பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, June 15, 2018

பிறையை கணிப்பீடு செய்த

*சர்வதேச பிறையை கணிப்பீடு செய்து நோன்பு பிடித்தவர்களின் கவனத்திற்கு*

உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது.எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள். எனவே சவூதியில் பிறை பார்த்து, அல்லது விஞ்ஞான அடிப்படையில் கணித்து, இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

வானியல் அறிவு இல்லாத மக்களுக்கு இது பெரிய விஞ்ஞான உண்மை போலவும்,அறிவுப்பூர்வமான வாதம் போலவும் தோன்றுகிறது.

ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது இதை விட அபத்தமான வாதம் ஏதும் இருக்க முடியாது. இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. அறிவுப்பூர்வமான வாதமும் இல்லை.

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது.

சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும்,சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:6

இந்த வசனங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே நமக்குக் காலம் காட்டிகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது

அல்குர்ஆன் 17:78

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.

அல்குர்ஆன் 20:130

இந்த வசனங்களில் சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நமது வணக்கங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறான்.

இரண்டுமே காலம் காட்டிகள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

இரண்டும் எவ்வாறு காலம் காட்டிகளாக உள்ளன என்பதைத் தான் பலரும் அறியாமல் உள்ளனர்.
சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது

நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.

நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.

நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

அதாவது சூரியனும் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.

உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.

நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்’ என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார். அவருக்கு சூரியன் மறைய இன்னும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாகவே ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?

இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

சந்திரனில் எவ்வாறு ஒளி தோன்றுகிறது? சந்திரன் பூமியைப் போன்ற மண் உருண்டை தான். அதில் வெளிச்சம் தருவதற்கு ஒன்றுமே இல்லை.

நாம் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை ஒரு சுவரில் பாய்ச்சினால் அதன் மீது வெளிச்சம் பட்டு அதிலிருந்து இலேசான வெளிச்சம் பிரதிபலிக்கும்.

அது போல் தான் சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படும் போது சந்திரனிலிருந்து அவ்வெளிச்சம் பூமியை நோக்கி எதிரொளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சந்திரனில் நாம் வெளிச்சத்தைக் காண்கிறோம்.

மற்றபடி சந்திரனில் நெருப்போ, வெளிச்சம் தரும் வேறு எதுவுமோ கிடையாது. சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கி எடுத்து வந்தது மண்ணைத் தான்.
ஓர் உருண்டை வடிவமான பொருள் மீது நாம் வெளிச்சம் பாய்ச்சினால் அவ்வுருண்டையின் சரிபாதியின் மீது மட்டுமே வெளிச்சம் பாய்ச்ச முடியும். இன்னொரு பாதியின் மீது வெளிச்சம் படாது. இதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அதனால் தான் எந்த நேரமும் பூமியின் பாதிப் பகுதி பகலாகவும், பாதிப் பகுதி இரவாகவும் உள்ளது.
இதே அடிப்படையில் தான் கிரகணம் ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் (அமாவாசை உட்பட) சூரியனின் ஒளி சந்திரனின் சரிபாதியில் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறது.

பவுர்ணமி தினத்தில் எப்படி பாதி சந்திரன் மீது ஒளி பட்டு பூமியை நோக்கித் தெரிகிறதோ அது போலவே அமாவாசையின் போதும் பாதி சந்திரன் மீது சூரிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

முதல் பிறையின் போதும் பாதி சந்திரன் மீது ஒளி பட்டுக் கொண்டிருக்கிறது.

365 நாட்களும் (கிரகண நாட்கள் தவிர) சந்திரனின் சரிபாதியானது, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவும், மற்றொரு பாதி இருட்டாகவும் இருக்கிறது.

பவுர்ணமியில் சந்திரன் மீது வெளிச்சம் படும் போது, வெளிச்சம் படும் பகுதியை முழுமையாகப் பூமியை நோக்கி சந்திரன் காட்டுகிறது. அமாவாசையின் போது சூரிய ஒளி பட்ட பகுதியை பூமியின் எதிர்த் திசையில் காட்டி விட்டு வெளிச்சம் படாத பகுதியை நம்மை நோக்கிக் காட்டுகிறது.
அமாவாசையில் நமக்குத் தான் வெளிச்சம் தெரியவில்லையே தவிர சந்திரனில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டு தான் உள்ளது.

நாம் ஒருவரை நேருக்கு நேராகப் பார்த்தால் நமது மூக்கு முழுமையாக அவருக்குக் காட்சி தருகிறது. நாம் சற்றே திரும்பினால் நமது மூக்கின் ஒரு பகுதி அவருக்குத் தெரிகிறது. நாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு முதுகைக் காட்டினால் அவருக்கு நமது மூக்கு தெரியாது. அவருக்கு மூக்கு தெரியாததால் நமக்கு மூக்கே இல்லை என்று கூற முடியாது.

அது போல் தான் சந்திரன் மீது படும் வெளிச்சத்தில் பெரும் பகுதியை பூமிக்கு எதிர்த் திசையில் காட்டி விட்டு, பூமியை நோக்கி ஓரமாகக் காட்டினால் அதை முதல் பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் காட்டும் அளவை அதிகரிக்கும் போது நாட்களின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்கிறோம்.
இந்த விபரங்களை எதற்குச் சொல்கிறோம் என்றால், சந்திரனில் காலத்தைக் காட்ட ஒன்றுமே இல்லை. அது எல்லா நாளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அது நம்மை நோக்கி எந்த அளவு திரும்புகிறது என்ற அடிப்படையில் தான் காலம் காட்டுகிறது.
எனவே நம்மை நோக்கி அது திரும்பி விட்டதா? என்பதன் அடிப்படையில் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, யாரையோ நோக்கித் திரும்பியதை நம்மை நோக்கித் திரும்பியதாகக் கருதக் கூடாது.

இதைப் புரிந்து கொண்டால் இவர்களின் அறியாமையை இன்ஷா அல்லாஹ் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment