பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, March 31, 2020

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர். இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன.

பெரிய பாவங்கள் எவை? என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 83:15)

கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

‘மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரீ 7435

அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.
சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ‘இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்று அல்லாஹ் கேட்பான். ‘நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா?’ என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது.
அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி) நூல்: முஸ்லிம் 266

அல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள், நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன் மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்) (அல்குர்ஆன் 44:49)

இன்னும் கேலி செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆனிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும். மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும். அவற்றின் விவரத்தைக் காண்போம்.

(1) வேதத்தை மறைத்தவர்கள்

அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

இன்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்களைத் தவறு என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது, கத்தம், பாத்திஹா போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றைச் செய்யும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன் வருவதில்லை.

இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விட மிருந்து தப்பிக்க முடியாது.நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிட மாட்டான்.

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 15:92)

யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7:6)

இதை ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சிலர் குறை கூறினர். இக்குறையை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்குக் கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

இந்த வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் சுட்டி காட்டி ‘இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 118

மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தைச் செய்யக் கூடாது என்று நமக்கு முன்னர் வேதம் வழங்கப் பட்டவர்களான யூத, கிறித்தவர் களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தண்டனையைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ‘அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் மறைக்கக் கூடாது’ என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது,

அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)

நாம் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோரிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

(2) பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்பவன்

இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்குப் பொய் வியாபாரத்தில் கலந்து விட்டது. உண்மையைக் கூறி, நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய் சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.நியாயமாக பிழைப்பவனுக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான பரக்கத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத்தை அழித்து விடுகின்றான்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவு படுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர்: ஹகீம் பின்
ஹிஸாம் (ரலி), நூல்: புகாரீ 2110

வியாபாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். வியாபாரி விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத் தயாராக இல்லை. அந்தளவுக்கு வியாபாரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்து விட்டது.

இதைப் போன்று சில நேரங்களில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் வாங்குபவரை நம்ப வைப்பதற்காக, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விற்பவர்கள் இருக்கிறார்கள். வாங்குபவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியதால் நம்பி வாங்கிச் சென்று விடுவார். ஆனால் மறுமையில் இதற்குரிய தண்டனையை வியாபாரி யோசித்துப் பார்ப்பதில்லை.அல்லாஹ் பார்க்காத பேசாத கடும் தண்டனைக்குரிய நபர்களில் இவ்வாறு பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தவனும் ஒருவனாவான்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2369

(3) சுயநலத் தொண்டன்

ஒரு இயக்கத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ நாம் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொது நலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். நியாயமானவராகவும் நாணயமான வராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்குச் சாதகமாக நடக்கும் நபரைத் தேர்வு செய்யக் கூடாது.ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதைக் கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக, கொள்ளைக்காரர் களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவனைப் பகைக்கிறார்கள்.

நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஒரு கட்சியில் தொண்டனாக இருப்பவன் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக மாறுகிறான். நேற்று வரை தன் தலைவனை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக் கொண்டிருக்கின்றான். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் வெறுக்கிறான். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறான். இது போன்ற சந்தர்ப்பவாதிகள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்ளட்டும்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2358

தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேயே இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள்.    (புகாரீ 7257)

(4) உபரியான தண்ணீரை தர மறுப்பவன்

தன் உபயோகத்திற்கு மேலாக இருக்கும் தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்… தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2369

தண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. வழிப்போக்கர்கள் பயணிகள் போன்றோர்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரைக் குடிக்க விடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும்?
தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தைப் பிறர் அனுபவிக்க விடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்து விடுவான்.

(5) பெருமைக்காக தரையில் இழுபடுமாறு ஆடையை அணிபவன்

மனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் வசதியாக உடல் நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்து விடுகின்றான். ஆணவத்துடன் தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெருமை கொள்வதற்கு அனுமதியில்லை

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (அல்குர்ஆன் 17:37)

‘யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி, நூல்: முஸ்லிம் 147

பெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?’ என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 147

பெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ‘(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)  நூல்: முஸ்லிம் 171

அரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக்கூடாது.

‘(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரீ 3485

(6) செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன்

பிறருக்குத் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவனிடம் பேச மாட்டான். அவனைப் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான். நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட, உதவி செய்து விட்டு அதைச் சொல்லிக் காட்டுபவன் அதிக குற்றத்திற்குரியவன்.

‘மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்ள அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ‘(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்ள நஷ்டமடைந்து விட்டனர் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உபகாரத்தை) சொல்லிக் காட்டுபவர் பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 171

தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித் தந்தாலும் அவனுக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

ஒரு வழவழப்பான பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும் போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு, சிதறி காணாமல் போய் விடும். பாறையின் மீது சிறிய மண் துகளைக் கூட காண முடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காகத் தர்மம் செய்தவனின் செயல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது. இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.

தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாதவர்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:262)

அல்லாஹ் குர்ஆனில் சொர்க்க வாசிகளின் சில பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவர்கள் யாருக்கு உதவி செய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று கூறுகின்றான்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை’ (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 76:8)

(7) விபச்சாரம் செய்யும் முதியவன்

பொதுவாக வயோதிகம் என்பது அனைத்தையும் அனுபவித்து ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கி விட்ட நிலையாகும். ஒரு வாலிபனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்தக் கால கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறான்.

இளைய வயதினர் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆனால் வயது முதிர்ந்த நிலையில், விபச்சாரம் செய்வதற்குத் தகுதியற்ற நிலையில், தவிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தப் பாவத்தைச் செய்வதால் கடும் தண்டனை விபச்சாரம் செய்யும் முதியவனுக்கு கிடைக்கிறது.
‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 156

ஒரு முஸ்லிம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரண வேளையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு.

நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரக வாதியாகவோ நிர்ணயிக்கிறது. ஆக இந்தக் கொடிய பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

‘விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஒருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளை யடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 2475

(8) பொய் சொல்லும் அரசன்

சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய் சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விடப் பொய்யே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 33

நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

‘உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழி காட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகி விடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரீ 6094

சாதரண மக்களே பொய் சொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

ஒரு நாட்டின் அரசன் குடி மக்களில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்குக் கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் அவன் பொய் சொல்வது, பொய் சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்ப்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் கூட பொய் சொல்லக் கூடாது என்றிருக்கும் போது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத ஓர் அரசன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தால் இவனும் இந்த மோசமான நிலையை அடைகின்றான்.

‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) பொய் கூறும் அரசன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 172

(9) பெருமையடிக்கும் ஏழை

பொதுவாக தற்பெருமை கொள்வதற்குக் காரணமாக அமைவது செல்வாக்கு தான். அந்தச் செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வறட்டு கவுரவம் கொள்கின்றான் என்றே பொருள். ஆக, சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்ட முடியாத இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்குக் காரணம், அல்லாஹ் விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்கு தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். பெருமையடிக்கும் ஏழை (அவர்களில் ஒருவன்)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 172

இவை தவிர பெற்றோரை விட்டு விலகியவன், பிள்ளையை விட்டு விலகியவன், நன்றி மறந்தவன் ஆகியோரையும் அல்லாஹ் பார்க்க மாட்டான், பேச மாட்டான், தூய்மைப்படுத்த மாட்டான் என்று கூறும் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

‘எனவே பட்டியளிட்ட அனைத்து விஷயங்கலும் தவிர்த்துக் கொண்டு மறுமையில் அல்லாஹ்வை திருமுகத்தை பார்க்கின்ற பாக்கியம் உடைய நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புறிவானாக’!

No comments:

Post a Comment