பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, June 24, 2020

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல்

தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம்.

எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது.

என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம்.

சத்தியம் செய்வதற்கும் இஸ்லாத்தில் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்

நாம் நமது கூற்றில் உண்மையாளர்களாக இருக்கிறோம் என் பதை நிரூபிப்பதற்காகத் தான் நாம் சத்தியம் செய்து கூறுகிறோம்.

நான் கூறுவது முற்றிலும் உண்மையே! நான் பொய் கூறினால் அல்லாஹ்வுக்கு அது தெரியும். இதற்கு அல்லாஹ்வையே சாட்சி யாக்குகிறேன் என்ற கருத்திலேயே நாம் சத்தியம் செய்கிறோம். நான் பொய் சொன்னால் அல்லாஹ் எனக்குத் தண்டனை வழங்கட்டும் என்ற கருத்தும் இதனுள் அடக்கமாகியுள்ளது.

எனவே நாம் எந்தச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும், எவர் மீதும் சத்தியம் செய்வது கடுமையான குற்றமாகும்.

‘என் தாய் மேல் ஆணையாக நான் கூறுவது உண்மை’ என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனது தாய்க்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்ததாகும். எனவே தான் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு எச்சரிக்கைகள் விட்டுள்ளனர்.

‘யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 2679

‘எச்சரிக்கை! யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். குரைஷிகள் தங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) ‘உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 3836

ஒரு மனிதர் ‘கஃபாவின் மேல் ஆணையாக’ என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கண்டவுடன் ‘அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது’ என்று கூறினார்கள். மேலும் ‘யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்’ எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா. நூல்: திர்மிதீ 1455

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘(முஸ்லிம்களாகிய) நீங்களும் இணை கற்பிக்கிறீர்கள்; கஅபாவின் மீது ஆணையாக’ என்று கூறுகிறீர்கள்’ எனக் கேட்டார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறாமல்) ‘கஅபாவின் இறைவன் மீது ஆணையாக எனக் கூற வேண்டும்’ என்று கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: கு(த்)தைலா (ரலி), நூல்கள்: நஸயீ 3713, அஹ்மத் 25845

தாய் தந்தையர் மீதோ, கஅபாவின் மீதோ, குர்ஆன் மீதோ வேறு எதன் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் குற்றத்தில் அடங்கும்.

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்ததற்கான பரிகாரம்

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் ஒருவர் சத்தியம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்து விட வேண்டும்.

யாரேனும் சத்தியம் செய்யும் போது ‘லாத், உஸ்ஸா மீது சத்தியமாக’ எனக் கூறினால் உடனே ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4860, 6107, 6310, 6650

 

சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்

மனிதன் செய்யும் சத்தியங்கள் இரண்டு வகைகளில் உள்ளன.

சில சத்தியங்கள் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியதாக இருக்கும்.
சில சத்தியங்கள் தகவல் தெரிவிப்பதாக அமைந்திருக்கும்.
முதல் வகையான சத்தியம் செய்தவர்கள் தமது வாக்குறுதி யையும், உறுதிமொழியையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்கு நான் இதைத் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நாளை வருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை மணந்து கொள்கிறேன்.

என்பன போன்ற சொற்களில் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியுள்ளது.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

அல்லாஹ்வை முன்னிறுத்தி வாக்களித்ததால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றத் தவறினால் சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னார் இறந்து விட்டார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவர் திருடியதை நான் பார்த்தேன்.

என்பன போன்ற சத்தியங்களில் வாக்குறுதியோ, உறுதிமொழியோ இல்லை. இது போன்ற சத்தியங்கள் செய்யும் போது நாம் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.

 

தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது

ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் உலாவரும் சிலர் மக்களைத் தம் கைவசத்தில் அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இடுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படுவேன்’ என்று உறுதி மொழி வாங்கி விடுகின்றனர்.

இது போல் சில இயக்கங்களின் தலைவர்கள் தமது தொண்டர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் எந்தக் கட்டளையிட்டாலும் அதைச் செய்து முடிப்பேன்’ என்று உறுதி மொழி கொடுத்தவர்கள் பின்னர் இதைத் தவறு என்று உணர்வார்கள். ஆனாலும் சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் அதிலிருந்து மீளவே முடியாது என்று நினைத்து தொடர்ந்து அடிமைகளாக நீடித்து விடுவார்கள்.

அல்லாஹ்விடம் அளித்து உறுதிமொழியையே முறித்து விட்டு பரிகாரம் செய்யலாம் என்று இஸ்லாம் கூறுவதை இவர்கள் மறந்து விட்டனர்.

இதுபோல் சத்தியம் செய்து கொடுத்தால் அதை முறித்து விட வேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன் என்ற உறுதி மொழி நபிகள் நாயகத்துக்கு மட்டும் சொந்தமானதாகும்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.  (திருக்குர்ஆன் 48:10)

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (திருக்குர்ஆன் 48:18)

இந்த வசனங்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத்’ எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.

போ ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இந்த வசனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத்’ செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத்’ செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. ‘உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார் கள். ‘நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்; தப்புச் செய்ய மாட்டோம்’ என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ‘அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்’ என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 60:12)

இவை யாவும் நபிகள் நாயகம் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.

இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்கர் (ர), உமர் (ர), உஸ்மான் (ர), அ (ர) ஆகியோரிடம் வந்து ‘நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம்’ என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் ‘நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்’ என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.

நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்ப தென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காயங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத் தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதடரிமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும். ‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696, 6700

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதி மொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

 

பொய்ச் சத்தியம் செய்தல்

வாக்குறுதி அளிக்கும் வகையில் இல்லாத சத்தியங்களில் பொய் கூறுவது கடுமையான குற்றமாகும்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! நீங்கள் அறிந்தால் அல்லாஹ்விடம் உள்ளதே உங்களுக்குச் சிறந்தது. (அல்குர்ஆன் 16:95)

அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர். (அல்குர்ஆன் 58:14)

‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைத் துன்புறுத்துதல், கொலை செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 6675, 6870, 6920

‘தவறான முறையில் இன்னொரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக யாரேனும் சத்தியம் செய்தால் (மறுமையில்) அல்லாஹ் அவன் மீது கடுமையாக கோபம் கொண்ட நிலையில் தான் சந்திப்பான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி 2357, 2417, 2516, 2667, 2670, 2673, 2677, 4550, 6659, 6676, 7183, 7445

இத்துடன் 3:77 வசனத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

‘பாதையில் உபரியான நீர் தனக்குச் சொந்தமாக இருந்து வழிப்போக்கனுக்கு அதைத் தடுத்தவன், ஒரு ஜனாதிபதியிடம் உலக ஆதாயத்துக்காக பைஅத் எனும் உறுதிமொழி எடுத்தவன், தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாகக் கூறி சத்தியம் செய்தவன் ஆகிய மூன்று நபர்களை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி 2535, 2672, 7212

 

தீர்மானம் இன்றி சத்தியம் செய்தல்

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக’ என்ற சொல்லை வாய் தவறி ஒருவர் பயன்படுத்தினால் அது சத்தியத்தில் சேராது. மனதால் உறுதி செய்து அதைக் கூறினால் மட்டுமே சத்தியமாக ஆகும்.

வாய் தவறி கூறி விட்டால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை. அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட் டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2528, 5269

சத்தியம் செய்யும் போது நிச்சயமாக இதைச் செய்வேன் என்று கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். ‘அல்லாஹ் நாடினால் நான் இதைச் செய்வேன்’ என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காக பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 1451

இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும் அபூதாவூத் 2838, அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்

‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறை வேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (அஹ்மத் 5108, 5814, 5830)

 

பிறருக்காகச் சத்தியம் செய்தல்

தனது வாக்குறுதியை வலியுறுத்துவதற்குத் தான் ஒருவர் சத்தியம் செய்ய வேண்டும். இன்னொருவரை வலியுறுத்துவதற்குச் சத்தியம் செய்ய முடியாது.

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உனக்கு இதைத் தருவேன்’ என்று கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது.

‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ எனக்கு இதைத் தர வேண்டும்’ எனக் கூறினால் அதற்கு அர்த்தம் இல்லை.

