பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 1, 2020

என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)

*என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)*

---ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி .

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம்,

யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள்.

1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்?

* நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்!

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி?

*தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன?

*மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக மாற விரும்புகிறேன்.

* மக்களுக்கு உங்களை கொண்டு பயன்கள் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்?

*நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி?

*அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

7.அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன்?

*அதிகமாக திக்ரு (தியானம்) செய்யுங்கள்

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி?

*எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி?

*ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி?

*நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்வை பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன்?

*குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன?

*அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்.

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன?

அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்.

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன?

*பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்.

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது?

*விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்கள்.

16. அல்லாஹ் மற்றும் ரசூலின் பிரியனாக வழி என்ன?

*அல்லாஹ்வும் ரசூலும் பிரியப்படக் கூடியவர்களை பிரியபடுங்கள்.

17. அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் வழிப்பட்டவனாக ஆக வழி என்ன?

*ஃபர்ளை பேணுதலாகக் கடைப்பிடியுங்கள்.

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன?

*அல்லாஹ்வை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள். (அல்லது) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்.

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக் கூடிய வஸ்த்துக்கள் என்னென்ன?

*கண்ணீர், பலவீனம் மற்றும் நோய் ஆகும்.

20. நரகத்தின் நெருப்பைக் குளிர வைக்கக் கூடியது எது?

*இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது.

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும்?

*மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது.

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது?
கெட்ட குணம் – கஞ்சத்தனம்.

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது?

*நற்குணம் – பொறுமை – பணிவு.

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன?

*மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்.

(நூல் ஆதாரம்: முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால்)

மேற்கண்ட செய்தி சில நாட்களாக மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை அலசுவது, கட்டாயமாக உள்ளது.

நாம் அறிந்த வரையில் மாதம் இருமுறை வெளியாகும் பிரபலமான இஸ்லாமிய தமிழ் இதழில்தான் இச்செய்தி முதல் முறையாக வெளியானது.

அதன் பின்னர், இஸ்லாமிய நிறுவனத்தின் மூலம் வெளியிட்டப்பட்டுள்ள குலாம் சர்வர் என்பவர் எழுதிய இஸ்லாம் – நம்பிக்கைகளும், போதனைகளும் (பக்கம் 26 – 29) என்ற நூலிலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

அதன் பின்னர்தான், தமிழ் உலகில் இது பரவலானது நபி(ஸல்) அவர்கள் கூறிய உபதேசம் என்கிற பெயரில் இது மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அப்படியொரு செய்தியை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறவே இல்லை!..

இச்செய்தி ஆதாரமற்ற செய்தியாகும். இதில் மிகப்பெரிய மோசடி என்னவெனில், இமாம் அஹ்மத்(ரஹ்) தனது முஸ்னத் அஹ்மத் எனும் நூலில் பதிந்துள்ளதாக சொல்லப்பட்டதுதான்!.

இப்படி ஒரு செய்தியை இமாம் அஹ்மத் அவர்கள் தனது நூலில் பதியவே இல்லை.

அடுத்ததாக
இச்செய்தியை காலித் பின் வலீத் அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது. அதுவும் தவறாகும். ஏனெனில், காலித் பின் வலீத் அவர்களின் அறிவிப்பாக இமாம் அஹ்மத்(ரஹ்) தனது நூலில் மூன்று ஹதீஸ்களை மட்டும்தான் பதிந்துள்ளார்.

அவை 16812, 16813, 16814 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அதில் முதல் இரண்டு எண்களிலும் உடும்பு கறி உண்பது தொடர்பான ஹதீஸும், மூன்றாவதாக அம்மார் அவர்களுக்கும் காலித் அவர்களுக்குமான வழக்குத்தொடர்பான செய்தியும்தான் இடம்பெற்றுள்ளது.)

கன்சுல் உம்மால் என்ற நூலில் 44154 என்ற இலக்கத்தில் மேற்காணும் நபியவர்கள் பதில்கள் சொன்னதாக இடம் பெற்றிருக்கும் செய்தி பதியப்பட்டுள்ளது. (தொகுதி 16, பக்கம் – 127-129)

இந்நூலின் ஆசிரியர் அலீ அல் முத்தகீ (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

இவர் ஹிஜ்ரி – 888ல் பிறந்து, ஹிஜ்ரி 975ல் மரணித்தார்.

இவரின் இயற் பெயர் “அலீ இப்னு அப்துல் மலிக் ஹிஸாமுத்தீன் இப்னு காளிகான் அல் காதிரி அஷ்ஷாதலி அல் ஹிந்தி” என்பதாகும்.

(பார்க்க – இமாம் சுர்கலி அவர்களின்
அல் அஃலாம் 4/309)

இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களின் ஜாமிஉஸகீர் மற்றும் ஜாமிஉல் கபீர் ஆகிய நூல்களிலிருந்து ஹதீஸ்களைத் தொகுத்த நூல்தான் கன்சுல் உம்மால் எனும் நூலாகும்.

எனவே, இதில் உள்ள ஹதீஸ்களை நாம் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது!
அப்படி ஆதாரமாகக் கொள்வதாக இருந்தால், அந்த ஹதீஸ் நம்பகமான ஹதீஸ் நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் இன்னும் சுனன்கள் மஸானித்கள் போன்ற மூலாதார நூல்களில் இடம் பெற்றிருந்தால் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இச்செய்தி எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதைப் பார்த்தோமெனில்…

இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்களின் தொகுப்பில் அவரது கையெழுத்தாக இச்செய்தியை நான் கண்டேன். அதில் அவர் அபுல் அப்பாஸ் அல் முஸ்தக்ஃபிரி கூறியதாக கூறுகிறார்.

இமாம் அபு ஹாமித் அல் மிஸ்ரி என்பவரிடம் காலித் பின் வலீத் அவர்களின் ஹதீஸை தேடியவனாக நான் வந்தேன். அப்போது அவர் எனக்கு ஒரு வருடம் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்.

அதன் பிறகு நான் அவரிடம் வந்தபோது அவரது ஆசிரியரிடமிருந்து காலித் வரையிலான அறிவிப்பாளர் தொடரோடு இச்செய்தியை எனக்கு அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது.

இதில் நிகழ்ந்த தவறுகளை ஹதீஸ் கலை அறிஞர் அஷ்ஷேக் அலீ பின் இப்ராஹிம் ஹஷீஷ் (ஹஃபிளஹுல்லாஹ்) கீழ் வருமாறு பட்டியலிடுகிறார்.

1. இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் இச்செய்தியை ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ் (ரஹ்) அவர்களின் தொகுப்பில் அவரது கையெழுத்தாக கண்டதாகக் கூறுகிறார். அப்படியானால், இது இமாம் சுயூத்தி(ரஹ்) செவிமடுத்த அல்லது தனது ஆசிரியர் பிறருக்கு அறிவிப்பதற்கு அனுமதியளித்த செய்தியல்ல எனவே இது முன்கதிஃ ஆகும். (அதாவது தொடர்பு அறுந்த செய்தியாகும்)

2. ஷேக் ஷேம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்களிடமிருந்து காலித் பின் வலீத் வரை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் கூறிய ஸனது, அடிப்படையே இல்லாத ஸனதாகும்.

3. ஷேக் ஷேம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்கள் ஹாஃபிள் அல் முஸ்தக்ஃபிரி அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது. இதில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் விடுபட்டுள்ளார்கள்.

ஏனெனில், அல் முஸ்தக்ஃபிரி(ரஹ்) ஹிஜ்ரி 432-ல் மரணித்தவர் ஆவார். ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) என்பவர் ஹிஜ்ரி 656-ல் பிறந்தார்.

4. அபு ஹாமித் அல்மிஸ்ரி என்பவர் யார் என்று அறியப்படாதவர் ஆவார். அதேபோன்று காலித் அவர்கள் வரை அவர்கூறும் அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்கள் ஆவார்கள்.

5. அது மட்டுமல்லாமல் முஸ்தக்ஃபிரி என்பவர் இந்த ஹதீஸைத் தேடி அவரிடம் சென்ற போது ஒரு வருடம் நோன்பு நோற்க அவர் கட்டளையிட்டார் என்றும் உள்ளது. இப்படிக் கூறுவது பித்அத்தான காரியமாகும்.

மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் என்பதைத் தெரிவிக்கிறது.

(பார்க்க ஸஹாப் இணைய தளம். www.sahab.net)

நபியவர்கள் மீது பொய்யுரைப்பது மிகப்பெரிய பாவமாகும். வெறுக்கத்தக்க காரியமாகும்.

இதுகுறித்து ஏராளமான நபி மொழிகளில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(நூல்: ஸஹீஹுல் புஹாரி – 108)

‘நான் கூறாத ஒன்றை கூறினார்கள்’ என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஸலமா(ரலி) அறிவித்தார்.

(நூல்: ஸஹீஹுல் புஹாரி – 109)

‘என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி – 110)

மேற்குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய்யுரைப்பது ஹராம் என்பதை தெரிவிக்கிறது.

அதே போன்று அல்லாஹ்வின் தூதர் கூறாத செய்தியை அவர் கூறியதாக கூறுவதும் ஹராமாகும். அப்படி ஒரு செய்தியை அறிவிப்பதாக இருந்தால் இது இட்டுகட்டப்பட்ட செய்தி என்று கூறித்தான் அறிவிக்கவேண்டும்.

இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. அவை அனைத்தும் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் கூறுவதை கடுமையாக எச்சரிக்கின்றன.

அவர் மீது இட்டுகட்டுவது மிகப்பெரிய பாவமாகும். சில அறிஞர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே இட்டுகட்டுவது குஃப்ர் என்று கூறியுள்ளார்கள்.

ஆனாலும் பெரும்பான்மை அறிஞர்கள் அது பெரும் பாவம் என்ற கருத்தில் தான் இருக்கிறார்கள். அதேவேளையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய் கூறுவது ஆகுமானது என்று ஒருவர் கருதினால் அவன் காஃபிர் ஆவான் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்போம்.

கிடைத்த செய்திகள் அனைத்தையும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பிறரிடம் பகிராமல் இருக்க வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

-மௌலவி. M.பஷீர் ஃபிர்தவ்ஸி,
(துணை ஆசிரியர் – அல் ஜன்னத் மாத இதழ்)

No comments:

Post a Comment