பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 9, 2020

கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!#

#கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!#

ஹஜ் பெருநாள் தினத்தில் ஆட்டைக் குர்பானி கொடுப்பவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம்.

மாடுகளைக் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதம் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.

ஆட்டைக் குர்பானி கொடுக்க பொருள் வசதி இருந்தாலும் வசதி இல்லாவிட்டாலும் மாட்டில் ஒரு பங்கு சேரலாம். மாட்டில் ஏழில் ஒரு பங்கும் ஒரு ஆடும் சமமானவை தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்ததல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், மாடு ஆகியவற்றில் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அனுமதியளித்துள்ளனர்.

صحيح مسلم

350 - (1318) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

"நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்."

நூல் : முஸ்லிம் : 2537.

ஏழு பேருக்கு ஒரு மாடு என்பதை இரு விதமாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த மாடு இந்த ஏழு பேருக்கானது; அந்த மாடு அந்த ஏழு பேருக்கானது தெளிவுபடுத்துதல் ஒரு வகை.

எழுபது பேரிடம் பங்கு சேர்த்து பத்து மாடுகளை வாங்குதல் ஒரு வகை.

முதல் வகையில் பங்கு சேர்ந்தவருக்கு தனது மாடு இது என்று தெரியும். அல்லது இன்ன எடையில் இன்ன விலையில் உள்ளது என்று தெரியும்.

இரண்டாவது கருத்துப்படி குறிப்பாக தனது மாடு எது என்று தெரியாது. இந்த பத்து மாட்டில் ஏதோ ஒரு மாடு என்று தான் தெரியும். இவர் சார்பில் கொடுக்கப்படும் மாட்டின் எடை எவ்வளவு விலை எவ்வளவு என்ற எந்த விபரமும் அவருக்குத் தெரியாது.

முதல் வகையில் பங்கு சேர்வதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இரண்டாவது வகையில் தெளிவின்மை உள்ளதால் அதற்கு அனுமதி இல்லை.

 

صحيح مسلم

353 - (1318) وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، قَالَ: «اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ» فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ: أَيُشْتَرَكُ فِي الْبَدَنَةِ مَا يُشْتَرَكُ فِي الْجَزُورِ؟ قَالَ: " مَا هِيَ إِلَّا مِنَ الْبُدْنِ، وَحَضَرَ جَابِرٌ الْحُدَيْبِيَةَ، قَالَ: نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ "

"நாங்கள் ஹுதைபியா நாளில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு ஒட்டகத்தில் கூட்டு சேர்ந்து கொண்டோம் என்று ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள். ஜாபிர் அவர்கள் ஹுதைபியாவில் பங்கெடுத்தவராவார்.

நூல் : முஸ்லிம் : 2540

ஒவ்வொரு ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தில் பங்கு சேர்ந்து குர்பானி கொடுத்தார்கள் என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

அதாவது 70 ஒட்டகங்களில் 490 பேரைக் கூட்டாகத் திரட்டி குர்பானி கொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு ஒட்டகம் கொடுத்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

குர்பானி கொடுக்கும் ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு மாட்டை வாங்கலாம்.

மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ஜமாஅத்துகளோ, இயக்கங்களோ பங்கு சேர்த்து அவர்களுக்காக மாடுகளை வாங்கலாம்.

ஆனால் ஒவ்வொரு பங்கு சேர்ந்தவர்களுக்காகவும் வாங்கப்பட்ட மாடு இது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதை நாம் அறியலாம்.

ஆனால் இன்று நடைமுறை அவ்வாறு இல்லை.

70 நபர்களிடம் பங்கு வாங்கி பத்து மாடுகள் வாங்குகிறார்கள். அந்தப் பத்துமாடுகளில் ஒரு பங்குதாரரின் மாடு எது என சொல்லப்படுவதில்லை. தான் குர்பானி கொடுக்கும் மாடு எது என குர்பானி கொடுப்பவருக்கே தெரிவதில்லை.

பத்து மாடுகளில் சில மாடுகள் 20 ஆயிரம், சில மாடுகள் 30 ஆயிரம், சில மாடுகள் நாற்பதாயிரம் என்ற இருக்கலாம். 20 ஆயிரம் ரூபாய்க்கான பங்கு இவ்வளவு, முப்பதாயிரம் ரூபாய்க்கான மாட்டின் பங்கு இவ்வளவு, நாற்பதாயிரம் ரூபாய் மாட்டின் பங்கு இவ்வளவு என்று தெளிவுபடுத்தி பங்குகள் வாங்க வேண்டும். பங்கு வாங்கும் போது அப்படி தெளிவுபடுத்த முடியாவிட்டாலும் முன்பணம் என்ற வகையில் பங்கை வாங்கிக் கொள்ளலாம்.

