பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 11, 2026

அபூ துஜானா


இஸ்லாமிய வரலாற்றின் போர்க்களங்களில் சில உருவங்களைக் கண்டாலே எதிரிகளின் ரத்தம் உறையும். அதில் மிக முக்கியமானவர், மதீனாவின் அன்சாரித் தோழர்களில் ஒருவரான சிமாக் இப்னு கரஷா (ரலி). ஆனால், உலகம் அவரை 'அபூ துஜானா' என்றே கொண்டாடுகிறது. வீரத்திற்கு ஒரு இலக்கணம் வகுக்க வேண்டுமென்றால், அபூ துஜானாவின் பெயரைச் சொல்லாமல் அந்தப் பக்கம் முழுமையடையாது.

அது உஹத் போர்க்களம். போர் தொடங்குவதற்கு முன்பு அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு வாளைத் கையில் ஏந்தி, "இந்த வாளை என்னிடமிருந்து பெற்று, அதன் உரிமையை நிறைவேற்றுபவர் யார்?" என்று கேட்டார்கள்.
பெரிய மாவீரர்கள் எல்லாம் கையை உயர்த்தினார்கள். ஆனால் அண்ணலார் வாளைக் கொடுக்கவில்லை. அபூ துஜானா (ரலி) எழுந்து கேட்டார்: "இறைத்தூதரே! அந்த வாளின் உரிமை என்ன?" அண்ணலார் சொன்னார்கள்: "எதிரிகளை இது வீழ்த்த வேண்டும்; இந்த வாள் வளையும் வரை நீ எதிரிகளைத் தாக்க வேண்டும்!" "நான் அந்த உரிமையை நிறைவேற்றுகிறேன்" என்று கூறி வாளைப் பெற்றுக்கொண்டார் அபூ துஜானா. அந்த நிமிடம் முதல் அந்த வாள் வெறும் ஆயுதமாக இருக்கவில்லை. அது ஒரு தியாகத்தின் அடையாளமாக மாறியது.

அபூ துஜானா (ரலி) அவர்களுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. சாதாரணமாக அவர் ஒரு சிவப்புத் தலைப்பாகையை வைத்திருப்பார். போர்க்களம் மிக உக்கிரமாகி, "இன்று நான் மடியத் தயார்" என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டால், அந்தச் சிவப்புத் தலைப்பாகையைத் தன் தலையில் கட்டிக்கொள்வார். அவர் சிவப்புத் தலைப்பாகையைக் கட்டிவிட்டால், எதிரிகள் சிதறி ஓடுவார்கள். "அபூ துஜானா மரணத்தின் தலைப்பாகையை அணிந்துவிட்டார்" என்று படைக்குள் அச்சம் பரவும். உஹத் போர்க்களத்தில் அந்தத் தலைப்பாகையை அணிந்துகொண்டு, ஒருவித கர்வத்தோடு நெஞ்சை நிமிர்த்தி அவர் நடந்து வந்ததைப் பார்த்த நபிகளார் சொன்னார்கள்:

"அல்லாஹ்வுக்குப் பிடிக்காத நடை இது. ஆனால், இத்தகைய போர்க்களத்தில் மட்டும் இந்த நடையை அல்லாஹ் விரும்புகிறான்!"

உஹத் போரின் ஒரு இக்கட்டான கட்டத்தில், முஸ்லிம் படை சிதறியபோது, நபிகளார் தனித்து விடப்பட்டார்கள். அப்போது அபூ துஜானா (ரலி) ஓடி வந்து நபிகளாரின் முன்னால் ஒரு மதில் சுவரைப் போல நின்றார். எதிரிகளின் அம்புகள் நபிகளாரை நோக்கிப் பாய்ந்தபோது, அபூ துஜானா தன் முதுகை அண்ணலாருக்குக் கேடயமாகக் காட்டினார். அம்புகள் வந்து அவர் முதுகைத் துளைத்தன, ஆனால் அவர் ஒரு அணுவளவும் அசையவில்லை. அண்ணலார் மீது ஒரு சிறு கீறல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் உடலையே சல்லடையாகத் துளைக்கக் கொடுத்த அந்தத் தியாகம்... வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது!

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு, 'பொய்த் தூதன்' முஸைலிமாவுக்கு எதிராக நடந்த யமாமாப் போர் எதிரிகள் ஒரு மாபெரும் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டார்கள். கோட்டையின் கதவுகள் மிக வலிமையானவை. அப்போது அபூ துஜானா (ரலி) சொன்னார்: "என்னை ஒரு கேடயத்தில் வைத்து ஈட்டிகளால் தூக்கி கோட்டைக்குள் எறியுங்கள்!" அப்படியே செய்யப்பட்டார். ஒற்றை ஆளாக கோட்டைக்குள் குதித்த அந்தச் சிங்கம், நூற்றுக்கணக்கான எதிரிகளை வெட்டி வீழ்த்தி, உள்ளிருந்து கோட்டைக் கதவைத் திறந்தார். அந்தப் போரில் முஸைலிமாவின் படை வீழ்ந்தது, ஆனால் இஸ்லாத்தின் அந்த மாபெரும் சிங்கம் அபூ துஜானா (ரலி) அங்கேயே வீரமரணமடைந்து ஷஹீத் ஆனார்.

அபூ துஜானா (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் வீரம் என்பது வெறும் வாள் வீச்சில் இல்லை; அது உயிருக்கு மேலாக நேசித்த கொள்கைக்காகவும், தலைவனுக்காகவும் எதையும் தியாகம் செய்யும் அந்தத் துணிச்சலில் இருக்கிறது!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbuDujana #RedBandana #SwordOfProphet #AbdullahIbnuNaseerWriteups

இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!


🤲 இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!

ரமலானில் பலரும் இரவின் இறுதி பகுதியில் இரவு தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருகின்றோம், அந்த நேரங்களில் ஓதும் இரண்டு துஆக்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து தொகுத்துள்ளேன், வாய்ப்பு கிடைப்பவர்கள் உங்கள் பிரார்த்தனையில் ஆதாரப்பூர்வமான இந்த இரண்டு துஆக்களையும் சேர்த்து கொள்ளுங்கள். 

🎯 நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: (புஹாரி-1120)

 اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ، لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ـ أَوْ لاَ إِلَهَ غَيْرُكَ ـ 

🤲 பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஆட்சி யும் உனக்கே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது சந்திப்பு உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை. மறுமை உண்மை.

இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடு வேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.

அல்லாஹும்ம! ல(க்)கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீ ஹின்ன. வல(க்)கல் ஹம்து. ல(க்)க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த மலிக்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வல(க்)கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅது(க்)கல் ஹக்கு. வ லிகாஉக்க ஹக்குன். வ கவ்லு(க்)க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந்நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்) ஹக்குன். வஸ்ஸா அத்து ஹக்குன்.

அல்லாஹும்ம! ல(க்)க அஸ்லம்த்து, வ பி(க்)க ஆமன்த்து, வ அலை(க்)க தவக் கல்த்து, வ இலை(க்)க அனப்த்து, வ பி(க்)க காஸம்த்து, வ இலை(க்)க ஹாகம்த்து. ஃபக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த; அல்லது லா இலாஹ ஃகைருக்க.

🎯 ஸஹர் நேரத்தில் ஓதும் பாவ மன்னிப்பு துஆ (குர்ஆன் 3:16)

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ

🤲"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' 

குறிப்பு : சுவனத்திற்கு செல்பவர்களின் தன்மைகள் மற்றும் அவர்களின் அமல்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் 3-வது அத்தியாயம் 15, 16, 17 வசனங்களில் குறிப்பிடுகின்றான். அவர்கள் ஸஹர் (سْحَارِ) நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று 17-வது வசனத்திலும், அவர்கள் செய்த பாவ மன்னிப்பு பிராத்தனையை 16-வது வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 

தொகுப்பு : S. சித்தீக் M.Tech