பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 2, 2020

சுன்னத் தொழுகைகள்

*🏵🏵மீள் பதிவு🏵🏵* 


*📚📚📚சுன்னத் தொழுகைகள்📚📚📚*


 *சுன்னத் தொழுகைகள்            நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும்.* 

 *முன் பின் சுன்னத்துகள்* 

கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.

 *சொர்க்கத்தில் மாளிகை ஹதீஸ் அஹமது 18877* 

கடமையல்லாத, உபரியான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது.

‘ *கடமையான தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.* 

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 731, முஸ்லிம் 1301* 

 *பஜ்ருடைய சுன்னத்* 

முன் பின் சுன்னத்துக்களில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 1163, முஸ்லிம் 1191* 

சுப்ஹுத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகையையும் தொழக் கூடாது. ஆனால் ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் இருந்தால் அதைத் தொழுவதற்கு அனுமதி உள்ளது.

சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபி (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 581, முஸ்லிம் 1367* 

நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அறிவிப்பவர்: கைஸ் (ரலி)

 *நூல்: இப்னுஹிப்பான் 2471* 

ஃபஜ்ருடைய ஜமாஅத் நடக்கும் போது பள்ளிக்கு வருபவர் முன் சுன்னத்தைத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்துடன் சேர்ந்து ஃபஜ்ரு தொழும் வழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் இது தவறாகும். ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பிறகு வேறு தொழுகைகள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1160* 

 *லுஹருடைய சுன்னத்* 

லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1200* 

‘லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்: புகாரீ 1182* 

 *அஸருடைய சுன்னத்* 

அஸருடைய முன் சுன்னத் நான்கு ரக்அத்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

 *நூல்: திர்மிதீ 394* 


 *மஃரிபுடைய சுன்னத்* 


மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

‘மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை ‘விரும்பியவர் தொழட்டும்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

 *நூல்: புகாரீ 1183* 

அபூதாவூதின் 1089 அறிவிப்பில் ‘மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்’ என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 *நூல்: புகாரீ 937* 

 *இஷாவுடைய சுன்னத்*

இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

‘ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு’ என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) ‘விரும்பியவர்கள் தொழலாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

 *நூல்கள்: புகாரீ 624, முஸ்லிம் 1384* 

நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய முன் சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 *நூல்: புகாரீ 937* 

 *லுஹா தொழுகை* 

முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.

இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.

முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி ஒரு ஹதீஸ் (1237) இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளரில் இடம் பெற்றுள்ள அல்காஸிம் அஷ்ஷைபானீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனினும் லுஹா என்ற சொல்லின் பொருளிலிருந்து அதன் நேரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். லுஹா என்பதற்கு முற்பகல் என்று பொருள். எனவே இத்தொழுகையை முற்பகலில் தொழ வேண்டும் என்று முடிவு செய்யலாம். இரண்டு ரக்அத்கள்

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும்,உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 *நூல்கள்: புகாரீ 1981, முஸ்லிம் 1182* 

நான்கு ரக்அத்கள் ‘ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

 *நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத் 26208* 

 *எட்டு ரக்அத்துகள்* 

‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா

 *நூல்கள்: புகாரீ 1103, முஸ்லிம் 510* 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment