பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 14, 2020

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

*மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்*

*திருக்குர்ஆனை இழிவு படுத்துதல்*

திருக்குர்ஆன், நபிவழி மூலம் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நல்லறங்களில் ஒன்று என்று நிரூபிக்கப்பட முடியாத இந்த மவ்லிதுகள் இன்று முஸ்லிம்களில் பெருவாரியானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கிறது. எந்த சுகதுக்கங்களிலும் மவ்லிதுகள் ஓதப்படவில்லையென்றால் அந்தக் காரியமே முழுமை பெறுவதில்லை என்று நம்பப்படுகிறது.

எவற்றிற்கு இதை ஓதுவது? எவற்றிற்கு இதை ஓதக் கூடாது என்ற விவஸ்தை இல்லாது, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு மவ்லிதுகள் கொட்டமடிக்கின்றன.

குழந்தைகள் பெயர் சூட்டும் நிகழ்ச்சியா?

மகள் பருவம் அடைந்து விட்டாளா?

பையனுக்கு சுன்னத்தா?

மக்களுக்குத் திருமணமா?

புதுமனைப் புகுவிழாவா?

திரவியம் தேட திரை கடலோடும் பயணமா?

ஹஜ்ஜுப் பயணமா?

பெருமானாரின் பிறந்த நாள் விழாவா?

பெரியார்களின் நினைவு நாட்களா?

வெள்ளியா?

திங்களா?

ஆறா?

பதினொன்றா?

அழைத்து வா ஆலிம்களை! ஓதச் சொல் மவ்லிதுகளை! என்று இந்த மவ்லிதுகள் படும் பாடு மத்தளம் படுமோ? தரி படுமோ யாமறியோம்.

சாவு வீடுகள் கூட இந்த மவ்லிதுக் கச்சேரிகளுக்குத் தப்புவதில்லை. இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு விட்ட மூன்றாம் பாத்திஹாவிலிருந்து ஏழாம் பாத்திஹாக்கள் ஈறாக, நாற்பதாம் பாத்திஹா, வருட பாத்திஹாக்கள் உட்பட மவ்லிதுக் கச்சேரிகள் இல்லை என்றால் அந்தச் சபைகளே நிரப்பதில்லை.

இது என்ன மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான கொடுஞ்செயல்? ஒரு முஸ்லிம் இறந்து போயிருக்கிறான். அதற்காகக் கவலைப்பட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டாம்; சினிமா மெட்டுக்களிலும், இனிய ராகங்களிலும், புலவு, பியாணி, குர்மா, கைமா என்று இந்த மவ்லிதுக் கச்சேரிகளை நடத்துவதையாவது தவிர்க்க வேண்டாமா?

யாராவது செத்தால் மட்டுமே கத்தம் ஓதுவதற்காகக் கையில் எடுக்கப்படும் திருக்குர்ஆனை உங்கள் வீட்டின் மங்கள நிகழ்ச்சிகளிலும் ஓதக் கூடாதா? என்று இவர்களிடம் கேட்டால், ‘மங்கள நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனா? இது சாவு வீடா என்ன?’ என்று கேட்டு திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்.

‘திருக்குர்ஆன், பள்ளிவாசல் போன்ற மார்க்கத்தில் மரியாதைக்கு உரியவைகளாகக் கருதப்படுபவைகளை எவர்கள் அலட்சியப்படுத்தி இலேசு காண்பார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்கள்’

இப்படிச் சொல்வது யார் தெரியுமா? மவ்லிது ஆதரவாளர்களால் வஹ்ஹாபிகள் என்று விமர்சிக்கப்படும் நாமல்ல; தமிழகத்தின் அனைத்து அரபுக் கல்லூரிகளிலும், இஸ்லாமியக் கொள்கை விளக்க நூல் என்று போதிக்கப்படும் ஷரஹ் பிக்ஹில் அக்பர் என்ற நூலில் அறிஞர் முல்லா அலீ காரி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்ட நூலையாவது நம்பி இந்த மவ்லிதைத் தொலைக்கக் கூடாதா?

‘திருக்குர்ஆனை நீ ஓதக் கூடாதா என்றோ அதிகமாய் அதனை ஓதி வரக் கூடாதா என்றோ ஒருவனிடம் சொல்லப்படும் போது அது எனக்குப் பிடிக்கவில்லை’ என்றோ, ஓதியது போதும்; இனி எனக்கு அது தேவை இல்லை’ என்றோ கூறுவானேயானால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காஃபிரே ஆவான்’ என்றும் அதே நூலில் முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழாக்குதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 72:18)

எந்தப் பள்ளிவாசல்களில் தன்னைத் தவிர வேறொருவரையும் அழைக்கக் கூடாது என்று அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிட்டிருக்கிறானோ, அவற்றில் இருந்து கொண்டு, யா ஹபீபீ யா முஹம்மது’ என்றும் யா முஹ்யித்தீனி’ என்றும் யாஸாஹிபன் நாஹுரி’ என்றும் யாஹஸன், யாஹுஸைன்’ என்றும் யாஹாஜா’ என்றும் அழைப்பதுடன் தொழ வருபவர்களுக்கும் இடையூறுகள் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு ஒலி பெருக்கிகளையும், அலறவிட்டு விடுகிறார்கள். அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டிய இடத்தில் அனது அடியார்கள் அழைக்கப்படுவதும், தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் திருக்குர்ஆனைக் கூடச் சப்தமிட்டு ஓதக்கூடாது என்றிருக்க இந்தக் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருப்பதும் கொடுமைகள் அல்லவா? இவைகள் ஒழிக்கப்பட வேண்டியவைகளில்லையா?

சில சமயங்களில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், பள்ளிவாசல்களில் ஜமாஅத்(கூட்டுத்) தொழுகை நடந்து கொண்டிருக்கும் போதும் கூட நிறுத்தப்படாமல் ஒலிபெருக்கிகள் மூலம் இந்த மவ்லிதுக் கச்சேரிகள் மாத்திரம் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருக்கும்.

பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊரின் முக்கியப் புள்ளிகள் போன்றோரின் வீடுகளில் நடைபெறும் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு தப்பித்தவறி அங்கு பணியாற்றும் ஆலிம்கள் போகவில்லை என்றால் ஏதோ இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றை விட்டுவிட்டதைப் போன்று தாம்தூம் என்று குதிப்பதும், அதற்காக அவருக்குச் சீட்டுக் கிழிப்பதும் இன்று சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன.

சில இடங்களில் தொழுகைகளுக்குச் சரியாக வராத ஆலிம்களைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதையும், மவ்லிதுக் கச்சேரிகளில் கலந்து கொள்ளாததை மட்டும் பெரிதுபடுத்தி விசாரிப்பதையும் நாம் பார்க்க முடிகின்றது.

மொத்தத்தில் கடமைகள் சாதாரணமானவை போன்றும், மார்க்கத்தில் ஒன்றுமே இல்லாதவை கடமைகளைப் போன்றும் மாறியதற்குக் காரணமான இந்த மவ்லிதுகள் தேவை தானா?

பிற சமயத்துக் கலாச்சாரம்

மவ்லிது, பாத்திஹாக்கள் ஓதப்படும் இடங்களில் வகைவகையான பதார்த்தங்கள், பழங்கள், பண்டங்கள், சீனி சர்க்கரை, சாம்பிராணி, பத்தி, வாசனைத் திரவியங்கள், மல்லிகை ரோஜா மலர்கள் என்று வரிசையாகப் படைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அப்பப்பா கோவில்கள் கெட்டது போங்கள்!

பிற சமயத்து அன்பர்கள் தத்தமது மூர்த்திகளுக்கு முன்னால் அவற்றிற்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களையும், பிரசாதங்களையும் வரிசையாக அடுக்கி வைத்து படைத்து முடித்ததும், அவைகள் புனிதப் பொருட்களாகி விட்டதாகச் சொல்லி பக்தர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும், இவர்களின் இந்தச் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

ஓதி முடிக்கப்பட்டதும் அவற்றில் பரக்கத் இறங்கிவிட்டதாகச் சொல்லி தபர்ரூக், நார்சா, நேர்ச்சை, சீருணி போன்ற பல்வேறு பெயர்களில் அந்தப் பிரசாதங்களை வினியோகிப்பதும், அவற்றைப் பத்திரப்படுத்தி எடுத்துச் சென்று ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்தளித்து புளகாங்கிதமடைந்து போவதும், இடுப்பில் துண்டைக் கட்டாத குறையாக எழுந்து நின்று பக்திமேலீட்டால் கண்கள் சொருக அவற்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வதும் வேடிக்கை தான் போங்கள். இந்த ஆச்சாரங்கள் அனைத்தும் பிற சமயத்து நண்பர்களுடையதல்லவா? அவற்றை நாம் பின்பற்றலாமா?

கூலிக்கு மாரடித்தல்

மவ்லிதுகளில் தான் எத்தனை வகைகள்? வழங்கப்படும் தட்சணைகளுக்கேற்றவாறு அவற்றில் தான் எத்தனை டெக்னிக்குகள்!

நடை மவ்லிது!

ஓட்ட மவ்லிது!

அசுர வேக மவ்லிது!

ஜெட் மவ்லிது!

ராக்கெட் மவ்லிது!

என்று வழங்கப்படும் கூலிக்கும், ஓதுபவருக்கு அன்றைக்கு இருக்கும் கிராக்கிக்கும் ஏற்ப அதன் வேகங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஒன்றே கால் ரூபாய்க்கு நடை மவ்லிதாக இருந்தது இருபத்தைந்து ரூபாய்க்கு அண்டை அயலில் வசிப்பவர்களின் உறக்கத்தையும் ஓதுபவர்களின் சுப்ஹுத் தொழுகையையும் கெடுக்கும் விடி மவ்லிதாக மாறி விடும் விந்தைகளைச் சொல்லி மாளாது.

தட்சணைகளிலும், தால்ச்சா தனிக்கறியின் சுவையிலும், களரிச் சோற்றிலும் மயங்கிக் கிடக்கும் சில ஆலிம்கள் இவற்றை மனப்பூர்வமாக ஆதரிப்பதுடன் இவற்றிற்காக வக்காலத்தும் வாங்குகின்றனர். தொழுவதற்கு, நோன்பு நோற்பதற்குக் கட்டணங்களும், விருந்துகளும் தரப்படாததைப் போன்று இவற்றிற்கும் கட்டணங்களோ, விருந்துகளோ கிடையாது என்றும், விரும்புபவர்கள் நன்மையை நாடி வந்து ஓதிவிட்டுச் செல்லலாம் என்றும் மக்கள் அனைவரும் ஒருமித்துச் சொன்னால் மவ்லிதுகள் ஓதுவது ஹராம் என்று கூற இப்படிப்பட்டவர்கள் தயங்க மாட்டார்கள்.

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்

ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு மவ்லிது, பாத்திஹா, ஓதப் போகிறேன் பேர்வழி என்று இமாம்கள், மோதின்கள், லெப்பைகள், அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போன்றோர் செல்வதும், அதனால் பல்வேறு விபரீதங்கள் விளைவதும் நாம் அடிக்கடி பல இடங்களிலும் பார்த்தும், கேள்விப்பட்டும் வரும் உண்மைகள் தானே?

‘நாற்பது வயதிற்கு மேற்பட்ட இமாம்கள் தேவை’ என்றும், குடும்பத்தை அழைத்து வராதவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதில்லை என்றும் நிர்வாகிகள் இன்று நிபந்தனைகள் விதிப்பதற்கு ஒரு சில இடங்களில் விபரீதங்கள் விளைந்தது தானே காரணம்?

அந்த விபரீதங்களுக்கு வழி வகுத்து விட்ட இந்த மவ்லிதுகளும், பாத்திஹாக்களும் தேவை தானா? ஆலிம்களே! ஆண்கள் இல்லாத அந்த வீடுகளுக்கு நாம் அழைக்கப்பட்டாலும் போவது முறை தானா?

‘(அந்நியப்) பெண்கள் இருக்கும் வீடுகளில் நுழைவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என அண்ணலார் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! கணவனின் உறவினர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ எனக் கேட்டார். ‘கணவனின் உறவு என்பது (விளைவுகளைப் பொறுத்த வரை) மரணத்திற்குச் சமமானது (அதாவது தவறான வழிகளுக்கு இட்டுச் சென்று அழித்து விடும்)’ என அண்ணலார் அவருக்குப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 5232

நபிகளாரின் மேற்சொன்ன அறிவுரைகள் நமக்குச் சிறந்த எச்சரிக்கைகளில்லையா? பணத்தை விட நமது மானம், மரியாதைகள் மிக மிக முக்கியமானவைகளில்லையா?

குர்ஆனுக்குச் சமமாக்குதல்

மவ்லிதுகள் ஓதுவதன் மூலம் அண்ணலாரையும், பெரியார்களையும் புகழ்வது தான் தங்களின் நோக்கம் என்று கூறும் இவர்களில் எத்தனை பேருக்கு அங்கே ஓதப்படும் கவிதைகளின் பொருள் தெரியும்?

மவ்லிதுக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யும் வீட்டுக்காரர்களுக்கும், முறைக்காரர்களுக்கும், அவற்றின் பொருள் புரியுமா?

அல்லது கிடைக்கப் போகும் கூலிக்காக அவற்றை நீட்டி முழக்கி ஓதிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோருக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?

அல்லது ஓதி முடிக்கப்பட்டதும் விநியோகிக்கப்படவிருக்கும் நார்சாக்கள், சீருணிகளுக்காகக் காத்துக் கிடக்கும் மக்களுக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?

திருக்குர்ஆனையும், ஓதி வருமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்ற சில திக்ருகளையும் தவிர வேறு எதனையும் வெறுமனே படிப்பதினால் நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. திருக்குர்ஆனை பொருள் புரியாது படித்தாலும் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் வீதம் கிடைக்கின்றன என்று நபிமொழிகள் அறிவிக்கின்றன.

‘திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளை இறைவன் பதிவு செய்கிறான்; அலிப் லாம் மீம்’ என்பதை ஒரு எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து, மீம் என்பது ஒரு எழுத்து’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதி 2835

வீண் விரையம்

தொழுவதில்லை; இஸ்லாத்தின் ஏனைய கடமைகளில் அறவே அக்கறை செலுத்துவதில்லை; ஆனால் மவ்லிது ஓதுவதில் மாத்திரம் இவர்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும், கவனமும், ஓதப்பட வேண்டிய நாட்களைக் கவனித்து எண்ணி வரும் கரிசனமும் நம்மை மலைக்கச் செய்கின்றன.

எந்தப் பெரியவர்களைப் புகழ்வதற்காகவும், அவர்களின் ஆசி(?)யையும் அன்பையும் பெறுவதற்காகவும் இவற்றை நாங்கள் ஓதுகிறோம் எனச் சொல்கின்றார்களோ அந்தப் பெரியார்களே தமது வாழ்க்கையில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கின்ற வீண் விரயங்கள், ஆடம்பரங்கள், அனாச்சாரங்கள் ஆகிய அத்தனையும் அவர்களின் பெயர்களால் ஓதப்படும் மவ்லிது மஜ்லிஸ்களில் படாதபாடுபடுவதை நாம் பார்க்கிறோம்.

அலங்கார மேடைகள்! கண்ணைச் சிமிட்டும் வண்ண விளக்குகள்! இரவைப் பகலாக்கும் வெளிச்சங்கள்! மேற்கட்டு, மலர் ஜோடனைகள்! வண்ணக் காகிதங்களில் வகை வகையான வேலைப்பாடுகள்! ஒலி பெருக்கிச் சாதனங்கள்! அப்பப்பா? ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர்.

(அல்குர்ஆன் 17:26, 27)

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன் 7:31)

என்பன போன்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. நாம் தான் அந்தப் பெரியார்கள் மீது அன்பு வைத்து விட்டோமே நம்மை அந்த ஆண்டவன் என்ன செய்து விட முடியும்? என்ற இறுமாப்பு இவர்களுக்கு?

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 102:8)

என்ற அல்லாஹ்வின் அறிவுறுத்தலையும் மறந்து விட்டு இவர்கள் அடிக்கும் கூத்துக்கு நாளை அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வாக்கியங்களைச் சிதைத்தல்

தாம் விரும்பும் இராகங்களுக்கும், மெட்டுக்களுக்கும் ஏற்ப அந்தக் கவிதைகளை வளைத்தும், முறித்தும், உடைத்தும், சிதைத்தும் இவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கோ ஒரு முடிவே இல்லை. கவிதைகளை எழுதியவர்களே தமது கவிதைகளுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைக் கண்டால் இவர்களை வாயாரச் சபிக்காமலிருக்க மாட்டார்கள்.
‘யாந – பீஸ – லாம – லைக்கும்’

யார – ஸுல்ச – லாம – லைக்கும்’

என்று இவர்கள் அதனை மென்று கடித்துக் குதறித் துப்புவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும். புதிய படப் பாடல்களின் மெட்டுக்களில் இவ்விடம் மவ்லிது ஓதுவதற்கு ஆட்கள் சப்ளை செய்யப்படும் என்று விளம்பரப் பலகை மாட்டாத குறை தான்.

எந்தக் குழுவினர் இனிய ராகங்களிலும், புதிய படப் பாடல்களின் மெட்டுக்களிலும் ஓதத் தெரிந்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மவுசு அதிகம்.

ரபீவுல் அவ்வல், ரபீவுல் ஆகிர், ஜமாதுல் ஆகிர், ரஜபு மாதங்கள் போன்ற மவ்லிது சீசன்கள் ஆரம்பமாகி விட்டால், கல்யாணம், கத்னா போன்ற வைபவங்களில் பைத்து சொல்ல அழைக்கப்பட்டு விட்டால், தை பிறந்ததும் நாதஸ்வரம் மேளம் வாசிப்பவர்களுக்கு ஏற்படும் கிராக்கியும், மதிப்பும் போல் இவர்களுக்கும் மதிப்பு உயர்ந்து விடும். பிறகென்ன வருமானத்திற்குக் கேட்கவா வேண்டும்? அது வரும் வழியைப் பற்றி இவர்களுக்கென்ன அக்கறை?

‘நான் பேசி வைத்திருந்த வீட்டில் அவன் போய் ஓதி விட்டு வந்து விட்டான்; நான் பேசிய கட்டணத்தை விட குறைந்த கட்டணம் பேசி ஓதிவிட்டு வந்து விட்டான்’ என்று உஞ்ச விருத்திப் பாப்பான்கள் போல் போட்டா போட்டிகளுக்கும், நடுத்தெருச் சண்டைகளுக்கும் குறைவே இல்லை.

மக்களுக்கு வழிகாட்டவும், அவர்களை அரசியல் ஆன்மீகம், பொருளாதாரம், சமூகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த முன் மாதிரிகளாக்கவும், படித்த தமது படிப்பைப் பயன்படுத்தக் கடமைப்பட்டவர்கள், இப்படிக் கீழ்த்தரமான காரியங்களுக்கும், உலக இன்பங்களுக்கும் அடகு வைத்துக் கொண்டு அலைந்தால் சமூகம் உருப்படுவது ஒரு புறமிருக்க இவர்கள் எப்படி உருப்படுவார்கள்? சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எவனாவது ஒருவன் தப்பித் தவறி வாய் திறந்து விட்டால் போதும். அவன் ஓநாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு அவற்றால் கீறிக் கிழித்துக் குதறப்படும் ஆட்டுக்குச் சமமாகி விடுவான்.

வஹ்ஹாபி, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக்குக்காரன் என்பன போன்ற கணைகளால் துளைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு விடுவான். திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்யப்படுவான். எத்தனை காலம் தான் இவர்கள் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதப்பட்டு வரும் கவிதைகளிலெல்லாம், இஸ்லாத்தின் ஆணிவேரான ஏகத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டமாக்கக் கூடியதும், திருக்குர்ஆனுக்கும், அண்ணலாரின் அமுத மொழிகள் பலவற்றிற்கும் நேர் எதிரான கருத்துக்கள் கொண்டதும், இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு படைத்த பாமரன் ஒருவனால் கூட சகித்துக் கொள்ள முடியாததுமான யாகுத்பா’ என்ற கவிதையை எனது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment