பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

உயிர் தியாகி அபூ துஜானா (ரழி) சுருக்கமான வாழ்கை வரலாறு 💞


சிறந்த போர் வீரர், உயிர் தியாகி அபூ துஜானா (ரழி) சுருக்கமான வாழ்கை வரலாறு 💞

• இவரின் பெயர் ஸிமாக் இப்னு ஃகர்ஷாஹ் (ரழி) என்பதாகும். அபூ துஜானா என்பது இவரின் புனைப் பெயர். மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அன்ஸாரி ஸஹாபி இவர். பெற்றோர்கள் தந்தை அவ்ஸ் பின் ஃகரஷா, தாயார் ஹுஸ்மா பின்த் ஹர்மலா.

• நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின்னர், இவர் நபியாருடன் பைஅத் செய்து முஸ்லிமானார்கள். உண்மை, நேர்மை, மற்றும் போர்வீரத்திற்காக புகழ்பெற்றவராக இவர் விளங்கினார்.

• முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது அவர்களுக்கும் மதீனத்து அன்ஸாரிகளுக்கும் இடையே நபியவர்கள் ஏற்படுத்திய சகோதர பந்தத்தில் உத்பா பின் கஸ்வான் (ரழி) அவர்களுக்கு அன்ஸாரித் தோழரான அபூதுஜானா சகோதரராக அமைந்தார்.

• இஸ்லாத்தின் மிக முக்கிய போர்களான பத்ர், உஹத் மற்றும் யமாமா ஆகியவற்றில் கலந்து வீரமாக போர் புரிந்துள்ளார்கள்!

 • உஹதுப் போரில் அவர் ஆற்றிய பங்கு அவரது வீரத்தை இங்கே நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உஹத் போருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூர்மையான வாள் ஒன்று இருந்தது. அதை உருவி, யார் இதை என்னிடமிருந்து பெற்று இதனுடைய கடமையை யார் நிறைவேற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை பார்த்து கேட்டார்கள்.

• நபியவர்களிடமிருந்து அதை வாங்குவதற்கு பலர் முன் வந்தனர். அவர்களில் அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம், உமர் இப்னு கத்தாப் (ரழி) ஆகியோரும் அடங்குவர்.

• இறுதியாக அபூதுஜானா (ரழி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! அந்த வாளுக்குரிய கடமையை நான் நிறைவேற்றுவேன் என்று கூறி அதை வாங்கி கொண்டார்கள்.

• அபூ துஜானா (ரழி) மாபெரும் போர் வீரராக இருந்தார். போர் சமயத்தில் மிகுந்த பெருமையுடன் நடந்து செல்வார். அவரிடம் ஒரு சிவப்பு நிற தலைப்பாகை இருந்தது. அத்தலைப்பாகையை அவர் அணிந்து கொண்டால் மரணிக்கும் வரை போர் புரிவார் என்று மக்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். 

• நபியவர்களின் கரத்திலிருந்து வாளை அபூ துஜானா (ரழி) வாங்கியவுடன், தான் வைத்திருந்த சிவப்பு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு இரு அணிகளுக்கிடையில் பெருமையுடன் நடந்தார். இதைப் பார்த்த நபியவர்கள் இவ்வாறு நடப்பதை அல்லாஹ் வெறுக்கிறான். ஆனால், இதுபோன்ற இடங்களிலேயே தவிர! என்று கூறினார்கள். அதை அணிந்துகொண்ட அபூ துஜானா (ரழி) சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. 

(நூல் : அர் ரஹீம் அல் மக்தூம் : 278 | ஸஹீஹ் முஸ்லிம் : 4874)

• போரின் போது அணியைப் பிளந்தவாறு முன்னேறி, நான்தான் அபூ துஜானா. நான்தான் அபூ துஜானா  முழங்கிவிட்டுத் தொடர்ந்து எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு முன்னேறினார் அபூதுஜானா (ரழி).

• அபூதுஜானா பலமிக்க இரும்புக் கவச ஆடை அணிந்திருந்தார். நபியவர்களை நோக்கி எய்யப்பட்ட அம்புகளையெல்லாம் அவர் தம் முதுகைக் கேடயமாக்கித் தடுத்து கொண்டிருந்தார்கள்.

• அன்றைய போரில் அபூதுஜானா ஆற்றிய பங்கிற்கு, பின்னர் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நீர் இன்று போரில் உண்மையாகக் கடமையாற்றினர்.

• சில ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஃகைபர் போரின் போது, யூதர்கள் கோட்டைக்குள் புகுந்து கொண்டதும் முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். அப்பொழுது இரண்டு யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியில் வந்து, எங்களுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையிட யார் வருகிறீர்கள்?” என்று சவால் விட, உடனே இரண்டு முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுள் ஒருவர் அபூதுஜானா (ரழி) வழக்கம்போல் அவரது நெற்றியில் சிகப்புத் துணி கட்டியிருந்தார். அந்த யூதனையும் வெட்டி வீழ்த்தினார். அல்லாஹ் அந்த போரிலும் முஸ்லீம்களுக்கு வெற்றியை அளித்தான்.

• ஹுனைன் போரின் போது முஸ்லீம்கள் பக்கம் தோல்வி ஏற்பட பல நபி (ஸல்) அவர்களை விட்டு ஓடினார்கள் ஆனால் அபூ துஜானா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பக்கம் உறுதியுடன் நின்று எதிரிகளை எதிர்த்தார்கள். அல்லாஹ் இந்த போரிலும் முஸ்லீம்களுக்கு வெற்றியை அளித்தான்.

• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் யமாமா என்ற இடத்தில் பொய்யன் நபி முஸைலமாவிற்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்றது.

• ஒரு கட்டத்தில் முஸைலமாவின் படை தோல்வியை சந்திக்க, பயந்து ஒரு கோட்டையினுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். கோட்டையின் சுவர் மிகவும் உயரம் என்பதால் உள்ளே யாரும் வர மாட்டார்கள் என்று தைரியத்துடன் எதிரிகள் இருந்தார்கள்.

• அப்போது தான் அபூ துஜானா (ரழி) அவர்கள் ஒரு யோசனையை படைத்தளபதியான காலித் பின் வலித் (ரழி) அவர்களுக்கு கூறினார்கள்.

• எதிரிகள் உள்ளே பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி உள்ளேயே ஓய்வு எடுத்து கொண்டு இருப்பார்கள். நீங்கள் என்னை கோட்டையின் ஏதேனும் ஒரு வாசல் அருகில் தூக்கி போட்டு விடுங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு நான் ஏதேனும் ஒரு கதவை திறந்து விடுகிறேன். பின்பு நீங்கள் வந்து மற்ற கதவுகளை திறந்து கொள்ளலாம் என்றார்.

• காலித் (ரழி) அவர்களும் அனுமதி கொடுக்க, ஒரு சிறிய ஏணி போன்று செய்து மற்ற படைவினர் உதவியுடன் உள்ளே சென்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத எதிர் படையினர் சிலர் இவரை கவனித்து தாக்கினார்கள். இதில் இவருக்கு உடலில் பல இடங்களில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டது இருந்தாலும் அவர் அவர்களை சமாளித்து ஒரு கதவை திறந்து விட்டார்.

• பின்பு முஸ்லீம் படையினர் உள்ளே வந்து மற்ற கதவுகளையும் திறந்து பொய்யன் நபி முஸைலமாவையும் கொன்று, அவனுடைய படையினரையும் தோற்கடித்தனர். எதிரி படையினர் 10,000க்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டார்கள். இதனாலயே இந்த பகுதியை வரலாற்று அறிஞர்கள் “ மரணத் தோட்டம் ” என்று குறிப்பிடுகிறார்கள்.

• முஸ்லிம் வீரர்கள் இந்த போரில் 500க்கும் அதிகமானோர் ஷஹித் ஆகியிருந்தனர். அந்த உயிர்த் தியாகிகளுள் ஒருவர் அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா (ரழி).

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ وَ اللّٰهُ رَءُوْفٌ  بِالْعِبَادِ‏
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:207)

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment