாகக் கூறுகின்றான். முஹ்கம் வசனங்கள் மட்டுமல்லாது முதஷாபிஹ் வசனங்களும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டிருக்கின்றன.
அரபு மொழியில், தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்குமே விளங்காது என்றால், அவற்றை விளங்குவதற்காக முயற்சிப்பவர்களுக்குக் கூட விளங்காது என்றால் எத்தகைய விபரீதமான எண்ணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறுவதன் மூலம், திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டது என்பதையே மறுக்கும் நிலை ஏற்படும்.
திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் ஒரு மொழியில் அருளப்பட்டிருப்பதே அது விளங்கிக் கொள்ளக் கூடியது என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.
*ஏழாவது ஆதாரம்*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்பதற்குச் சான்றாகத் திருக்குர்ஆனை மக்கள் முன் சமர்ப்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள், திருக்குர்ஆன் இறை வேதம் அல்ல என்று சாதிக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். கவிதை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கவிஞர் என்றும் பைத்தியக்காரர் என்றும் பறைசாற்றினார்கள். நாங்கள் நினைத்தால் இது போல் நாங்களும் கொண்டு வருவோம் என்றார்கள்.
*(பார்க்க: அல்குர்ஆன் 8:31)*
இந்தத் திருக்குர்ஆனில் ஏதேனும் ஒரு குறைபாடு தென்படாதா? அதை வைத்து முஹம்மது நபியல்ல என்று நிரூபிக்க முடியாதா? என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள்.
குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்று தெரிய வந்தால் இந்த வாய்ப்பை அவர்கள் நழுவ விடுவார்களா? குர்ஆனை ஏற்றுக்கொண்டவர்கள் வேண்டுமானால், குர்ஆனில் விளங்காதவை இருந்தாலும் கூட அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடக் கூடும். குர்ஆனை நம்பாதவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உண்டு என்றால் நிச்சயமாக அது உளறல் தான் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். முஹம்மது உளறுகிறார் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருப்பார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் காஃபிர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் குர்ஆனில் விளங்காதவை உள்ளன என்ற பிரச்சனையைக் கிளப்பியதே இல்லை. எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உள்ளதாக வைத்துக் கொண்டால் அவர்கள் பார்வையில் இது பெரிய பலவீனம். குர்ஆன் இறை வேதம் அல்ல என்ற தங்களின் வாதத்தை இதன் மூலம் அவர்கள் நிரூபிக்க முயன்றிருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததே குர்ஆன் அனைத்தும் விளங்கும் என்பதற்குத் தகுந்த சான்றுகளாகும்.
*எட்டாவது ஆதாரம்*
சட்ட திட்டங்களைக் கூறக்கூடிய முஹ்கம் வசனங்கள் மட்டுமே விளங்கும்; சட்ட திட்டங்களைக் கூறாத முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்பதும் இவர்களின் வாதம்.
திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் ஆறாயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் சட்ட திட்டங்களைக் கூறும் வசனங்கள் சுமார் 500 வசனங்கள் மட்டுமே! மீதமுள்ள வசனங்கள் இவர்களின் பார்வையில் முதஷாபிஹ் வசனங்களாகும். இந்தக் கணக்கின்படி திருக்குர்ஆனில் சுமார் 8 சதவிகித வசனங்களே மனிதர்கள் விளங்கக் கூடியவை. மீதி 92 சதவிகித வசனங்கள் எவருக்குமே விளங்காதவை என்ற கருத்து ஏற்படுகின்றது.
திருக்குர்ஆனில் முக்கால் பாகத்துக்கும் மேல் விளங்க முடியாதவை என்பதை விட வேறு விபரீதமான முடிவு என்ன இருக்க முடியும்? இதை விடக் குர்ஆனுக்கு வேறு களங்கம் என்ன இருக்க முடியும்?
*ஒன்பதாவது ஆதாரம்*
மற்றொரு கோணத்தில் பார்த்தால் இதை விட இன்னொரு விபரீதம் ஏற்படும்.
இவர்களின் வாதப்படி முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது.
இந்த வாதத்தின் படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட இதை விளங்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட முதஷாபிஹ் வசனங்களை விளங்க மாட்டார்கள். ஏனெனில் முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது என்பது இவர்களின் வாதம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் விளங்காது என்றால் நபியவர்களுக்கும் விளங்காது என்ற விபரீதமான நிலை உருவாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே விளங்காது என்றால் அவர்களிடம் பாடம் பெற்ற எந்தவொரு நபித்தோழருக்கும் அவை விளங்காது என்றாகும்.
ஆம்! திருக்குர்ஆனின் 92 சதவிகித வசனங்கள், அதைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் விளங்காது. அதைப் பெற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதருக்கும் விளங்காது. அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்ற அன்றைய சமுதாயம் முழுமைக்கும் விளங்காது என்பதைத் தவிர விபரீதமான முடிவு வேறு என்ன இருக்க முடியும்?
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
*அல்குர்ஆன் 16:44*
எந்தத் திருப்பணிக்காக முஹம்மது (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து இறைவன் அனுப்பினானோ, எந்தக் குர்ஆனை மக்களுக்கு விளக்குவதற்காக அவர்களை நியமனம் செய்தானோ அந்தத் தூதருக்கு திருக்குர்ஆனின் முக்கால் பாகத்திற்கு மேல் விளங்காது என்ற முடிவை உண்மையான முஸ்லிம்கள் எவரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?
திருக்குர்ஆனின் முக்கால் பாகத்தை நபியும் விளங்கவில்லை, நபித்தோழர்களுக்கும் விளக்கி வைக்கவில்லை என்ற நச்சுக் கருத்தை யார் தான் ஒப்புக் கொள்ள முடியும்?
அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அது அருளப்பட்ட நோக்கத்தையும், அல்லாஹ்வின் தூதருடைய பொறுப்புக்களையும் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட நபியவர்களுக்கு விளங்காது என்று கூறத் துணிய மாட்டார். தம் தோழர்களில் எவருக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கவில்லை, விளக்க முடியவில்லை என்று கூற மாட்டார்.
*பத்தாவது ஆதாரம்*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் திருக்குர்ஆனில் நபித்தோழர்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்படுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம்.
*உதாரணமாக,*
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
*அல்குர்ஆன் 4:101*
இந்த வசனத்தில் எதிரிகளின் அச்சம் இருக்கும் போது தான் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகக் குறைத்துத் தொழுவதற்கு இறைவன் அனுமதிக்கின்றான். அச்சமற்று வாழக்கூடிய காலத்திலும் கஸர் செய்யலாமா? என்று உமர் (ரலி) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டார்கள். இது குறித்து முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே? என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது (இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி),
*நூல்: முஸ்லிம் 1108*
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது என்ற (6:82) வசனம் இறங்கியவுடன், எங்களில் எவர் தான் அநீதி இழைக்காதிருக்க முடியும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநீதி என்று இறைவன் இங்கே குறிப்பிடுவது இணை வைத்தல் எனும் மாபெரும் அநீதியைத் தான் என்று விளக்கம் அளித்தார்கள்.
