Ayyampet ALEEM
Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Sunday, June 27, 2010
மாற்றுமதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா?
ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும். எஸ். ராமதாஸ், தஞ்சாவூர்லி 6.
அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட பதில் தவறு மட்டுமல்ல! வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு பதிலாகும். இது போன்ற குறுகிய சிந்தனைகளால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைக் கல்லாக முஸ்லிம்களே நிற்பது தான் வேதனை!
இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.(அல்குர்ஆன்38:87)
குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டி என்று கூறக்கூடிய ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. (2:185, 3:138, 14:52, 17:89, 18:54, 30:58, 39:27)
இந்தக் குர்ஆனைச் சிந்திப்பவர்கள் உண்டா? என்று மக்கள் அனைவருக்கும் குர்ஆன் பொது அழைப்பு விடுக்கின்றது. (4:82, 23:68, 47:24, 54:17, 54:22, 54:32, 54:40)
இப்படி முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட குர்ஆனை முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
''வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ''நாங்கள் முஸ்ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7, 2941
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.
முஸ்லிமல்லாதவர்களிடம் ஒரு வசனத்தை எழுதிக் கொடுப்பதில் தவறில்லை, முழுக் குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றார்கள். இது அர்த்தமற்ற வாதமாகும். ஒரு வசனத்துக்கு என்ன சட்டமோ அது தான் முழுக் குர்ஆனுக்கும் உள்ள சட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு முழுக் குர்ஆனும் தற்போதுள்ளது போல் மொத்தமாக அருளப்படவில்லை.
சிறிது சிறிதாகத் தான் அருளப்பட்டது. அப்போதும் அது குர்ஆன் என்றே கூறப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போல், 'மாற்று மதத்தவர்களிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை வழங்கலாம், அரபு மொழியில் அமைந்த குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது' என்றும் சிலர் கூறுகின்றார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அரபு மொழி மட்டுமே தெரிந்த முஸ்லிமல்லாதவருக்கு எந்த மொழி பெயர்ப்பைக் கொடுக்க முடியும் என்று சிந்தித்தால் இது அர்த்தமற்ற வாதம் என்பதை அறியலாம்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, ''நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.
இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்வூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.
ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ இதில் குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment