மவ்லிதின் பிறப்பிடம்
உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த சவூதி அரபியாவிலும் மவ்லிதைப் பாடும் போதே அதன் பொருளை விளங்கிடக் கூடிய மக்கள் வாழும் மற்ற அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்குள் நுழைந்தால் மவ்லிது நூலைப் பிடுங்கி அங்குள்ள அரசாங்கம் குப்பையில் வீசி விடுகிறது. அதில் அமைந்துள்ள மோசமான கொள்கைகளும், உளறல்களுமே இதற்குக் காரணம்.
அரபு நாடுகளை விட்டு விடுவோம். உலகில் உள்ள வேறு எந்த நாட்டு முஸ்லிம்களாவது இந்த மவ்லிதை ஓதுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிதைப் பற்றி நாம் அவர்களிடம் கேட்டால் ‘மவ்லிது என்றால் என்ன?’ என்று நம்மிடமே அவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள்.
நமது நாட்டில் கூட கேரளாவிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் கள் தான் இந்த மவ்லிதுகளை அறிந்துள்ளனர். வேறு மாநில மக்களுக்கு ஸுப்ஹான மவ்லிது என்றால் என்ன என்பதே தெரியாது.
நமது தமிழக முஸ்லிம்கள் பிழைப்புத் தேடிச் சென்ற இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இதை அரங்கேற்றி வருகின்றனர்.
இதிலிருந்து தெரிய வருவது என்ன?
இது மார்க்கத்தில் உள்ளதாக இருந்திருந்தால் உலகின் பல பகுதி களில் வாழும் முஸ்லிம்கள் இதைக் கடைப்பிடித்து ஒழுகியிருப்பார்கள்.
யாரோ சில மார்க்க அறிவு இல்லாதவர்கள் நமது பகுதிகளில் தோன்றி இதைப் பரப்பி விட்டனர். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
எழுதியவர் யார்?
மவ்லிதின் முகப்பு அட்டையில் ‘இது கஸ்ஸாலி எழுதியது. கதீப் அவர்கள் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது’ என்று எழுதி வைத்துள்ளனர்.
இவர் தான் எழுதினார் என்று கூட குறிப்பிட எந்தக் குறிப்பும் இல்லை. கஸ்ஸாலியோ, கதீபோ எழுதியிருந்தால் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் அபிமானிகள் இதை அறிந்திருக்க வேண்டும்.
தாங்களாகவே இதை எழுதிக் கொண்ட சில வழிகேடர்கள் தங்கள் பெயரில் இதைப் பரப்பினால் மக்களிடம் எடுபடாது என்று கருதினார்கள். மக்களிடம் யாருக்கு நல்ல அறிமுகம் உள்ளதோ அவர்கள் பெயரைப் பயன்படுத்துவோம் என்ற திட்டத்துடன் தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கண்ட இருவரது நூல்களின் பட்டியலில் ஸுப்ஹான மவ்லிது என்பது இடம் பெறவே இல்லை. அவர்களே எழுதியிருந்தாலும் அதனால் அது மார்க்கமாக ஆகாது என்பது தனி விஷயம்.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 14 நூற்றாண்டுகள் சென்று விட்டன. இந்த மவ்லிதுகள் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலம் முதல் ஆயிரம் வருடங்கள் வரை வாழ்ந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், நாற்பெரும் இமாம்கள் உள்ளிட்ட எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் எவருமே இந்த மவ்லிதுகளைப் பாடியதில்லை. கேள்விப்பட்டதுமில்லை.
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எந்த நூலிலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் கற்பனை செய்து புணையப்பட்டவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் காரணத்துக்காகவே மவ்லிதைத் தூக்கி எறிந்து விட வேண்டும் என்றாலும் இன்னும் ஏராளமான நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் அறிந்து கொண்டால் இந்த மவ்லிதுகளின் பக்கம் எந்த முஸ்லிமும் தலைவைத்துப் படுக்க மாட்டார்.
மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திட சில ஆதாரங்களைக் காட்டுவார்கள். அவற்றை அறிந்துவிட்டு மவ்லிதைத் தூக்கி எறிவதற்குரிய காரணங்களை நாம் பார்ப்போம்.
நபியைப் புகழுதல்
ஸுப்ஹான மவ்லிது என்பது நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதற்காகத் தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் புகழ்ந்து கவி பாடியதை நபிகள் நாயகம் ஸல் அவர்களே அங்கீகரித்துள்ளனர். உண்மையான எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்குத் தடை சொல்ல மாட்டான்.
மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திடக் கூறும் ஆதாரங்கள் இவை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது அல்ல பிரச்சனை.
நமது முழு வாழ்நாளையும் அவர்களைப் புகழ்வதற்காகப் பயன்படுத்தலாம். நல்லொழுக்கம், வீரம், நேர்மை போன்ற எத்தனையோ நற்குணங்களை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பெற்றிருந்தனர். அவற்றையெல்லாம் உலகறிய உரைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் மவ்லிது இந்தப் பணியைத் தான் செய்கிறதா?
நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் ‘என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபிகள் நாயகத்தின் எந்தப் பண்பைப் புகழ்ந்தீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள்! கூலிக்குப் பாடியவர்களில் பலருக்கும் தெரியாது. அவர்களை அழைத்துப் பாடச் செய்தவர்களுக்கும் தெரியாது.
மவ்லிதைச் செவிமடுத்த மக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எந்தச் சிறப்பை அறிந்து கொண்டனர்? எதுவுமே இல்லை.
புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கின்றது.
அல்லாஹ்வின் வேதத்தை அர்த்தம் தெரியாமல் ஒதினாலும் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகிறது.
மவ்லிதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும் கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களைப் பொருள் தெரியாமல் வாசித்தாலும் நன்மை உண்டு என நினைப்பது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?
சாதாரண மனிதனின் சொற்களை வாசிப்பதால் – கேட்பதால் அங்கே அல்லாஹ்வின் அருள் மாரி இறங்கும் என்று நம்புவதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?
இந்தப் பாடலைப் பாடியவுடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்துவிட்டதாக நம்பப்படுகிறதே இதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?
புகழுதல் என்பது போர்வை தான். உள்ளே நடப்பது யாவும் புதிதாக உருவாக்கப்பட்ட வணக்கம் தான்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழும் போது அவர்களை பல நபித்தோழர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளது.
ஆனால் இந்தப் பாடல்களை நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் ஓதிக் கொண்டிருந்தார்களா?
இப்போதும் கூட ஒருவர் விரும்பினால் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து * மேடையில் பேசலாம்!
* கட்டுரை எழுதலாம். * கவிதையும் இயற்றலாம்.
மார்க்கம் வகுத்துள்ள வரம்புக்குள் நின்று இவற்றைச் செய்யலாம். அது போல் மவ்லிது பாடக்கூடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழட்டும்! இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
எவரோ புகழ்ந்து பேசியதை, பாடியதை அச்சிட்டு வைத்துக் கொண்டு அதை உருப்போடும் போது தான் அது ஒரு போலி வணக்கமாகவும், மோசடியாகவும் ஆகிவிடுன்றது.
மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்கள் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?
நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?
விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சணைகளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும் ஏன்?
பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழும் இலட்சணமா?
மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள்.
இதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இல்லாத ஒரு வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். புரோகிதர்கள் என்ற இழிவு மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட இது தான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்தால் அவர்களின் மரியாதையும் உயரும்.
மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழலாம் என்றாலும் அதற்கு ஒரு வரம்பு உள்ளது.
‘கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்’ என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி
நூல்: புகாரி 3445, 6830
‘நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள்’ என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய இந்த வரம்பை மீறியே புகழ்கிறார்கள். ஸுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக் கூடிய பாடல்கள் பல உள்ளன.
அவை பின்னர் விளக்கப்படவுள்ளது
எனவே இந்த வாதத்தின் மூலம் மவ்லிதைத் தூக்கிப் பிடிக்க முடியாது.
மவ்லிதினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாகவும் மவ்லிதை நாம் நிராகரித்தே ஆக வேண்டும்.
**************************************
உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?
بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ
اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ
فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ
وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ
எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன்.
உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.
இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.
என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!
மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!
உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!
உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!
اِنَّا بِهِ نَسْتَجِيْر
فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.
இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!
மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கொள்கை பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். (அல்குர்ஆன் 6:151)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(அல்குர்ஆன் 8:26)
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
(அல்குர்ஆன் 11:6)
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.
(அல்குர்ஆன் 13:26)
அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப் படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
(அல்குர்ஆன் 14:32)
உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.
(அல்குர்ஆன் 15:20)
உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?
(அல்குர்ஆன் 16:71)
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
(அல்குர்ஆன் 17:30, 31)
(முஹம்மதே! உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறைஅச்சத்திற்கே (நல்ல முடிவு உண்டு.
(அல்குர்ஆன் 20:132)
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 27:64)
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 29:17)
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 29:60)
அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்
(அல்குர்ஆன் 29:62)
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 30:37)
வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று (முஹம்மதே! கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்.
(அல்குர்ஆன் 34:24)
என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராள மாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர் களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:36)
எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில் செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:39)
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
(அல்குர்ஆன் 35:3)
தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:52)
வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 42:12)
அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.
(அல்குர்ஆன் 67:21)
மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவனது உணவு மற்றும் வசதிகள் இறைவனால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறும் நபிமொழிகள் ஏராளமாக உள்ளன.
நூல்: புகாரி 318, 3333, 6595
உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக ஸுப்ஹான மவ்லிதின் இந்த வரிகள் அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!
(அல்குர்ஆன் 10:31)
மக்கத்துக் காபிர்கள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை என்று நம்பியிருந்தார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது. உணவளிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் 30:40)
படைத்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை எப்படி இறைவனின் தனிப்பட்ட உரிமையோ அது போன்று உணவளிப்பதும் அவனது தனிப்பட்ட உரிமையாகும். இந்த நான்கில் எந்த ஒன்றையும் எவரும் செய்ய முடியாது என்று தெளிவான பிரகடனம் இது.
இந்த உரிமை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமானது என்பதால் தான் எத்தனையோ நபிமார்களை இறைவன் வறுமையில் வைத்திருந்தான். நபித்தோழர்கள் பசியால் துடித்திருக்கின்றனர்.
நபியவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.
ி பல நாட்கள் பட்டினி கிடந்த நபித்தோழர்கள்,
ி வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டவர்கள்,
ி ஒரேயொரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்,
ி தங்குவதற்குக் கூட சொந்த இடமில்லாமல் பள்ளிவாசலில் தங்கியவர்கள்,
ி இறந்த பின் போர்த்துவதற்குக் கூடப் போதிய ஆடையில்லாமல் புல் பூண்டுகளால் மறைக்கப்பட்டவர்கள்,
ி ஒட்டுப்போட்ட ஆடைகளை அணிந்தவர்கள்,
ி வீட்டில் விளக்கெரிக்கக் கூட வழியில்லாதவர்கள்,
# வெறும் தண்ணீரைக் கொடுத்து குழந்தைகளை உறங்க வைத்தவர்கள்
என்று பல்வேறு வகைகளில் வறுமை அவர்களை ஆட்டிப் படைத்தது.
அவர்களில் எவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தங்கள் வறுமையை நீக்குமாறு வேண்டவில்லை. அல்லாஹ்விடமே வேண்டினார்கள். அவனிடமே வேண்டுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தும் அவர்களை நேரில் கண்டிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வறுமையை நீக்குமாறு கோரவில்லை.
ஆனால் ஸுப்ஹான மவ்லூதில் வறுமையை நீக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. அவர்கள் தான் வறுமையை நீக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
ஸுப்ஹான மவ்லூது திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள்!
№###########################
நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’
وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ
‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’ என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.
மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.
இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.
இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26 :80)
நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 21:83)
துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் 10:49)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், ‘நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி 2839, 4423
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா’ என்று கூறினேன். அதற்கவர்கள் ‘ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி நூல்: புகாரி 5648, 5660, 5667
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:
‘இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!’
நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.
ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது ‘இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு’ என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள். நூல்: புகாரி 5659
அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.
அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.
அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன. நூல்: புகாரி 1248
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
**************************************
மவ்லிதின் தோற்றம்
எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.
இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘நபிகள் நாயகம் ஸல் அவர்களைத் தனது இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது’ என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?
‘மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது’ என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.
நபிகள் நாயகம் ஸல் காலத்தில் இந்த மவ்லிதுகள் இருக்கவில்லை; அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லிதுகளை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.
‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன?
நாம் எந்த ஒரு அமலை நல்லறத்தைச் செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித் திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.
மவ்லிது ஓதுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காதது மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.
‘செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்’ என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435
‘செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: நஸயீ 1560
இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை
ி மிகவும் மிகவும் கெட்ட காரியம்.
ி வழிகேடு.
ி நரகத்தில் சேர்க்கும்
என்றெல்லாம் கடும் எச்சரிக்கை இதில் உள்ளது. நபிகள் நாயகம் ஸல் காலத்துக்கு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுகளால் நன்மை ஏதும் விளையாது என்பது ஒருபுறமிருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment