பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, April 28, 2020

நம் தொழுகை - 3

*☪️மீள் ☪️பதிவு☪️*


 *🕋🕋🕋நபிவழியில் நம் தொழுகை🕋🕋🕋*

 *🌐🌐🌐இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்🌐🌐🌐*


 *👉தொடர் பாகம் 3👈*

 *கடமையான குளிப்பு* 

உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது.

ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம்.

 *உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்* 

ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525* 

முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

 *தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்* 

பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.

விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.

‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?’ என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்’ என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ‘பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471* 

நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)

 *நூல்: அஹ்மத் 25869* 

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்
 
 *மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்* 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்: புகாரீ 320* 

மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

 *ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்* 

வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

 *நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம் 1397* 

வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 *நூல்: புகாரீ 877* 

எனினும், குளிக்க இயலாவிடில் தொழுகை கூடும்.

 *குளிக்கும் முறை*

மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476* 

வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ259வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

 *உளூச் செய்தல்* 

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475* 

குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476* 


 *தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்* 

நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474*

 ….பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474* 

 

 *இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்* 

கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476* 

நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.

நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 493* 

‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.

கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.

 *🧕🧕🧕பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா❓🧕🧕🧕*

பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.

இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

 *நூல்: முஸ்லிம் 497* 

எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 *🧶பாங்கு🧶 –🧶 இகாமத்🧶* 

கடமையான தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

‘தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும்’என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 631, முஸ்லிம் 1080* 

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றை வெளிப்படுத்தி ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான்….. என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 608, முஸ்லிம் 582* 

பாங்கு என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும்.

இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும்.

 *🌐பாங்கின் வாசகங்கள்🌐*

 *அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்* 

 *அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்* 

 *அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்* 

 *அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்* 

 *அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்* 

 *அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்* 

 *ஹய்ய அலஸ் ஸலாஹ்* 

 *ஹய்ய அலஸ் ஸலாஹ்* 

 *ஹய்ய அலல் ஃபலாஹ்* 

 *ஹய்ய அலல் ஃபலாஹ்* 

 *அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்* 

 *லாயிலாஹ இல்லல்லாஹ்* 

பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

தொழுகையின் பக்கம் வாருங்கள்

தொழுகையின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்,

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

 *நூல்: அபூதாவூத் 421* 

பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது பாங்கு சொல்பவர் வலது புறமும். இடது புறமும் தலையைத் திருப்பியதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது இங்கும் அங்குமாக,அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)

 *நூல்: முஸ்லிம் 866* 

பாங்கு சொல்லும் போது பஜ்ர் தொழுகையில் மட்டும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூற வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களுக்கு பாங்கு சொல்பவனாக இருந்தேன். நான் பஜ்ருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ்’என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுபவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)

 *நூல்கள்: நஸயீ 643, அபூதாவூத் 425, அஹ்மத்14834* 

பாங்கிற்கு முன்னால் ஸலவாத்துச் சொல்வதும் *ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி* … என்று துவங்கும் வாசகங்களைக் கூறுவதும் பித்அத் ஆகும். இவ்வாறு சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை.

 *பாங்கின் அழைப்பிற்குப் பதில் கூறுதல்*

பாங்கைக் கேட்பவர்கள் பாங்கிற்குப் பதில் அளிப்பது அவசியமாகும். பாங்கு சொல்பவர் சொல்வதைப் போன்று கூற வேண்டும். ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது மட்டும் அரபி

 *‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றில் ஈடுபடவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது) என்று கூற வேண்டும்.* 

‘பாங்கைக் கேட்டால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்று நீங்களும் கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)

 *நூல்கள்: புகாரீ 611, முஸ்லிம் 627* 

‘பாங்கு சொல்பவர் அல்லாஹு அக்பர்’ என்று கூறினால் நீங்களும் அல்லாஹு அக்பர்’ என்று கூறுங்கள்…. ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள். பின்னர் அவர் ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறினால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள்…’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 629* 

பாங்கிற்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

‘நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 628* 

 *ஸலவாத்தின் வாசகங்கள்*

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: ‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி (பரகத்) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி (பரகத்) செய்வாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்’.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

 *நூல்: புகாரீ 3370* 

ஸலவாத் கூறிய பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: ‘முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 *நூல்: புகாரீ 614* 

மேற்கூறப்பட்ட துஆவையோ, அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம்.

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லஷரீ(க்)க லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி(ன்)ர் ரஸூலன் வபில் இஸ்லாமி தீனா

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள். அல்லாஹ்வை அதிபதியாகவும், முஹம்மதை (இறைத்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன்.

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 631* 

 *இகாமத்*

கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன.

பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 605, முஸ்லிம் 569* 

 *இகாமத்தின் வாசகங்கள்* 

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ்

 *ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்* 

இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

 *அல்குர்ஆன் 4:103* 

 *சுப்ஹுத் தொழுகையின் நேரம்* 

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1075* 

 *லுஹர் தொழுகையின் நேரம்* 

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு.

‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1075* 

 *அஸ்ர் தொழுகையின் நேரம்* 

அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு.

(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 *நூல்: திர்மிதீ 138* 

‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1076* 

 *மக்ரிப் தொழுகையின் நேரம்* 

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.

‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1076* 

 *இஷாத் தொழுகையின் நேரம்* 

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!’ என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்… செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறு நாள் பிலால் (ரலி) அவர்களிடம் … இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1079* 

‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1074* 

இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா?இரவின் பாதி வரை நீடிக்கிறதா? அல்லது இரவின் மூன்றில் ஒரு பங்கு வரை நீடிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

‘இரவில் பாதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும், ‘இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும் நேரடியான ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

 *ஆனால் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்தில் நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.* 

‘தூக்கத்தில் வரம்பு மீறுதல் இல்லை; மறு தொழுகை நேரம் வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான் வரம்பு மீறுதல் எனும் குற்றம் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *நூல்: முஸ்லிம் 1099* 

இஷாவின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கின்றது என்ற கருத்துடையவர்கள் கீழ்க்கண்டவாறு தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

மறு தொழுகை நேரம் வரை ஒரு தொழுகையின் நேரம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதில் சுப்ஹ் மட்டும் தான் விதி விலக்கு பெற்றுள்ளது.

‘யார் சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் சுப்ஹுத் தொழுகையை அடைந்து விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *நூல்: புகாரீ 579, 556* 

என்று மேற்கண்ட ஹதீஸில் விதிவிலக்கு உள்ளது. எனவே சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரம் லுஹர் வரை நீடிக்கும் என்று கருத முடியாது. ஆனால் மற்ற நான்கு தொழுகையின் நேரங்களும் அதற்கடுத்த தொழுகையின் நேரம் வரை நீடிக்கிறது. சுப்ஹுத் தொழுகையை சூரியன் உதிப்பதற்கு முன் தொழுது விட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இஷா தொழுகையின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்துடையவர்கள் இவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நிறுத்துகின்றனர்.

ஆனால் இந்த வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. ஏனெனில் சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரத்தைப் போலவே இஷாவுடைய கடைசி நேரத்திற்கும் வரையறை உள்ளது என்பதை மேற்கண்ட *முஸ்லிம் 1074* ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை என்பது தான் சரியானதாகும். சுப்ஹ் வரை நீடிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை.

சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதல் இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ்5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு *11.30மணியாகும்* . இது போல் சூரிய அஸ்தமனம் மற்றும் சுப்ஹ் நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுது விட வேண்டும் என்பதே சரியானதாக கருத்தாகத் தோன்றுகிறது.

 *சுத்ரா மற்றும் நிய்யத்*


 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 4*

No comments:

Post a Comment