ஆனாலும் இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் தமக்கிடையே இவ்வாறு பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள் (ஸைனப்) தனது குழந்தை மரணத்தை நெருங்கி விட்டதைச் சொல்லி அனுப்பி உடனே நபிகள் நாயகம் (ஸல்) வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே; அவன் கொடுத்ததும் அவனுக்குரியதே; ஒவ்வொன்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட காலக்கெடு உண்டு. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும்’ என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அந்த மகள் ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும்’ என்று சொல்லி அனுப்பினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். குழந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மடியில் வைக்கப்பட்டது. உடனே நபிகள் நாயகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கண்ட ஸஅது அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இது இரக்க உணர்வாகும். தான் நாடிய அடியார்களின் உள்ளங்களில் அல்லாஹ் இதை வைக்கிறான். தனது அடியார்களில் இரக்கம் உள்ளவர்களுக்குத் தான் அல்லாஹ் இரக்கம் காட்டுவான்’ எனக் கூறினார்கள்.  நூல்: புகாரி 1284, 6655, 7377, 7448, 5655

 

குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்

ஒரு மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிரமம் அளிக்கும் காரியத்தைச் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் பாவமாகும். மாறாக அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்து விட வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் உள்ள மாவறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஒருவன் சத்தியம் செய்தால் இதனால் குடும்பத்தினர் கஷ்டம் அடைவார்கள். இது போன்ற சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை முறித்து விட வேண்டும். சத்தியத்திற்கான பரிகாரத்தையும் செய்து விட வேண்டும்.

‘ஒரு மனிதன் தனது குடும்பத்தினருக்குச் சிரமம் அளிப்பதைச் சத்தியம் செய்வது, அதை முறித்து விட்டு பரிகாரம் செய்வதை விட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6625, 6626

 

தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்

எனது நாணயத்தின் மீது சத்தியமாக! எனது ஒழுக்கத்தின் மீது சத்தியமாக! எனது நற்பண்புகள் மீது சத்தியமாக என்றெல்லாம் சிலர் சத்தியம் செய்வதுண்டு.

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பதிலிருந்தே இது கூடாது என்று அறிந்து கொள்ளலாம்; என்றாலும் இது பற்றி நேரடியாகவே தடைகளும் வந்துள்ளன.

‘நாணயத்தின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: அபூதாவூத் 2831, அஹ்மத் 21902

 

பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்

தனது குடும்ப உறுப்பினருக்கோ, நண்பருக்கோ உதவிகள் செய்து வந்தவர்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது இனிமேல் உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர். இவருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி செய்து வந்தனர். தன் மகள் மீது அவர் அவதூறு கூறியதால் இனிமேல் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவெடுத்தார்கள். இதைக் கண்டித்து பின்வரும் 24:22 வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்: புகாரி 2661, 4141, 4750, 6679

‘உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22)

இதே கருத்தைப் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறுகிறான்.

நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:224)

 

மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்

இஸ்லாம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் சத்தியம் செய்கிறார். அதை அவர் நிறைவேற்ற முடியாது சிரமப்படுகிறார். நாம் அவருக்கு உதவினால் அவர் செய்த சத்தியத்தில் உண்மையாளராக ஆவார். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவரது சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது அவசியமாகும்.

ஜனாஸாவைப் பின் தொடர்தல், நோயாளியை விசாரித்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்,(பிறரது) சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல், தும்மியவருக்காக மறுமொழி கூறுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல் ஆகிய ஏழு விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235

 

வியாபாரத்தில் சத்தியம் செய்தல்

வியாபாரிகள் தான் மனிதர்களிலேயே அதிகம் சத்தியம் செய்பவர்களாக உள்ளனர். தாங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட சத்தியம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

‘சத்தியம் செய்தல் சரக்குகளை விற்க உதவும். ஆனால் பர(க்)கத்தை அழித்து விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2087

 

சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்

ஒருவன் கையில், அல்லது கட்டுப்பாட்டில் ஒரு பொருள் உள்ளது. அப்பொருளை இன்னொருவன் உரிமை கொண்டாடி வழக்குக் கொண்டு வருகிறான்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் யார் வழக்கு கொண்டு வருகிறானோ அவன் தான் அப்பொருள் தன்னுடையது என்பதற்கான ஆதாரங் களைக் கொண்டு வர வேண்டும். பொருளைக் கைவசம் வைத்துள் ளவன் ஆதாரம் கொண்டு வரத் தேவையில்லை. அப்பொருள் அவனது கைவசம் உள்ளதே அவனுக்குரிய ஆதாரமாக உள்ளது.

வழக்குத் தொடுத்தவன் ஆதாரத்தைக் கொண்டு வந்தால் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படும். அவனால் எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து நிரூபிக்க இயலவில்லை என்றால் யாருடைய கையில் அப்பொருள் உள்ளதோ அவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தன்னுடையது எனக் கூற வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் அப்பொருள் அவனுடையது என்று தீர்ப்பளிக்கப்படும்.

பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சத்தியம் செய்ய மறுத்தால் அப்பொருள் வழக்குத் தொடுத்தவனைச் சேரும்.

‘என்னால் ஆதாரம் காட்ட இயலாது; வேண்டுமானால் சத்தியம் செய்கிறேன்’ என்று வழக்குத் தொடுத்தவன் கூற முடியாது. பொருளைக் கைவசம் வைத்திருப்பவனுக்கு மட்டுமே சத்தியம் செய்தல் உரியதாகும். வழக்குத் தொடுத்தவன் ஆதாரம் காட்டி விட்டால் அதன் பின்னர் பொருளை வைத்திருப்பவன் சத்தியம் செய்வதாகக் கூற முடியாது.

எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. அந்த நிலத்தை என்னிடம் தர அவர் மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஆதாரம் ஏதும் இருக்கிறதா’ என்று என்னிடம் கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்று கூறினேன். ‘அப்படியானால் நீ சத்தியம் செய்’ என்று யூதரிடம் கூறினார்கள். அப்போது நான் ‘இவன் பொய்ச் சத்தியம் செய்து எனது சொத்தை எடுத்துக் கொள்வான்’ என்று கூறினேன். அப்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங் களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77) அறிவிப்பவர்: அஷ்அத் (ரலி) நூல்: புகாரி 2417, 2667, 2516, 2670

ஒரு பொருள் இருவரின் கைவசத்திலும் இருந்தால், அல்லது இருவரில் யாருடைய கைவசத்திலும் இல்லாமல் இருந்தால், இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியம் செய்து விட்டால் அப்பொருள் அவரைச் சேரும். சத்தியம் செய்ய மறுத்தால் மற்றவர் சத்தியம் செய்து அப்பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கூட்டத்தினர் தொடுத்த வழக்கின் போது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் கேட்டனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சத்தியம் செய்ய விரைந்து வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் சத்தியம் செய்ய வேண்டும் என்பதற்கு சீட்டுக் குலுக்கித் தேர்வு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2674

ஒரு பொருளுக்கு இருவர் உரிமை கொண்டாடி, இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் சத்தியம் செய்யாமல் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. அதை இருவருக்கும் சமமாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: அபூதாவூத் 3134

 

நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது

நாம் கூறுவது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் மற்றவருக்கு வரும் போது சத்தியம் செய்து கூறுவோம். இதனால் நாம் கூறுவது உண்மை என்று அவர் நம்புவார்.

நாம் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்றவர்கள் சந்தேகப்படும் போதும் சத்தியம் செய்து கூறுவோம்.

இறை நம்பிக்கையில்லாதவர்களிடமும் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவர்களிடமும் நாம் சத்தியம் செய்து கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள். நாம் சத்தியம் செய்வதும், செய்யாமல் கூறுவதும் அவர்களைப் பொருத்த வரை சமமானதே.

இது போன்றவர்களிடம் நாம் சத்தியம் செய்து கூறக் கூடாது.

‘உன் சகா உன்னை உண்மைப்படுத்துவான் எனும் போது தான் சத்தியம் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3121

 

சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது

சிலர் தங்களைக் காத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். சத்தியத்தைத் தங்களின் கேடய மாக ஆக்கிக் கொள்வார்கள். இது கடுமையான குற்றமாகும்.

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 16:58)

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது. (அல்குர்ஆன் 63:2)

 

சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாள னாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 16:91)

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான். (அல்குர்அன் 16:92)

 

இல்லறத்தில் சந்தேகம்

ஒருவன் ஒரு பெண்ணுடைய ஒழுக்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினால் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்அன் 24:4)

ஆனால் கணவன் தன் மனைவியின் மீது குற்றம் சாட்டினால் அவன் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது ‘நான் பொய் சொன்னால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறினால் அவன் அவதூறு கூறியவனாக ஆக மாட்டான்.

இதே போல் அவனது மனைவியும் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது ‘நான் கூறுவது பொய் என்றால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ எனக் கூற வேண்டும்.

இவ்வாறு இருவரும் கூறிவிட்டால் அவ்விருவருக்கும் இடையே உள்ள உறவு அடியோடு நீங்கி விடும். அதன் பின்னர் சேர்ந்து வாழ முடியாது.

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். ‘தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்’ என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). ‘அவனே பொய்யன்’ என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சிய மளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். ‘அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்’ என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (அல்குர்ஆன் 24:6-9)

No comments:

Post a Comment