*(நூற்கள்: புகாரி, அஹ்மத்)*
உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான் என்ற *(திருக்குர்ஆன் 2:284)* வசனம் இறங்கியவுடன், மனதில் நினைப்பதைப் பற்றியெல்லாம் இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவருமே தப்ப முடியாதே? என்று நபித்தோழர்கள் அச்சத்துடன் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு முன்னர் வேதக்காரர்கள் கூறியதையே நீங்களும் கூறுகிறீர்களா? நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்ற (2:286) வசனம் இறங்கியது.
*(நூற்கள்: முஸ்லிம், அஹ்மத்)*
இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை ஹதீஸ் நூற்களில் நாம் காணலாம். நபித்தோழர்களுக்குத் திருமறையின் எந்த வசனத்திற்கேனும் விளக்கம் தேவைப்பட்டால் உடனே அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கத் தவறியதே இல்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.
இப்படியெல்லாம் பல்வேறு வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். இவ்வாறு கேட்ட போது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு வசனம் பற்றிக் கூட, இது எனக்கோ, உங்களுக்கோ விளங்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதே இல்லை. கேட்கப்படும் போதெல்லாம் விளக்கம் அளிக்கத் தவறியதில்லை.
நபித்தோழர்கள் விளக்கம் கேட்ட பல்வேறு வசனங்களில் ஒரே ஒரு முதஷாபிஹ் வசனம் கூட இருந்திருக்காது என்பதும் பொருத்தமாகப் படவில்லை.
அப்படி முதஷாபிஹ் வசனம் பற்றி நபித்தோழர்கள் கேட்டிருந்தால், (முதஷாபிஹ் யாருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதப்படி), இது முதஷாபிஹ்; எனக்கு விளங்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்வில் தமக்கு அருளப்பட்ட எந்த ஒரு வசனத்தைப் பற்றியும், தமக்கு விளங்காது என்று கூறவே இல்லை. முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் விளங்க முடியாது என்பது உண்மையானால் ஒரே ஒரு வசனம் பற்றியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு கூறியதாக எந்தச் சான்றும் கிடையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த வசனம் பற்றிக் கேட்கப்பட்ட போதும் விளக்கமளித்தார்களே தவிர, விளக்கம் அளிப்பதில் முஹ்கம், முதஷாபிஹ் என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டிருக்கவில்லை.
இங்கே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல வசனங்கள் விளக்கம் கூறாமலேயே எளிதில் அனைவருக்கும் புரிந்து விடும். வேறு சில வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கத்தின் துணையுடனேயே புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் விளக்கம் கேட்காத – எளிதில் விளங்குகின்ற – வசனங்களை விட, விளக்கம் தேவைப்பட்ட வசனங்களிலேயே முதஷாபிஹ் வசனங்கள் இருக்க அதிக சாத்தியமுள்ளது. நபித்தோழர்களுக்கே விளங்கச் சிரமமான வசனங்களில் ஒன்றிரண்டு முதஷாபிஹ் வசனங்கள் கூட இல்லாமல் இருக்குமா? அவ்வாறு இருந்திருந்தால் இவர்களின் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறியிருப்பார்கள்? இது முதஷாபிஹ் வசனம்; இது எனக்கும் விளங்காது; உங்களில் எவருக்கும் விளங்காது; அல்லாஹ்வுக்கு மட்டுமே விளங்கும் என்று தானே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாததே, குர்ஆனில் விளங்காதது எதுவுமே இல்லை என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளது.
*பதினொன்றாவது ஆதாரம்*
முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களிடம் முதஷாபிஹ் வசனங்கள் என்றால் யாவை? என்பதை நிர்ணயிப்பதில் பல அளவுகோல்கள் உள்ளன. ஆளுக்கு ஒரு விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் கருத்துப்படியும் பார்த்தால் முழுக் குர்ஆனும் முதஷாபிஹ் என்ற வகையில் சேர்ந்து, முழுக்குர்ஆனும் அனைவருக்கும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.
முதஷாபிஹ் வசனங்கள் யாவை? என்பதைச் சரியான சான்றுகளுடன் அறியும் போது, முதஷாபிஹ் வசனங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கல்வியில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பதை உணரலாம். முதஷாபிஹ் வசனங்கள் எவை? என்பது பற்றிய விளக்கமே அவை விளங்கக்கூடியவை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.
*முதஷாபிஹ் வசனங்கள் எவை?*
முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாம் கூறும் போது, முதஷாபிஹ் வசனங்கள் யாவை? அவை எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்? என்பதையும் கூறுவது அவசியமாகும்.
முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறும் போது, கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார் என்பதையும் கூற வேண்டும்.
இன்னின்ன வசனங்கள் முதஷாபிஹ் வசனங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் பட்டியல் போட்டுச் சொல்லவில்லை. எனினும் முதஷாபிஹ் வசனங்கள் எத்தகையது என்பதற்கான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு முதஷாபிஹ் வசனங்கள் யாவை என்பதை நாம் அறிய முடிகின்றது. அதன் சரியான பொருளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரு சில வசனங்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்திருக்கும். அந்த முரண்பாடு எத்தகையது என்றால், ஒரு கருத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகவும் மற்றொரு கருத்தைக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையை நிலைநிறுத்துவதாகவும் அமைந்திருக்கும். முதஷாபிஹ் வசனங்களின் முக்கியமான அம்சம் இது!
இது போன்ற அம்சம் திருக்குர்ஆனில் மட்டுமல்ல! மனிதர்கள் பயன்படுத்துகின்ற சொற்களில் கூட இந்த நிலைமை இருப்பதை நாம் உணரலாம்.
உதாரணமாக, இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறுகிறோம். இதைப் பிடித்துக் கொண்டு, இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாகச் சிலர் புரிந்து கொள்கின்றனர். இமாம்களைப் பற்றி நாம் கூறியுள்ள நற்சான்றுகளைக் கவனிக்கத் தவறியதால் இவ்வாறு புரிந்து கொள்கின்றனர்.
கப்ருகளைத் தரை மட்டமாக்குங்கள்; கப்ருகளில் விழா நடத்தாதீர்கள் என்று நாம் கூறும் போது, இதை மட்டுமே பார்க்கக் கூடிய சிலர், இறை நேசர்களை இழிவுபடுத்துவது தான் இதற்குப் பொருள் என்று சாதிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் சாதிப்பதற்குக் காரணம் என்ன? இறை நேசர்கள் பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களை இவர்கள் முழுமையாக ஆராய்வதில்லை. இறை நேசர்களை மதிப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறோம் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.
பாங்குக்கு முன்னால் ஸலவாத் கூறக் கூடாது என்று நாம் கூறினால், ஸலவாத்தையே நாம் மறுப்பதாகத் தவறான அர்த்தம் கற்பிக்கின்றனர். விபரமுடையவர்கள் தான் இது போன்ற கூற்றுக்களின் சரியான பொருளை அறிந்து கொள்வார்கள்.
இதை இங்கே நாம் எதற்காகக் குறிப்பிடுகின்றோம் என்றால், குர்ஆன் வசனங்களுடன் மற்ற மனிதர்களின் சொற்களை ஒப்பிடுவதற்காக அல்ல! முக்கியமான சந்தேகம் ஒன்றை நீக்குவதற்காகவே இந்த உதாரணங்களை நாம் கூறுகிறோம்.
அதாவது திருக்குர்ஆனில் முரண்பட்ட இரண்டு அர்த்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் சில வசனங்கள் அமைந்திருப்பது திருக்குர்ஆனுக்குப் பலவீனம் அல்லவா? யாவும் அறிந்த வல்ல இறைவனால் அருளப்பட்ட வசனங்களிலேயே இப்படி முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடமிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? இப்படி ஓர் ஐயம் சிலரது உள்ளங்களில் உருவாகலாம்.
முரண்பட்ட இரு கருத்துக்களையும் தெரிவிப்பதற்காக இறைவன் அவ்வசனங்களை அருளவில்லை. குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்கே அருளினான். ஆனாலும் மூடர்கள் தங்கள் அறியாமையினாலும், வழிகேடர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவும் அல்லாஹ் கூறாத பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கோளாறு வசனங்களில் இல்லை. சிலரது உள்ளங்களில் தான் உள்ளது.
இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறும் வாசகத்தில் இமாம்களை இழிவுபடுத்தும் எந்த அம்சமும் இல்லை. இதன் கருத்து, சிந்தனையாளர்களால் தெளிவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்வளவு தெளிவான வாசகத்தைக் கூட அறிவீனர்கள் தங்கள் அறியாமையினால் தவறான கருத்தைக் கொண்டதாக எண்ணுகிறார்கள். அறிந்து கொண்டே வழிகேட்டில் இருப்பவர்கள் வேண்டுமென்றே இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி விடுகின்றனர்.
மனிதனால் பேசப்படும் எந்த மொழியானாலும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்து கொள்வது சகஜமானது தான். திருக்குர்ஆனில் இவ்வாறு இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. ஏனெனில் அன்றைய மனிதர்கள் பேசிக் கொண்டிருந்த அரபு மொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டது.
உண்மையில் முதஷாபிஹ் வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே இறைவனால் அருளப்பட்டன. இன்றளவும் அந்த ஒரு கருத்தைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வசனம் சொல்லாத ஒரு கருத்தை அதற்குக் கற்பித்துக் கொண்டு வழிகேடும், அறியாமையும் நிறைந்த உள்ளங்கள் திசைமாறிச் சென்று விடுகின்றன.
திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே வல்ல இறைவனால் அருளப்பட்டன. அவற்றில் பல வசனங்கள் அந்த ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்வதுடன் அதில் விஷமம் செய்வதற்கு அறவே இடமளிக்காமல் இருக்கும்.
மற்றும் சில வசனங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்காகவே அருளப்படடிருந்தாலும் மாற்றுக் கருத்துக்கு அதில் இடமில்லாவிட்டாலும், விஷமிகள் அதற்குத் தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு இடமிருக்கும். அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது; அந்த வசனத்தில் சொல்லப்படாத அர்த்தம் அது என்பதைச் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வர்.
உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர்.
*அல்குர்ஆன் 3:7*
இறைவனின் இந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தைப் பிரயோகம் இதனை நமக்கு நன்றாகப் புரிய வைக்கின்றது. எவரது உள்ளத்தில் வழிகேடு ஆழமாகப் பதிந்து விட்டதோ அவர்கள் தங்களின் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்க முயற்சிப்பர்.
உண்மையில் இப்படி விஷமத்தனமான அர்த்தத்திற்கு அந்த வசனத்தில் இடமே இல்லை. அப்படியானால் அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
இது ஒன்றும் சிரமமானதல்ல! இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறுவதற்குத் தவறான பொருள் கற்பிக்கச் சிலர் முயலும் போது என்ன செய்கிறோம்?
இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்பவர்கள் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் பேசியவை, எழுதியவை, அதில் அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த வாசகத்தின் உண்மையான பொருள் தெளிவாகத் தெரிந்து விடும்.
இது போலவே திருக்குர்ஆனின் குறிப்பிட்ட ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தங்கள் தவறான கருத்தை நிலைநாட்ட சிலர் முயன்றால், இவர்களின் கருத்து சரியா? தவறா என்பதைப் புரிந்து கொள்வதற்குத் திருக்குர்ஆன் இது பற்றி மற்ற இடங்களில் கூறியிருப்பவை என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது பற்றி அளித்துள்ள விளக்கம் என்ன என்று ஆராய வேண்டும்.
ஏனைய வசனங்களின் கருத்துக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விளக்கத்திற்கு முரணாக இவர்கள் கொடுக்கும் அர்த்தம் இருந்தால் இந்தக் கருத்தைத் தள்ளி விட வேண்டும்.
ஆக, முதஷாபிஹ் வசனங்களின் சரியான பொருளை அறிந்து கொண்டு, தவறான கருத்தை நிராகரிப்பதற்கு முக்கியமான தகுதி என்னவென்றால், திருக்குர்ஆன் அந்த விஷயத்தைப் பற்றி மற்ற இடங்களில் என்ன கூறுகின்றது என்பதைப் பற்றிய தெளிவேயாகும். இதை அரபு மொழியில் தான் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் மொழியிலேயே திருக்குர்ஆன் கூறும் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டாலே போதும். இத்தகைய வசனங்களின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள்.
*அல்குர்ஆன் 3:7*
கல்வியில் சிறந்தவர்கள் கூறும் வார்த்தைகளைக் கவனியுங்கள். முதஷாபிஹ் பற்றிய பிரச்சனை ஏற்படும் போது, இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே என்பார்கள். இவை அனைத்தையும் நம்பினோம் என்பார்கள்.
இந்த ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தப்பான அர்த்தம் செய்யாதீர்கள். இந்த முழுக் குர்ஆனும் இறைவனிடமிருந்து தான் வந்துள்ளது. முழுக் குர்ஆனும் என்ன போதனையை வலியுறுத்துகின்றதோ அதற்கு மாற்றமான ஒரு கருத்தை நீங்கள் கூறாதீர்கள். குர்ஆனின் மற்ற சில வசனங்கள் கூறும் ஒரு கருத்துக்கு நேர் மாற்றமான ஒரு கருத்தை இந்த வசனத்திற்குக் கொடுப்பதன் மூலம், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்காதீர்கள். நாங்கள் அனைத்தையும் நம்பினோம். எந்த வசனத்துடனும் எந்த வசனத்தையும் மோதச் செய்ய மாட்டோம்
கல்வியாளர்களின் கூற்றில் இத்தனையும் அடங்கியிருப்பதைச் சிந்திக்கும் எவருமே உணர முடியும்.
முதஷாபிஹ் வசனங்களுக்குச் சரியான பொருளைச் செய்யத் தகுந்த கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களிடம் மேற்கண்ட தன்மைகள் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு சிலர் தப்பர்த்தம் செய்யும் போது கல்வியாளர்களின் பார்வை முழுக் குர்ஆனையும் அலச வேண்டும். முழுக் குர்ஆனின் போதனைகளுக்கு உட்பட்டு இந்த அர்த்தம் அமைந்துள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முதஷாபிஹ் வசனத்திற்குச் செய்யப்படும் பொருள் ஏனைய வசனங்களின் பொருளை மறுக்கும் விதமாக இருந்தால், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வகையில், இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை; இவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் என்று எவர்களது உள்ளத்தில் ஆழமான நம்பிக்கை உள்ளதோ அவர்களே கல்வியாளர்கள். அவர்களால் தான் இவற்றின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறோம். முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்பதே அந்த எடுத்துக்காட்டு!
திருக்குர்ஆனில் பல இடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இறைவன் கூறும் போது, கலிமத்துல்லாஹ் (இறைவனின் வார்த்தை), ரூஹுன் மின்ஹு (இறைவன் புறத்திலிருந்து வந்த உயிர்) என்றெல்லாம் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த கிறித்தவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஈஸாவை இறைவனின் வார்த்தை என்றும், இறைவனின் உயிர் என்றும் நீர் ஒப்புக் கொள்கிறீரா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு அந்தக் கிறித்தவர்கள், இது எங்களுக்குப் போதும் என்று கூறி விட்டுச் சென்றனர். உடனே 3:7 வசனம் இறங்கியது.
*(தப்ரீ)*
முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் இந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்றால் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் உயிர், இறைவனின் வார்த்தை என்றெல்லாம் வர்ணிக்கின்ற வசனங்கள் முதஷாபிஹ் என்பது தெளிவாகின்றது.
அதாவது, ஈஸா (அலை) அவர்களை கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் குறிப்பிடுவது உண்மையே! அன்றைய கிறித்தவர்கள் இந்த வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு, இறைவனின் குமாரர் என்பதையே இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன என்று வேண்டுமென்றே வியாக்கியானம் செய்தார்கள்.
திருக்குர்ஆனில் ஏனைய வசனங்களில், அவன் யாரையும் பெறவில்லை என்றும், அவன் தனக்கென மனைவியையோ, மக்களையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், அளவற்ற அருளாளனுக்கு மகன் இருந்தால் அந்த மகனை வணங்குவதில் நான் முதன்மையானவனாக இருப்பேன் என்று கூறுவீராக என்றும் இறைவன் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றான்.
இறைவனுக்குப் பிள்ளைகள் இல்லை என்று தெளிவாகக் கூறக் கூடிய, இரண்டாவது கருத்துக்கு இடமின்றி ஆணித்தரமாகக் கூறக்கூடிய இந்த வசனங்களையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் மகன் என்ற அர்த்தத்தைத் தராத கலிமத்தில்லாஹ் என்ற வார்த்தைக்கு இறை மகன் என்று வழிகெட்டவர்கள் பொருள் கொண்டனர்.
உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர் என்று இறைவன் இதைக் கண்டிக்கிறான்.
கலித்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் கூறுகின்ற இந்த வசனங்களின் சரியான பொருளை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். நபித்தோழர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள். ஒரு நபித்தோழர் கூட, கலிமத்துல்லாஹ் என்றால் இறைவனின் மகன் என்று பொருள் கொள்ளவே இல்லை. இவர்கள் அனைவரும் இதன் சரியான பொருளை எப்படிப் புரிந்து கொண்டனர்?
இந்த ஒரு வசனம் மட்டும் இறைவனிடமிருந்து வந்தது அல்ல! முழுக் குர்ஆனும் அந்த இறைவனிடமிருந்து தான் வந்தது என்று அவர்கள் நம்பினார்கள். இதற்குச் சரியான பொருளைக் கண்டு கொள்ள ஏனைய வசனங்களின் துணையை நாடினார்கள்.
இறைவனுக்கு மனைவி மக்கள் இல்லை என்று தெளிவாக இறைவன் வேறு பல இடங்களில் குறிப்பிடும் போது, அதற்கு மாற்றமாக கலிமத்துல்லாஹ் என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொண்டால் மற்ற வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே நபித்தோழர்களில் எவருமே, இறைவனின் வார்த்தை என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொள்ளவில்லை.
ஆதம் (அலை) அவர்கள் தவிர மற்ற மனிதர்கள் அனைவரும் ஆணுடைய விந்துத் துளி மூலம் பிறந்திருக்கும் போது ஈஸா (அலை) அவர்கள் மட்டும் விஷேசமான முறையில், இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்ததால், தன்னுடைய வார்த்தை, தன்னுடைய உயிர் என்று இறைவன் சிறப்பித்துச் சொல்கிறான் என்று அவர்கள் தெளிவாகவே புரிந்திருந்தார்கள்.
தங்களுக்குச் சாதகமாக ஏதேனும் கிடைத்தால் அதை மட்டும் பிடித்துக் கொள்வோம் என்ற மனப்பான்மை கொண்ட அன்றைய கிறித்தவர்கள் மட்டுமே இப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
இன்றைக்கும் கூட இறைவனுக்கு மகன் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கும் எவரும், கலிமத்துல்லாஹ் என்ற வார்த்தைக்கு இப்படி விபரீதமான பொருளைக் கொள்ள மாட்டார்கள்.
* கிறித்தவர்கள் இந்த வசனத்தில் விளையாட முற்பட்ட போது அவர்களின் போக்கை அடையாளம் காட்டும் விதமாக 3:7 வசனம் இறங்கியதால், கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று ஈஸா நபியைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் முதஷாபிஹ் என்பது தெளிவு.
* அந்த முதஷாபிஹ் வசனங்களை நபித்தோழர்கள் அனைவரும் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பதும் தெளிவு.
* இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக அறிந்து வைத்திருக்கும் இன்றைய முஸ்லிம்களில் யாரும் அந்த வசனங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதும் தெளிவு.
* கிறித்தவர்கள் புரிந்து கொண்ட அர்த்தத்தில் அந்த வசனம் அமைந்திருக்கவில்லை என்பதும் தெளிவு.
இந்த அம்சங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது முதஷாபிஹ் எத்தகையது? அதை விளங்கும் கல்விமான்கள் யார் என்பதை அறியலாம்.
*சமாதி வழிபாடும் முதஷாபிஹ் வசனங்களும்*
முதஷாபிஹ் வசனங்களின் தன்மை எத்தகையது என்பதை முன்னர் கண்டோம். அந்தத் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் எவை எவை முதஷாபிஹ் வசனங்கள் என்பதைத் தெளிவாக உணர முடியும். அதை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக நடைமுறையில் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் ஒரு சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம். அதன் பின்னர் புதிதாக எழுப்பப்படும் ஆட்சேபங்களுக்கான பதிலைப் பார்ப்போம்.
இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம்இறைவனல்லாதவர்களையும் வணங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதைக் காண்கிறோம். இவர்கள் தங்களின் இணை கற்பிக்கும் செயலை நியாயப்படுத்திட திருக்குர்ஆன் வசனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.
*அல்குர்ஆன் 2:154*
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.
*அல்குர்ஆன் 3:169*
இவ்விரு வசனங்களும் சமாதி வழிபாட்டுக்காரர்களால் அடிக்கடி எடுத்தாளப்படுகின்றன. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று மட்டும் இறைவன் கூறவில்லை. மாறாக அவர்களை இறந்தவர்கள் என்று எண்ணியும் பார்க்காதீர்கள்;அப்படிக் கூறவும் செய்யாதீர்கள் என்று இறைவன் தடையும் விதிக்கிறான். இதிலிருந்து நல்லடியார்கள் உயிருடனே உள்ளதால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம்; அல்லது இறைவனிடம் பெற்றுத் தருமாறு வேண்டலாம் என்று இவர்கள் வாதிடுவர்.
இவர்களின் உள்ளங்களில் வழிகேடு குடி கொண்டிருப்பதும் இது பற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன? இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் தந்த விளக்கம் என்ன?என்பதையெல்லாம் கண்டு கொள்ளாதிருப்பதுமே இதற்குக் காரணம். இவர்கள் தங்களது தவறான பாதையை இவ்வசனங்களின் துணை கொண்டு பலப்படுத்த எண்ணுகின்றனர்.
இவ்வசனங்களை முழுமையாக ஆராய்பவர்கள் இதற்கு நபி (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தைத் தேடுபவர்கள் இதுபற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன என்று பார்ப்பவர்கள் இவ்வசனங்களின் சரியான பொருளைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் இவ்வசனங்களின் சரியான பொருளைப் பார்ப்போம்.
*முதஷாபிஹ் வசனங்களின் இலக்கணம்*
இறைவனின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறந்தவர்கள் அல்லர்; நம்மைப் போன்று உயிருடன் உள்ளனர் என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் இவ்விரு வசனங்களுக்கும் கூறும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட சமாதி வழிபாட்டுக்கு இவ்வசனங்களில் என்ன ஆதாரம் இருக்கிறது? ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்ற காரணத்தால் அவரை வணங்கலாம் அவரிடம் பிரார்த்திக்கலாம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?
எத்தனையோ நல்லடியார்கள் உயிருடன் இன்றும் உலகில் வாழத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் போய் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் முடிவு செய்வார்களா? மனிதர்களிலேயே மிகவும் சிறந்த நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்ததில்லை. நபி (ஸல்) அவர்களுக்காக நேர்ச்சை செய்ததுமில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடவுமில்லை.
உண்மையில் இவர்கள் கருதக்கூடிய அர்த்தத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்றாலும் கூட அவர்களை வணங்குவதற்கு இதில் என்ன ஆதாரம் இருக்கிறது? இவர்களின் உள்ளங்களில் குடிகொண்டுள்ள வழிகேடு இவர்களை இவ்வாறு பேச வைக்கின்றது.
இறந்தவர்கள் அல்லர்; உயிருடன் உள்ளனர் என்பதற்கு இவர்கள் கூறக்கூடிய அர்த்தம் தானா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் இவ்விரு வசனங்களில் முதல் வசனத்தில் எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்றும் சேர்த்தே இறைவன் சொல்கிறான்.
உயிருடன் உள்ளனர் என்பதற்கு இவர்கள் என்ன விளக்கம் கொள்கிறார்களோ அந்தப் பொருளில் அவர்கள் உயிருடன் இல்லை. மாறாக அதை நீங்கள் உணர முடியாது. உங்களால் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் வேறு விதமாக உயிருடன் உள்ளனர். இதனால் தான் அதை நீங்கள் உணர மாட்டீர்கள் என்று இறைவன் சேர்த்துச் சொல்கிறான்.
இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். உயிருடன் இருக்கிறார்கள் என்பதைக் கேட்டதும் சாதாரணமாக எந்த அர்த்தத்தை நாம் விளங்குவோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாக எண்ணாதீர்கள்; தங்கள் இறைவனிடம் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று ஆணி அறைந்தாற்போல் இறைவன் தெளிவாக்குகின்றான்.
இந்தக் கருத்து இல்லையென்றால் தம் இறைவனிடம் என்று இறைவன் சொன்னதற்கு அர்த்தம் எதுவுமில்லாமல் போய் விடும். அந்த வசனத்தையே சரியாகச் சிந்தித்துப் பார்க்கும் போது இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போய் விடுகின்றது.
இதன் பிறகும் கூட தங்கள் விளக்கமே சரி என இவர்கள் சாதிக்க முயன்றால் திருக்குர்ஆனுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதைச் சிந்திப்பார்களானால் அதில் இவர்களுக்குப் பரிபூரண விளக்கம் கிடைக்கும்.
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர் எனும் இந்த (3:169) இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ
*நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 3834)*
உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு சமாதி வழிபாட்டுக்காரர்கள் கொண்ட பொருள் தவறு;அவர்கள் நினைத்திருக்கின்ற பொருளில் உயிருடன் இல்லை. மாறாக சுவனத்தில் வேறு வடிவில் அவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள் என்று மிகவும் தெளிவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர் என்று இறைவன் குறிப்பிடுவது எதைப் பற்றி என்பது இதிலிருந்து தெளிவாகவே விளங்குகின்றது. எனவே சமாதி வழிபாட்டுக்காரர்களின் தவறான கொள்கைக்கு இவ்வசனங்களில் அறவே ஆதாரம் இல்லை. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இவர்களின் நம்பிக்கையை மறுக்கும் விதமாகவே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
இதன் பின்னரும் தங்களின் சமாதி வழிபாட்டுக்கே இவ்வசனங்கள் பாதை போட்டுத் தருகின்றன என்று இவர்கள் சாதிக்க முற்பட்டால் இந்தப் பிரச்சனை பற்றி ஏனைய வசனங்கள் கூறுவதென்ன என்பதையாவது இவர்கள் கவனிக்க வேண்டும்.
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப் படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
*அல்குர்ஆன் 16:20 21*
இவ்வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் நமக்குக் கூறுகின்றான். யாரையாவது பிரார்த்திக்க வேண்டுமென்றால் அவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் யாராலும் படைக்கப் பட்டிருக்கக்கூடாது என்று இறைவன் கூறுகின்றான்.
ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டுமே அவரைப் பிரார்த்திக்க முடியாது. உயிருடன் இருப்பதுடன் அவர்கள் படைப்பவர்களாக எவராலும் படைக்கப்படாதவர்களாக சுயம்புவாக தான்தோன்றியாக இருக்க வேண்டும். இவர்கள் பிரார்த்திக்கும் நல்லடியார்களுக்கு இந்தத் தகுதிகள் உண்டா? இதைச் சிந்தித்தால் மேற்கூறிய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக்க முன்வருவார்களா?
மேலும் இந்த வசனத்தில் அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர் என்றும் ஆணித்தரமாக இறைவன் கூறுகின்றான். இதற்கு முரண்படாத வகையில் தானே மேற்கண்ட 2:154 3:169 வசனங்களை விளங்க வேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இவர்கள் நினைக்கும் பொருளில் உயிருடன் உள்ளனர் என்றால் அதை அவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!
*அல்குர்ஆன் 7:194 195*
இவ்வசனங்கள் கூறுகின்றபடி சமாதிகளில் உள்ளவர்களை எழுப்பி நடக்க வைக்க வேண்டும்;அவர்களது கைகளால் பிடிக்க வைக்க வேண்டும்; அவர்களைப் பார்க்க கேட்கச் செய்ய வேண்டும். அந்தச் சமாதிகளில் போய் கூப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லையானால் அவர்கள் உயிருடன் – அதாவது இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் உயிருடன் – இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னும் திருக்குர்ஆனில் *2:186 3:38 7:29 7:55 7:56 7:180 7:197 10:12 10:106 13:14 14:39 14:40 16:20 17:56 17:110 19:4 21:90 22:12 22:13 22:62 22:73 23:117 27:62 31:30 35:13 35:14 35:40 39:38 40:12 40:20 40:60 40:66 46:4 46:5* இது போன்ற ஏராளமான வசனங்கள் இவர்களின் நம்பிக்கையைத் தரைமட்டமாக்கும் போது *2:154 3:169* ஆகிய முதஷாபிஹான வசனங்களுக்குத் தவறான பொருள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு வசனங்கள் குறித்துப் பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளதால் சுருக்கமாகவே தந்துள்ளோம். முந்தைய தொடரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் அதில் குறிப்பிடப்பட்ட கிறித்தவர்களின் அதே போக்கு இவர்களிடமும் உள்ளதை உணரலாம்.
*குருட்டு வாதம் -1*
எந்த வசனத்திற்குப் பொருள் செய்வதில் சர்ச்சை நடக்கின்றதோ அந்த வசனத்தின் முற்பகுதியிலேயே “முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கு விளங்காது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதாவது, அந்த வசனத்தின் முற்பகுதியில், “எவரது உள்ளங்களில் வழிகேடு இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி, “முதஷாபிஹ்’களையே பின்பற்றுவர்” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிக் கொள்ள முயற்சிப்பவர்களையும், அதைப் பின்பற்றுவோரையும் இந்த வசனத்தின் முற்பகுதியில் வழிகேடர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்கிக் கொள்ள இயலாதவை என்பதற்கு இதுவே சரியான சான்றாக உள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது வழிகேடு என்றால் அவை விளங்க இயலாதவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்பது முதல் சாராரின் வாதம்.
3:7 வசனத்தின் பிற்பகுதிக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பதை அதன் முற்பகுதி தெளிவுபடுத்துகின்றது. இதன் அடிப்படையில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிட இயலாது” என்று இதற்குப் பொருள் கொள்வதே சரியாகும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.
*நமது மறுப்பு 1*
இந்த வாதம் மேலோட்டமாகப் பார்க்கும் போது வேண்டுமானால் அர்த்தமுள்ளது போல் தோன்றலாம். நன்கு பரிசீலனை செய்யும் போது இந்த வாதம் பொருளற்றது என்று தெளிவாவதுடன், முதல் சாராரின் கருத்துக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது என்பதை உணரலாம்.
முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை தேடுவோர் என்பதற்கும் குழப்பத்தை நாடி முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை தேடுவோர் என்பதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் உள்ளது.
மேற்கூறிய 3:7 வசனத்தின் முற்பகுதியில், பொதுவாக “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரை வழிகேடர்கள் என்று இறைவன் கூறவில்லை.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரையே வழிகேடர்கள் என்று அல்லாஹ் சித்தரிக்கின்றான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள (இப்திகாஅல் ஃபித்னதி) “குழப்பத்தை நாடி” என்ற வாசகம் இங்கு நன்கு கவனிக்கத்தக்கது.
“முதஷாபிஹ்’ வசனங்களில் விளக்கத்தைத் தேடுவது தவறு என்றால் “குழப்பத்தை நாடி’ என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தான் கூடாது என்றால், குழப்பத்தை நாடாது – நல்ல எண்ணத்துடன் “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தவறில்லை என்ற கருத்து தான் அதில் இருந்து கிடைக்கும்..
“முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கும் விளங்கும் என்பதற்குத் தான் இதில் ஆதாரம் உள்ளதே தவிர “மனிதர்களில் எவருக்கும் விளங்காது’ என்பதற்கு இதில் ஒரு ஆதாரமும் இல்லை.
*குருட்டு வாதம் – 2*
حدثنا عبد الله بن مسلمة حدثنا يزيد بن إبراهيم التستري عن ابن أبي مليكة عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآية هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب قالت قال رسول الله صلى الله عليه وسلم فإذا رأيت الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم
*திருக்குர்ஆனின் 3:7* வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டி விட்டு, “ஆயிஷாவே! இதில் வீண் தர்க்கம் செய்பவர்களை நீ காணும் போது இவர்களைத் தான் அல்லாஹ் நாடியுள்ளான் (என்பதைப் புரிந்து கொண்டு) இவர்களைத் தவிர்த்து விடு!” என்று கூறினார்கள்.
இது *புகாரி 4745,* முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்கள் பற்றி சர்ச்சை செய்பவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிந்துள்ளார்கள். “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்க முடியும் என்றால் அதுபற்றி சர்ச்சை செய்பவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்கள். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்காது என்பதை இந்த நபிமொழி உறுதி செய்கின்றது என்றும் வாதிடுகின்றனர்.
*நமது மறுப்பு -2*
மேற்கூறிய ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டிய பின்பே, “அவர்களைத் தவிர்த்து விடு’ என்று கூறுகின்றார்கள். அந்த வசனத்தில் “குழப்பத்தை நாடி’ விளக்கம் தேடுவோரே கண்டிக்கப்படுகின்றனர். அந்த வசனத்தை ஓதிக் காட்டிய பின் நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளதால், குழப்பத்தை நாடி வீண் தர்க்கம் செய்வோரையே நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள் என்பது தெளிவு.
ஆக, நபி (ஸல்) அவர்கள் கண்டித்தது குழப்பத்தை நாடுவோரைத் தான் என்பதை விளங்கலாம். உண்மையை விளங்கும் எண்ணத்தில் ஆராய்வதற்குத் தடை ஏதும் இல்லை.
*குருட்டு வாதம் – 3*
அல்லாஹ் தன் திருமறையில் சுவர்க்கம், நரகம், அர்ஷ், கியாமத், நீதி விசாரணை, துலாக்கோல் இன்னும் இது போன்ற பல விஷயங்களைக் கூறுகிறான். இவை எப்படி இருக்கும் என்ற சரியான விளக்கத்தைக் கல்வியில் சிறந்தவர்கள் உட்பட எவருமே அறிய முடிவதில்லை. அல்லாஹ் ஒருவன் மட்டுமே இவற்றை அறிவான்.
மனிதரில் எவருமே அறிந்து கொள்ள இயலாதவையும் குர்ஆனில் உள்ளன என்பதற்கு இது போதுமான சான்றாகும். முதஷாபிஹ் வசனங்களை எவருமே விளங்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை என்பதும் இவர்களின் வாதம்.
*நமது மறுப்பு – 3*
இந்த வாதம் இரண்டு வகையில் தவறானதாகும். “சுவர்க்கம், நரகம், இது போன்ற இன்ன பிற விஷயங்களைக் கூறும் வசனங்கள் தான் முதஷாபிஹாத் வசனங்கள்” என்று இந்த சாரார் விளங்கிக் கொண்டதற்கு ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. “சுவர்க்கம், நரகம் போன்றவற்றைக் கூறும் வசனங்களே முதஷாபிஹ் ஆகும்” என்பதை திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களின் அடிப்படையிலோ, ஹதீஸ்களின் அடிப்படையிலோ நிரூபிக்காமல் அவர்களது யூகத்தின் அடிப்படையில் இவை தான் முதஷாபிஹ் என்ற முடிவுக்கு வருவது ஏற்க முடியாததாகும். முதலில் இவர்கள் இதை நிரூபித்து விட்டுத் தான் இதனடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.
இவை தான் முதஷாபிஹ் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இவர்களின் வாதம் பொருளற்றதாகும். எப்படி என்று பார்ப்போம்.
முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியுமா? என்பதே இன்றுள்ள பிரச்சனை. ஒரு வசனம் விளங்கி விட்டது என்றோ, விளங்கவில்லை என்றோ எப்போது கூற முடியும்? ஒரு வசனத்தில் ஒரு விஷயம் எந்த அளவு கூறப்படுகிறதோ அந்த விஷயத்தை அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்றே பொருளாகும்.
அந்த வசனத்தில் கூறப்படாதது, இறைவன் கூற விரும்பாதது விளங்கவில்லை என்பதற்காக, அந்த வசனமே விளங்கவில்லை என்று கூறுவது அறிவுடைமையாகாது.
“நீ இந்தக் காரியத்தைச் செய்தால் உனக்கு விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தருவேன்” இது ஒரு வசனம். (குர்ஆன் வசனமல்ல) இந்த வசனத்தை நீங்கள் எவரிடமாவது கூறுகின்றீர்கள். நீங்கள் தருவதாகக் கூறும் பொருள் எதுவென்று அவனுக்குக் தெரியாமலிருக்கலாம். ஏனெனில் என்ன பொருள் என்பதை நீங்கள் சொல்லவில்லை. அதற்காக, “நீங்கள் சொன்ன வசனமே விளங்கவில்லை” என்று அவன் சொல்வானா?
அந்த வசனத்தில் நீங்கள் சொல்ல வருவது “ஏதோ ஒரு பொருளைத் தருவேன்” என்பது மட்டுமே! ஏதோ ஒரு பொருளை நீங்கள் அவனுக்குத் தரப் போகிறீர்கள் என்பதை அவனும் விளங்கிக் கொள்வான். அதாவது நீங்கள் கூறிய வசனத்தை விளங்கிக் கொள்வான்.
“இந்தக் காரியத்தை நீ செய்தால் உனக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று ஒருவனிடம் நீங்கள் கூறுகிறீர்கள். அவனும் நீங்கள் சொல்ல வருவதை விளங்கிக் கொள்வான். நீங்கள் எப்போது திருமணம் செய்து வைப்பீர்கள் என்பதையோ, மணப் பெண் கருப்பா? சிவப்பா? என்பதையோ நீங்கள் குறிப்பிட்ட வசனத்திலிருந்து அவனால் விளங்க முடியாது. எவனாலும் விளங்க முடியாது. நீங்கள் சொல்லாத இந்த விபரங்கள் அவனுக்கு விளங்கவில்லை என்பதற்காக நீங்கள் கூறிய வசனமே விளங்கவில்லை என்று கூற மாட்டான்.
இதே போலத் தான் “கியாமத் நாள் உண்டு; அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது” என்று இறைவன் கூறுகிறான். இந்த வசனம் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. விளங்கியதால் தான் கியாமத் நாள் உண்டு என்று நம்புகிறோம். அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது என்றும் நம்புகிறோம். ஆக இந்த வசனத்தில் என்ன கூறப்படுகிறதோ அது நன்றாகவே விளங்குகிறது. என்ன கூறப்படவில்லையோ அது தான் விளங்கவில்லை. கூறப்படாத ஒன்று விளங்காததால் அந்த வசனமே விளங்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்?
நாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட முதஷாபிஹ் வசனங்களைப் பற்றியே சர்ச்சை செய்கிறோம். குர்ஆனில் கூறப்படாத, இறைவன் சொல்ல விரும்பாதவற்றைப் பற்றியல்ல!
முதல் சாராரின் இந்த வாதப்படிப் பார்த்தால் முதஷாபிஹ் மட்டுல்ல; முஹ்கமான வசனங்களையும் கூட விளங்க முடியாது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். “பன்றி உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது” என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். முதல் சாராரின் கருத்துப்படியும் இது முஹ்கமான வசனம். பன்றியை உண்ண இறைவன் தடுக்கிறான் என்பது இதிலிருந்து புரிகிறது. ஆனால் இறைவன் கூறாத, ஏன் தடுத்தான் என்ற விபரமோ, அது மட்டும் தடுக்கப்படுவதற்கான காரணமோ நமக்கு விளங்கவில்லை.
இறைவன் கூறாத இந்தக் காரணம் விளங்கவில்லை என்பதற்காக அந்த வசனமே விளங்காது என்று எவருமே கூறத் துணிய மாட்டார்கள். இறைவன் எந்த அளவுக்குக் கூறுகிறானோ அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்று முடிவு செய்து, அதனடிப்படையில் “பன்றி ஹராம்’ என்று சட்டங்கள் வகுக்கத் தானே செய்கிறோம்.
சுவர்க்கம், நரகம், கியாமத், இன்ன பிற விஷயங்கள் பற்றிக் கூறும் எல்லா வசனங்களுமே இறைவன் கூறக்கூடிய அளவுக்கு விளங்கத் தான் செய்கிறது. அதனால் தான் அதை நாம் விசுவாசம் கொண்டிருக்கிறோம். இந்த வசனங்கள் விளங்கவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத வாதம். இவை தான் முதஷாபிஹ் என்று வாதிடுவதும் அடிப்படையற்றதாகும்
*குருட்டு வாதம் 4*
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைத் திருக்குர்ஆன் கூறும் போது அன்றைய மக்கள் ஒரு விதமாகப் புரிந்து கொண்டார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் உண்மைகளுக்கு ஏற்றவாறு வேறு அர்த்தம் செய்கின்றனர். இதற்காகவே இறைவன் முதஷாபிஹ் வசனங்களை அருளினான். முதஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை அறிய முடியாது என்பதற்கு இதுவும் சரியான ஆதாரமாகும் என்று நூதனமான வாதத்தை இவர்கள் எடுத்து வைக்கின்றனர்.
*நமது மறுப்பு- 4*
இந்த வாதத்தில் அர்த்தமும் இல்லை. ஆதாரமும் இல்லை. விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வசனங்கள் தான் முதஷாபிஹ் என்று எந்த ஆதாரமுமின்றிக் கூற இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்று இரண்டாம் சாரார் கேட்கின்றனர். விஞ்ஞானம் பற்றிய அறிவு காலத்திற்குக் காலம் மாறலாம். அதற்கேற்றவாறு பொருள் செய்ய ஏற்ற வகையில் திருக்குர்ஆனின் வார்த்தைப் பிரயோகம் அமைந்திருக்கலாம். இவை தான் முதஷாபிஹ் என்று இறைவன் கூறுவதாக எப்படிக் கூற முடியும் என்பதே கேள்வி.
உதாரணமாக ஒரு காலத்தில் “அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தார்கள். அப்படி ஒரு நிலையே கருவுறுதலில் இல்லை என்று ஆனதும், அலக் என்பதற்கு வேறு பொருள் தருகிறார்கள். இரண்டுக்கும் ஏற்ற வகையில் அந்த வார்த்தை அமைந்திருக்கிறது என்பதெல்லாம் சரி தான். அதற்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கேள்வி.
சர்ச்சைக்குரிய 3:7 வசனத்தில், “எவரது உள்ளங்களில் வழிகேடு உள்ளதோ அவர்கள் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகிறார்கள்” என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஒரு காலத்தில் “அலக்’ என்ற பதத்திற்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தனர். இவ்வாறு பொருள் செய்த 1400 ஆண்டு கால மக்களும் வழிகேடர்கள் என்று ஆகிவிடாதா? அது போல் இன்றைக்கு வேறு அர்த்தம் செய்பவர்களும், முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் செய்து விட்டதால் வழிகேடர்கள் என்று ஆக மாட்டார்களா?
“எவர்களின் உள்ளத்தில் வழிகேடு உள்ளதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி முதஷாபிஹ் வசனங்களையே பின்பற்றுவர்” என்று இறைவன் கூறுவதிலிருந்து இவையெல்லாம் முதஷாபிஹ் அல்ல என்று தெளிவாகவே தெரிகின்றது.
முதஷாபிஹ் என்றால் இரண்டு விதமான பொருள் செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். குழப்பத்தை நாடுவோர் அதற்கு ஒரு பொருளைச் செய்து கொண்டு அதன் வழியே செல்ல வேண்டும். குழப்பத்தை நாடாதோர் மற்றொரு விதமான பொருளைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். இப்படி அமைந்திருப்பவையே முதஷாபிஹ் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. விஞ்ஞான சமாச்சாரங்களில் இது போன்ற தன்மையெல்லாம் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் வழிகேடர்கள் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் குழப்பத்தை நாடுவோர் அல்லவே?
*குருட்டு வாதம் 5*
முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூற முடியவில்லை. பல்வேறுபட்ட விளக்கங்களை ஒவ்வொருவரும் கூறுகின்றனர். முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்க முடியும் என்றால் அனைவரும் ஒரே கருத்தைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரே கருத்தைக் கூறாமல் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே முதஷாபிஹ் எவருக்கும் விளங்காது என்பதற்கு மற்றொரு சான்றாகும் என்று வாதிக்கின்றனர்.
*நமது மறுப்பு- 5*
இந்த வாதமும் பொருளற்றதாகும். ஏனெனில் கருத்து வேறுபாடுகள் முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல! முஹ்கம் என்று முதல் சாராரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தொழுகை, நோன்பு, இன்னபிற சட்டதிட்டங்களைக் கூறக் கூடிய வசனங்களை முதல் சாராரும் முஹ்கம் என்றே கூறுவர். சட்ட திட்டங்களைப் பற்றிய அந்த வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மத்ஹபுகள் என்ற பெயரால் முரண்பட்ட சட்டதிட்டங்கள் நிலவி வருவது இதற்குப் போதிய சான்றாகும்.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்ற முடிவுக்கு முதல் சாரார் வருவார்களானால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள ஏராளமான முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது முதல் சாராரும் முஹ்கம் என்று ஏற்றுக் கொண்ட பல வசனங்களை முதஷாபிஹ் வசனங்கள் என்று கூறும் நிலை ஏற்படும்.
முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லாக் கருத்துக்களையும் அலசி, சரியான கருத்தை முடிவு செய்வது போல் முதஷாபிஹ் வசனங்களிலும் முடிவு செய்ய முடியும்.
இன்னும் சொல்வதென்றால் முதல் சாரார் முதஷாபிஹ் வசனங்கள் எனக் கூறுகின்ற சொர்க்கம், நரகம், மறுமை போன்றவற்றைக் குறிப்பிடும் வசனங்களிலுள்ள கருத்து வேறுபாடுகளை விட முஹ்கம் என்று முதல் சாரார் முடிவு செய்துள்ள, சட்டதிட்டங்கள் தொடர்பான வசனங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன.
கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காரணம் காட்டி முதஷாபிஹ் வசனங்கள் விளங்க முடியாதவை என்று முதல் சாரார் கூறுவார்களானால் முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். முதல் சாரார் அவ்வாறு கூறத் துணிய மாட்டார்கள். எனவே அவர்களின் இந்த வாதம் அர்த்தமற்றது.
*குருட்டு வாதம் – 6*
திருக்குர்ஆனில் முஹ்கம் வசனங்களும் உள்ளன; முதஷாபிஹ் வசனங்களும் உள்ளன. வல்ல அல்லாஹ்வே இவ்வாறு தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கிறான். இறைவன் இரண்டு வகை வசனங்கள் உள்ளதாகக் கூறும் போது, இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பது அவசியம். முஹ்கம் வசனங்கள் அனைவருக்கும் விளங்கக் கூடியவை. முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்கள் எவரும் விளங்கிக் கொள்ளத்தக்கவை அல்ல. இறைவன் மாத்திரம் அறியக் கூடியவை என்று கூறும் போது தான் இரண்டு வகைகளாக ஆக முடியும்.
முஹ்கம் வசனங்களும் விளங்கும்; முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று கூற முற்பட்டால் முஹ்கம் வசனங்களுக்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும். இறைவன் இரண்டு வகைகளாகத் தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கும் போது, “இரண்டும் விளங்கத்தக்கவை’ என்று கூறினால் இறைவன் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளதை ஒன்றாக ஆக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறி இரண்டையும் வித்தியாசப்படுத்துகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.
*நமது மறுப்பு – 6*
இறைவன் இரண்டு விதமான வசனங்கள் உள்ளதாகக் கூறுவது உண்மையே! இரண்டுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதும் உண்மையே! அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் முதல் சாரார் குறிப்பிட்ட வகையில் தான் அந்த வித்தியாசம் அமைய வேண்டும் என்பது என்ன அவசியம்?
முதல் சாரார் குறிப்பிடுகின்ற அந்த வித்தியாசத்தை, அதாவது குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்ற விபரீதக் கருத்தை எண்ணற்ற வசனங்கள் மறுத்துக் கொண்டிருக்கும் போது, முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அதற்கு மாற்றமான இந்த வித்தியாசத்தை எப்படி ஏற்க முடியும்? (முதஷாபிஹ் வசனங்களும் விளங்கக் கூடியவையே என்று இரண்டாம் சாரார் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது இது விரிவாக விளக்கப்படும்)
முஹ்கமையும் முதஷாபிஹையும் சம நிலையில் நாமும் வைக்கவில்லை. முஹ்கம் எளிதில் எவருக்கும் விளங்கக் கூடியவை; முதஷாபிஹ் வசனங்கள் அறிவில் தேர்ந்தவர்களுக்கு விளங்கக் கூடியவை என்று கூறுவதன் மூலம் இரண்டு வகையான வசனங்களையும் நாம் வித்தியாசப்படுத்துகிறோம்.
*குருட்டு வாதம் – 7*
முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றால் அறவே விளங்காது என்று நாம் கூறவில்லை. ஓரளவு அனுமானம் செய்ய முடியும். திட்டவட்டமாக இது தான் விளக்கம் என்று கூற முடியாது என்பதே அதன் பொருள். முதஷாபிஹ் வசனங்களைச் சிந்திக்கவே கூடாது என்று நாங்கள் கூறவில்லை என்றும் உளறுகின்றனர்.
*நமது மறுப்பு – 7*
*தொடரும்*
No comments:
Post a Comment