பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 12, 2020

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனை

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அதிலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பு பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட பிரார்த்தனைகளை உரையில் காண்போம்..

கஅபதுல்லாஹ்வில் கேட்கப்பட்ட பிரார்த்தனைகள் 

நபி(ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன்.

ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருநார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, ‘யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!’ என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்’.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : புஹாரி 240)

இம்மை, மறுமைக்கான பிரார்த்தனை

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதிகதிமாக செய்த பிரார்த்தனைகளில் இம்மைக்கும், மறுமைக்கும் செய்த பிரார்த்தனை தான். 

கத்தாதா (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்து வந்த பிரார்த்தனை எது?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்து வந்த பிரார்த்தனை, “அல்லாஹும்ம! ஆத்தினா ஃபித் துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்.

” (இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”) என்பதாகும்” என்று விடையளித்தார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்), நூல் : முஸ்லிம் 5219)

செய்தவற்றின் தீங்கிலிருந்தும், செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்

நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் நம்மை அறிந்தோ, அறியாமலோ சில பாவங்கள் செய்கின்றோம். மேலும், நாம் முக்கியமாக செய்ய வேண்டிய காரியங்களை தவறியும் விடுகின்றோம். அதற்காக நபி (ஸல்) அவர்கள் நாம் செய்தவற்றின் தீங்கிலிருந்தும், செய்ய தவறியவற்றின் தீங்கிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்பு கோருவதாக கூறுகிறார்கள். 

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் எனப் பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(அறிவிப்பவர் : ஃபர்வா பின் நவ்ஃபல் அல்அஷ்ஜஈ (ரஹ்), நூல் : முஸ்லிம் 5259)

பாவமன்னிப்பு கோருவதில் தலையான துஆ

‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

(அறிவிப்பவர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி), நூல் : புஹாரி 6306)

செல்வத்தினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்

நபி(ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ மின் அதாபிந் நார். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் கப்ற், வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃகினா, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நரகத்தின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். செல்வத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூல் : புஹாரி 6376)

வறுமையினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றிஇ வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

(அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூல் : புஹாரி 6377)

பகலிலும், இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் 

‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), நூல் : புஹாரி 6307)

தாம்பத்திய உறவின் போதும், (உளூ உட்பட) மற்ற எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது

‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது ‘அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து’ என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : புஹாரி 141)

கழிவறைக்குச் செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை

நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி’ என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி), நூல் : புஹாரி 6322)

துன்பம் நேரும் போது பிரார்த்திப்பது

நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : புஹாரி 6345)

இயலாமை, சோம்பல் உள்ளிட்டவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி,வல்ஹரமி, வல்புக்ல். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும், மரணத்தின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(அறிவிப்பவர் :அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் 5243)

துன்பத்தின்போது ஓத வேண்டிய பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:

லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 5276)

கண்ணெதிரே இல்லாத முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்பதன் சிறப்பு

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!” என்று கூறாமல் இருப்பதில்லை.

(அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 5279)

மழைவேண்டிப் பிரார்த்தித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் “தாருல் களா” திசையிலிருக்கும் வாசல் வழியாகப் பள்ளிவாசலுக்குள் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றவாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். வந்த மனிதர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழிவிப்பான்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தி, “இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நாங்கள் வானத்தில் மேகக் கூட்டங்களையோ திரள்களையோ காணவில்லை.

எங்களுக்கும் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “சல்உ” மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை (என்பதை நாங்கள் தெளிவாகக் காண முடிந்தது). அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு பரவியது; பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வாரம்வரை நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை.

அடுத்த வெள்ளியன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதேவாசல் வழியாக (பள்ளிவாசலுக்குள்) வந்தார். (வந்தவர்) நின்றவாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால்) எங்கள் (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன (போக்கு வரத்து தடைப்பட்டுவிட்டது). எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா, எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா, சிறு குன்றுகள், அகன்ற மலைகள், ஓடைகள்,விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

(அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் 1633)

முடிவுரை

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். அவை யாவும் நம் வாழ்விற்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாகும். நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளும், சோதனைகளிலும் அவர்கள் மேற்கொண்ட பொறுமை மற்றும் பிரார்த்தனை மூலம் எவ்வாறு அச்சூழ்நிலையை கையாண்டார்களோ அவ்வாறு நமக்கும் அதேப்போன்று சோதனைகள் ஏற்படும் போது சந்தற்பங்களுக்கேற்ப நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அனைத்தையும் கடைபிடித்து நற்பயன் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

No comments:

Post a Comment