வாங்கி முடித்த பின் உங்கள் பங்கில் வாங்கிய மாடு இத்தனை கிலோ, அதன் விலை இவ்வளவு, மீதி இவ்வளவு உள்ளது. அல்லது மீதி இவ்வளவு நீங்கள் தர வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொரு ஏழு பேருக்கு ஒரு மாடு என்ற ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது.

மார்க்கத்தில் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கலும் தெளிவுபடுத்துவது அவசியம்.

 

صحيح البخاري

2239 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ العَامَ وَالعَامَيْنِ، أَوْ قَالَ: عَامَيْنِ أَوْ ثَلاَثَةً، شَكَّ إِسْمَاعِيلُ، فَقَالَ: «مَنْ سَلَّفَ فِي تَمْرٍ، فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழத்திற்காக ஒருவர் முன்பணம் கொடுத்தால் என்ன எடை என்பதையும், என்ன அள்வு என்பதையும் குறிப்பிட்டு முன்பணம் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2239, 2240, 2241

முன் கூட்டியே பணம் வாங்கும் எந்த வியாபாரமாக இருந்தாலும் எடை எவ்வளவு, அளவு எவ்வளவு என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இது குர்பானிக்கும் பொருந்தும்.

பொதுவாக எந்த வியாபாரத்தில் விற்பவரோ, வாங்குபவரோ ஏமாற்றப்படுகிறாரோ, அல்லது இருவரில் ஒருவர் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதோ அது போன்ற அனைத்து வியாபாரங்களும் தடுக்கப்பட்டவை என்பது தான் இஸ்லாமிய வணிகத்தின் அடிப்படையாகும். மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் எந்த மாட்டில் குர்பானி கொடுக்கிறார் என்று தெரிவித்து மேலதிகமாக வாங்கிய பங்குகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் பத்து கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இன்னொருவர் இருபது கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இரண்டும் குர்பானி என்றாலும் அதிகம் செலவிட்டவருக்கு அதற்கேற்ப கூடுதல் நன்மை கிடைக்கும். இரண்டுக்கும் சமமான நன்மை கிடைக்காது.

அது போல் தான் கூட்டாகக் கொடுக்கும் போது நமது பங்கு இந்த தரத்தில் உள்ள மாட்டுக்கானது என்று நம்பி பங்கு தரும் போது அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஒருவர் எந்த மாட்டில் பங்கு சேர்கிறார் என்று அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மாடுகளுக்கு 1,2,3 என வரிசை எண் போட்டு அல்லது வேறு ஏதேனும் அடையாளம் இட்டு அதன் எடையையும், விலையையும் குறிப்பிட்டு, குறிப்பிட்ட மாடு எந்த எழுவருக்கு உரியது என்று தெளிவாக்க வேண்டும்.

அதாவது இந்த எண் கொண்ட மாடு உங்களுக்கானது. அதன் எடை இவ்வளவு, அதன் விலை இவ்வளவு. உங்கள் வகையில் மீதம் இவ்வளவு உள்ளது. அல்லது நீங்கள் மேற்கொண்டு தர வேண்டியது இவ்வளவு உள்ளது என்று தெளிவாக்க வேண்டும். அதாவது பங்குதாரர் என்ன விலைக்குரிய  மாட்டில் பங்கு சேர்ந்துள்ளார் என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நம்பிக்கை துரோகம் செய்யும் நிலை ஏற்படும்.

70 பங்குகள் சேர்ந்தன; அதில் பத்து மாடுகள் வாங்கினோம் என்று குருட்டாம் போக்கில் கணக்கு காட்டாமல் ஒவ்வொரு மாட்டுக்கும் உரிய ஏழு பங்குதாரர்களுக்கு உரிய விபரங்களைத் தர வேண்டும்.

ஒவ்வொரு மாட்டிலும் பங்காளிகளாக எந்த ஏழு பேர் என்று பிரித்துக் காட்ட வேண்டும். ஜாபிர் (ரலி) ஹதீஸில் ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு மாட்டில் சேர்ந்து கொண்டோம் என்று தான் உள்ளது. 490 பேரும் கூட்டாக சேர்ந்து 70 ஒட்டகத்தை பலியிட்டோம் என்று சொல்லப்படவில்லை.

மாட்டின் விலையுடன் மாடு வாங்குவதில் இருந்து குர்பானி விநியோகம் செய்யும் வரை ஆகும் செலவுகளையும் பங்குதாரர் கணக்கில் சேர்க்கலாம்.

இஸ்லாம் காட்டும் இந்த நேர்மையான வழியில் குர்பானி கொடுத்தால் குர்பானி கொடுத்தவர்களுக்கு நன்மை கிடைப்பது போல் அதற்காக உதவியர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

No comments:

Post a Comment