பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, June 3, 2020

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள்

*கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள்* 



*(திருக்குர்ஆன் 5:75)* 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

‘ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா? ‘ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.

நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் ‘நபிகள் நாயகம் மரணிக்க வில்லை” என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ர) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.

எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை.

 *ஆறாவது ஆதாரம்* 

‘மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். ‘நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)

 *(திருக்குர்ஆன் 5:116-118)* 

இவ்வசனங்கள் மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன.

இவ்வசனத்தில் ‘என்னை நீ கைப்பற்றிய போது” என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில்’ தவஃப்பைத்தனீ” என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று பொருள் கொள்வதா? ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்வதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுவர். ‘என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு” என்று ஈஸா நபியே கூறியுள்ளதிருந்து அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அறியலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

‘ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாக வும் இருக்கிறேன்” என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்.

 *(திருக்குர்ஆன் 3:55)* 

உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்ற இடத்தில் முதவஃப்பீக என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லும் தவஃப்பாவிலிருந்து பிறந்த சொல்லாகும். எனவே ‘உம்மை மரணிக்கச் செய்பவனாகவும்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

அவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து விட்டு இதன் சரியான விளக்கத்தைக் காண்போம்.

‘தவஃப்பா” என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே,இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.

இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும்.

எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். ‘தவஃப்பா” என்ற சொல்ன் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல; ‘முழுமையாக எடுத்துக் கொள்ளுதல்” என்பதே அதன் நேரடிப் பொருளாகும்.

மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான்

 *(திருக்குர்ஆன் 6:60)* 

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.

அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள்

 *(திருக்குர்ஆன் 4:15)* 

மரணம், மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள முடியாது.

உயிர்கள், மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்

 *(திருக்குர்ஆன் 39:42)* 

கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்கு இந்த இடத்தில் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.

இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூ தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூ தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும்.

தொழுகையைக் குறிக்கும் ‘ஸலாத்” என்ற சொல்லும் அதிருந்து பிறந்த சொற்களும் 109இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.

இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம் பெற்ற ‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?

என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ‘ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார்” (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடனும், ‘ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:159) என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.

மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் கருத்தாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக் குரிய நேரடிப் பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொள்வது தான் சரியானதாகும்.

மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது. ‘நான் உயிருடன் இருந்தவரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று ஈஸா நபி கூற மாட்டார்கள்.

‘நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

‘நான் உயிருடன் இருந்த போது” எனக் கூறாமல் ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.

‘நான் உயிருடன் இருந்த போது” என்று கூறி விட்டு ‘ஃபலம்மா தவஃப்பைதனீ” என்று அவர்கள் கூறினால், அந்த இடத்தில் ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று தான் பொருள் கொள்ள முடியும்.

ஆனஈல் அல்லஈஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்ற முற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள்; உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.

‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.

அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்த போது அம்மக்களைக் கண்காணித்தார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப் பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து, முன்னர் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.

 *இவை தவிர தர்க்க ரீதியான சில கேள்விகளையும் கேட்கின்றனர்.* 

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கி றார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டால் அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமை அவனுக்கு இருக்கின்றது.

சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மை தான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தைச் சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (5:110)

இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை.

இறந்தவர்களை உயிர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடிய தன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் (3:49, 5:110) அதை நம்பித் தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று.

களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப் பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றது தான். ஆனால் இதை அல்லாஹ் கூறுவதால் (3:49) நம்பித் தான் ஆக வேண்டும்.

இது போல் பல நூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது.

‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.” என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளார்கள் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஈஸா (அலை) அவர்கள் ஒரு போதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார் என்று கூறக் கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டார் என வாதிக்க முடியாது.

ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியை விடச் சிறந்தவர்கள் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியேயாக வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்கு கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது.

ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா?

இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாகச் சந்திக்க இயலும்.

எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக் கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.

கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்படவில்லை.

ஏசு தீமைக்கு எதிராக ஏதும் போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை.

வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வைக் கூறியதாக பைபிள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புகள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புகளைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்கான சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை.

 *9 ஈஸா(அலை) அவர்களின் வருகை* 

இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.

 *(அல்குர்ஆன் 4:157,158)* 

இவ்விரு வசனங்களையும், அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, விதண்டாவாதமும், வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம்.

அவரை அவர்கள் கொல்லவில்லை” என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத்தான் குறிக்கும். வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்”என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.

அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.

அவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும்போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.

அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகிறது.

ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம். வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எறிகின்றன.

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

 *(அல்குர்ஆன் 43:61)* 

ஈஸா(அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா(அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனிமேல் அந்த அடையாளம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.

கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்” என்பது மிகத்தெளிவாக இந்த உண்மையைக் கூறிவிடு கின்றது. ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூற முடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.

கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

 *நூற்கள்: புகாரி, முஸ்லிம்* 

நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்பதற்கு எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.

முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்” என்று நபி(ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீயபண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.

அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்” என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.

தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா(அலை) இறங்குவார்கள்.

தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்’ (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன்(ரலி)

 *நூல்: திர்மிதீ* 

இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.

ஈஸா(அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்துவிடும் எனவும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா(அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.

ஈஸா(அலை) இன்று வரை மரணிக்கவில்லை; உடலுடன் உயர்த்தப்பட்ட அவர்கள் இறுதிக்காலத்தில் இறங்குவார்கள் என்பதற்குச் சான்றாக மற்றுமொரு தெளிவான திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்” என்ற வசனத்திற்கு அடுத்த வசனமாக இந்த வசனம் இடம் பெற்றுள்ளது.

வேதமுடையவர்களில் எவரும் அவர்(ஈஸா) இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்பவராக இருப்பார்.

 *(அல்குர்ஆன் 4:159)* 

ஈஸா(அலை) அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்துவிட்டார்கள் என்று கூறக்கூடியவர்களின் நம்பிக்கைப்படியும் இந்த வசனத்திற்குப் பொருள் கொண்டு பார்ப்போம். ஈஸா(அலை) அவர்கள் இன்று வரை மரணிக்கவில்லை என்று கூறுவோரின் நம்பிக்கைப்படியும் பொருள் கொண்டு பார்ப்போம். எது சரியான பொருள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஈஸா நபியின் மரணத்திற்கு முன்” என்ற சொற்றொடருக்கு முதல் சாராரின் நம்பிக்கைப் பிரகாரம் எப்படிப் பொருள் வரும்? ஈஸா நபியின் மரணத்திற்கு முன் என்றால் அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது என்றுதான் இவர்கள் பொருள் கொள்ள முடியும். ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அதாவது அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்பது தான் இந்தச் சொற்றொடரின் பொருளாகிறது.

வேதமுடையவர்கள் அனைவரும் ஈஸா(அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பது மொத்த வசனத்தின் பொருளாகிறது. ஈஸா(அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதற்கு ஏதேனும் பொருளிருக்கிறதா?அல்லாஹ்வின் வசனம் எந்த அர்த்தமுமில்லாததாக அல்லவா ஆகிவிடும்?

ஈஸா(அலை) இனிமேல் மரணிப்பதற்கு முன் – இனி மேல் வேதமுடையவர்கள் ஈமான் கொள்வார்கள் என்பது தான் பொருத்தமாக உள்ளது. ஈஸா நபி வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதில் எவ்வளவு குழப்பம் என்று பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இனி ஈஸா(அலை) மீது ஈமான் கொள்வார்கள் என்று அவர் மரணித்த பிறகு அல்லாஹ் சொல்வானா?

இதைச் சிந்தித்தால், ஈஸா(அலை) இன்றுவரை மரணிக்கவில்லை; அவர் மரணிப்பதற்கு முன்னால் வேதமுடையோர் அனைவரும் அவரை நேரில் பார்த்து ஈமான் கொள்வார்கள் என்பது தெளிவாகும். எவ்வளவு அழுத்தமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் குர்ஆன் கூறுகிறது என்று சிந்தியுங்கள்! மேலும் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் எனக் கூறப்படுவதால் உயர்த்திக் கொண்டான் என்பது உடலுடன்தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது.

 *10 புகை மூட்டம்* 

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து புகைப் படலம் இறங்கும். அது சாதாரண புகையாக இருக்காது. மாறாகக் கடுமையாக வேதனையளிப்பதாக அந்தப் புகை அமைந்திருக்கும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அறிவிக்கின்றன.

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.

 *(அல்குர்ஆன் 44:10,11)* 

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

 *நூல்: தப்ரானி* 

பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) கூறிய ஹதீஸை முன்னர்(பக்கம் 17ல்) குறிப்பிட்டுள்ளோம். அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாக புகை மூட்டத்தையும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!

அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர்களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப்பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.

 *மூன்று பூகம்பங்கள்* 

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

 *நூல்: முஸ்லிம்* 

உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்ட மானவையாக அமைந்திருக்கும்.

இம்மூன்று பூகம்பங்களையும் நபி(ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இதுவரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.

 *பெரு நெருப்பு* 

எமன் நாட்டில் மிகப்பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்கமுடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக்காலி செய்துவிட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும்,அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

 *நூல்: முஸ்லிம்* 

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.

இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக!.


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment