பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, June 27, 2017

பிறையை கண்ணால் பார்ப்பது...

பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்கு கண்ணால் பார்க்க வேண்டும் என்பது பொருளல்ல. சிந்திக்க வேண்டும் என்பதுதான் பொருள் என்று சிலர் வாதிடுவது சரியா?

பதில்

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பார்க்க முடியாத அளவுக்கு மேகமாக இருந்தால் முந்தைய மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளனர்.

மார்க்க அறிவும் அரபு மொழி அறிவும் இல்லாத ஒரு கூட்டம் பிறையைப் பார்த்து நோன்பு நோற்கக்கூடாது. விஞ்ஞான முறையில் கணித்து நாட்களை முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

பிறையைப் பார்க்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்களில் ருஃயத் எனும் சொல்லோ அதில் இருந்து பிறந்த சொற்களோ பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பார்த்தல் என்று பொருள் செய்யக் கூடாது. சிந்தித்தல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் கண்ணால் என்ற சொல் சேர்ந்தால்தான் இச்சொல்லுக்கு பார்த்தல் என்று பொருள் செய்ய வேண்டும் எனவும் இந்த அறிவீனர்கள் ஆதாரமின்றி உளரி வருகின்றனர்.

இது குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளதை தற்போது எடுத்துக் காட்டுகிறோம்.

ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

இந்த வியாக்கியானம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் என்கிற வார்த்தையுடன் (ருஃயத்) “கண்ணால்” என்கிற சொல் (ஐன்) என்பது சேர வேண்டும், அப்படிச் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்றுதான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்க்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால்தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அதுபோல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம்தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும்தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால்தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்அன் 2:55)

கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இந்தக் கேள்விக்கு விடை சொல்ல இயலாத இந்தக் கூட்டம், மீண்டும் அதே ருஃயத் என்பதை எடுத்துக் கொண்டு, வேறு என்ன வகையில் வியாக்கியானம் கொடுப்பது என்று இத்தனை வருடங்கள் தலையைப் பிய்த்து மேலே நாம் சுட்டிக்காட்டிய இந்த வாதத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து விளக்கமாகவே பார்ப்போம்.

لسان العرب – (ج 14 / ص 291) (رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) தான் வரும். ”அறிதல்” என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) வரும். நூல் லிஸானுல் அரப் பாகம் 14 பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட் வந்தால்தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் ”பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.

பிறை பார்த்தல் என்பதில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான் வந்துள்ளது. எனவே இதற்கு கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்கிற ஹதீஸில் ”பார்த்தல்” என்பதற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

”பிறை என்பது, “சந்திரனில் தோன்றும் முதல் ஒளி வடிவம் ஆகும்”. எனவே இங்கே கண்ணால் காணுதல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்க முடியும். அறிதல் என்ற பொருளைக் கொடுப்பது மார்க்கத்தின் அடிப்படையிலும், அரபி மொழி அகராதி அடிப்படையிலும் தவறானதாகும்.

திருமறைக்குர்ஆனில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 105 : 1)

மேற்கண்ட வசனத்தில் யானையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும்தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. யானைப்படையை (பார்த்தல்)

2. எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்).

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்குர்ஆன் 17 : 99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. அல்லாஹ்வைப் (பார்த்தல்)

2. அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2 : 243)

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரை பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும்தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. ஊரை விட்டு வெளியோரைப் (பார்த்தல்)

2. மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 89 : 6, 7

மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளது.

1. ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

2. அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்..

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

அல்குர்ஆன் 102 : 5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

மொத்தத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும்தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட் வரும்போதுதான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டாக வரக்கூடியவைதான்.

பிறைபார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6 : 76)

சந்திரனைப் பார்த்தார் (6 : 77)

சூரியனைப் பார்த்தார் (6 : 78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11 : 70)

சட்டையைப் பார்த்தார் (12 : 28)

இணைக் கடவுள்களைப் பார்த்தல் (16 : 86)

நரகத்தைப் பார்த்தல் (16 : 83, 20 : 10)

கூட்டுப் படையைப் பார்த்தல் (33 : 22)

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் (53 : 18)

தெளிவான அடிவானத்தில் கண்டார் (81 : 23)

இப்படி பார்த்தல் என்ற ரீதியில் ஆய்வு செய்தால் கண்ணால் பார்த்தல் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்

ஆக, இவர்களது இந்த வாதமும் தவிடு பொடியாகிப்போனது !

பிறையை பார்த்தல் – என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

Friday, March 24, 2017

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு
وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 46 : 15 )
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (138)
உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து '' நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை '' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5971)
பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் ஆகும்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார்.  நபி (ஸல்) அவர்கள் ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)
பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
 அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்றுகேட்பீராக!
(அல்குர்ஆள் 17 : 23 , 24)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல் குர்ஆன் 31 : 14)
பெற்றோருக்காகச் செலவிடுதல்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 2 : 215 )
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸாயீ (2485)
மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்
பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , '' அல்லாஹ்வின் தூதரே நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.            
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி (2762)
பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின் மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்
மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629)
பெற்றோருக்கு செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள  குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள் , ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர்.
 அவர்களில் ஒருவர், ''இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.  ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா. நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து '' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.                    
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (2215)
பெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''
அறிவிப்பவர் : முகீரா பின் ஸுஹஃபா (ரலி) நூல் : புகாரி (2408)
'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : அஹ்மத் ( 6208)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2653)
பெற்றோர்களை சபிப்பது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' தன் பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்துவிட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக்கல்லை மாற்றியவனை  அல்லாஹ் சபித்துவிட்டான் ''
அறிவிப்பவர் : அலீ (ரலி)   நூல் : முஸ்லிம் (3657)
''ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது '' அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)
பெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமுடியாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான். 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர். 2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண் 3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர். இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள் 1.தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர் 2. நிரந்தரமாக மது அருந்துபவன் 3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸயீ (2515)
பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களையும் இணைத்து வாழவேண்டும்.    
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். 
நூல் : புகாரி (2620)
பாவமான காரியங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுவது கூடாது என்றாலும் மற்ற வி‏ஷயங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல் குர்ஆன் 29 : 8)
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்
.  (அல் குர்ஆன் 31 :, 15 )
ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு '' அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறிளாள்.
இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள்.  அப்போதுதான் அல்லாஹ்  ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' (அல் குர்ஆன் 29 : 8)  என்று வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் : முஸ்லிம் (4432)
பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்
"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!''
(அல் குர்ஆன் 17 : 28)
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
(அல் குர்ஆன் 14 : 41)
"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக''
(,அல் குர்ஆன் 71 : 28)
"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்''
 (அல் குர்ஆன் 46 : 15)