வித்ருக்குப் பின் தொழலாமா?
சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம்.
‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 998, 472
எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ரு தொழுவார்கள். பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும் போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூவுச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
முஸ்லிம் 1220
இந்த ஹதீஸில் வித்ர் தொழுத பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுததாகக் கூறப்படுகின்றது.
எனவே இரண்டையும் இணைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். இரவில் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற கட்டளை கட்டாயம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாக இருக்க முடியாது. சிறந்தது என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாகத் தான் இருக்க முடியும். கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அதை மீறியிருக்க மாட்டார்கள். அது கட்டாயம் அல்ல என்று காட்டித் தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருக்குப் பின்னரும் தொழுது காட்டியுள்ளனர் என்று புரிந்து கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் முரண்பாடு இல்லாமல் பொருந்திப் போகும். எனவே வித்ர் தொழுத பின்னர் தேவைப்பட்டால் தொழுவதில் தவறில்லை என்பதை அறிய முடியும். இவ்வாறு தொழும் போது மீண்டும் வித்ர் தொழக் கூடாது.
‘ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 432
ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்கனவே வித்ர் தொழுதவர்கள் மீண்டும் ஒரு முறை வித்ர் தொழக் கூடாது.
எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் கடைசியாகவே வித்ர் தொழுதுள்ளதால் கடைசியாக வித்ர் தொழுவது தான் சிறந்தது.
No comments:
Post a Comment