அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்! - Part 3
திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல் அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ் விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள் என்ன தெரியுமா ?
மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற வெண்ணிற
ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!
இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?
அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!
சோலியக்குடி என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் 56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83) வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.
அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள்
இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு)
அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.
இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின் ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும், திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவரும்.
அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!
இதயமே வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில் தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும் இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக் கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ? எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
அவ்லியாவின் ஆசியை வழங்கும் குடிமக்கள்.
குடிமக்கள் என்றதும் நாட்டு மக்கள் என நினைத்து விடாதீர்கள்!
இந்த புண்ணியவான்கள் யார் தெரியுமா? முத்துப்பேட்டை செய்கு தாவூது வலியுல்லாஹ்வின் ஆதீன கர்த்தாக்கள.இவர்கள் இரவு வேளையில் அவலியாவின் (கப்ரின்)அருகிலேயே அமர்ந்து கொண்டு பரோட்டா,விஸ்கி போன்ற மது வகைகளை அருந்திக்கொண்டிருந்ததை அந்த ஊரைச்சார்ந்த ”யாகூப் சார்” என்னும் ஆசிரியர் என்னிடம் காட்டி ”இதோ பாருங்கள் அவ்லியாவின் அருள் பெற்ற புரோகிதர்கள்” என்று அவர்களது வண்டவாளங்களை விவரித்தார். நீங்கள் நம்பும் இந்த அவ்லிக்களுக்கு தன் பக்கத்திலே நடக்கும் அக்கிரமங்களை , லீலைகளை கண்டிக்கும் ஆற்றல் இல்லையல்லவா? இவர்கள் எங்கே உங்களது வேண்டுகோளை ஏற்று உங்களுக்கு அருள் புரியப்போகிறார்கள்?
இதனால் தான் “அல்லாஹ்வையன்றி நன்மையோ தீமையோ செய்ய இயலாத இவர்களை நீங்கள் அழைத்துப்பிரார்த்திக்காதீர்கள்” ( 10:106)என இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.
அவ்லியாவின் அருளைப்பெற யானை,தேர் ஊர்வலங்கள்!
மேளதாளங்கள்!! வாண வெடிகள்!!
அவ்லியாவுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தமோ? அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் உண்ண உணவுக்கும் உடுத்த உடைக்கும் வழியில்லாது, தங்குவதற்கு போக்கிடமில்லாது பரதேசிகளாக அலைந்து திரிந்தபோது ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை. இப்போது மட்டும் இந்த அவ்லியாக்கள் மீது இவ்வளவு பக்தியா? பாசமா?
இந்த அவ்லியாக்கள் பெயரால் இத்தனை அர்ச்சனைகளா ? ஆர்பாட்டங்களா? மேள தாளங்களா ? யானை ஊர் வலங்களா?
ஆயிரக்கணக்கில் வீடு தோறும் வசூல் செய்து பல இலட்சங்களை செலவு செய்து ஊரே அமர்க்களப்படுத்துகிறார்களே! யானையின் மீது பவனிவர, கொடியைப்பிடித்து முன்வரிசையில் நிற்க ஊர் பிமுகர்களிடையே போட்டா போட்டி! அடிதடிகள்! நானா ? நீயா ? என்ற வீராப்புகள்! கைகலப்புக்குப்பின்னரே ஒருவழி பிறக்கும். யார் ஆதீனத்துக்கு அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே கொடியைப்பிடித்துவர அதிக வாய்ப்பு!
இதில் பல ஆயிரங்கள் புரளும். பின்னர் கேட்கவா வேணடும்? ஊர்வலத்தில் உலா வரும் அந்த மாண்புக்குரிய பக்தருக்கு ஜரிகைத்துணியால் தலைப்பாகை கட்டி, கிரீடம் அணிவித்து, பூமாலை சகிதமாக ஊர்வலமாக அழைத்துவரும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்காண தெருவெல்லாம் தோரணங்களோடு ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறியவர், குழந்தைகள்,கிழடுகள் சகிதமாக கட்டிடங்கள், கூரைகள், மரக்கொப்புகள்; என உயரமான இடங்களில் ஏறி நின்று பார்க்க வரிந்து கொண்டு போட்டியிடும் காட்சிகள் உலகக் கோப்பையைத் தட்டிச் செலல்லப்போகும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போலிருக்கும்.
இவையெல்லாம் எங்கு நடைபெறுகின்றது எனக் கேட்கிறீர்களா ?
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை, தக்கலை, கோட்டார் போன்ற ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூர் போன்ற புற நகரங்களிலும், நாகூர், காரைக்கால், திருச்சி போன்ற பெருநகரங்களிலும் இன்றும் வீம்புக்காக நடத்தப்பட்டு வருவதைப் போய் பார்த்து வாருங்கள்.
அப்போது தான் அறிவுக்கேற்ற மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம்களின் இலட்சணங்கள் புரியும். இந்த போலி முஸ்லிம் பெயர்தாங்கிகள் இந்த அறிவியல் யுகத்திலும் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
சமுதாயமே! இன்னுமா இந்த அறியாமை ?
எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படியே வாழ்வது? சமுதாயமே கொஞ்சம் சிந்தித்துபார்! அதள பாதாளத்துக்குச் செல்லும் நம் சமுதாயத்தைக் கட்டிக் காக்க வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் மறுமையில் கேள்வி கணக்குகள் கிடையாதா? அல்லாஹ்வின் முன்னிலையில் என்ன பதில் சொல்வது? என்பதை ஒரு கணம் ஆராய்ந்து பார்!
இதற்கெல்லாம் துணை போகும் ஆதீன கர்த்தாக்கள், செய்குமார்கள், ஆலிம்சாக்கள், ஊர் ஜமாஅத் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் எல்லாம் இதற்குச் சமாதி கட்ட முன்வரக்கூடாதா? இந்த அறியாமையிலிருந்து நம் சமுதாயத்தைக் காத்து உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கத் துணை புரியக்கூடாதா? ஏனைய சமுதாயங்களெல்லாம் அறிவிலும்,திறமையிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஓங்கி நிற்கும்போது இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழ்வேண்டிய நாம் தாழ்ந்து நிற்கலாமா ? தலை குனியலாமா? தலை நமிர்ந்து நிற்க வேண்டாமா?
அல்லாஹ்வை அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?
இன்னும் ஒரு சுனாமி வரவேண்டுமா?
அல்லாஹ் தன்மானமுள்ள நம்மைப்பார்த்துக் கேட்கிறான் :-
விசுவாசம் கொண்ட மக்களுக்கு இறைவனுடைய போதனைகளைக் கேட்டும் இன்னும் அவனை அஞ்ச வேண்டிய நேரம் வரவில்லையா ? (அல்குர்ஆன் :57:16)
மக்களைக் காக்கும் கடவுள் அவதாரங்கள்!
கடவுளில் தான் எத்தனை எத்னை வகைகளை ரகம் ரகமாக வகைப்படுத்தியள்ளனர். ஊருக்கொரு கடவுள்! ஆளுக்கொரு கடவுள் என்ற நிலை வந்து விட்டது. இவைகள் என்ன என்று பாருங்கள்.
முருகன் துணை ! அம்மன் துணை! அனுமான் துணை! பராசக்தி துணை! என்ற நம்பிக்கை வாசகங்கள் இந்துக்களிடம் பரவலாகக் காணலாம். இதைக்காப்பியடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் தங்களுக்கும் இப்படிப்பட்ட கடவுள் அவதாரத் துணைகள் தேவைப்படுகின்றன என்று கருதி அவர்களும் இதுபோன்ற வாசகங்களை எழுதிவைத்திருக்கும் வேதனையைப் பாருங்கள்.
முகைதீன் ஆண்டவர் துணை!
காதர் அவ்லியா துணை!
யா கவுஸ் துணை!
ஷhஹுல் ஹமீது நாயகம் துணை!
செய்யிதலி பாத்திமா துணை!
சிக்கந்தர் அவ்லியா துணை!
ஏர்வாடி அவ்லியா துணை!
பீரான்மலை அவ்லியா துணை!
பாதுஷh நாயகம் துணை!
நாகூர் ஆண்டவர் துணை!
சுல்தான் அலாவுத்தீன் அவ்வியா துணை!
நத்கர் ஒலியுல்லாஹ் துணை!
பாசிப்பட்டணம் அவ்லியா துணை!
பீமா அம்மாள் துணை!
முஸாபர் அவ்லியா துணை!
இவையெல்லாம் என்ன தெரியுமா? மதுரையிலுள்ள ரிக்சாக்கள், லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
இப்படியெல்லாம் இறைவனது படைப்புகளிடம் துணை தேடலாமா? உதவி தேடலாமா ? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? இவையெல்லாம் ‘ இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் கொடிய ‘ஷிர்க்’ என்னும் மிகப்பெரிய பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகமே இதற்குரிய தண்டனையாகும். சுவர்க்கம் ஹராமாகிவிடும்.’ என்பதை வான்மறை அல் குர்ஆன் (4:48,5:72,46:5,31:13, 26:213) வசனங்கள் எச்சரிக்கின்றன.
இறைமறை அல்குர்ஆன் கூறுகிறது
1.அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள் 72:18,
2.அல்லாஹ்வைத்தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்கள 40:14,
நீங்கள் உங்கள் தேவைகளுக்காக என்னையே அழையுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனைகளு)க்குப் பதிலளிப்பேன் 40:60,
3.உதவி என்பது வல்லமையும் ஞானமுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிரவேறு (எவரிடமிருந்தும்)இல்லை 3:26,
4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவி தேடுகிறோம் 1:5
என்ற இறைமறை வசனங்களும் ‘உதவி வேண்டுமாயின் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுங்கள்’ (திர்மிதி) போன்ற நபிமொழிகளும்
மனிதனின் எவ்வகை தேவையானாலும், எவ்வகை உதவியானாலும் இறைவனிடமே கேட்கவேண்டும்.
அவனைத்தவிர வேறு எவரிடமும் உதவியை தேடவே கூடாது. அவ்வாறு கேட்டால் அவன் இறைவனுக்கு இணைவைத்த பாவியாகி விடுவான். இறைவனே அனைத்துக்கும் துணை புரிபவன் என்பது முஸ்லிம்களின் அசைக்க முடியாத ஈமானிய நம்பிக்கையாகும். இன்று இந்த நம்பிக்கையிலிருந்து தடம் புரண்டு முஸ்லிம்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். யார் யாரிடமோ உதவி தேடுகிறார்கள். இறைவன் நம்மைக் காப்பானாக! நவூதுபில்லாஹ்.
அவ்லியாக்கள் யார்? அவர்களின் இலக்கணம் என்ன?
அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமறை பின்வருமாறு கூறுகிறது:-அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63) அவர்கள் 1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள். 2. எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள் 3) இறைவனை உறுதியாக நம்புவார்கள் 4. உள்ளும் புறமும் இறைவனைஅஞ்சுபவர்களாக (தக்வா உடையவர்களாக) இருப்பார்கள்.
இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவனை நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் ஈமான், தக்வா என்னும் இருதன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும். இறைவனைத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் “இறை நேசர்” என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியாது.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் “வலி என்பவர் 1. அல் ஆலிமு பில்லாஹ்- இறைவனைப்பற்றி அறிந்தவராக இருப்பார்.2. அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டளைகளை சரியாகக் கடைபிடிப்பவராக இருப்பார்.3. அல்முக்லிசு ஃபீ இபாததிஹி -அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார்” என விளக்கமிளிக்கிறார்கள்.
இமாம் சவ்கானீ (ரஹ்) அவர்கள் ” இறைவேதத்தை முற்றிலும் கடைபிடிப்வராகவும், பெருமானார(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப் வாழ்வின் அனைத்து அமசங்களிலும் பின்பற்றுபவராகவும் இருப்பவரே இறைநேசராக இருக்கமுடியும் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை “வலி” என்றும் “மகான்” என்றும் சான்றிதழ் வழங்க முடியும்? இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறிடு்ம் எவரைப்பற்றியும் எதையும் நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின் அகவாழ்வைப்றியோ புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது.
இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது அடியார்களைப்பற்றிக் குறிப்பிடும் போது,
” அவர்களை அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான். அவர்களும் அவனைப் பொரிந்திக்கொண்டார்கள்” (அல்குர்ஆன் 98:8) என இறை மறை குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப் பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக் கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும? எனவே எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.
(வலி என்றால் இறை நேசர், அவ்லியா என்றால் இறைநேசர்கள் என்பது பொருளாகும். ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள் கூறுகின்றனர். எனவே வழக்குப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
No comments:
Post a Comment