பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் சுருக்கமான வரலாறு


💞 சொர்க்கவாசி, சீனாவில் இஸ்லாத்தை பரப்பியவர், சிறந்த இஸ்லாமிய போர் தளபதி ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் சுருக்கமான வரலாறு 💞

• ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் இயற்பெயர் அபுல் அஃவத் என்பதாகும்! அல்குர்ஆனில் இவரின் தொடர்பாக அல்லாஹ் பல வசனங்களையும் அருளியுள்ளான்!

• அபூ வக்காஸ் என்று அழைக்கப்படும் ஸஅத் இப்னு மாலிக் என்பவருக்கும், உம்மு சஅத் என்பவருக்கும் மகனாக ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்!

• ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். மேலும் உமர் (ரழி) அவர்களின் சகோதரி பாஃத்திமாவை அவர் நிக்காஹ் செய்திருந்தார்கள்!

• நாம் ஸாத் (ரழி) அவர்களை பற்றி பார்க்கும் முன், அவரின் தந்தை பற்றி கண்டிப்பாக பார்க்க வேண்டும் ஸாத் இப்னு அம்ர் என்பது அவரின் இயற்பெயர் இஸ்லாம் மக்காவில் ஆரம்பம் ஆகுவதற்கு முன்பே ஒரு சிலர் அப்போதே சிலைகளை வணங்காமலும், மது, வட்டி, விபச்சாரம், பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற பாவங்களில் இருந்து விலகி இருந்தார்கள். அவர்களில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் தந்தையும் ஒருவர்.

• இப்ராஹிம் மார்க்கத்தை மட்டுமே பின் பற்ற வேண்டும் அதுவே உண்மையாக மார்க்கம் தற்பொழுது நீங்கள் வணங்கி கொண்டு இருக்கும் அனைத்துமே நீங்கள் உருவாக்கியது என்று பகிரங்கமாக காபாவின் திரையை பிடித்து அவர் மக்கள் முன் கூறியுள்ளார்கள். இது அல்லாமல் உண்மையான மார்க்கத்தை தேடி சில ஊர்களுக்கும் பயணம் செய்தார்கள். கடைசியாக மரணிக்கும் சமயத்திலும் தன்னுடைய மகனிடம், இப்ராஹிம் மார்க்கத்தை பின் பற்றும் இறைத்தூதர் ஒருவர் வந்தால் அவரை நான் கட்டாயம் பின் பற்றுவேன். அதற்குள் நான் இறந்து விட்டால், அவரை நீ கண்டால் அவரை நீ பின் பற்றிக்கொள் என்று உபதேசமும் செய்தார்கள்.

• ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் தன்னுடைய தந்தை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறும் பொழுது அவர் அவருக்காக துஆ செய்தார்கள். மேலும் சொர்க்கத்தில் அவரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்!

(நூல்: அத்தபகாதுல் குப்ரா - இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்))

 • ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்! அப்போது இவர் வாலிபராக இருந்தார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3726)
 
• ஸாத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது அவரின் தயாருக்கு தெரியவர மிகவும் கவலையடைந்தார்கள்! மீண்டும் நீ நம்முடைய மார்க்கத்திற்கே வரவேண்டும்! அவ்வாறு நீ செய்யவில்லை என்றால் நான் சாகும் வரை உண்ணவோ, பருகவோ மாட்டேன் என்று சபதம் செய்தார்கள். இவ்வாறே மூன்று நாட்கள் இருந்தார்கள் பின்பு மயக்கமுற்று விட்டார்கள். 

• இதன் பின்பு அவரின் மற்றொரு மகன் அவருக்கு உதவி செய்தார், அவரின் தாயார் ஸஅத் (ரழி) அவர்களுக்கு எதிராக பிராத்தித்தார்கள்.

• இதன் பின்பு தான் அல்லாஹ், பெற்றோர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அவர்கள் இணை வைக்க கூறினால் அதற்கு மாறு செய்யவேண்டும் என்று குறிக்கும் (அல்குர்ஆன் 31:14,15) ஆகிய வசனங்களை அருளினான்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4789)

• இவர் இஸ்லாத்தை ஏற்ற பின்பு அர்க்கம் (ரழி) அவர்கள் வீட்டில் இருந்து நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கத்தை கற்று கொண்டார்கள். மக்காவில் காஃபிர்கள் தொல்லை அதிகம் இருப்பதால் ஊருக்கு வெளியே மக்கள் பார்வையில் படாதவாறு 
தொழுதும் வந்தார்கள்.

• இதன் பின்பு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி வர, முதலில் ஒரு சிலரே சென்றார்கள் அவர்களில் ஸாத் (ரழி) அவர்களும் ஒருவர்!

(நூல்: ஸஹீஹ் புகாரி : 3925)

• இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் ஸாத் (ரழி) அவர்கள் கலந்து கொள்ளவில்லை, காரணம் இவர்கள் சிரியாவிற்கு வியாபாரத்திற்கு சென்றிருந்த குரைஷிகளின் கூட்டத்தை பற்றி விவரம் சேகரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுப்பி இருந்தார்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் கூலி இவர்களுக்கும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• இதன் பின்பு நடந்த உஹத் போரில் ஸஅத் (ரழி) அவர்கள் கலந்து கொண்டு கடுமையாக போரிட்டார்கள். ஸாத் (ரழி) அவர்கள் சிறந்த வில் வீரராக திகழ்ந்தார்கள்! முஸ்லீம்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டு பலர் ஓடிய நிலையிலும், நபி (ஸல்) அவர்களுடன் இருந்து அவர்களையும் பாதுகாத்து எதிரிகளையும் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்க விடாமல் வில்லினால் தாக்கி கொண்டிருந்தார்கள்!

• நபி (ஸல்) அவர்களும், ஸஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று ஒவ்வொரு நபராக குறிப்பிட்டு கூறி கொண்டே இருந்தார்கள். மேலும் இவ்வாறு துஆவும் செய்தார்கள் : யா அல்லாஹ்! அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக! அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக!

• இதனால் ஸாத் (ரழி) அவர்கள் யாரை குறி வைத்து வில்லை விட்டாலும் அது சரியாக அவரை கொல்ல கூடியதாக இருந்தது. அன்றைய நாளில் விரல் விட்டும் சில ஸஹாபாக்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்து சண்டையிட்டார்கள் அதில் மிக முக்கியமான நபர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்.

• நபி (ஸல்) அவர்கள், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களை நோக்கி, அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும் என்று உஹத் போரின் போது கூறினார்கள்! ஸஅத் (ரழி) அவர்களுக்கு பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியது கிடையாது!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2905)

• சில ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் தனி மதிப்பு இருந்தது. இவர்கள் தொழுகையின் போதும் நபி (ஸல்) அவர்கள் பின் முதல் வரிசையில் நின்று தொழுவார்கள் மேலும் போரின் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக இருந்து போரிடுவார்கள் இதில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவர்.

• நபி (ஸல்) அவர்கள் 10 நபர்களை குறிப்பிட்டு இவர்கள் சொர்க்கவாசிகள் என்று குறிப்பிட்டார்கள். அதில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவர்.

(நூல் : சுனன் திர்மிதி : 3747)

• (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் "ஹிரா" மலைமீது இருந்தபோது மலை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிராவே! அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மலைமீது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி),ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் இருந்தனர்.

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4796)

• ஸாத் (ரழி) அவர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கைகுரியவராகவே திகழ்ந்தார்கள். அவர்கள் ஏதேனும் ஹதீஸ் அறிவிப்பு செய்தால் அதை எந்த ஒரு ஸஹாபியும் சந்தேகம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள கூடியவர்களாக இருந்தார்கள். 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 202)

• ஸாத் (ரழி) அவர்கள் மட்டும் சுமார் 250க்கும் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார்கள்! இதில் 15க்கும் அதிகமான ஹதீஸ்கள் ஸஹீஹ் புகாரி, முஸ்லீமில் இடம்பெற்றுள்ளது.

• ஸாத் (ரழி) அவர்களின் மூலம் அல்லாஹ், மது அருந்துவது தடுக்கப்பட்ட வசனம் (அல்குர்ஆன் : 5:90), போரில் கிடைக்கும் கனீமத் பொருட்கள் பற்றிய சட்டம் (அல்குர்ஆன் : 8:01), மார்க்க விசயத்தில் எந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு கட்டுப்பட வேண்டும் (அல்குர்ஆன் 31:14,15) இவற்றை பற்றிய சட்டத்தை அல்குர்ஆனில் வசனமாக அருளியுள்ளான்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4789)

• நபி (ஸல்) அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்பொழுது, நபி (ஸல்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன் என்று கூறினார்கள். 

• அப்பொழுது, நபி (ஸல்) அவர்கள் : ஸஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய, ஒரு பாகத்தை மட்டும் தர்மம் செய். என்று கூறி, உனக்கு பின்பு உன்னுடைய வாரிசுகளை பிறரிடம் கையெந்தும் அளவிற்கு விட்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்கள்!

• பின்பு ஸாத் (ரழி) அவர்களுக்கு நோய் குணமாக துஆ செய்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சுகத்தை அளித்தான் இதன் பின்பு நீண்ட நாட்கள் அவர் உயிர் வாழ்ந்தார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 6373)

• இஸ்லாமிய வரலாற்றில் கதீஸிய்யாப் போர் முக்கியமான ஒன்று,  உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கதீஸிய்யாப் போர் நடைபெற்றது. 

• முஸ்லீம்களுக்கும், ஈரான் நாட்டினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்றது. முஸ்லீகளின் எண்ணிக்கை விடவும், எதிரி படையினர் எதிர் பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தார்கள். இது மட்டும் அல்லாமல் சில யானைளையும் அழைத்து வந்து இருந்தார்கள். முஸ்லீம்களுக்கு இவ்வாறான போர் புதியது என்பதால் முதல் நாளிலயே சுமார் 4,000 முஸ்லீம்கள் ஷஹீதானர்கள். 

• இந்த செய்தி கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் அதிகம் கவலைப்பட்டார்கள். பின்பு மதினாவில் சுமார் 30, 000 நபர்களை திரட்டி ஸாத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் தலைமையில் அனுப்பினார்கள்! அல்லாஹ் இந்த போரில் முஸ்லீம்களுக்கு வெற்றியை கொடுத்தான்! 

• சில தினங்களிலயே கதீஸிய்யா போரில் ஓடிய ஈரானியர்கள், மத்யன் என்ற இடத்தில் மீண்டும் பெரும் படை பலத்துடன் எதிர்த்தனர். போர் கடுமையாக நடைபெற்றது. அல்லாஹ் இதிலும் முஸ்லீம்களுக்கு வெற்றியை வழங்கினான். இதன் பின்பு ஈரான் முஸ்லீம்களில் கைவசம் கிடைத்தது. போரில் கிடைத்த கனீமத் பொருட்களை மதினாவிற்கு அனுப்பி வைத்தனர்.

• பின்பு, ஈரானுக்கு ஸாத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களே, ஆளுனராக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் தான் அந்த நாட்டை இன்னும் செழிப்பான நகரமாக உருவாக்கி, மக்களுக்கு நிறைய வீடுகள் கட்டிடங்களும் கட்டினார்கள்.

• சில காலத்திலேயே ஒரு சிறு கூட்டம் இவருக்கு சதி செய்ய நாடி, இவர் சரியாக தொழ வைப்பது இல்லை, நீதியாக ஆட்சி செய்யவில்லை என்று கூறி உமர் (ரழி) அவர்களிடம் புகார் எழுதி அனுப்பினார்கள். உமர் (ரழி) அவர்கள் ஸாத் (ரழி) அவர்களை மதினாவிற்கு வரவழைத்து, விசாரித்தார்கள். அவர் மீது குற்றமில்லை என்று தெரிந்தது. 

• மீண்டும் ஈரானுக்கு ஆளுனராக உமர் (ரழி) அவர்கள், ஸாத் (ரழி) அவர்களை இருக்குமாறு கூறினார்கள். அதற்கு அவர்கள், என்னை பற்றி புகார் கூறிய மக்களிடமேவா? என்னை திரும்ப அனுப்புகிறீர்கள் என்று செல்ல மறுத்து விட்டார். பின்பு மதினாவிலயே இருந்தார்கள்.

• மேலும் தன் மீது பொய்யான புகார் அளித்த நபருக்கு எதிராக பிராத்தனையும் செய்தார்கள். இவரின் பிராத்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.

(நூல் : ஸஹீஹ் புகாரி : 755)

• கலீபா உமர் (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருக்கும் பொழுது, எனக்கு பின்பு அடுத்த கலீபாவாக இந்த 6 பேரில் ஒருவர் வர வேண்டும் என்று கூறினார்கள் அதில் ஸாத் பின் அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவர்.

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1392)

• உஸ்மான் (ரழி) அவர்கள் கலீபாவாக ஆன பின்பு மீண்டும் ஈரானுக்கு ஆளுனராக இருக்குமாறு கூறினார்கள். அவர் அதை ஏற்று சில வருடம் ஆளுனராக இருந்தார்கள்! பின்பு மீண்டும் அவர் சபையில் இருந்த அமைச்சகர்கள் இடையே கருத்து வேறுபாடு உண்டாக ஆளுனர் பதவியில் இருந்து விலகி கொண்டார்கள்.

• சீனாவில் டாங்கின் பேரரசர் கய்சோங் ஆட்சியின் போது அங்கு சென்றும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார் ஸஅத் (ரழி) அவர்கள். இது மட்டும் அல்லாமல் பங்களாதேசத்திற்கும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இன்றும் இந்த நாட்டில் அவர் கட்டிய பள்ளி வாசல் லால்மோனீர்ஹாட் என்ற மாவட்டத்தில் உள்ளது.

• பின்பு, தன்னுடைய இறுதி காலத்தில் மதீனாவிற்கு அருகில் சில மைல்கள் தூரத்தில் உள்ள அகீக் என்ற இடத்தில் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு, தனிமையான வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள். 

• ஸஹாபாக்கள் இடையே ஏற்பட்ட, பிரச்சனை, குழப்பங்கள் இன்னும் நபித்தோழர்கள்  பலரது உயிர்களையும் குடித்த ஜமல்யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்வற்றிலும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டார்கள்.

• மரண நேரத்தில், பத்ர் போரின் போது தான் அணிந்து இருந்த ஆடையுடன் என்னை கஃபனிட வேண்டும் என்று தன்னுடைய மகனிடம் வஸியத் செய்து விட்டு மரணித்து விட்டார்கள்.

• ஹிஜ்ரி 50 அல்லது 51 யில் ஸாத் (ரழி) அவர்கள் மரணித்தார்கள். அப்போது அவரின் வயது 70 வதுக்கு மேல் இருக்கும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அவரை குளிப்பாட்டி, கஃபனிட்டு, ஜனாஸா தொழுகை நடத்தி ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்தார்கள்.

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment