பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, June 14, 2018

பெருநாள் கொண்டாட்டங்கள்புத்தாடை அணிதல்*

*பெருநாள் கொண்டாட்டங்கள்புத்தாடை அணிதல்*

*கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும் எனக் கூறினார்கள்.*
நூல்: புகாரி 948, 3054

பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பெருநாளைக்கும் புது ஆடை எடுக்க வேண்டியதில்லை என்பதை உமர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாளிலும் தூதுக்குழுவைச் சந்திக்கும் போதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) கூறும் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தாடை வாங்கியிருந்தால் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால் தான் பெருநாள்; இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை பலமாக மக்களிடத்தில் பதிந்து விட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி துணிமணிகள் வாங்கி விட்டு, கடைசியில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் காலமெல்லாம் கஷ்டப்படும் அவல நிலையைப் பார்க்கின்றோம். இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது. கடன் பட்டு அவஸ்தைக்கு நாம் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.

*பெருநாளும், பொழுது போக்கு அம்சங்களும்*

*புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸாரிகள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என் முன்னே பாடிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின்போதாகும். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது பெருநாளாகும் என்று கூறினார்கள்.*
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 952, 3931

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன; இது நமது பெருநாளாகும் என்று கூறியதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் இசை வாத்தியக் கருவிகள் இருந்தன; அதனால் பெருநாள் அன்று இன்னிசைக் கச்சேரி பாடல்கள் கூடும் என்ற அளவுக்குச் சிலர் சென்று விடுகின்றனர்.

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அந்த சிறுமியர் வாத்தியக் கருவிகள் எதையும் வைத்துக் கொண்டு பாடவில்லை. அவர்கள் தஃப் என்ற கொட்டடித்திருக்கின்றார்கள். இதை நஸயீயில் உள்ள ஹதீஸ் விளக்குகின்றது. அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் தஃப் அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியர்களை (பாடுதற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு என்று கூறினார்கள்.*
அறிவிப்பவர்: உர்வா
நூல்: நஸயீ

இந்த ஹதீஸில் தஃப் (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர் (ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்ற விபரம் நமக்குத் தெரிய வருகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுது போக்கு அம்சங்களைச் செயல் படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டு கச்சேரி, போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

*வீர விளையாட்டுக்கள்*

வீர சாகச விளையாட்டுகள் விளையாடுவதையும் பெருநாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

*ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சத்த போது உனக்குப் போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.*
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 950, 2907

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள இறைவன் அருள் புரிவானாக!

No comments:

Post a Comment