💞 முந்தியவர்களில் ஒருவர் அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் மக்காவில் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த கண்ணியமிக்க பெண்மணி. நபித்துவத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் இவரும் ஒருவர்.
• அன்று அஸ்மா (ரலி) அவர்களைத் தவிர மொத்தம் 30 பேர் மட்டுமே இஸ்லாத்தில் இணைந்திருந்தார்கள். இந்த வகையில் ‘அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்’ சத்திய அழைப்பிற்கு முதன் முதலில் பதிலளித்தவர்கள் எனும் குழுவில் அஸ்மா (ரலி) அவர்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு.
• இவரின் கணவர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையாகிய அபூ தாலிபின் மகனார் ஜஅஃபர் (ரலி) ஆவார். அஸ்மா (ரழி) அவர்களின் உடன் பிறந்த சகோதரி மைமூனா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவர். கணவன் வழியிலும், சகோதரி வழியிலும் நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கிய உறவுமுறை கொண்டவர்கள் அஸ்மா (ரழி)
• மக்காவில் காஃபிர்கள் கொடுமைகள் அதிகம் ஆக, நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள் அதில் அஸ்மா பின்த் உமைஸும் அவரின் கணவர் ஜஅஃபர் (ரலி) அவர்களும் இருந்தனர். இப்படி அபிசீனியாவுக்குச் சென்ற முஸ்லிம்கள் ஏறத்தாழ 14 ஆண்டுகள் வரை அந்நியர்களாய் அங்கு வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது!
• ஹிஜ்ரி 7ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் யுத்தமும் நடந்து முடிந்தது. இதன் பின்பு தான் அபிசீனியாவுக்கு சென்ற முஸ்லீம்கள், மீண்டும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். ஆக மொத்தம் அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்கள் இரண்டு ஹிஜ்ரத் செய்த சிறப்பை பெற்றுள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4915)
• ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு முஃதா போர் நடைபெற்றது. இதில் 3,000 வீரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த படைக்கு தளபதியாக ஜஅஃபர் (ரலி) அவர்களும் இருந்தர்கள். இப்போரில் தளபதி ஷஹீத் ஆகி விட்டால், அடுத்த ஒரு ஸஹாபி தளபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று மொத்தம் மூன்று ஸஹாபாக்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதில் ஜஅஃபர் (ரலி) அவர்களும் ஒருவர்.
• முதல் தளபதி ஷஹீத் ஆகிவிட, இரண்டாவது தளபதியாக ஜஃபர் (ரழி) அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள். போர் கடுமையாக நடைபெற்றது. இஸ்லாமிய கொடியை ஏந்தி நின்ற ஜஃபர் (ரழி) அவர்கள் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு ஷஹீத்தானார்கள். (இவரை பற்றிய வரலாறு இதற்கு முன்பு பதிவு செய்துள்ளோம்!)
• ஜஃபர் (ரழி) அவர்கள் ஷஹீத் ஆன செய்தி கேட்டு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள். இவரை பற்றிய செய்தியை, அஸ்மா (ரலி) அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று கூறினார்கள். இதை கேட்ட அஸ்மா (ரழி) அவர்கள் மனமுடைந்து அழனார்கள்.
• பின் நபி (ஸல்) அவர்கள் தன் குடும்பத்தாரிடம் சென்று அஸ்மா (ரழி) அவர்களை கவனித்து கொள்ளுங்கள். அவர்கள் வீட்டில் துக்கமான நிகழ்வு நடத்துள்ளது. அவர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பது, வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யுமாறு அறிவுரை கூறினார்கள்.
• ஜஃபர் (ரழி) அவர்கள் இறந்து சில மாதங்கள் கழித்து அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களை மறுமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மூலம் முஹம்மத் இப்னு அபூபக்கர் என்ற குழந்தை பிறந்து. இவர் ஹிஜ்ரி 38 ஆம் ஆண்டில் எகிப்தில் சில எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்.
உஸ்துல் காபா எனும் நூலில் அல்லாமா இப்னு அஸிர் (ரஹ்) எழுதுகின்றார்கள் :
• ஃபாத்திமா (ரலி) அவர்கள் தாம் மரணம் அடைவதற்கு கொஞ்சம் முன்னால் அஸ்மா (ரழி) அவர்களை அழைத்து நான் மரணம் அடைந்த பின் என் உடலை எடுத்துச் செல்லும் போதும், அடக்கம் செய்யும் போதும் என் உடலை மூடிக் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தாங்களும் என் கணவரும் தவிர வேறு யாரும் என்னைக் குளிப்பாட்டுவதில் ஈடுபட வேண்டும் என்று வஸியத் செய்தார்கள்.
• அஸ்மா (ரழி) அவர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள் : இறைத் தூதரின் மகளே! நான் அபிசீனியாவில் பார்த்துள்ளேன். மரக்கிளைகளை இணைத்து ஒரு பெட்டி மாதிரி செய்து இறந்தவரின் உடலை அதில் வைத்து மேலே துணி போட்டு மறைத்து எடுத்துச் செல்கின்றார்கள்!
• இவ்வாறு கூறியதோடு பேரீச்ச மரத்தின் கிளைகள் சிலவற்றைக் கொண்டுவரச் செய்து அவற்றை இணைத்து கட்டி அதன் மீது துணிபோட்டு மறைத்து ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். அந்த முறை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல் அதே முறையிலேயே எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!
• ஹிஜ்ரி 13-ம் ஆண்டு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, நான் இறந்ததும் அஸ்மா (ரழி) தான் என் உடலைக் குளிப்பாட்ட வேண்டும் என்று ஆணையிட்டடார்கள். அவ்விதமே இறந்து விட்ட தம் கணவரின் உடலை அஸ்மா (ரலி) தான் குளிப்பாட்டினார்கள்!
• அபூபக்கர் (ரழி) அவர்கள் இறந்து சில மாதம் கழித்து அலி (ரழி) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களை மறுமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையும் பிறந்தது.
• ஹிஜ்ரி 40-ல் அலீ (ரலி) அவர்கள் ஒரு கயவனால் கொலையுண்டு ஷஹீதானார்கள். பிறகு கொஞ்ச நாட்களிலேயே அஸ்மா (ரலி) அவர்களும் மதீனாவில் மரணமடைந்தார்கள்.
• அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வாயிலாக 60 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிவிப்பாளர்களில் உமர், அப்துல்லாஹ் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), அபூ மூஸா (ரழி) போன்ற கண்ணியமிகு நபித்தோழர்களும் புகழ் பெற்ற தாபிஈன்களும் உள்ளனர்.
• குறிப்பாக பெண்களின் தூய்மை சார்ந்தவைகள், பிரசவ தீட்டு (நிபாஸ்) போன்ற சட்டங்கள் இவர்கள் வாயிலாகவே வந்துள்ளது!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment