பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, February 2, 2020

மறுமை வெற்றிக்காக என்ன செய்திருக்கிறோம்❓❓

*🧶மீள்🧶 பதிவு🧶* 


*🕋🕋🕋மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்❓❓❓🕋🕋🕋*


மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் செய்வதற்கான சில வழிகளையும் இந்தக் உரையில்  காண்போம்..

 *எதற்காக இந்த உலக வாழ்க்கை?*

உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இதற்கு உரிய முறையில் சிறப்பாகப் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

 *(திருக்குர்ஆன் 67:2)* 

இங்கு வாழும் வாய்ப்பு தரப்பட்டதன் நோக்கம், நமது செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று சோதிப்பதற்குத் தான். ஒவ்வொரு நபரும் தமது வாழ்வில் நற்காரியங்களைச் செய்கிறாரா? தீமையான காரியங்களைச் செய்கிறாரா என்று சோதிக்கவே வாழ்க்கை தரப்பட்டுள்ளது. இதோ நபிகளார் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.

 *அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (5292)* 

மற்றொரு அறிவிப்பில்,  “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு ஆக்கியுள்ளான்)” என்று இந்தச் செய்தியில் வந்துள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் நம்மைச் சோதிக்கவே படைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ், மனிதர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மற்றிக் கொடுத்து சோதிப்பான்; அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தும் சோதிப்பான். எனவே எல்லா வேளையிலும் அவன் சொன்னபடி சரியாக நடக்க வேண்டும். அப்போது தான் மறுமையில் மகத்தான வெற்றி பெற முடியும்.

 *நம்பிக்கையின் பிரதிபலிப்பு*

உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

 *(திருக்குர்ஆன் 84:25)* 

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

 *(திருக்குர்ஆன் 2:82)* 

நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

 *மறுமைக்காக எதைச் செய்துள்ளோம்?*


உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்? இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

 *(திருக்குர்ஆன் 59:18)* 

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

 *அறிவிப்பவர்:  அனஸ்(ரலி)* 

 *நூல்: புகாரி (3688)* 

மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள்.  ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா? நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 *_அல்லாஹ்வின் தூதருடைய அழகிய அறிவுரை_*


மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்.

நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,

அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்:  ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (1848)* 

வறுமையில் வாடித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு, தான தர்மங்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். அப்போது அல்லாஹ்வின் வசனங்களை நினைவூட்டுகிறார்கள். அதில், மறுமைக்கான என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு நபித்தோழர்கள் அளப்பரிய உதவியை செய்தார்கள்; அள்ளிக் கொடுத்தார்கள்.

தர்மம் செய்வது மட்டுமல்ல வணக்க வழிபாடுகள், கடமைகள், பொறுப்புகள், பிறர் நலம் நாடும் செயல்கள் என்று எதுவாயினும் அதைத் திறம்பட செய்வதற்கு மறுமை சிந்தனை அவசியம். மறுமைக்காக என்ன செய்துள்ளோம் என்ற உணர்வு நம்மை மார்க்க விசயத்தில் என்றும் உயிர்ப்போடும் விழிப்போடும் வைத்திருக்கும்.

 *சொர்க்கத்தில் கிடைக்கும் வரவேற்பு!*

சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும். அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும்.

அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)

 *(திருக்குர்ஆன் 69:18-24)* 

பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்; வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 *நரகவாசிகளின் புலம்பல்கள்*

இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்? “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?’’ என்று கூறுவான்.

 *(திருக்குர்ஆன் 89:21-24)* 

 *அவகாசம் மீண்டும் கிடைக்காது!*

உலகில் நல்லமல்கள் செய்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் நரகவாசிகள் அப்போது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் உலகில் வாழும் வாய்ப்பைக் கேட்டுக் கெஞ்சுவார்கள். இன்னொரு முறை அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து மன்றாடுவார்கள். இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

அந்நாளின் சந்திப்பு நிகழ்வதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அந்நிகழ்வு நடக்கும் நாளில் இதற்கு முன் அதை மறந்து வாழ்ந்தோர் “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உள்ளனரா? அப்படியிருந்தால் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்யட்டும். அல்லது நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அவ்வாறாயின், நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு மாற்றமான (நல்ல) செயல்களைச் செய்வோமே!” என்று கூறுவார்கள். அவர்கள் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிட்டன.

 *(திருக்குர்ஆன் 7:53)* 

இறை மறுப்பாளர்களுக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இறைமறுப்பாளர்கள் அனைவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். “எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

 *(திருக்குர்ஆன் 35: 36, 37)* 

நற்காரியம் செய்வதன் அவசியத்தை மறுமையில் உணர்வதால் எந்தப் பயனும் இல்லை ஒருமுறை தான் இந்த வாழ்க்கை. மீண்டும் மற்றொரு முறை இங்கு வாழும் வாய்ப்போ, அவகாசமோ கிடைக்காது. எனவே நமக்குரிய அவகாசம் முடிவதற்குள் அதாவது மரணம் வருவதற்குள் முடிந்தளவு நல்ல அமல்களைச் செய்து கொள்ள வேண்டும்.

 *வாய்ப்புகளை வீணடிக்காதீர்!*


நாம் அனைவரும் இன்னொரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் வாழும் போது கூட எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நற்காரியம் செய்கிற சந்தர்ப்பம் கிடைத்து விடாது. ஆகவே நல்லது செய்யும் சூழல் வாய்க்கும் போதே அதை அழகிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதோ நபிகளாரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (186)* 

நபி (ஸல்) அவர்கள் “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகி விடும்’’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை’ என்று பதிலளித்தார்கள்.

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)* 

 *நூல்: புகாரி (7061)* 

 *நன்மைகள் செய்ய விரைவோம்*

ஆரோக்கியமோ, செல்வச் செழிப்போ, நல்லது செய்வதற்குரிய சாதகமான சூழிநிலையோ எப்போதும் இருந்து கொண்டே இருக்குமென்ற உத்திரவாதம் எவருக்கும் இல்லை. எந்த நேரத்திலும் தற்போதிருக்கும் நிலை மாறலாம். எனவே தகுந்த வாய்ப்பு அமையும் போதே நன்மையை நோக்கி விரைய வேண்டும்; முந்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பு கொண்ட சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள். அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

 *(திருக்குர்ஆன் 3:133)* 

ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோக்கும்  திசை உள்ளது. அவர் அதை முன்னோக்குகிறார். எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

 *(திருக்குர்ஆன் 2:148)* 

 *எந்த நற்காரியமும் அற்பமானதல்ல!*

நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக் கூடாது. இதைப் பின்வரும் செய்திகள் மூலம் விளங்கலாம்.

நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைத்தே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.

இவ்வாறு  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)* 

 *நூல்: புகாரி (2631)* 

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூதர் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (5122)* 

“அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக் கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (5109)* 

சிறுதுளி, பெருவெள்ளம் என்று சொல்வார்கள். சின்னஞ்சிறிய அமல்களை நிறையச் செய்யும் போது அவற்றின் மூலம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 *நற்காரியங்களில் நிலைத்திருப்போம்*

நேற்று தானே செய்தோம் என்றோ அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றோ எண்ணிக் கொண்டு எந்த நற்செயலையும் தள்ளிப்போடாமல், இயன்ற வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்வதைப் பார்ப்போம்.

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் (1436)* 

‘நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அல்கமா* 

 *நூல்: புகாரி (1987)* 

நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் சிறப்பை எடுத்துக் கூறிய நபியவர்கள், அதற்கு முன்மாதியாகவும் திகழ்ந்தார்கள். அவ்வாறு நாமும் நமது செயல்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

 *உயர்வாகக் கருதிக் கொள்ளாதீர்!*

இஸ்லாத்தில் பல வகைகளில், பல்வேறு விதமான கோணங்களில் எல்லா விதமான நற்செயல்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில நற்செயல்களை செய்வதால் திருப்தி அடைந்து அத்துடன் முடங்கிப் போகக் கூடாது. அதல்லாத அமல்களைச் செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும். இதைப் பின்வரும் செய்தியில் அறியலாம்.

‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: புகாரி (43)* 

“நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை!” என்று நபியவர்கள் சொல்வதில் நமக்கு நிறைய போதனைகள் இருக்கின்றன. தொழுகை, நோன்பு, தர்மம் போன்றவற்றைச் செய்து விட்டால் சிலர் அதன் மூலம் தங்களை உயர்வாக நினைத்துக் கொள்கிறார்கள்.

இப்படி நம்மை நாமே பெருமையாக நினைத்துக் கொண்டு மற்ற அமல்களில் அலட்சியம் காட்டுவது நல்லதல்ல! எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அமல்களின் மூலம் நன்மையை அள்ளிக் கொள்ள முனைய வேண்டும்.

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: புகாரி (6465)* 

குறைவாக இருந்தாலும் நிலையான செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது என்ற வாசகத்தைச் சரியாக விளங்க வேண்டும். எந்தவொரு அமலையும் தொடந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த வரிகளை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மறுமை வெற்றிக்கு சொற்பமான நற்செயல்களைச் செய்தால் மட்டும் போதுமென நினைத்து விடுகிறார்கள்.

இவர்களின் வாதம் தவறு என்பதை மேலுள்ள நபிமொழியின் இறுதியிலேயே சான்று இருக்கிறது. ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்’ என்று நபியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். எனவே, மறுமை வெற்றிக்காக முடிந்தளவு அதிக நற்காரியங்களை செய்வோமாக! இயன்ற வரை அவற்றைத் தொடர்ந்து செய்து நன்மைகளை அள்ளிக் கொள்வோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment