பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, April 18, 2020

நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும்.

கட்டாயக் கடமை

நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும்.

அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503

இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

நிறைவேற்றும் நேரம்

நோன்புப் பெருநாள் தர்மத்தை எப்போதிலிருந்து நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலக்கெடு எதனையும் நிர்ணயிக்கவில்லை. ஆயினும் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பாகக் கொடுத்து விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். இந்தக் கட்டளை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்தக் கட்டளையை முஸ்லிம் அறிஞர்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

1) பெருநாள் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன் கொடுத்து விட வேண்டும்.

2) ரமலான் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். வழங்கப்படுவதற்கான கடைசி நேரம் தான் அந்தக் கட்டளையில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப நேரம் பற்றி கூறப்படவில்லை.

இவ்வாறு இரு கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் இரண்டாவது கருத்துத் தான் ஏற்புடையதாக உள்ளது.

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1511

பெருநாள் பிறையைக் கண்ட பிறகு தான் இதைக் கொடுக்க வேண்டும் என்றிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே நபித்தோழர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்.

மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 1371

ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுப்பதையும், பின்னால் கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுப்பது ஏழைகள் பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதைச் சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.

பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த தர்மம் உதவ வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான நோக்கம்.

இன்றைய காலத்தில் மற்றவர்களைப் போல் ஏழைகளும் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென்றால் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்தத் தர்மத்தைக் கொடுத்தால் தான் சாத்தியமாகும்.

ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுகிறதா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட்டு அதற்கு உதவுகிற வகையில் ரமளானில் எப்போது கொடுத்தாலும் அதைக் குறை கூற முடியாது.

 

யாருக்குக் கடமை?

நோன்பில் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறினாலும் நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும்; நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரமாக வேண்டும் என்று இரு நோக்கங்கள் கூறப்படுகின்றன.

நோன்பு நோற்றவர்கள் இந்த இரு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் காணலாம். அந்த ஹதீஸில் அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அடிமைகளுக்குச் சொத்து எதுவும் இருக்காது. அவர்கள் மீது பொருளாதாரக் கடமைகளும் இருக்காது. அது போல் சிறுவர்களுக்கும் எந்தக் கடமையும் இருக்க முடியாது. அவ்வாறிருந்தும் அவர்கள் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள்.

யார் இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கடமையாக்கியிருக்க முடியும். எனவே ஒருவர் தமக்காகவும், தமது மனைவிக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள தமது பிள்ளைகளுக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள பெற்றோருக்காகவும் பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

தனது பராமரிப்பில் முஸ்மல்லாத பிள்ளைகள், பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் சார்பாக இதைச் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியதாக தெவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த அளவு வசதி உள்ளவர்கள் மீது கடமை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை. எனவே தமது தேவை போக யாருக்கெல்லாம் இதைக் கொடுக்க சக்தி உள்ளதோ அவர்கள் மீது கடமை என்று புரிந்து கொள்ளலாம்.

 

எதைக் கொடுக்கலாம்?

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கக் காசுகள், வெள்க் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன.

நபித் தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இப்படித் தான் கட்டளையிட்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல்: புகாரி 1510

இவ்விரு ஹதீஸ்களையும் ஆராயும் போது பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவது தான் முக்கியம்; அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் கோதுமை மட்டும் தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம் பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) உணவாக ஆகாது.

எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதைத் தான் பெருநாள் தர்மமாகவும் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நமது உணவுப் பழக்கமாக அரிசியே அமைந்துள்ளதால் அதைத் தான் கொடுக்க வேண்டும்.

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? சிலர் அவ்வாறு கொடுக்கக் கூடாது எனக் கூறினாலும் கொடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கமும், வெள்ளிக் காசுகளும் புழக்கத்திலிருந்தது. அதைக் கொடுக்காமல் தானியத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி ரூபாய்களுக்கு ஸகாத் இல்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் ஸகாத்தில் தங்கம், வெள்ளி, கால்நடைகள், நகைகள் பற்றித் தான் ஸகாத் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரூபாய்கள் பற்றி இல்லை. ரூபாய்க்கும் தங்கத்துடன் மதிப்பிட்டு ஜகாத் வழங்குவது போல் ஃபித்ராவின் போதும் மதிப்பிடலாம்.

இன்று எந்த உணவுப் பொருளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் (காசு இருந்தால்) வாங்கிக் கொள்ள இயலும்.

அன்றைய நபித் தோழர்கள் பேரீச்சம் பழத்தையே உணவாக உட் கொண்டார்கள். நாம் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அரிசி உணவாக ஆவதற்கு குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. பணமாகக் கொடுத்தால் தான் தேவையான அளவுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள இயலும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்றைக்குப் பண்டமாற்று முறை நடை முறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக் கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழைகள் அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிப்பதைக் காரணமாகக் கூறியுள்ளார்கள்.

ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியை விடப் பணமே சிறந்ததாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணமாகக் கொடுக்கும் போது நாம் எதை உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியை அதன் விலையை அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.

 

எவ்வளவு கொடுக்க வேண்டும்?

தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதை முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும். இது போல் நான்கு முத்துக்கள் கொண்ட அளவு ஒரு ஸாவு எனப்படும்.

அதாவது இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்னால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.

இந்த அளவு அரிசியை அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். நமது பராமரிப்பில் பத்துப் பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மம் வழங்க வேண்டும்.

பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு என்பதில் ஷாபி மத்ஹபினரும் ஹனபி மத்ஹபினரும் மாறுபட்ட அளவுகளைக் கூறுகின்றனர்.

ஷாபிகள் ஒரு ஸாவு அரிசியையும், ஹனபி மத்ஹபினர் அரை ஸாவு அரிசியையும் வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஷாபிகள் வழங்குவதில் பாதியை ஹனபிகள் வழங்கி வருகின்றனர். இந்தக் கருத்து வேறுபாட்டுக்கான காரணத்தையும் இந்த நேரத்தில் அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை தான் உணவாகப் பயன்டுத்தப்பட்டு வந்தது. தோல் நீக்கப்பட்ட கோதுமை மிகவும் அரிதாகவே பயன் படுத்தப்பட்டு வந்தது.

தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு கொடுத்து வந்த நபித் தோழர்கள் தீட்டப்பட்ட கோதுமையில் அரை ஸாவு என நிர்ணயித்துக் கொண்டனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1511

இந்தச் செய்தி தான் கருத்து வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை என்று வித்தியாசம் காட்டவில்லை. அன்றைய உணவுப் பழக்கத்தில் இருந்த தீட்டாத கோதுமையை தீட்டிய கோதுமையுடன் மதிப்பிட்டு நபித் தோழர்கள் இவ்வாறு தீர்மானம் செய்தனர். நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி ஆதாரமாக அமையும் என்ற கேள்வி தான் இரு வேறு கருத்துக்குக் காரணம்.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டாத கோதுமையில் அரை ஸாவு என்று நிர்ணயம் செய்ததாகச் சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாவு என வழங்கி வந்தோம். முஆவியா (ரலி) (பொறுப்புக்கு) வந்து, சிரியா நாட்டின் தோல் நீக்கப்பட்ட கோதுமையும் புழக்கத்துக்கு வந்த போது இதில் ஒரு முத்து இதில் இரு முத்துக்களுக்கு நிகரானது என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1508

முஆவியா (ரலி) யின் தீர்ப்பை நிராகரித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வழங்கி வந்தவாறு ஒரு ஸாவு தான் வழங்குவேன் என்று அபூஸயீத் (ரலி) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் பேரீச்சம் பழத்தில் நான்கு முத்து அளவு சிரியா நாட்டின் தோல் நீக்கிய கோதுமையில் இரு முத்து அளவுக்கு நிகரானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது முஆவியா (ரலி) அவர்கள் இரண்டு வகையான கோதுமைகளையும் ஒப்பீடு செய்து இந்த முடிவுக்கு வரவில்லை. மாறாக பேரீச்சம் பழத்தின் ஒரு ஸாவுக்கு தீட்டிய கோதுமையாக இருந்தால் அரை ஸாவும், தீட்டாத கோதுமையாக இருந்தால் ஒரு ஸாவும் கிடைத்து வந்தன. இதை அளவு கோலாகக் கொண்டு தான் அந்த முடிவுக்கு வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்து, தோல் நீக்கிய கோதுமை அதிகமாகப் புழக்கத்துக்கு வந்த போது (பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, தீட்டப்படாத கோதுமை) இவற்றில் ஒரு ஸாவு என்பது தீட்டப்பட்ட கோதுமையின் அரை ஸாவு என்று நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 1375

இந்த அறிவிப்பைச் சிலர் குறை கூறினாலும் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பு தான். அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் முர்ஜியா கொள்கையுடையவர் என்பதால் அவர் உண்மையாளர் என்ற போதும் அவரது ஹதீஸைச் சிலர் நிராகரித்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் நம்பகமான ஒருவர், தவறான அபிப்பிராயம் கொண்டதற்காக அலட்சியப்படுத்தப்படக் கூடாது என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் கூறியுள்ளார். இது எல்லா அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட அளவு கோல் தான்.

தீட்டப்படாத கோதுமையை விட தீட்டப்பட்ட கோதுமை இரு மடங்கு மதிப்புள்ளதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு முடிவு செய்தனர்.

உமர் (ரலி) இரண்டு வகையான கோதுமைகளை ஒப்பிட்டு எடுத்த முடிவும், பேரீச்சம் பழத்துடன் கோதுமையை ஒப்பிட்டு முஆவியா (ரலி) எடுத்த முடிவும் சரியான முடிவாகத் தான் தெரிகிறது.

தீட்டப்படாத கோதுமையைத் தீட்டினால் அதில் பாதி தான் தேறும் என்பதாலும், இரண்டுக்குமுள்ள விலை வித்தியாசத்தையும் கருத்தில் கொண்டு எடுத்த முடிவை மறுக்க முடியாது.

தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் சமமானது தான் என்ற அறிவுக்குப் பொருந்தாத முடிவை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. எல்லாம் அறிந்த இறைவனின் மார்க்கத்தில் இத்தகைய முடிவுகள் இருக்கவே முடியாது.

எனவே தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு என்பதும், தீட்டிய கோதுமையில் அரை ஸாவு என்பதும் தான் சரியான முடிவாக இருக்க முடியும்.

கோதுமையை உணவாகக் கொண்ட பகுதிகளில் தான் இது போன்ற வேறுபாடுகள் இருக்க முடியும். அரிசியை உணவாகக் கொள்ளும் தமிழக மக்களிடம் கருத்து வேறுபாடு இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.

தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் தரத்தில் வித்தியாசமாக இருந்தாலும் இரண்டையும் அப்படியே மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்.

ஆனால் இங்கே நெல்லை அப்படியே உணவாக்க முடியாது. நெல்லை மாவாக்கி உணவாக்க முடியாது. மாறாக தோலை நீக்கிய பிறகே உணவாக்க முடியும். எனவே அரிசியில் தோல் நீக்கியது, தோல் நீக்காதது என்றெல்லாம் வேறுபடுத்த முடியாது.

இருவகைக் கோதுமைகளும் அப்படியே உணவாக உட்கொள்ளப்பட்டது போல் நெல்லும் உணவாகக் கொள்ளப்பட்டால் கருத்து வேறுபாட்டுக்கு ஒரு அடிப்படையாவது இருந்திருக்கும். அந்த அடிப்படை அரிசியைப் பொருத்த வரை கிடையாது.

எனவே ஷாபிகளானாலும், ஹனபிகளானாலும், அவர்களது கொள்கைப் படி பார்த்தாலும் ஒரு ஸாவு அரிசியை வழங்குவது தான் சரியானதாகும். அவர்களது மத்ஹபுகளின் படி பார்த்தாலும் அரிசியைப் பொறுத்த வரை ஒரு கருத்தைத் தான் இரு சாராரும் கூற வேண்டும்

 

எப்படிக் கொடுப்பது?

நோன்புப் பெருநாள் தர்மத்தை அவரவர் தனிப்பட்ட முறையில் வினியோகம் செய்ய வேண்டுமா? அல்லது கூட்டாகத் திரட்டி விநியோகம் செய்ய வேண்டுமா?

கூட்டாக விநியோகிப்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நடைமுறையாக இருந்து வந்தது.

ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275, 5010

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தனர். ஒரு மனிதர் மட்டரகமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்தப் பேரீச்சம் பழத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)

நூல்: ஹாகிம்

நோன்புப் பெருநாள் தர்மம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கூட்டாக வசூக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்ததை இதிலிருந்து அறியலாம்.

கூட்டாக வசூத்து விநியோகம் செய்யும் போது யாசிக்க வெட்கப்படும் ஏழைகளுக்கும் தேடிச் சென்று வழங்க முடியும். தேவையான அளவுக்கும் கொடுக்க முடியும்.

அவரவர் தனித்தனியாக வழங்கும் போது யாசிப்போர் பல இடங்களில் யாசித்துத் திரட்டுவதும், தேவையுள்ள பலருக்குக் கிடைக்காமல் போவதும் ஏற்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment