*அல்லாஹ்வை நினைப்போம்! அர்ஷின் நிழலில் இருப்போம்!*
தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.
”அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழன் மூலம் நிழலளிப்பான்.
1. நீதி மிக்க ஆட்சியாளர்
2. இறை வணக்கத்திலேயே! வளர்ந்த இளைஞன்
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர்
5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர்
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ”நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்” என்று கூறியவர்
7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6806
திக்ரு செய்வதற்கு இறைவன் தரும் கூலி
”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல் ஷையின் கதீர்”
பொருள் : (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே! ஆட்சி அதிகாரம் உரியது. அவனுக்கே! புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வமையுள்ளவன்)
என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ! அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே! தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6403
அவனை நினைத்தால் நம்மை நினைப்பான்
அல்லாஹ் கூறுகிறான், ”என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!” (அல்குர்ஆன் 2:152)
ஒவ்வொரு நிலையிலும் அல்லாஹ்வைப் பற்றிய நினைப்பும், சிந்தனையும் நம்மிடம் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையை எண்ணி அவனுக்கு நன்றி மறக்காது நன்றி செலுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், அவனின் அருட்கொடையின் கீழும் நாம் இருப்போம்.
நடந்து சென்றால் ஓடி வருவான்
அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள், ”என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ! அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன்.
அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்” என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 7405
நாம் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் அல்லாஹ் பன்மடங்கு அதிகமாக கூலி வழங்குகிறான். அவனை நாம் கொஞ்சமாக நினைவு கூர்ந்தாலோ அல்லது வணங்கினாலோ வல்ல அல்லாஹ்வோ பன்மடங்கு அதிகமாக நம்மை நெருங்குகிறான். ஆனால், இதனை நாம் பெரிதும் கருதுவதில்லை. அவரவரின் சுயதேவைகளும், சொந்த வாழ்க்கையும் இறை நினைவை விட்டும் நம்மை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.
சொர்க்கத்தின் கருவூலம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ”அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே! நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே! இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ”லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் – அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்திலிருந்து விலகவோ! நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது” என்று கூறுவதைக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ”அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று அழைத்தார்கள். ”கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் பதிலளித்தேன். ”உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று சொன்னார்கள். ”சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நான் கூறினேன். ”லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி 4202
வெற்றி பெற்றோர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது “ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள்! இது “ஜும்தான்” மலை ஆகும். தனித்து விட்டவர்கள் வெற்றி பெற்றனர்” என்று சொன்னார்கள். மக்கள், “தனித்து விட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5197
ஒரு நாளில் ஆயிரம் நன்மைகளை பெற்று தரும் திக்ர்
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (“சுப்ஹானல்லாஹ்” என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 5230
இவற்றை தடுக்க ஷைத்தான் முயற்சிப்பான்
திக்ரின் மூலமாக இவ்வளவு ஏராளமான நன்மைகள் கிடைப்பது, சுவனத்திற்கு செல்லும் வேலையை இலகுவாக்கி விடும், எனவே, திக்கு செய்ய வேண்டும், எப்போதும் இனை நினைவோடு இருக்க வேண்டும் என்றும், நாம் எவ்வளவு எண்ணினாலும் இவற்றை தடுக்க ஷைத்தான் முயற்சிப்பான், பல்வேறு தீய சிந்தனைகளை நமக்கு நினைவூட்டுவான். அல்லாஹ் கூறுகிறான்.
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 7:200, 201)
இறைவனை நினைப்பதை தடுக்க ஷைத்தான் செய்யும் முயற்சியைப் பாருங்கள், நபியவர்கள் கூறுகிறார்கள்,
”மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1142
ஷைத்தானின் ஊசலாட்டத்தை முறியடித்து, இறைவனை நினைவு கூறுவோம். மேற்கூறிய அணைத்து திக்ருகளையும் நாம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வந்தாலே அதுவே பெரும் நன்மைகளாக நாளை நம்மை சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ்விற்கு கூட மிக பிடித்த செயல் எது என்று கேட்கும் போது மிக சிறிய அமல்களாயினும் தொடர்ந்து செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக, இச்சிறிய அமல்களை தொடர்ந்து செய்வதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் கடைபிடிக்க தூண்டுபவர்களாக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிய வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
No comments:
Post a Comment