பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 14, 2021

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்!

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்!
===================================

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். 

நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். 

தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! 

சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment