*🔵மீள் பதிவு🛑*
*🕋🕋🕋நபிவழியில் உளூச் செய்யும் முறை🕋🕋🕋*
*நிய்யத் எனும் எண்ணம்*
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
*நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530*
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
*பல் துலக்குதல்*
உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும்.
பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.
நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
*நூல்: முஸ்லிம் 1233*
பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ‘உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ‘பல் துலக்கினார்கள்’ என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.
மேலும் பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
*நூல்: புகாரீ 888*
பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
*நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072*
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
*நூல்: அஹ்மத் 9548*
*பல் துலக்கும் குச்சி*
குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக்’ குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
மிஸ்வாக்’ என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம்’ என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது.
பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும், பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அது போல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான்.
பல் துலக்குதல் தான் நபிவழியே தவிர குறிப்பிட்ட குச்சியாகத் தான் இருக்க வேண்டும் என்பது நபிவழியல்ல!
இந்தக் குச்சியால் தான் பல் துலக்க வேண்டும் என்று சிலர் வயுறுத்துவதால் இதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
பல் துலக்கிய பின்னர் உளூச் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம்.
*அல்லாஹ்வின் பெயர் கூறுதல்*
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் *பிஸ்மில்லாஹ்* ’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள்.
இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ‘மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா
*நூல்: நஸயீ 77*
*முன் கைகளைக் கழுவுதல்*
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.
… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
*நூல்: நஸயீ 147*
*வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்*
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
*நூல்: புகாரீ 160, 164*
வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ‘இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
*நூல்: புகாரீ 140*
ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
*நூல்: புகாரீ 160, 164*
அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்’என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர்
*நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696*
*முகத்தைக் கழுவுதல்*
இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.
*இரு கைகளால் கழுவுதல்*
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
*நூல்: புகாரீ 140*
*ஒரு கையால் கழுவுதல்*
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
*நூல்: புகாரீ 186*
*தாடியைக் கோதிக் கழுவுதல்*
தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
*நூல்: அஹ்மத் 24779*
*இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்*
முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
*நூல்: புகாரீ 160*
*முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்*
முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.
‘உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
*நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362*
எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
*தலைக்கு மஸஹ் செய்தல்*
இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
*நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346*
இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.
*எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?*
தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
*நூல்: புகாரீ 186*
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
*நூல்: நஸயீ 98*
*காதுகளுக்கு மஸஹ் செய்தல்*
தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
*நூல்: நஸயீ 101*
*பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா?*
தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது. இரண்டு கால்களையும் கழுவுதல்
இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
*நூல்: புகாரீ 140*
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
*நூல்: புகாரீ 160*
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்’ என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத்
*நூல்: புகாரீ 165*
*எத்தனை தடவை கழுவ வேண்டும்?*
தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).
*நூல்: புகாரீ 157*
நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
*நூல்: புகாரீ 158*
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
*நூல்: புகாரீ 160*
எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.
ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா
*நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346*
*மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது*
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)
*நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397*
*வரிசையாகச் செய்தல்*
மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது *பிஸ்மில்லாஹ்* எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.
*அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு*
*பொருள்* : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
*அல்லது*
*அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு*
*பொருள்:* வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
*அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)*
*நூல்: முஸ்லிம் 345*
ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை
ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை.
எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்
*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*
No comments:
Post a Comment