என்னுடைய நண்பர் ஒருவருக்கு குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாது. தமிழில்தான் படித்து வருகிறார்.* *குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பதற்கு நன்மை உண்டா❓*
திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம்.
இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மையை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும்.* ஒரு நன்மை என்பதை அதைப் போன்று பத்து மடங்காகும். *”அலிஃப், லாம், மீம்”* ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும்.
அறிவிப்பவர் : *அப்துல்லாஹ் பின் மஸ்வூத்* (ரலி)
நூல் : *திர்மிதி (2835)*
அல்லாஹ் எந்த ஓசையில் குர்ஆனை இறக்கியருளினானோ அதே ஓசையில் நாம் குர்ஆனைப் படிப்பதற்கு நன்மையிருக்கிறது. இது மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல.
குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளிய வார்த்தைகளில் படித்து செயல்படும் இறைநம்பிக்யாளரை நபியவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும்*. அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்து கொண்டு, குர்ஆனையும் ஓதிவருகின்றவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக் கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்து கொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : *அபூமூசா அல்அஷ்அரீ* (ரலி)
நூல் : *புகாரி 5020*
*அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான்.* விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அரபு மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும். மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர்ஆனை விளங்கிய நன்மையும் சிந்திக்கும் நன்மையும் கிடைக்கும்.
குர்ஆனைச் சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும்.
*ஒருவர் மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்கள்.*
ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும்.
____________
ஏகத்துவம்
No comments:
Post a Comment