பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, June 22, 2020

இக்லாஸ் – மனத்தூய்மை

இக்லாஸ் – மனத்தூய்மை

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாத்தை பொறுத்தவரையில், நன்மைகளை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட, முக்கியமாக அந்த நன்மைகளை, வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக மட்டுமே, மனத்தூய்மையுடன் செய்ய வேண்டும், மனிதர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக செய்யக் கூடாது என்பதும் மிக முக்கியமானது, மட்டுமின்றி, இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒரு அடிப்படையும் கூட. தொழுகையை நிறைவேற்ற வேண்டும், ஜகாத்தை கொடுக்க வேண்டும் என்பதை கூறுவதற்கு முன்னர், அல்லாஹ் ஒரு அறிவுரை கூறி ஆரம்பிக்கிறான். அந்த அறிவுரை பற்றியும்  இக்லாசை பற்றியும் இந்த உரையில் காண்போம்..

அல்லாஹ்வை இக்லாஸாக வணங்க வேண்டும் 

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக, பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

(அல்குர்ஆன் 98:5)

சொல்லிக்காட்டுவதன் மூலம் தர்மம் அழியும் 

சிலர் தர்மம் செய்து விட்டு, இறைவனுக்காக செய்தோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக, பிறருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுவார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி எச்சரிக்கிறான். ஓர் உதாரணமும் கூறுகிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ 
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல், மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.                                                 

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறு வதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 2:264,265)

நயவஞ்சகனின் தொழுகை 

அவ்வளவு ஏன்! இறைவனுக்காக தொழும் தொழுகையைக் கூட, பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, தொழுகையாளி என்ற பெயருக்காக, எல்லாரும் தொழுகிறார்கள் – நாமும் அவர்களோடு சேர்ந்து தொழ வேண்டும், இல்லாவிட்டால் நம்மை கேள்வி கேட்பார்கள் என்பதற்காக, சோம்பேறித்தனத்தோடு தொழும் பல மக்கள் இருக்கிறார்கள். இது முனாஃபிக்குகளின் குணம் என்று அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கை செய்கிறான்.

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُوْهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ! அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

(அல்குர்ஆன் 4:142)

உலகத்தில் விரும்பினால் உலகத்தில் கிடைக்கும் 

உலகம் தான் அவர்களது நோக்கம் எனில், உலகில் கிடைக்க வேண்டியது கிடைக்கும். மறுமையில் நட்டம் மட்டுமே கிடைக்கும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

 مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ‏
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَـيْسَ لَهُمْ فِىْ الْاٰخِرَةِ اِلَّا النَّارُ‌ ‌ۖ  وَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏

”இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக்கான பலன்)களை இங்கேயே, முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!

(அல்குர்ஆன் 11:15,16)

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் அறிவான் 

நன்மைகளை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் உள்ளத்தில் உள்ளதை அறிவானா, மாட்டானா? கண்டிப்பாக அறிவான். அப்படி இருக்கும் போது, எதற்காக, பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்? 

قُلْ اِنْ تُخْفُوْا مَا فِىْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ‌ؕ وَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

”உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:29)

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன். (அல்குர்ஆன் 31:16)

குர்பானி கொடுத்து என்ன பயன்? 

 لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

அவற்றின் மாமிசங்களோ! அவற்றின் இரத்தங்களோ! அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே! அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே! அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 22:37)

இறைவனுக்காக செய்ய வேண்டிய ஒரு செயலை மக்களிடத்தில் மதிப்பை பெறுவதற்காக, இன்றைக்கு பலர் செய்கிறார்கள் எனில், அதில் ஒரு செயல், குர்பானி. மாடு சைஸுக்கு ஆடு வாங்குவது தவறல்ல. ஆனால், இந்த தெருவிலேயே இது போல் யாரும் கொடுத்திருக்கக் கூடாது, அனைவரும் முக்கின் மீது விரலை வைத்து பார்க்க வேண்டும். என்ற எண்ணத்தில் செய்தால், அதனால் என்ன பயன்?

பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவனுக்கும் கேடுதான்!

 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

(அல்குர்ஆன் 107:5,6)

உள்ளத்தை இறைவன் பார்க்கிறான்

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலையோ! தோற்றத்தையோ! பார்க்க மாட்டான் எனினும் உங்கள் உள்ளத்தையும், செயல்களையுமே! பார்க்கிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புஹாரி, முஸ்லிம்

ஹிஜ்ரத்

எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், அவன் தூதருக்காகவும் ஆகிவிடுகிறதோ! அவரது ஹிஜ்ரத் கூலி இறைவனிடம் பெற்றுக் கொள்வார். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலகிற்காகவோ! அவர் மணமுடிக்க விரும்பும் பெண்ணிற்காகவோ! ஆகிவிடுகிறதோ அந்த ஹிஜ்ரத் அதற்கே ஆகிவிடும்.

அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புஹாரி, முஸ்லிம்

இரவுத் தொழுகை

இரவில் நின்று தோழா வேண்டும் என்று எண்ணிப் படுக்கைக்கு ஒருவர் வந்து காலை பஜ்ர் வரை அவர் கண் மிகைத்து தூங்கி விட்டால் அவனுக்கு அவன் எண்ணிய கூலி உண்டு. அவனது தூக்கம் அவனுக்கு தன் இறைவன் மூலம் கிடைத்த தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : நஸயீ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்.

இறைவனுக்கு கூட்டாளி தேவையில்லை

அல்லாஹ் கூறுகிறான்: நான் கூட்டாளிகளின் கூட்டை விட்டு மிகத் தேவையற்றவன். (எனக்கு கூட்டாளியாகவோ, இணையாகவோ ஆக முடியாது. ஆகவே, ஓர் அடியான் ஓர் அமலை செய்து அதில் என்னுடன் பிறருக்காகவும், செய்வானேயானால் அவனையும் அவனின் இணைவைக்கும் செயலையும் விட்டு விடுவேன் (அந்த அமலுக்கு எந்த நற்கூலியும் இல்லை ).

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

நாய்க்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் சொர்க்கம்

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.

அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2363)

நாய்க்கு தண்ணீர் தருவது, நம்முடைய பார்வையில் சிறிய செயல். ஆனால், அது அல்லாஹ்வுக்காக செய்த செயலாக இருந்தால், அந்த இக்லாஸுக்காக, இறைவன் அந்த செயலுக்கு பகரமாக சுவனத்தையே பரிசாக தருகிறான்.

ஆகவே, மனத்தூய்மையுடன் அனைத்து செயல்களையும் செய்து, மறுமையில் சுவனத்தை பரிசாக பெறும் நன்மக்களாக நம்மை இறைவன் ஆக்கி அருள்புரிவானகாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

No comments:

Post a Comment